மிஷன் தெரு – தஞ்சை பிரகாஷ்
மிஷன் தெரு – தஞ்சை பிரகாஷ்
வாசகசாலை பதிப்பகத்தின் முதல் படைப்பு இந்நூலாகும். மனித வாழ்வின் பன்முகத்தன்மை கொண்ட வெவ்வேறு வாழ்வின் அத்தனை அம்சங்களையும் தனக்கு வாய்க்கப்பெற்ற கொஞ்ச நாட்களிலேயே பெறச்செய்பவர்களே தலைசிறந்த படைப்பாளிகள். வாசகனாக மனதளவில் ஒரு எழுத்தாளரிடமிருந்து பெற விரும்புவது இவற்றை மட்டுமே. அதில் எந்தவிதத்திலும் குறையில்லாமல் கொடை வள்ளலாக தன் படைப்பினூடாக வெளிப்படுபவர் தஞ்சை பிரகாஷ்அவர்கள்.
அவரின் மிஷன் தெரு தொட்டுச் செல்லும் வரலாற்றுப்பிண்ணனி மற்றும் முன்வைக்கும் பெண்னுலகம் தனித்துவமானவை.
தஞ்சை பிரகாஷ் மிஷன் தெரு நாவலில் நிறுவ வருவதும் இதையே.
18ம் நூற்றாண்டு (1701 – 1800) கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம். அக்காலத்தின் தஞ்சாவூர், மன்னார்குடிதான் கதைக்களம்.
மராட்டிய சரபோஜி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியப் படையெடுப்பு அடிக்கடி திடீர் புயல் போல வந்து எல்லாவற்றையும் அதி முக்கியமாக பருவ வயது பெண்களைக் கவர்ந்து செல்கிறது. அதிலும் துராணியப் படை பெண்களைக் கவர்ந்து அரபு தேசம் வரை விற்க அனுப்பி, காசு பார்க்கிறது.
இதனால் இவர்களை ஒடுக்க மராட்டிய ராஜ்ஜியம் கிழக்கிந்தியக் கம்பெனி வெள்ளைக்காரப் படையை ஆதரிக்கிறது. விளைவு அங்கு நடைபெற்றுக் கொண்டிருப்பது இரட்டை ஆட்சி.
அப்படியே ஓ பி எஸ் – மோடி காம்பினேஷன் கண்ணுக்குள் வந்து போகிறது 😉
நாயகி எஸ்தர். மன்னார்குடி கள்ளர் இனம்(அவ்வ்வ்….) ஆனால் அவள் தந்தை பெயர் ராஜரத்தினம் வன்னியர். அரசு வேலைக்காக (வெள்ளையரிடம் வேலை பார்க்க) சில படிப்புகளைத் தேடிப் படித்து, கிருத்துவராகவும் மாறி, நல்ல சம்பாத்தியத்தில் இருக்கிறார் ராஜரத்தினம்.
தன் மகள் எஸ்தரை, பிற மத / சாதிக்காரர்கள், பிற சாதி என்ன பிற ? மதம் மாறாத அல்லது மாறிய தன் சாதி ஆட்கள் கூட செய்யத் துணியாத செயல் ஒன்றைச் செய்கிறார். மகளை எல்லா மொழிகளையும், கிருத்துவ வேத பாடங்களையும் படிக்க வைக்கிறார். பதினெட்டு வயதாகியும் எஸ்தருக்கு திருமணமும் செய்து வைக்க்கவில்லை.
கள்ள இன வாடிக்கையான முறை மாமனுக்கு பெண்ணைக் கொடுக்கும் பாரம்பரியப் பண்புகளும் மதம் மாறிய பின் தான் பின்பற்றத் தேவையில்லை என அத்துணை நெருக்கதல்களையும் புறக்கணிக்கிறார்.
முக்கியமாக ரவிக்கை அணியாத பெண்களுக்கு மத்தியில் தன் குடும்பப் பெண்களை ரவிக்கை அணிய அனுமதிக்கிறார். அவர்கள் குடும்பப் பெண்கள் ரவிக்கை அணிவதை கேலி செய்கின்றனர் அவர் சாதி ஆட்கள், மதம் மாறாத இந்துக்கள்.
இந்துப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே உலவ அனுமதி கிடையாது. படிக்க அனுமதி ? ஹிஹி. வெளியப் போனா துலுக்கப் படை தூக்கிட்டு போய்டுவான் பரவாயில்லையா ? என்றே வளர்க்கப்படுகிறார்கள். பிற ஆண்களுடன் வெளிப்படையாய் பேச அனுமதி இல்லை. இதில் காதல், ஓடிப்போகுதலுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.
ஆனால், எஸ்தருக்கு எல்லாச் சுதந்திரமும் அளவில்லாமல் கிட்டுகிறது. ஆனால் அவளுக்கு அவளுடைய அழகும், உடலும் முதல் எதிரியாய் அமைந்து போகின்றன. (ம்க்கும், இன்னும் எத்தனை வருடங்களுக்கு இந்தத் துர்நாற்றம் பிடித்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கப் போகிறோமோ ? 🙁 )
எருமை போலிருக்கும் முறை மாமனுக்கு எங்கே தன்னைக் கட்டி கிட்டி வைத்து விடுவார்களோ என்றஞ்சி, ஒரு தவறான முடிவை எடுக்கிறாள் எஸ்தர். அது அவள் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துக்கிறது. அந்தத் திருப்பம் நரகத்துக்குச் செல்லும் பாதை.
அவள் அனுமதியின்றி அப் பாதை அவளை நரகத்துக்குள் கொண்டு போய் தள்ளுகிறது. அதையெல்லாம் 100 பக்கங்கள் கூட இல்லாத இக் குறு நாவலை வாசித்து நீங்கள் தெரிந்துக் கொள்ளுங்கள்
தஞ்சை கண்ட தான் இயங்கி. தான் இயங்கி தன்நிலை அறியாது. தன்வயப்படாது. தனித்துவம் பற்றிய அக்கறை அதற்கு என்றுமே இருந்தது இல்லை.
பிறர் வாழ தன்னை இயக்க அனுமதிக்கிறது. அந்த அனுபவம் ஒரு செயல். பலரை செயல்படச்செய்தது. இன்றும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
தஞ்சை பிரகாஷ் பலருக்கு தந்தை பிரகாஷ்.