இணைய இதழ்இணைய இதழ் 78கட்டுரைகள்

LUST STORIES – சொல்ல மறந்த கதைகள் – ஜி.ஏ. கௌதம்

கட்டுரை | வாசகசாலை

பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஒருவழியாக நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட லஸ்ட் ஸ்டோரிஸ் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகும். முதல் பாகத்தைப் போலவே, நான்கு புகழ்பெற்ற இயக்குனர்கள் (ஆர்.பால்கி, சுஜோய் கோஷ், அமித் ஆர்.சர்மா மற்றும் கொங்கனா சென் சர்மா) ஒன்றிணைந்து 2 மணி நேரம், 10 நிமிடத்தில் நுட்பமான அணுகுமுறையுடன் நான்கு கதைகளைச் சொல்கிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அதில் சிறந்த ஒன்று ஒருபுதியஇயக்குநரிடமிருந்து வந்திருப்பது.

Made For Each Other

முதல் பாகத்தின் முதல் கதையில் இருந்த தீவிரம் எனக்கு நினைவிருக்கிறது அத்தனை நச்சுத்தன்மை கொண்ட ஆதிக்க மனோபாவம் ஒரு புறமும் திமிர் மறு புறமுமாக ஒரு பேராசிரியராக ராதிகா ஆப்தே கலக்கியிருப்பார். அந்த வகையில் முதல் கதை எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றமடைய வைத்துவிட்டார் பால்கி. இது படமா இல்லை ஹிந்தி சிரியலா என்று தோன்றும் அளவுக்கு அத்தனை செயற்கை. இந்தக்கதை வைக்கும் கேள்வி நியாயமானது. உடலுறவில் பிரச்சனை என்றால் அது திருமண வாழ்க்கையில் பிரதிபலிக்கும். பெரும்பாலும் காதல் திருமணங்களில் இது பிரச்சனையாக இருக்காது. வீட்டில் பார்த்து வைக்கப்படும் திருமணங்களில் முன்பின் தெரியாத ஒருவனுடன் கட்டிலைப் பகிர்வது என்பது கிட்டத்தட்ட ஒரு சூதாட்டம் போல்தானே? எல்லாருக்கும் ஜாக்பாட் அடித்துவிடுமா என்ன? அதைத்தான் இந்தக் கதையில் வரும் பாட்டியும் கேட்கிறார்

சிறந்த பாலியல் வேதியியலைப் பகிர்ந்து கொள்ளும் தம்பதிகள் நீண்ட காலத்திற்கு நிறைவான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பது அவரது வாதம். “திருமணத்திற்க்குப்பிறகு உடலுறவில் திருப்தி அடையவில்லை என்றால் உன் வாழ்க்கையே நரகமாகி விடாதாஎன தனது பேத்தியிடம் கேட்கும் இடத்திலும், இரு குடும்பங்கள் ஒன்றாக இருக்குமிடத்தில் வெளிப்படையாக, “இரண்டு பேரும் செக்ஸ் வைத்துக் கொண்டார்களாஎனக் கேட்கும் இடத்திலும், ‘சந்தோஷமாக இருக்கிறேன்என்று சொல்லும் மருமகளிடம், “சந்தோஷத்தை பார்த்து ரொம்ப நாள் ஆனவர்களுக்கு சந்தோஷம் என்பது எப்படி இருக்கும் என்றே தெரியாதுஎன்று தன்னை ஏமாற்றிக்கொண்டிருக்கும் மருமகளுக்கே பாடம் எடுக்கும் காட்சியிலும் பாட்டி ஒரு கூலான கேப்டன் போல ஜொலிக்கிறார்

ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அது ஒரு விழிப்புணர்வு படம் போல மாறிவிடுவதைத் தடுக்க முடியவில்லை. மேலும் பி.சி. ஸ்ரீராம் போன்ற முன்னணி தொழில்நுட்பக்கலைஞர்களை வைத்துக்கொண்டு இன்னும் எத்தனையோ செய்திருக்கலாமே. தலைப்பில் இருக்கும் LUST கதையில் இல்லையே. அவர்கள் காதலிக்கிறார்கள். பாட்டியின் ஐடியாவை கேட்டு பல முறை ஹோட்டல்களில் ரூம் புக் செய்கிறார்கள். அவ்வப்போது நடுவில் ரயில்வே ஸ்டேஷன் அறிவிப்பு போல பாட்டி சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்கிறார். பாட்டிக்கும் பேத்திக்கும் இடையிலான இயல்பான உறவும் நம்பத்தகுந்ததாக இல்லை. ஏதோ விளம்பரப்படம் போல உள்ளது.

மற்ற கதைகளில் தைரியமாக காண்பித்த காட்சிகளை எல்லாம் கதவடைப்பதுடன் நிறுத்திக்கொள்வது என்பது பழைய தமிழ் சினிமாவின் பூவைக்காட்டும் காட்சிகளையும், தமிழ் சீரியல்களையும் நினைவூட்டுவதை தடுக்க முடியவில்லை. எதற்கு இந்த பூச்சு வேலை? இத்தனை சுய தணிக்கையுடன் இது போன்ற உளவியல் சார்ந்த கதைகளை கையில் எடுக்கும் போது அதற்கான திரைக்கதையும், காட்சியமைப்பும் சரியாக எழுதப்படாவிடில், தைரியமாக படமாக்காவிடில் எப்படி வெற்றுத்தன்மையுடன் இருக்கும் என்பதற்கு இந்தக்கதை ஒரு உதாரணம். கதைக்குத்தானே இயக்குநர்!

The Mirror

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சோயா அக்தர் அவரது கதையில் செய்ததைப் போலவே, பெண் ஆசையின் உன்னதமான கருப்பொருள்களை ஆராய்ந்து அதனை நேர்த்தியாக மதிப்பிடப்பட்ட குறும்படமாக மாற்றுகிறார் கொங்கனா சென் சர்மா. ‘ டெத் இன் தி குஞ்ச்‘ (2016) படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக கவனம் ஈர்த்தவர், தனது இரண்டாவது குறும்படத்தை மிகவும் சாதுர்யமாக இயக்கியிருக்கிறார்

பெண்மையை ஒரு புதிய கோணத்தில் ஆராயும் இக்கதை, பாலியல் இன்பத்தையும் அதன் குழப்பமான உளவியல் வெளிப்பாடுகளையும் பிரதிபலிக்கிறது. ஒரு பக்கம் உயரமான கட்டிடங்கள். இன்னொரு பக்கம் அதில் வேலை செய்யும் விளிம்பு நிலை மனிதர்கள். இந்த இரண்டு ஒன்றுக்கொன்று தொடர்புடைய உலகங்களை ஆக்கிரமிப்பவர்கள் இஷீதா (திலோத்தமா ஷோம்) மற்றும் அவரது நம்பகமான பணிப்பெண் சீமா (அம்ருதா சுபாஷ்). இந்த இரண்டு பெண்களின் அக உலகிற்குள் இயக்குநர் ஒரு கண்ணாடியை வைக்கிறார்

வசதியான, ஆனால் தனியாக தங்கியிருக்கும் வடிவமைப்பாளரான இஷீதா ஒரு நாள் மதியம் ஒற்றைத் தலைவலி காரணமாக விடுப்பு எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வர, அந்த நேரத்தில் தனது படுக்கையில் சீமா அவளது கணவருடன் மூர்க்கமாக உடலுறவில் ஈடுபடுவதை பார்த்து அதிர்ந்து போகிறாள். ஆரம்பத்தில் பயந்த இஷீதாவின் அதிர்ச்சி ஏக்கமாக மாறுகிறது. பின்னர் அவர்கள் வரும் நேரத்திற்கு அலுவலகத்திலிருந்து கிளம்பி வந்து அவர்கள் கலவி கொள்வதை கண்ணாடி வழியே பார்த்து ரசிக்கத் துவங்குகிறாள். தார்மீகச் சிக்கலுடன் இஷீதா அவற்றை நாள் கணக்கில் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். ஒரு நாள் தான் கலவி கொள்வதை கண்ணாடி வழியே இஷீதா பார்ப்பதை அறிந்து கொள்ளும் சீமா, அதைக் கண்டுகொள்ளாமல் விடுகிறாள். தான் பார்க்கப்படுவதை அவளும் ரசிக்கிறாள். இப்படியாகத் துவங்குகிறது இவர்களின் விசித்திரமான விளையாட்டு.

இக்கதை இந்த இரண்டு பெண்களின் ஆழமான மனதின் தூண்டுதல்களை வரைபடமாக்குகிறது. அவர்கள் நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒருஉறவில்ஈர்க்கப்படுகிறார்கள். மேலும் விவரிக்க முடியாத அளவிலான பாலியல் உணர்வைத் திறக்கிறார்கள். தனது கணவர் கமல் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குறுகலான குடியிருப்பில் வசிக்கும் சீமாவுக்கு அந்த இடம் உறவுகொள்ள ஏற்றதாக இல்லாமல் போக, இஷீதாவின் இல்லம் அதற்கு உகந்த இடமாக மாறிப்போகிறது. இதை பார்க்கும் இஷீதாவும் தன் சுய இன்பங்களுக்கு அதை பயன்படுத்திக்கொள்கிறாள்

இஷீதாவுக்கும் சீமாவுக்கும் இடையிலான அந்தக் கண்ணாடி சம்மதம், விருப்பு, வெறுப்பு மற்றும் முதலாளிக்கும் பணியாளுக்கும் இடையிலான வர்க்க இடைவெளியை பிரதிபலிக்கிறது. இந்திப் படங்களில் ஒரு பெண்ணின் பார்வையில்வோயரிசம்என்று சொல்லக்கூடிய காமத்தை பார்ப்பதன் மூலம் இன்புறும்பார்வை மோகம்பற்றிக் கையாள்வது மிக அரிதாகவே காணப்படுகிறது. மேலும், அந்த பார்வையை இரண்டு கதாபாத்திரங்கள் மூலம் இரண்டு வேறாகப் பிரிப்பது அதனினும் அரிது. ஆனால், பூஜா டோலானி போன்ற ஒரு திறமையான எழுத்தாளரின் உதவியுடன் அதை சாத்தியமாக்கியிருக்கிறார், அதை எழுதி இயக்கிய சென் சர்மா. இன்னொருவர் ஒழுக்கத்தை விவாதிக்கும் இடத்தில்தான் நாம் தோல்வியடைகிறோம். அப்படித்தான் அவர்களுக்குள் அவர்கள் தோற்றனர். காமத்தைப் பற்றி அறம் பேசாத இடம் அது. ஆனால், அதிலிருந்து மீழ அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைகிறது. வீட்டுச் சாவியை சீமாவிடம் கொடுப்பதன் மூலம் அவர்கள் மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்குவதாக படம் நிறைவுறுகிறது.

சோக்குடு, ராமன் ராகவ், கோஸ்ட் ஸ்டோரீஸ், கல்லி பாய் திரைப்படங்களின் மூலம் ஏற்கனவே பரிட்சயமான அம்ருதா சுபாஷ் எந்த மாதிரியான கதையிலும் ஒரு கை பார்த்துவிடக்கூடியவர். ஆனால், திலோத்தமா ஷோம், ஒளிந்திருந்து பார்க்கும் போதும், பல்லிக்கு பயந்து சப்தம் போட்டு பிரச்சனை ஆன பிறகு, தான் ஒளிந்திருந்ததை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள முடியாமல் திணறு இடத்திலும் அவரது யதார்த்தமான நடிப்பால் அதை அழகாக சமன் செய்திருக்கிறார்.

தனியுரிமை ஒரு ஆடம்பரமாக இருக்கும் மைக்ரோ குடியிருப்புகளின் போலியான மும்பையின் யதார்த்தம், ஒரு கற்பனையை வெகுதூரம் நகர்த்துவதற்கான சிற்றின்பத்தின் சாத்தியக்கூறுகள் மற்றும் அதன் வரம்புகள் நிறைந்த ஒரு நகரின் கதையை நமக்குச் சொல்கிறது இந்தக்கண்ணாடி’.

Sex With Ex

கஹானி, ராதிகா ஆப்தே நடிப்பில் பல சர்ச்சைகளுக்குள்ளானஅகல்யா’ (குறும்படம்) என இயக்குநர் சுஜோய் கோஷ் செய்த சோதனை முயற்சிகளின் வரிசையில் இப்போதுசெக்ஸ் வித் தி எக்ஸ்‘.

வீடியோ காலில் காதலியுடன் காம அரட்டை புரிந்ததில், எதிரே வரும் சைக்கிளை கடைசி நேரத்தில் பார்த்ததும், சடாரென வண்டியை திருப்ப அவரது வின்டேஜ் கார் ஒரு மரத்தில் மோதுகிறது. காரிலிருந்து இறங்கும் விஜய் அருகிலிருக்கும் பரைசோல் என்னும் ஊரில் மெக்கானிக்கை அழைக்கச் செல்கிறார். அங்கே பத்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன அவரது முன்னாள் மனைவி சாந்தியை (தமன்னா) சந்திக்கிறார். சாந்தி ஏன் காணாமல் போனார், என்ன நிகழ்ந்தது என செல்லும் இக்கதை கொஞ்சம் சுவாரசியமானது

நன்றாக மெருகேறி மாறியிருக்கும் சாந்தியின் தோற்றம், பால் இல்லாமல் விஜய் காபி குடிக்கும் பழக்கம் சாந்திக்கும், பாலில் தயாரிக்கும் தேநீர் சாந்தி குடிக்கும் பழக்கம் விஜய்க்கு நினைவிருப்பது, அவளது குழப்பமான உள்ளாடையின் அளவு என விஜயின் மனதில் பல கேள்விகள் எழுகிறது. இது போக, “நீ சீக்கிரம் போக வேண்டும் உனக்கு நேரமாகி விட்டதுஎன்று சாந்தி திரும்பத் திரும்பச் சொல்கிறாள். இவனும் பதில் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் பேச்சைத் தொடர்கிறான். அவளுடன் உறவு வைத்துக்கொள்ளவும் முயற்சி செய்கிறான். அதில் வெற்றியும் காண்கிறான். அதன் பின்னரே இருவருக்கும் அவரவர் கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது

வெவ்வேறு கிரகங்களில் இருந்து வந்ததாகத் தோன்றும் இரண்டு நபர்களுக்கு இடையிலான புதிரான சந்திப்பை இரு நடிகர்களுக்கும் புகுத்துவதன் மூலம் இயக்குநரின் இந்த கதை சொல்லும் முறை பார்வையாளர்களை நிச்சயம் குழப்பத்தில் ஆழ்த்தும். உண்மையில் என்ன நடந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. மேலும் ஒரு பக்கம் சஸ்பென்ஸாகவும் இன்னொரு பக்கம் குழப்பமாகவும் இருந்தாலும், முடிந்தவரை அதை விறுவிறுப்புடன் தொடர முயன்றிருக்கிறார்

கதாநாயகன் காரில் செல்லும் முதல் காட்சியிலேயே நாம் படம் பார்க்கிறோமா அல்லது வீடியோ கேம் பார்க்கிறோமோ என்று தோன்றுகிறது. இதன் பிரச்சனை என்னவென்றால்ட்ரூமன் ஷோதிரைப்படத்தில் வருவது போன்ற விசித்திரமான, உண்மைக்குப் புறம்பான புனைவான உலகம், அதன் கட்டுமானம், அதன் கலைநயம் கொண்ட வீடுகள் மற்றும் மரங்களைப்போன்ற கனவுலகின் செயற்கைத்தனம் நம் மனதில் தொற்றிக்கொள்வதுடன், இயற்கையாக நமது மனம் அதனுடன் பயணிப்பதற்கான வாய்ப்பு அறுபட்டுப்போகிறது

ஒரு கனவுக் காட்சியின் உணர்வைத் தரும் பிரகாசமான வண்ணத் தட்டுகளைப் (Color Palette) பயன்படுத்தி அதை நிஜத்திற்கு சற்று மாறான ஒரு கனவுலகம் போல வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். அடுத்து நான் எதிர்பார்த்தது போலவே அவர் பயன்படுத்தியரியல் எஞ்சின்’ (Real Engine) தொழில்நுட்பம். நடிகர்களை தனியாக படம் பிடித்து பின் இருக்கும் நீலத்திரையை கணிணி மூலம் அகற்றி, பின்னால் வேறு ஒரு பிண்ணனியை வைக்கும் வேலைக்குப் பதிலாக நாம் இருக்கும் இடத்தை ஒரு நொடிப்பொழுதில் போர்க்களமாகவோ, மலைப்பகுதியாகவோ, கட்டிடங்களாகவோ மாற்றி கேமராவில் படம் பிடித்துக்கொள்ள முடியும். அதை அப்போதே பார்த்துக்கொள்ளவும் முடியும். இன்ஸ்டாகிராமில் தலைக்கு பின்னால் நெருப்பெரியும், ஷ்ரெக் எனும் பச்சை நிற பயில்வான் உங்கள் அருகிலேயே நிற்பது போன்ற நிறைய வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். அந்த தொழில்நுட்பத்தின் நீட்சியை தனது கதை சொல்லும் விதத்திற்க்கு சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்

திரையிலிருந்து நமது கண்களை விலக்க முடியாத வண்ணம் எவ்வளவோ முயன்றிருந்தாலும் கஹானி, அகல்யா போன்ற தனது முந்தைய படைப்புகளின் மூலம் ஆராய்ந்திருந்த ஆழங்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இயக்குநர் சுஜோய் கோஷின் திறமையான கைகளில் பிரகாசித்திருக்க வேண்டிய கதை இது.

Tilchatta

இறுதியில், அமித் ஷர்மாவின் இந்தக்குறும்படம் ஒரு இருண்ட தேவதையின் கதை போல கட்டமைக்கப்பட்டுள்ளது, 2018 ஆம் ஆண்டின் வெற்றி பெற்ற அவரத்துபதாய் ஹோதிரைப்படத்திற்கு முற்றிலும் மாறுபட்ட படைப்பில் ஒரு புதிய முயற்சியை கையாண்டிருக்கிறார். (குறிப்பாக அவருக்கே உரித்தான காமெடி இல்லாதது)

தனது படுக்கையில் பெண்கள் மீது முரட்டுத்தனமாக பாலியல் குற்றங்களை அரங்கேற்றும் ஒரு நிலப்பிரபுத்துவ பிரபுவாக சூரஜ் சிங்காக குமுத் மிஸ்ரா. அரண்மனை இராஜ்ஜியத்தின் பதவியற்ற ராணியும், முன்னாள் பாலியல் தொழிலாளியுமாக தேவ்யானி சிங் கதாபாத்திரத்தில் கஜோல். ஆட்டோ கண்ணாடியில் ஒட்டியிருக்கும் வெள்ளைக்காரப் பெண்ணின் புகைப்படத்தைக்கூட விட்டு வைக்காத காமவெறியனான சூரஜ்சிங், தேவ்யானியின் உடலில் நிகழ்த்தும் வன்முறையை, ஒப்பனைப்பெட்டியின் மீது ஊர்ந்து செல்லும் கரப்பான் பூச்சி குறியீடாக்குகிறது. மேலும், அடுத்த காட்சியில் அந்த கரப்பான் பூச்சியை மிதித்துக் கொல்வதன் மூலம் தனது கதாப்பாத்திரம் எதற்குத் தயாராகிறது என்பதை ஒரு சிறு குறிப்புடன் துவங்குகிறார் இயக்குநர்

தனது மகனை உயர் கல்விக்காக இங்கிலாந்துக்கு அனுப்புவதன் மூலம், தங்க முலாம் பூசப்பட்ட இந்த தரிசு நிலத்திலிருந்து அவனைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறார் தேவ்யானி. ஆணாதிக்க சமூகத்தில் தனது சாதியை கேடயமாக்கி எந்த அதிகாரத்தையும் இரக்கமின்றி பயன்படுத்தும் ஒரு ராஜா, உருவமற்ற மகுடத்தின் அதிகார தலைக்கனத்தை சுமக்கும் ஒரு ராணி, தனக்கு வகுக்கப்பட்ட எல்லைகளில் இருந்து தப்பிக்க துடிக்கும் ஒரு மகன். இப்படியாக சுயாட்சி வேட்கையால் உந்தப்பட்ட மூன்று பேரும் தங்கள் விதியிலிருந்து தப்பிக்க தங்களுக்குள்ளேயே சதி செய்கிறார்கள்.

சூரஜ்சிங்கின் காமவெறி பிடித்த கொடுமைகளால் பயந்துபோய் வேலையை விட்டுச்சென்ற பணிப்பெண்ணுக்கு பதிலாக, ரேகா (அனுஷ்கா கவுசிக்) என்ற புதிய பெண்ணை வேலைக்கு அமர்த்துகிறார் தேவ்யானி. அழகிய இளம்பெண்ணான ரேகா மீது சூரஜ் சிங் ஆசை கொள்ள ஆரம்பிக்கிறார். தனக்கும் தன் மகனுக்குமான சுதந்திரத்தின் தேடலில் இந்த சூழலைப் பயன்படுத்திக் கொள்ள தேவ்யானி முடிவு செய்கிறார்.

சீக்கிரம் இங்கிலாந்து செல்ல எறும்புக்கு சர்க்கரை வைக்க சொல்லும் பூசாரியான நண்பன், கறுப்பு எறும்பிற்க்கு வைக்க வேண்டாம் என்றும், இங்கிலாந்து செல்வதாக இருந்தால் கருப்பை மொத்தமாக வெறுக்க வேண்டும் என்றும் சொல்கிறான். கிட்டத்தட்ட இங்கிலாந்து மக்கள் கறுப்பின மக்களை எப்படிப் பார்ப்பார்கள் என்றும், அதற்கேற்றவாறு இந்தியர்களாகிய நாம் எப்படித் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் அந்த ஒற்றை வரி விளக்குகிறது. “இங்கிலாந்தில் மூன்று மாதம் சூரியன் உதிக்காதே.. எப்படி சூரியநமஸ்காரம் செய்வாய்?” என்றும் விளையாட்டாக கேட்கிறான். எல்லா பிரச்சனைக்கும் பரிகாரம் தீர்வென சொல்பவன் காய்கறி விற்பவனைப்போல ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு விலை வைக்கிறான்.

தொடர் பாலியல் வன்முறையாலும், தன்னை கேவலமாக நடத்துவதாலும் கணவனை பழிவாங்க பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட ரேகாவை வேலைக்கமர்த்தும் தேவ்யானி, படத்தின் இறுதியில் அதற்கான காட்சியை விளக்குவது ஆச்சர்யத்தைக் கொடுத்தாலும், அதை விட பேரதிர்ச்சி ஒரு மூலையில் காத்திருக்கிறது. அவருக்கு மட்டுமின்றி நமக்கும்

பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் கஜோல். சூரஜ்சிங்கின் மீது அவருக்குள் கொந்தளிக்கும் உணர்வு, மகன் மீது காட்டும் அன்பு, பணிப்பெண்ணுக்கு சேலை கட்டிவிட்டு அழகு பார்க்கும் பிரியம், இறுதியில் தான் விரித்த வலையில் தனது கணவன் விழுந்ததில் தெரியும் வெற்றியின் பூரிப்பு, உள்ளிருப்பது தனது கணவனல்ல..தனது மகன் என்பதை அறிந்ததும் தான் விதைத்த வினையை தன் மகன் அறுவடை செய்யப்போவது தெரிந்து அதிர்ச்சி கலந்த ஏமாற்றம் என அனைத்து விதமான உணர்வுகளையும் தன் முகத்தில் சுமக்கிறார்.

இப்படத்தின் மேலும் இரண்டு இளம் நடிகர்கள் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இங்கிலாந்து செல்லும் ஆவேசமும், தனது தந்தை பெண்கள் மீது காட்டும் வன்முறையைத் தட்டிக் கேட்க முடியாத கையறு நிலையில் கோபமுமாக ஜீஷன் நடாஃப். வெகுளியான சிரிப்புமாக, இயல்பான தோற்றத்துடன் தன் மீது கை வைக்கும் போது கூச்சமடைவதும் கொஞ்சம் கொஞ்சமாக சூரஜ்சிங்கின் ஆசைக்கு அடிபணிவதுமாக அனுஷ்கா கவுசிக்

அரச குடும்பத்தின் வெற்றுப்பெருமை, பழிவாங்குதல், வெளிக்கொணர முடியாத அடக்கப்பட்ட ஏக்கங்கள், மறைக்கப்பட்ட ரகசியங்கள், பொறாமைகள், நிலப்பிரபுத்துவத்தின் ஒடுக்குமுறை, காமத்திற்கும் கற்பழிப்புக்கும் இடையிலான வேறுபாடு என அத்தனையும் இக்கதையில் கருப்பொருளாகிறது.

நான்கு கதைகளும் ஒரு வகையில் சுவாரசியமானவை. ஆனால், இதில் பெரிய சிக்கல் என்னவென்றால், படத்தின் நீளம். ஒவ்வொரு கதையும் எடுத்துக்கொள்ளும் நேரமானது அக்கதையைச் சொல்ல வேண்டிய காலத்தை தாண்டிச்செல்கிறது. இதுவே பார்வயாளர்களை எளிதில் சோர்வடைய வைத்துவிடவும் வாய்ப்புள்ளது.

இரண்டு கதைகள் இயல்பானதாகவும். இரண்டு கதைகள் எதிர்பாராத திருப்பத்துடனும் முடிந்திருந்தாலும் தனிப்பட்ட முறையில், திலோத்தமா ஷோம் மற்றும் அம்ருதா சுபாஷ் இருவரும் நடித்த கொங்கனா சென் ஷர்மா இயக்கியதி மிர்ரர்கதைதான் இந்த மொத்தப் படத்தையும் தாங்கும் தூணாக நிற்கிறது என்பதை மற்ற கதைகள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நீனா குப்தாவின் நடிப்பும், மிருணாள் தாக்கூரின் திரை பிரசன்னமும் பால்கியின் படத்திற்கு இயல்பான தன்மையை அளித்தாலும், கதை நகர்த்தும் உணர்வு மிகவும் மெல்லியது. அமித் ரவீந்தர்நாத் சர்மா தான் தேர்ந்தெடுத்த இருண்ட கதைக்கு நியாயம் செய்யவில்லை. கசப்புக்கும் விறுவிறுப்பிற்கும் இடையில் ஊசலாடும் பின்னணி இசையால், கதைக்கு எந்த விதத்திலும் உதவ முடியாமல் போகிறது. கஜோல் மற்றும் குமுத் மிஸ்ரா ஆகியோரின் திறமைகளை முழுமையாக பயன்படுத்தாமல் விட்டது, மெதுவாக நகர்ந்த திரைக்கதைக்கு மற்றுமொரு பலவீனம்.

பி.சி. ஸ்ரீராம் போன்ற திறமையான கலைஞர்களை வைத்து எத்தனை அழகியலுடன் கலைத்தன்மையோடு உறுத்தாத வண்ணம் உறவுகொள்ளும் காட்சிகளை படம்பிடித்திருக்கலாம்! உதாரணமாக, கஜோலின் கதையில் அவரது மகன் உறவு கொள்ளும் காட்சியில், குறைந்த வெளிச்சத்தில் ஒரு பெண்ணின் முதுகுப்புறமும், ஜன்னலின் வெளிச்சத்தில் தெரியும் தலைமுடியை கோதிய கூந்தலின் அடர்த்தியுமாக திரைப்படுத்தியிருப்பார் ஒளிப்பதிவாளர் துஷார் பாசு. பி.சி.ஸ்ரீராம் ஒருவேளை கொங்கனா சென் போன்ற ஒரு இயக்குநருக்கு கிடைத்திருந்தால் அவரின் அனுபவத்தையும், ஒளித்திறமையையும் மிகச்சரியாக தனது கதைக்கு பயன்படுத்தியிருப்பார்

பின் ஒரு நாளில் இருவரும் சந்திக்கும் போது இஷீதாவிடம், “நீண்ட நாட்களாக தாங்கள் உடலுறவு கொள்வதை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது தனக்கு நன்றாகத் தெரியும்என்று சொல்வார் சீமா. “ஏன் அப்போதே கேட்கவில்லைஎன்று இஷீதா கேட்பார். அதற்கு சீமா, “நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தது எனக்கும் பிடித்திருந்ததுஎன்று சொல்லுவார். அதைக்கேட்ட பின் ஒரு மெல்லிய புன்னகை அவர்களிடையே இழையோடும். இது போன்ற இயல்பான யதார்த்தங்களே லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற கதைக்களங்களில் தேவைப்படுகிறது.

உண்மையில்லஸ்ட் ஸ்டோரிஸ்தயாரிப்பாளருக்கு ஒரு பரந்த கதை சொல்லும் பரப்பை அளித்திருக்கிறது. ஆனால், நட்சத்திர நடிகர்கள் மற்றும் சில சுவாரஸ்யமான கதைகள் (எழுத்தில்) இருந்தபோதிலும், நெட்ஃபிளிக்ஸ் இந்த முறை லஸ்ட் ஸ்டோரிஸ் 2-ஆவது பாகத்தில் ஒரு பெரிய வெற்றிடத்தைத்தான் உருவாக்கியிருக்கிறது

பல ஆண்டுகளாக, தனது ஸ்ட்ரீமிங் தளத்தில் நல்ல ஆந்தாலஜிகளை உருவாக்குவதற்கான அத்தனை உள்கட்டமைப்புகளையும் கொண்ட நிறுவனத்திற்கு இது பெரும் சறுக்கல். கஜோலின் கதையுடன் படத்தை முடித்தது, முடிவு போன்ற உணர்வைத் தரவில்லை. முதல் பாகத்தில் கியாரா அத்வானியின் கதையுடன் ஒரு அழகான முடிவு இருக்கும். அதேபோன்று இங்கேயும் முயற்சித்திருக்கலாம். கொங்கனா சென்னின் ஒரு கதையைத் தவிர்த்து மற்றவை சொல்ல மறந்த கதைகள்.

*********

goodbadeditor@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button