1
வேகமாக அவதியாக ஓடிச்சென்று மர நிழலில் ஒதுங்கிக்கொண்டாள் முத்துச்செல்வி. வேங்கையின் வெறிப்பாய்ச்சலுக்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது சித்திரை மாத நெருப்பு வெயில். ஆமாம், இந்த வெயிலை நெருப்போடுதான் ஒப்பிட வேண்டும். கொளுந்தெரிந்துக் கொண்டே உடல்களை எரிக்கும் ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த ஓங்கார வெயில். அண்ணாந்து பார்த்து தொட்டி மீன்களைப்போல வாயைப்பிளந்து குளிர்ந்த மூச்சுக்கு தவித்தது உடல். கண்கள் உருகியோடும் வியர்வைத்துளிகள் பட்டு அதுவும் தீப்பட்டது போல எரிந்தது. நெஞ்சை மறைத்துக்கொண்டிருந்த துப்பட்டாவை இழுத்து முகத்தை துடைத்தாள் செல்வி. தெருவின் முனையில் லோடு இழுக்கும் நாலைந்து பையன்கள் நின்றுகொண்டு இவளைப் பார்ப்பது தெரிந்தது. வழக்கமாக நின்று இவளைப் பார்த்து புன்னகையை பரிமாறிக்கொண்டு உள்ளம் மகிழ்பவர்கள்தான். தூரத்திலிருந்து செல்வி இவர்களைப் பார்த்துவிட்டாலே உடைகளை சரிசெய்துகொண்டு நவநாகரீகமாக நடப்பதாக நினைத்துக்கொண்டு இடுப்பினை மெல்ல அசைத்து அன்னநடை நடந்து வருவாள். இன்று வெயிலில் அரக்க பரக்க ஓடிவந்து நின்று உடையை கவனமில்லாமல் இழுத்து முகம் துடைப்பது நினைவுக்கு வந்ததும், முதலில் எரிச்சலாக பின் அதுவே மெல்லிய புன்னகையாக மாறி வெட்கமாக வந்தது. அவர்களுக்குத் தெரியாமல் பீறிட்டெழும் சிரிப்பினை அடக்கிக் கொண்டாள். வெயிலில் கீழே தெரிந்த மரநிழல்கள் கூட மஞ்சள் வெயிலும், கறுப்புமாக வேட்டைக்குப் பாய்ந்து வரும் சிறுத்தைப்புலி போலவே இருந்தது. சட்டென கையிலிருந்த பழைய அலைபேசியில் மணியைப் பார்த்தவளுக்கு முதலாளி குடோனுக்குச் சென்று விரைவாக ஐந்து கிலோ மாப்பிள்ளை சம்பா அரிசி எடுத்துவரச் சொன்னது நினைவுக்கு வந்தது.
இதுவரை ஐந்து தடவை குறுகலாக சரியான பாதை கூட இல்லாத தெருவில் குடோனைத் திறந்து பொருட்களை வேகுவேகுவென எடுத்து வந்தாகி விட்டது. பெயர்ந்து கொண்டிருக்கும் தெருவோரச் சிமெண்ட் படிகள், தேய்ந்த செருப்பையும் மீறி கால்களில் சிராய்த்து அதுவேறு மிளகாயை அரைத்துப் பூசியது போல வெயிலுக்கு திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது. சற்று நேரம் நிழலில் நின்று பொறுமையாக ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் செல்வி. அதுவும் இல்லாமல் இந்த முதலாளி இருக்கிறாரே, காலையில் கடைக்கு வந்ததுமே சாமி படங்களுக்கு நறுவிசாக பூக்களை நறுக்கி வைக்காததற்காக அனைவரின் முன்பும் சட்டென ஏசிவிட்டது நினைவுக்கு வந்தது. எத்தனைதான் இவர்களுக்கு உண்மையாக ஓடி ஓடி வேலை செய்தாலும் எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் திட்டலாமெனவே இவர்களது முதலாளி புத்தி தேடிக்கொண்டே இருக்கும். இன்று ஏன் முதலாளி காலையிலையே இத்தனை சுள்ளாப்பாக இருக்கிறார்? அடிக்கிற வெயில் அனைவரின் குணங்களையும் ஒரு மாத்து குறைத்துக் காட்டுகிறதா? நமக்கே இந்த வெயிலில் மனிதர்களோட பேசவே காட்டமாக இருக்கிறது. அவருக்கு எவ்வளவு பிரச்சினையோ! எதற்கெடுத்தாலும், “செல்வி, அது எங்கே? இது எங்கே?” எனக் கேட்பதும் நம்மிடம்தான், சிடுசிடுவென எரிந்து விழுவதும் நம்மிடம்தான் என ஒருநிமிடம் மகிழ்வாகத் தோன்றினாலும், பின் நிதர்சனம் உணர்ந்து சிறு சலிப்பு தோன்றியது. ஆரம்பத்தில் இந்த உரிமையோடு பழகுவது மனதிற்கு உகந்ததாக இருந்தாலும் இந்த உரிமையெல்லாம் நைச்சிதமாக வேலை வாங்குவதில்தான் முடிகிறது எனவும், வேலை சுறுசுறுப்பாகப் பார்க்கும் நபர்களிடம் உரிமை என போலி முகங்கொண்டு உழைப்பு அதிகமாகச் சுரண்டப்படுகிறது எனவும் பழகி உணர்ந்துக் கொண்டபின், அனைத்திலும் ஒரு மரப்புத்தன்மை வந்துவிடுகிறது. என்றைக்காவது இந்த உரிமைகள் சம்பளத்தில் ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கொடுக்க உதவினால் அந்த உரிமையை கொண்டாடலாம். வெற்று உரிமைகளுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை, இதுமாதிரி லொங்குலொங்குவென குடோனுக்கும் கடைக்கும் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருப்பதைத் தவிர என நினைத்துக் கொண்டாள். இதில் இன்று முதலாளியோட சம்சாரம் வேறு கோவிலுக்குச் சென்றுவிட்டு அப்படியே கடைக்கு வந்து உட்கார்ந்து கொண்டது. என்னதான் முதலாளியுடைய மனைவியாக இருந்தாலும் நாம் வேலை செய்யும் இடத்தில் வேறொருவர் வந்து அமர்ந்துக் கொண்டு நம்மை சர்க்கஸ் கோமாளிகளைப் போல வேடிக்கை பார்ப்பது ஒருவிதமான ஒவ்வாமை உணர்வைத் தந்தது செல்விக்கு.
அதுவும் இந்த முதலாளி, மனைவிக்கு முன்னால் வேலைக்காரர்களை சரியாக நடத்துவதாக எண்ணிக்கொண்டு எந்நாளும் இல்லாமல் திடீரென நடத்தும் வரம்பு மீறிய அகிகாரத் தோரணைகளால் அவரது சம்சாரத்தை பார்க்கவே பிடிக்கவில்லை. அவளது செழிப்பான உடலும், அழகும், ஆபரணங்களும் ஏனோ மனதிற்குள் நீர்மேலே பரவும் எண்ணெய் துளிகளின் எண்ணற்ற வண்ணங்களைப் போல பிடித்தும் பிடிக்காமலுமாய் மெல்லிய பொறாமையை உண்டாக்கியது. அவள் கடைக்குள் நடந்துவரும்போதே செல்வி அவளுடைய கால்களை கவனித்துவிட்டாள். அழகிய மஞ்சள்நிறக் கால்களில் வரிசையாக தோரணங்களைப்போல தொங்கிக்கொண்டிருக்கும் ஜால்ரா கொலுசு.. இல்லை இல்லை செல்விக்கு அந்தப்பெயர் மிகப் பரிச்சயம். அந்தப்பெயர் மேனகா ஜால்ரா கொலுசு. இப்பொழுதெல்லாம் எந்தப் பெண்களைப் பார்த்தாலும் முதலில் செல்வியின் கண்களில் தட்டுப்படுவது அவர்களது கால்கள்தான். அந்தக் கால்களில் அவர்கள் என்ன கொலுசு அணிந்திருக்கிறார்கள் என்றுதான் செல்வி பார்த்துக்கொண்டே இருப்பாள். சின்னவயதிலிருந்தே செல்விக்கு கொலுசுகள் என்றால் மிகப்பிரியம். வேறு எந்த அணிகலன்களும் வாங்கும் நிலையில் அவள் குடும்பம் இல்லாதிருந்தாலும் எப்படியாவது அவளது அப்பா மூன்று பெண்களுக்கும் அரைஞாண் கயிறு அளவிற்காவது கொலுசுகளை வாங்கி போட்டுவிடுவார். அது காலப்போக்கில் அடகுக்கடைக்கு பாடம் படிக்கச்சென்று அப்படியே முழுகிவிட்டாலும் விசேசங்களின் போது அப்பா யாரிடமாவது கடன்வாங்கியாவது வாங்கித்தரும் மெல்லிய கொலுசுகள் கறுப்புக்கால்களில் புத்தம்புதுசாக சரியாக படியாத காளைமாடுகளைப் போல சிலுப்பிக்கொண்டு நிற்கும் பொழுது அத்தனை அழகு.
செல்வியின் அப்பா சுந்தரேசன் சிறுவயதிலிருந்தே பஸ் ஸ்டாண்ட்டுகளில், பேருந்துகளில், கடைகளுக்கு தள்ளுவண்டியில் பட்டாணி சுண்டல் விற்று பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தான். அது ஒன்றும் அத்தனை எளிதான காரியமில்லை. ஐந்து கிலோ பட்டாணியை அதிகாலை மூன்றுமணிக்கு செல்வியின் அம்மா சரஸ்வதி புடைத்து கப்பிகள் கற்கள் நீக்கி தண்ணீரில் ஊறவைப்பதிலிருந்தே சுண்டலுக்கான வேலை தொடங்கிவிடும். செல்வியின் அக்கா யமுனா குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்கும் ஏனைய வேலைகள் செய்வதற்காகவுமே ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சரஸ்வதி சுண்டலுக்காக காலையிலே இரண்டு கிலோ வெங்காயத்தை மிகச்சன்னமாக நறுக்கத் தொடங்கும்பொழுதே யமுனா அடுக்களையில் அனைவருக்கும் காலை உணவுகளைத் தயார் செய்ய ஆரம்பித்துவிடுவாள். மதியத்திற்கு செல்விக்கு, சுந்தரேசனுக்கு, செல்வியின் தங்கை கவிதாவிற்கு அனைவருக்கும் மதிய உணவினையும் கட்ட ஆரம்பித்துவிடுவாள். வேலை செய்வதொன்றே வாழ்வின் இலட்சியமென எதைப்பற்றியும் சிந்திக்காது அவள் உண்டு அவள் வேலை உண்டென அமைதியாக எதாவது வேலை செய்துக்கொண்டே இருப்பாள். செல்வி சிறுவயதிலிருந்தே பெரிய ஆசைகளோடும் கனவுகளோடும் அதை நிறைவேற்றிக்கொள்ளும் வெறியோடும் அதற்காக போராடவும் செய்வாள். தீபாவளிக்கு ஒரே டிசைனில் பத்து மீட்டர் துணி எடுத்து அதில் யமுனாவிற்கு பாவாடை ஜாக்கெட், செல்விக்கு சுடிதார், கவிதாவிற்கு பாவாடை சட்டை தைத்துவிடலாம் என சுந்தரேசன் துணி எடுத்து வந்தால், புது டிசைனில் புதிதாக வந்த சுடிதார் தான் தனக்கு வேண்டுமென செல்வி அழுது அடம்பிடித்து வாங்கிக்கொள்வாள். இல்லையெனில் நான்கு நாட்கள் சாப்பிட மாட்டாள். வேலைக்குச் செல்ல மாட்டாள் அழுது முகத்தை வீங்க வைத்துக்கொண்டே இருப்பாள். சம்பாதிக்கும் தனக்கு ஒரு நல்ல உடை தைத்துக் கொள்வதற்குக்கூட தகுதி இல்லையா என குமுறித்தீர்ப்பாள். இவள் பண்ணும் அழிச்சாட்டியத்தில் வீட்டில் உள்ள அனைவரும் சற்று கோபமுற்றாலும் நாள்முழுக்க கடையில் உட்காரக்கூட நேரமில்லாமல் சுழன்று சுழன்று வேலை பார்த்து சோர்ந்து வரும் அவளை திட்டுவதற்கு யாருக்குமே மனசு வராது. எப்படியோ செல்விக்கு வேண்டியவற்றை அடம்பிடித்து சாதித்துக் கொள்வாள்.
சென்ற பொங்கலுக்கு செல்வியோடு வேலை பார்க்கும் தமிழரசி, கால்களில் மேனகா ஜால்ராகொலுசுகளோடு கடைக்கு வந்து இவளிடம் அல்டாப்பு காட்டியப்பொழுது, “இது என்னப்பா அடைமாதிரி காலெல்லாம் பரவி கிடக்கு.. நல்லாவே இல்லை” என அவளிடம் அப்போதைக்கு பொய் சொல்லி விட்டாலும், அழகான வளைவுகளோடு தோரணங்களாக அடர்ந்து பாதம் முழுவதையும் பரவி நிற்கும் அந்தக் கொலுசுகளின் மேலே பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது செல்விக்கு. அதென்ன மேனகா கொலுசு! பேரே இவ்வளவு அழகாக இருக்கிறது. எப்படியாவது இந்தக் கொலுசுகளை வாங்கி கால்களில் போட்டுக் கொண்டு வீதிகளில் நடந்து குடோனில் சலங்கை சத்தத்தோடு நுழையும்பொழுது தனது சலங்கை சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி தன்னையும் தனது கால்களையும் ரசித்துப் பார்க்க நடந்துசெல்ல வேண்டுமென பெரிதும் ஆசைப்பட்டாள். அன்றிலிருந்து இராப்பகலாக அந்தக் கொலுசுகளுக்காக பணத்தை சன்னமாக சேர்க்க ஆரம்பித்தாள். சம்பளப்பணத்தில் பாதியை மட்டும் வீட்டிற்கு கொடுத்துவிட்டு எதிர்கடை சிந்தாமணி அக்காவிடம் சீட்டுப்போட்டு பணத்தைச் சிறுக சிறுக சேர்க்க ஆரம்பித்தாள்.சரஸ்வதி கூட விறகடுப்பில் வைத்து சுண்டலை அவிக்க முடியவில்லை எனவும், சீட்டுக் கட்டும் பணத்தை எடுத்து கேஸ் அடுப்பும் குக்கரும் வாங்கிக்கொள்ளலாம் என்று செல்வியோடு மல்லுக்கட்டினாள். எதற்குமே செல்வி ஒத்துக்கொள்ளாமல் கொலுசு வாங்குவதிலேயே குறியாக இருந்தாள்.
போன வாரம் பத்தர் கடைக்கு சுந்தரேசனையும் கூட்டிச்சென்று மேனகா ஜால்ரா கொலுசுகளை வாங்க முற்பட்டப்போதே மொத்தமாக ஐயாயிரம் ரூபாய் குறைந்தது. அதோடில்லாமல் கொலுசுகளை இவர்களிடம் காட்டுவதற்கே தயங்கிய கடை ஊழியர்கள் மீது கடுமையாக கோபம் வந்தது செல்விக்கு. ஏன் நம்மைப் பார்த்தால் கொலுசை வாங்க வந்தவர்கள் போல் இல்லையா? அதென்ன செயல்களாலும் பார்வைகளாலும் மற்றவர்களை குன்றச் செய்வது? இவர்களுக்கெல்லாம் யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது? வெறும் உடைகள்தான் தகுதியை நிர்ணயிக்கிறதில்லையா? அப்படியெனில் நான் உழைத்து கையில் கொண்டு வந்திருக்கும் காசுக்கு என்ன மதிப்பு? பணத்தை தலையில் சொருகிக் கொண்டா வரமுடியும்? என மனதிற்குள் பொருமினாள்.அடுத்த வாரத்திற்குள் சிந்தாமணி அக்காவிடம் கசண்டு அதிகமாகக் கொடுத்தாவது சீட்டுப்பணத்தை எடுத்து இவர்கள் முகத்தில் தூக்கி எறிந்துவிட்டு மேனகா கொலுசினை எப்படியாவது வாங்கிவிட நினைத்தாள். நாளும் பொழுதும் அவளுக்கு அந்தக் கொலுசின் ஞாபகமாகவே இருந்தது. அதை அணிந்துக்கொண்டால் அந்த கடைத்தெருவிலேயே தான் மட்டுமே அழகாக காட்சியளிக்கப் போவதாகத் தோன்றியது. அந்தக் கொலுசினை அணிந்துக்கொண்டு மறுமுறை முதலாளி அம்மா வரும்பொழுது எதற்காகவாது சுடிதார் பேண்ட்டை தூக்கி அவளுக்கு இந்தக் கொலுசுகளை காட்டி அவளது செல்வச் செழிப்பிற்கு ஈடாக வந்துவிட்டேன் என நிரூபிக்கவேண்டும் என நினைத்துக் கொண்டாள். மனம் எத்தனை சூழ்ச்சியானது! முதலாளியின் மனைவி கழுத்தில் இருந்த நகைக்கு செல்வியின் இரண்டு வருட சம்பளம் கூட ஈடாகாது. ஆனால், செல்வி வாங்கப்போகும் கொலுசு முதலாளியின் மனைவின் அனைத்து சொத்துக்களையும் சமமாக அவளை நினைக்க வைத்து வெறியேற்றியது. கடையில் பார்க்கும் வேலைகள் போக ஒரு மணிநேர சாப்பாட்டு நேரத்தில் கூட, கடைகளுக்கு பூக்கட்டிக் கொடுத்து காசு சேர்த்தாள். காலையில் கடைக்கு வருவதற்கு முன்பு நாலைந்து கடைவாசல்களுக்கு முறைவாசல் செய்து அந்தக் காசினையும் சேமிப்பில் வைத்துக்கொண்டே இருந்தாள் செல்வி.
2
“இந்தாப்பா அருணு, இந்தா இந்த புளிமொளகாயைத் தொட்டுக்கிட்டு நல்லா சாப்பிடுப்பா. நல்லா உரப்பும் புளிப்புமா உணக்கையா தொட்டுக்கை இருந்தாதான் நாலு வாய் சோறு கூடுதலா உள்ள போகும். என்ன புள்ளை நீ! சவசவன்னு சோத்தை பிசைஞ்சிட்டுக் கிடக்கிற. நல்லா கைநிறைய அள்ளித்தின்னுய்யா. இந்த வேகாத வெயில்ல போயி நீ நின்னுகிட்டு மூட்டை தூக்கி லோடு ஏத்தணுமே! முதுகெல்லாம் வலிக்குதா சாமி?” என முதுகினைத் தடவிக்கொடுத்துக்கொண்டே கண்கலங்க கேட்கும் பவானியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “இல்லம்மா, அதெல்லாம் வலிக்கல. நீ ஏன்மா பதறுற? நேத்து நான் முப்பது மூட்டை அரிசி தூக்குனேன் தெரியுமா? மொதலாளியே என்னைப் பார்த்து நல்லா வேலை செய்யறடா அருணுன்னு பாராட்டுனாரு. ஆனா, அந்த சோமு கிழவன்தான் எல்லா வேலையும் இரண்டுங்கெட்டான் மாதிரி இப்படி இழுத்துப் போட்டுட்டு செஞ்சா முதுகெலும்பு பாழாப் போயிரும்யா. சூதானமா இருந்து பொழச்சிக்கய்யா. நம்ம தொழிலுக்கு உடம்புதான்யா மூலதனம். அத வீராப்புலயும் வேகத்துலயும் கெடுத்துட்டா அப்பறம் தேறாதுய்யான்னு தப்புத்தப்பா சொல்லித்தராரும்மா” என்று அருண் சொன்னதுதான் தாமதம்.. “இப்படி புரியாத புள்ளைய என்கிட்ட விட்டுட்டு உங்கப்பா இப்படி நிம்மதியா போயிட்டாரே.. நான் நாயாக் கிடந்து நாதியத்து அலையிறனே. என்புள்ள இப்பிடி மூட்டைத்தூக்கி முதுகெலும்பு உடையுதே! என் புருஷன் இருந்தா இதெல்லாம் பண்ண விடுவாரா? கடவுளே! என் தலையில ஏன் இதையெல்லாம் பார்க்கிறமாதிரி எழுதுன? பொல்லாதவன வச்சி குடும்பம் நடத்திடலாம். புரியாதவன வச்சி குடும்பம் நடத்தவே முடியாதும்பாங்க.. நான் புரியாத புள்ளைய வச்சிட்டு எப்படி காலந்தள்ளப்போறேன்னு தெரியலையே! பாவிப்பய முதலாளி புரியாத புள்ளையப் போட்டு இப்படி வேலை வாங்குறானே! காளியாத்தா கண்ணைத் தொறந்து பாருடி!” என்று புலம்பியவளின் முந்தானையை எடுத்து கழுவிய கைகளையும் வாயையும் துடைத்துக்கொண்டே, “அம்மா, ஏன்மா எதையாவது சொல்லி புலம்பிட்டே இருக்க? நமக்குதான் முதலாளி சம்பளம் கொடுத்து மாசத்துக்கு மளிகை சாமானும் தர்றாருல்ல? ஊர்ல உள்ள முதலாளிங்க எல்லாம் எவ்வளவு மோசந்தெரியுமா? என் மொதலாளி தங்கம்மா. சரி, நான் ராவுக்கு தாமசமாத்தான் வருவேன். நீ தூங்கு” என சாப்பாட்டுக்கூடையை எடுத்துக்கொண்டு கிளம்பியவனிடம், “அதென்னவோ நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான் அருணு!எதோ மனசு கேக்காம சொல்லிபுட்டேன்.நன்றி மறக்கக்கூடாதுப்பா அது அந்த தெய்வத்துக்கே அடுக்காது. உன்னை யாருமே கடைக்கு வேலைக்கு சேர்த்துக்காதப்ப அவருதான் தெய்வம் மாதிரி உன்னை சேர்த்துக்கிட்டாரு. நீ எதுவும் பேச்சோட பேச்சா அவருட்ட விளையாட்டா நான் சொன்னத சொல்லிடாத சாமி. சரி, ஏன் ராவுக்கு தாமசமாகும் உனக்கு?” என்றபடியே அருண் சாப்பிட்டு இறைத்திருந்த பருக்கைகளைப் திரட்டி கிண்ணத்தில் போட்டுக்கொண்டே கேட்டவளிடம், ”முதலாளிக்கு மூட்டுவலியாம். அதான் நாட்டு வைத்தியத்துக்கு தேனிக்கு போறாராம். சரி, நான் வர்றேன்மா பார்த்துக்க” என்றபடியே மனவளர்ச்சி குன்றியவர்களின் தள்ளாடும் நடையோடு கிளம்பிப் போனவனைப் பார்த்துக்கொண்டே, ”சாதனா, ஸ்கூலுக்கு கிளம்பிட்டியாடீ? எவ்வளவு நேரம்தான் நீ கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு தலைய சீவுவ? வாடீ! சடுதியா சாப்பிட்டுட்டு சீக்கிரம் கிளம்பு. ஜோதி அக்கா வீட்ல விருந்தாடிங்க வர்றாங்கன்னு காலையிலையே பாத்திரம் தேய்க்க வரச்சொன்னாங்க. தாமசமா போனா அந்தக்கா நாய் மாதிரி நம்மள விரட்டும். அப்பறம் நானூறுவா சம்பளத்தையும் ஒழுங்கா கொடுக்காம இழுத்தடிக்கும். வாடீ, நானாவது பின்னிவிடுறேன்னு சொன்னா.. உனக்கு பின்னத் தெரியாதுமான்னு சொல்ற. தலையப்பாரு தேங்கா நாரு மாதிரி ஜீவனே இல்லாமக் கிடக்கு. அதுல செத்த தேங்காய் எண்ணெயாவது தடவேன் பாப்பா. ஏண்டி, சொல்ல சொல்ல பதிலு பேசாம மசமசன்னு நிக்கிற? ஜோதி அக்காட்ட உனக்கு பீஸ் கட்ட வாங்குன பணத்துக்கே வட்டி கட்டாம கிடக்கிறேன். இப்படி ஆடம்பரமா போனா உடனே வட்டி கட்ட சொல்லி மிரட்டும்டி! என்னாடி பண்ற அங்க?” என கேட்டுக்கொண்டே சாதனாவை அடிக்கக் கிளம்பிய பவானி, சாதனாவின் கண்களில் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரைக் கண்டு ஒருகணம் கலங்கித் தடுமாறி, ”ஏண்டி அழுவுற? எப்போதும் திட்டறதுதானடி. இப்ப திட்டுவேன், செத்தநாழியில மறந்துடுவேன். இதுக்கேண்டி ஸ்கூலுக்கு போற நேரத்துல ஊளூ ஊளூன்னு அழுவுற.. கண்ணைத் தொடடி“ என்றபடி முந்தானையை உதறி சாதனாவின் கண்களைத் துடைக்கச்சென்றாள் பவானி.
“அம்மா, நீ திட்டுனதுக்காக அழுவலம்மா. ஸ்கூல்ல ஒரு பரீட்சை வைக்கிறாங்க. அதுல ஜெயிச்சிட்டா பத்தாவது வரைக்கும் பணம் நாம கட்ட வேணாம். அவுங்களே நம்மள செலவு பண்ணி படிக்க வைப்பாங்க. எல்லாரும் அதுக்கு டியூசன் வச்சி படிக்கிறாங்க. நான் எப்படியோ அந்த டீச்சர்ட்ட கெஞ்சிக்கேட்டு நோட்ஸ் எல்லாம் வாங்கி நல்லா படிச்சிட்டேன்மா. நாளைக்கு பரிட்சை.. நிச்சயமா ஜெயிச்சிடுவேம்மா. அப்படி ஜெயிச்சிட்டா அண்ணன் இத்தனை மூட்டைத்தூக்கி சம்பாதிக்க வேணாம்மா. பாவம்.. அவனுக்கு சரியா கண்ணு வேற தெரியல. கண்ணாடி வாங்க காசு இல்லாம உன்னுட்ட கூட சொல்லாம இருக்கான்மா. நாளைக்கு மறுநாள் நான் பரீட்சைக்கு கட்டாயமா போகணும்” எனக்கூறியவளைப் பார்த்து, “அதுக்கேண்டி அழுவுற.. காசுக்காகவா? நான் வர்றப்ப ராதிகா அக்காட்ட எப்படியாவது காலுல விழுந்தாவது ஐந்நூறு ரூபாய் வாங்கியாறேன் சரியா?” என்று சொல்லியும் பொழிவதற்கு முன்பு உருண்டு திரண்டு தயாராகிக் கொண்டிருக்கும் கருமேகங்களைப்போல தயங்கித்தயங்கி நிற்பவளைப் பார்த்து பவானிக்கு எதுமே புலப்படவில்லை. “என்னாடி, மறுபடியும் பதில் சொல்லாம மோட்டுவளைய பார்த்துட்டு நிக்கிற! வாயைத்தொறந்து சொன்னாதான தெரியும்” என்று முகத்தைப் பார்த்துக்கொண்டு நிற்பவளிடம், “நேத்தே சொல்லாம்ன்னு இருந்தம்மா.. நீ அப்பதான் வேலைய விட்டு அசந்து போயி வந்தீயா.. உன்னை பார்த்தா பாவமா இருந்தது அதான் சொல்லாம விட்டுட்டேன். முந்தா நேத்து ஸ்கூல் யூனிஃபார்ம் டிரஸ்ஸ துவைக்க ஊற வைக்கப் போனேம்மா. அண்ணன் சோப்பு போட்டு துணி துவைச்சிட்டு இருந்தான். சரி, அப்பறம் ஊற வைக்கலாம்ன்னு வந்துட்டேன். அவன் என் துணிய சோப்புத்தூளுல ஊற வைக்கிறதா நினைச்சிக்கிட்டு பீளிச்சிங் பவுடர் டப்பால கொட்டி வச்சிருந்த பீளிச்சிங் பவுடரை எடுத்து துணிய ஊற வச்சிட்டான். நான் போய் யூனிஃபார்ம் எடுத்துப் பார்க்கறப்ப கலரெல்லாம் போயி ஓட்ட ஓட்டையா துணி நஞ்சிபோயிடுச்சிம்மா. இத நான் சொன்னா அவன் வேலைய விட்டு வந்ததும் அவனப் போட்டு நாயடிக்கிற மாதிரி அடிப்ப. அப்பையும் அவனுக்கு ஒண்ணும் தெரியப்போறதில்லை. அதான்மா சொல்லல. நாளைக்கு மறுநாள் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டுட்டு தான் பரிட்சை எழுதப்போகணும். இல்லேன்னா வரவே வராதன்னு மேடம் சொல்லிட்டாங்க. என் ப்ரண்டுக்கிட்ட இரண்டு நாளைக்கு டிரஸ் வேணும்ன்னு இரவல் கேட்ருந்தேன். அந்தப்புள்ளையும் தரேன்னுதான் சொன்னுச்சி. இப்பப் பார்த்தா எங்க அம்மா தரக்கூடாது, தொத்துவியாதி வரும்ன்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லுது. இப்ப யூனிஃபார்ம்க்கு என்னமா பண்றது?” என்று தேம்பித் தேம்பிச் சொல்லிவிட்டு அழத்தொடங்கியவளை எப்படி சமாதானப்படுத்துவதென்றே பவானிக்குப் புரியவில்லை.
எதாவது செய்து ஒருநாளில் யூனிஃபார்ம் துணி வாங்கி தைத்து சாதனாவிற்கு கொடுத்துத்தான் ஆகவேண்டும். போனவைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க நேரமில்லை. அடகுவைக்க கைகால்களில் பொட்டுத்தங்கம்கூட இல்லை. எதாவது சின்னதாக நகை இருந்தால்கூட மணி அக்கா வாங்கிக்கொண்டு பணம் கொடுத்துவிடுவாள். நகை இல்லையெனில் அவள் வீட்டுப்படிகளில் கூட கால் வைக்க முடியாது. இந்தத்தெருவில் எல்லா வீடுகளிலும் கடன் வாங்கியாகிவிட்டது. அதை இன்னும் திருப்பிக்கொடுக்கவும் இல்லை. மறுபடி கடன் வாங்கப்போனால் கொடுத்த கடனை திருப்பிக்கொடுக்க வக்கில்லை என இரக்கமற்று நாக்கினாலேயே கொத்துவார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. வாங்கிய மொத்தப் பணத்தை கொடுக்கவில்லை எனினும் சொற்பமாவது கொடுத்திருக்க வேண்டுமல்லவா! வரும் வருமானம் வாடகைக்கு கொடுத்துட்டுவிட்டு வயிற்றுக்கே பத்தவில்லை. எப்படியாவது சாதனா இந்தப் பரீட்சையில் தேறிவிட்டால் ஸ்கூல் ஃபீஸ் கட்டவேண்டியது இல்லை. என்ன செய்வது! யாரிடம் கேட்பது? அருணுடைய முதலாளியும் ஊருக்கு சென்றுவிட்டார். என்ன செய்வதெனத் தெரியவில்லையே! ஊரெல்லாம் கடனும் வட்டிக்காசும் கொடுக்கவேண்டி நிலுவையில் நிற்க, பவானிக்கு நெஞ்சடைப்பது போலிருந்தது. இல்லை, இந்தக் குழந்தைகளுக்கு எதாவது செய்து இந்த பூமியில நிலைக்க வைக்கும் வரை தனக்கு எதுவும் நடக்காது என நினைத்துக்கொண்டாள்.
“சரி வா, அழுவாத அம்மா ஊட்டிவிடுறேன் சாப்பிடு. நான் போயி யாருட்டையாவது பணம் கேட்டுப்பார்க்கிறேன். அண்ணன் வந்தான்னா சோறு போடு. பொசுக்குன்னு போய் பணமுன்னு கேட்டா செருப்பால அடிச்சி விரட்டுவாளுக. பதவுசா போயி அவளுவளுக்குத் தகுந்த மாதிரி தொண்டைதண்ணி வத்த ஊருக்கதையெல்லாம் பேசிட்டு காசு கேட்டாதான், கொஞ்சமாவது மனசு இரங்கி பணம் தரலாமான்னு யோசிப்பாளுக. அதுனால முன்னாடிப்பின்னாடி ஆகும். வீட்டைப் பார்த்துக்க வந்துடுறேன்னு” என்று சொல்லிவிட்டு தெற்குவீதிக்குள் நுழைந்தாள் பவானி.
போனமாதம் தாமதமாகச் சென்றதற்காக ஆற்றிக்கொண்டிருந்த காஃபியை பவானி மேலே ஆங்காரமாக ஊற்றிவிட்டு அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் வேலையை விட்டு நிறுத்திய சுகுணா வீட்டிற்குச் சென்று முதலில் பணம் கேட்டுப் பார்க்கலாம் எனத் தோன்றியது. மான ரோசமெல்லாம் பார்த்தால் பிழைப்பு நாறிப்போய்விடும். வேறு வழியில்லை கேட்டுப்பார்ப்போம் கொடுப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஏனெனில் சுகுணாவைப்பற்றிய சில இரகசியங்கள் பவானிக்குத் தெரியும். அவள் கணவன் இருக்கும் சமயத்தில் பணத்தை கேட்டுப்பார்த்தால், பயந்துக்கொண்டு பணம் தந்தாலும் தருவாள். ஒருவேளை அவள் தருவதற்கு யோசித்தாள் எனில் சிறிது மிரட்டிக்கூடப் பார்க்கலாம். அவளுடைய இரகசியம் அப்படிப்பட்டது. மனதின் ஓரத்தில் சிறிது நம்பிக்கை எட்டிப்பார்த்தது. எப்படியாவது பணத்தை வாங்கிக்கொண்டு போய் துணி வாங்கி யூனிஃபார்ம் தைத்து நாளை மறுநாள் சாதனாவை தேர்வு எழுத வைத்துவிடவேண்டும் என அழுத்தமாகக் எண்ணிக்கொண்டே மரக்கதவின் கெண்டியை பலமாக ஆட்டினாள் பவானி.
சத்தம் கேட்டு உள்ளிருந்து கதவைத் திறந்துகொண்டு வந்தவளைப் பார்த்ததும் சப்பென முகத்தில் அடித்தாற்போல ஆகிவிட்டது பவானிக்கு. கதவைத் திறந்தது சுகுணாவின் அக்கா கோமளா. ”ஏண்டி வருசக்கணக்கா இங்கத்தான் வேலை செய்யற. உனக்கு என்னடி தேவையில்லாம ரோசம் வேண்டிக்கிடக்கு? அவ குணம்தான் உனக்கு தெரியும்ல.. இன்னைக்கு திட்டுவா நாளைக்கு அணைச்சிப்பா. அவ சொன்னான்னு நீ வேலைக்கு வராம இருப்பியா? சுகுணா வேலை விசயமா வீட்டை என்னை பார்த்துக்கச் சொல்லிட்டு டவுனுக்கு போயிருக்காடி.. வர இரண்டு நாளாகும் நீ இல்லாம அவளுக்கு கையொடிஞ்ச மாதிரி ஆகிப்போச்சுடி. இரண்டு நாள் கழிச்சு வந்து சேரு” என்று பதிலைக்கூட எதிர்பாராமல் படக்கென கதவை சாத்திக்கொண்டு உள்ளே போய்விட்டாள் கோமளம். பவானிக்கு தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது. எப்படியாவது சுகுணாவிடமிருந்து பணத்தைப் பறித்துவிடலாம் என பவானி நம்பிக்கையோடு இருந்தாள்.
அடுத்து காய்கறிகார மீனாக்காவிடம்தான் சென்று கேட்டுப் பார்க்கவேண்டும். அவள்தான் பவானியைப் பார்த்து சற்று இரக்கம் கொள்வாள். எப்பவாவது அந்தப்பக்கம் செல்கையில் வாடிப்போன காய்கறிகள், சற்று அழுகிய தக்காளிபழங்கள் என எப்படியும் நூறு ரூபாய் பெறுமானமுள்ள காய்கறிகளை அள்ளித்தருவாள். அவள் அந்த காய்கறிகளை தரவில்லையெனில் அந்த அழுகிய தக்காளியை வாங்கக்கூட பவானியிடம் காசு இருக்காது. எல்லாவற்றையும் எல்லாரிடமும் கேட்க முடிவதில்லை. அவர்களைத் தொடர்ந்து சிறிதேனும் அவர்களிடம் இரக்கம் தென்படுகிறதா எனப் பார்த்துதான் கொடுங்கள் என கேட்க முடியும். இல்லையெனில் குரங்கு கையில் கிடைத்த பூமாலையைப் போல நம் மனதை வார்த்தைகளால் சிதைத்து கொஞ்சநஞ்சம் மிச்சமிருக்கும் தன்னம்பிக்கையையும் கெடுத்து விடுவார்கள் என நினைத்துக்கொண்டே, மீனாவிடம் சென்று நைச்சியமாக பேச்சுக்கொடுத்து பணத்தைக் கேட்டுப்பார்த்தாள் பவானி.
அவள் திட்டவட்டமாக மறுத்திருந்தால் கூட பரவாயில்லை. எதற்கு பவானி பணம் கேட்கிறாள் என துருவித்துருவிக் கேட்டுத் தெரிந்துக்கொண்டு நல்ல யோசனை சோல்வதாக சொல்லி கடைக்கு காய்கறிகளை அடுக்குவதற்கும் பார்த்துக் கொள்வதற்கும் சரியான ஆள் இல்லையென்றும், அதற்கு சாதனாவை வேலைக்கு சேர்க்கச் சொல்லி வெந்தப்புண்ணில் வேலைப் பாய்ச்சினாள் மீனா. ”ஏன் பவானிக்கா, கையில வெண்ணெய்ய வச்சிட்டு நெய்க்கு அலையறீங்க! சத்தம் போடாம புள்ளைய கடையில கொண்டுவந்து விடுங்க. மாசத்துக்கு ஐயாயிரம் கொடுக்கறேன். அத விட்டுட்டு படிக்க வைக்கிறேன்ன்னு ஊரெல்லாம் கடன வாங்குறீங்களே.. உங்க பொண்ணு என்ன படிச்சி கலெக்டராவா ஆகப்போகுது? நாமெல்லாம் இப்ப படிச்சிட்டா சம்பாதிக்கிறோம்? ஜோலி நேரத்தில காலையிலையே கடன் வாங்க வந்திட்டீங்க… தள்ளுங்கக்கா! போய் புத்திசாலித்தனமா பொழைக்கிற வழியப் பாருங்க. ஆகாயத்துல வெள்ளக்காக்கா பறக்குதுன்னு ஆயிரம் பேரு சொல்லுவாங்க. அதை வெட்டியா இருக்கவங்க வேணுமின்னா நிமிர்ந்து பார்த்துட்டு ஆமாம் பறக்குதுன்னு ஒத்து ஊதுவாங்க. நாம எந்த இடத்துல இருக்கோம்ன்னு யோசிச்சி நாமதான் நம்ம பொழப்ப பார்க்கணும். இல்லாததை நடக்க முடியாததை நம்பக்கூடாது நகருங்கக்கா” என்று மீனா சொன்னதையே மனதிற்குள் திரும்பத்திரும்ப ஓட்டிபார்த்தாள் பவானி. அவள் சொன்னது ஆரம்பத்தில் கேட்பதற்கு ஒருமாதிரியாக சொரேர் என இருந்தாலும் அதிலுள்ள உண்மைத்தன்மை மனதைச் சுட்டது. இப்படியே ஒவ்வொரிடமும் பணம்கேட்டு கிடைக்காமல் மிகவும் சோர்ந்துப்போனாள் பவானி. இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை.. அவளது கணவன் உயிரோடிருக்கும் போது அடிக்கடி ஒன்று சொல்வான். ஒருவன் வாழ்க்கையில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் செருப்பால் அடிவாங்கிக் கற்றுக் கொள்ளவேண்டும் இல்லை பணத்தை கொடுத்து அதை வசூலிக்கும் போது கற்றுக்கொள்ள வேண்டுமென. அடிக்கடி பணத்தை அனைவருக்கும் கொடுத்து உதவி செய்துவிட்டுச் சொல்வான். இப்பொழுது அவனோட பிள்ளைகளுக்கு ஒரு நன்மை செய்ய இப்படி நாயாக அலைய வேண்டி இருக்கிறது. பணம் இவர்களிடம் வாங்கித் தின்னவர்கள் கூட இவள் ஏதாவது பணம் கேட்டுவிடுவாள் என இவளை தூரத்தில் கண்டாலே ஒதுங்கிப்போனார்கள். “தாயே! கருமாரி, என்னோட கஷ்டம் உனக்கு புரியலையா தாயே! ஏன் இப்படி தவிக்க விடுறம்மா?” என கண் கலங்கி வேண்டியவள் அடுத்து தையல்கடை சேகரை பார்க்கச் சென்றாள். அவனுடைய பார்வையும் பேச்சும் நடத்தையும் எதுமே சரியில்லையென பவானிக்குத் தெரிந்தாலும் அவனைத்தவிர இப்போதைக்கு வேறுவழியில்லையென அவன் கடை இருக்கும் வடக்கு வீதிக்குள் நுழைந்தாள் பவானி.
3
ஒருவழியாக முத்துச்செல்வி கீழவீதியிலேயே பெரிய நகைக் கடைக்குச் சென்று மிக அழகான மேனகா ஜால்ரா கொலுசினை வாங்கி கால்களில் போட்டுக்கொண்டு அனைவரிடமும் காண்பித்து மகிழ்ந்து ஒரு வாரமாகி இருக்கும். முதலாளி எதுவும் வேலை சொல்லாமலேயே அங்கும் இங்கும் ஆயிரம் தடவை கொலு ஒலிக்க நடந்து கொண்டே இருந்தாள். எப்பொழுது முதலாளி அம்மா கடைக்கு வந்தாலும் கால்களில் சுடிதார் பேண்டை கெண்டைக்கால் சதைகள் வரை தூக்கி இழுத்துக்கொண்டு வேலை பார்ப்பது போல மேனகா கொலுசினை அவளுக்கு காண்பித்துக் கொண்டே இருந்தாள். அதில் பெரியதாக எதையோ சாதித்து விட்டது போல மகிழ்ச்சியும் கொண்டாள். இவள் வேலை பார்க்கும் மேலவீதிகடையிலிருந்து நாலு தெரு தள்ளித்தான் கடையின் குடோன் இருந்தது. இப்பொழுதெல்லாம் செல்விக்கு குடோனுக்குச் செல்ல சலிப்பாக இருப்பதே இல்லை. ஆயிரம் தடவை நடக்கச் சொன்னாலும் அவளுக்கு இந்தக் கொலுசுக்கால்களோடு தெருமுனையில் நின்றுகொண்டு பார்த்துக்கொண்டிருக்கும் அந்தப் பையன்களைத் தாண்டி நடந்துபோவதே மனதிற்குள் சிலிர்ப்பாக இருந்தது.
சரஸ்வதிதான் மொத்தப் பணத்தையும் கொண்டுபோய் செல்வி கொலுசில் போட்டது சரியில்லையெனப் புலம்பிக் கொண்டிருந்தாள். ஆயிரம் தேவைகள் வீட்டில் இருக்கும்போது அகம்பாவமாக செல்வி அடம்பிடித்து இந்த விலை உயர்ந்த கொலுசினை வாங்கியது அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. நமது நிலைக்கேற்ப நாம் எதற்கு முதலிடம் கொடுக்கவேண்டுமெனக்கூட இவளுக்கு தெரியவில்லையே! என்ன செய்வது என எல்லாரிடமும் சொல்லி புலம்பிக் கொண்டேயிருந்தாள். அதைப்பற்றி செல்வி அலட்டிக்கொள்ளவே இல்லை. அவளுக்கு அவளுடைய மகிழ்ச்சிதான் பெரிதாகத்தோன்றியது.
வீட்டிற்குள் நுழைந்து சோர்வாக சுருட்டிக்கொண்டு படுத்துக்கொண்டாள் பவானி. சேகர் டெய்லர் கடையும் பூட்டியிருக்க வேறு வழியொன்றும் தெரியாமல் வீட்டிற்கே திரும்பியிருந்தாள். இவ்வளவு சிரமப்படுவதற்கு பதிலாக எதாவது எலிமருந்தை தின்று செத்துப்போய்விடலாம் என நினைத்துக் கொண்டாள். சாதனா கொல்லைப்புறத்தில் ஏதோ வேலையாக இருப்பது தெரிந்தது. காலையிலிருந்து சாப்பிடாதது வேறு மயக்கமாக வர அழுதுகொண்டே படுத்திருந்தாள் பவானி. இந்த உலகத்தில் அனைவராலும் கைவிடப்பட்ட ஒரே ஜீவன் தானாகத்தான் இருக்கும் என எண்ணினாள். தனக்காக உதவி செய்ய ஒருவருமே இல்லாதது அவளுக்கு இன்னும் வலியை அதிகப்படுத்தி வாய்விட்டு சத்தமாக அழத்தொடங்கினாள்.
அப்பொழுதுதான் வேலையிலிருந்து வந்து உள்ளே நுழைந்த அருணுக்கு அம்மா அழுவதைப் பார்த்ததும் ஒன்றுமே புரியவில்லை. காலையில் கடையில் வேலைப் ர்க்கும் பொழுது கடலையை எடுத்துக்கொண்டு கோணி ஊசியால் மூட்டையை தைக்கும் பொழுது ஏதோ சத்தம் கேட்டு நிமிர கவனக்குறைவால் கோணி ஊசி கைகளில் ஏறி வீங்கி ஊண்தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ”அம்மா, இங்க பாரும்மா. கையில ஊசியேறி கைய ரொம்ப வலிக்குது எதாவது செய்யும்மா” என நீட்டிய கைகளைப் பார்க்காமலேயே, ”எங்கையாவது போய் செத்துத் தொலையுங்க. உங்க அப்பன் எந்த கவலையுமில்லாம போயி சேர்ந்துட்டான். நான் உங்கள ஆளாக்க இப்படி நாயா அலையுறேனே.. அந்த கருமாரிக்கு கண்ணே இல்லை!” என சத்தம் போட்டு அழுதாள் பவானி. சில நிமிடங்களுக்கு பிறகு நீட்டியிருந்த கைகளிலிருந்து ஏதோ சத்தம் வர திரும்பிப்பார்த்தவள் அதிர்ந்தாள்.
அருணின் கைகளில் பளபளப்பாக மின்னிக் கொண்டிருந்தது அந்தப் பொருள். “ஏதுடா இது? எப்படிடா இது உனக்கு கிடைச்சிது?” என பதறிக் கேட்டவளிடம், “அம்மா, நான் கடைவீதிலேர்ந்து வேலை முடிச்சி மேலவீதி வழியா வந்துட்டு இருந்தேன்மா! நாய் ஒண்ணு என்னைப் பார்த்துக் குரைச்சதும் நான் மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டேனா.. அங்கதான்மா இது கிடைச்சிது. பார்க்க அழகா இருந்துச்சு. யாரும் பக்கத்துல இல்லை. அதான் எடுத்துட்டு வந்துட்டேன். நீ வச்சிக்கம்மா” என்று கூறியவனின் கைகளில் மின்னிக்கொண்டிருந்தது செல்வி குடோனுக்கு வந்து சென்றபொழுது தொலைத்துச் சென்ற மேனகா ஜால்ரா கொலுசு. அருணுக்கு இங்கு கொலுசு கிடைத்த நேரத்தில் தனது கால்களில் அணிந்திருந்த கொலுசு எங்கோ கழண்டு விழுந்து காணாமல் போயிருப்பதைக் கண்டு செல்வி பதறித் துடித்து ‘ஓ’வென கதறிக் கொண்டிருந்தாள்.
பவானி எழுந்து முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டே கொலுசினை அருணிடமிருந்து வாங்கி முந்தாணியில் முடிந்து கொண்டாள். அங்கிருந்தே கொல்லைப்புறத்தைப் பார்த்து, “சாதனா! ஏய் சாதனா! சீக்கிரம் கிளம்பி இருடி. நா இந்தோ மணி அக்கா வீடு வரைக்கும் போயிட்டு காசு வாங்கிட்டு வந்தர்றேன். அப்பறம் கடைக்கு போயி ரெடிமேடா யூனிஃபார்ம் வாங்கிட்டு வருவோம்“ எனக் குரல் கொடுத்துவிட்டு, ”அருணு, செத்த வலிய பொறுத்துக்க கண்ணு! நான் ஜானு மெடிக்கல்ல சொல்லி உனக்கும் வலிக்கு மாத்திரையும் கைக்கு மருந்தும் வாங்கியாரேன். இந்த கொலுசு நம்மளோடதுதான். அப்பா இருந்தப்ப வாங்கிக் கொடுத்தது. நான்தான்பா அங்க தொலைச்சிட்டேன். நீ தங்கப்புள்ள அத கண்டுபிடிச்சிட்ட. நீ இந்த அப்பா வாங்கிக்கொடுத்த கொலுச எடுத்தீயான்னு யாராவது கேட்டா இல்லைன்னு சொல்லணும் சாமீ! நீ எடுத்தேன் சொன்னா அம்மாட்டேர்ந்து அதப் புடுங்கிடுவாங்க சாமி. சரியா? நீ டிவி பார்த்துட்டு இரு. இதோ வந்தர்றேன்” என்றபடியே, அவசரமாக மாடத்திலிருந்த விளக்கினைப் பார்த்தவள் அதன்மீது மெலிதாகப் படர்ந்திருந்த கரிப்புகையை அழுக்கடைந்தாலும் பரவாயில்லையென முந்தானையில் அழுத்தித் துடைத்து தீப்பெட்டியை எடுத்து விளக்கைப் பொருத்தி திரியை சரிசெய்து, முத்துப்போல சுடரினை எரிய வைத்தவள் அந்த சுடரினை ஒருநிமிடம் நின்று பார்த்துவிட்டுதெருவிற்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.எங்கும் இருள் பரவி நின்றாலும் கோபுரத்திற்கு பின்பு சூரியன் மறைந்த இடத்தில் மட்டும் செவ்வானம் பிரகாசித்தது.