கட்டுரைகள்
Trending

நிலவுப் பயணம் – சில நினைவுகள்

ஜெகதீசன் சைவராஜ்

T-12,11,10,9,8,7,6,5,4,3,2,1,0 Ignition sequence start,6,5,4,3,2,1,0 All engines are running…lift off.. We have a lift off என்கிற மகிழ்ச்சி ததும்பும் கட்டளையோடு தொடங்கியது அந்தப்பயணம்.

மனித குல வரலாற்றின் அதிமுக்கியம் வாய்ந்த ஓர் பயணம். மூன்று விண்வெளி வீரர்களோடு கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்ட Saturn V என்கிற ஏவுகலத்தின் முதல் பாதி பூமியின் ஈர்ப்பிலிருந்து தூரம் சென்ற பின் பிரித்துவிடப்படுகிறது. இரண்டாம் பகுதியின் துணையோடு அப்பலோ 11 விண்கலம் பூமிக்கு அப்பால் அதி உயர இடத்தை அடைகிறது. மூன்றாம் பகுதி அப்பலோ விண்கலத்தை வட்டப்பாதையில் நிலைநிறுத்துகிறது. எல்லாம் சரிபார்த்த பின் Translunar Injection மூலம் அப்பலோ விண்கலம் நிலவை நோக்கி செலுத்தப்படுகிறது.

ஆம் நம் அம்மா நமக்கு காட்டி சோறூட்டும் அதே நிலவை நோக்கி தான்.குறிப்பிடத்தக்க தொழில்நுட்பம் இல்லாத போதும் மேற்சொன்ன நிகழ்வுகள் அனைத்தும் மூன்றறை மணி நேர கால இடைவெளியில் அரங்கேறின. திட்டத்தின் இரண்டாம் கட்டமாக Lunar module யும், Command service module யும் நிலவை நோக்கி மூன்று நாள் பயணத்தை தொடர்கிறது.

நிலவின் ஈர்ப்பை கண்டடைந்த பின் Command service module  நிலவின் குறை-வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு Lunar module நிலவில் தரையிறங்க வேண்டி பிரித்துவிடப்படுகிறது.

நாள்:July 20,1969. இந்த லூனார் கலத்தில் தான் நாம் பால்ய நாட்களில் அதிகம் கேட்டு வளர்ந்த பெயர்களை கொண்ட இருவர் மனித வரலாற்றின் ஆகப்பெரும் செய்கைக்கு பயணப்பட்டு கொண்டிருந்தார்கள்.

மூவரில் மீதமிருக்கும் மைக்கேல் காலின்ஸ் என்பவர் கட்டளை செயற்படுத்தும் கலனாகிய ‘கொலம்பியா’ விலிருந்து இருவருக்கும் கட்டளை மற்றும் வழியை தருவித்துக்கொண்டிருந்தார். பிரிந்து சென்ற சில நிமிடங்களில் துணை உந்துகலன்களை சரியாக செயல்படுத்தி, எரிபொருள் தீர இன்னும் 40 விநாடிகளே இருந்த நிலையில் Lunar module நிலவில் Sea of Tranquility என்ற இடத்தில் தரையிறக்கப்பட்டது. “Egle has landed ” என்கிற ஒலிச்செய்தியை கேட்ட தரைதள கட்டளை பிறப்பிப்பாளர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார்கள். பின்பு 384400 கிலோமீட்டர்க்கு அப்பால் இன்னொரு துணைக்கிரகத்தில் மனிதன். யாரால் நினைத்து பார்க்க இயலும். “இன்னும் ஓர் அடி தான் நிலவின் தரைக்கு” என்று சொல்லிக்கொண்டே நிலவில் முதல் தடத்தை பதித்தார் நீல் ஆம்ஸ்ட்ராங்.

பின்னால் அவரை தொடர்ந்து பஸ் ஆல்ட்ரின்.ஆறு மணி நேரம் 39 நிமிடத்திற்கு பின் நடந்த இந்நிகழ்வுகள் அனைத்தும் பூமியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் ஏறத்தாழ 650 மில்லியன் மக்கள் நேரலையை கண்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தரையிறங்கிய பின் புகைப்படம் எடுப்பது உட்பட பல்வேறு ஆராய்ச்சிகள் இருவராலும் நிகழ்த்தப்பட்டன.முதலாவதாக மாதிரிகளை சேகரிப்பது (Soil Mechanics Investigation), மேலும் சூரியகாற்றின் கலப்பு வீதத்தை அளப்பதற்கான (Solar Wind Composition Experiment) மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன.இது தவிர Passive Seismic Experiment (நிலநடுக்கத்தை அளக்கும் கருவி), Laser Ranging Retroreflector (பூமியிலிருந்து நிலவின் தூரத்தை துல்லியமாக அளக்கும் கருவி), Lunar Dust Detector(நிலவின் தூசுகளை ஆராயும் கருவி) போன்ற கருவிகள் அங்கேயே வைக்கப்பட்டன. மொத்தமாக 2 மணி 31 நிமிடம் 40 விநாடி நீடித்த இந்த ஆராய்ச்சி Extravehicular activity (EVA) என அழைக்கப்பட்டது.

1959 தொடங்கி 1969 வரையிலான பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளின் வெற்றிக்கனி இது. மட்டுமில்லாமல் நான்கு லட்சம் மக்களின் அயராத உழைப்பின் பயன். சரியாக ஐம்பது வருடம் கழித்து இன்றும் வியந்து பார்க்க்கூடிய திட்டமல்லவா அது. அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கிடையேயான விண்வெளி ஓட்டத்தில் அமெரிக்கா வென்றது. அதன் காரணமா விண்வெளி ஆராய்ச்சியில் யாராலும் எட்ட முடியா இடத்தை அடைந்தது.இந்நிகழ்வு அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு வலு சேர்த்தது மட்டும் முரண். மொத்தமாக 21 மணி நேரம் 36 நிமிடம் 21 நொடியை செலவழித்து 22 கிலோ அளவுள்ள மாதிரிகளை சேகரித்த பின் இருவருடன் ஈகிள் நிலவிலின் தரையிலிருந்து புறப்பட்டது.

 

 

சற்று நேரத்தில் மேலே வட்டமடித்துக்கொண்டிருந்த கொலம்பியாவுடன் சேர்ந்துவுடன் வீரர்கள் இருவரும் கலன் மாற்றப்பட்டு ஈகிளை அங்கேயே விட்டுவிட்டு கொலம்பியா பூமியை நோக்கி புறப்பட்டது. இரண்டே முக்கால் நாட்கள் பயணத்திற்கு பின் கொலம்பியாவின் விண்வெளி வீரர்கள் இருக்கும் பகுதி மட்டும் பூமியின் வளிமண்டலத்தில் உள்நுழைந்து பசுபிக் பெருங்கடலில் விழுந்தது. 16,ஜூலை 1969 ல் மூவாயிரம் டன் எடை கொண்ட ஏவுகலத்தில் தொடங்கிய இப்பயணம் 24 ஜுலை 1969 ல் மூவர் மட்டும் அமரக்கூடிய ஓர் சிறிய பெட்டகத்தில் வெற்றிகரமாக முடிவடைந்தது. மனிதன் எப்போதெல்லாம் ஆகச்சிறந்த காரியங்களை செய்கிறானோ அப்போதெல்லாம் அதைத்தாண்டி விமர்சனங்கள் வைக்கப்படும். கோபர்நிகேஸ் தொடங்கி கலீலியோ கடந்து இப்போது வரை புரியாத, புதிய விடயம் ஒன்றினை புரிந்துகொள்ள முற்படாமல் அதை விமர்சிப்பது மட்டுமே பொதுஜன புத்தி. அவ்வகையில் அப்பலோ 11 திட்டத்திற்கும் விமர்சனம் வைக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் அதனை சுற்றி நிறைய கட்டுக்கதைகளும், வதந்திகளும் பரப்பப்பட்டன. எல்லாவற்றையும் மீறி நிலவில் மனிதன் தடம் பதித்த ஐம்பதாவது ஆண்டை நம்பிக்கையுடன் கொண்டாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நிலவில் இறங்கிய பின் ஆம்ஸ்ட்ராங் சொன்னது போல், இது One small step for [a] man, one giant leap for mankind தான். வேற்றுகிரக தேடலிலும் சரி விண்வெளியில் மனிதனின் எல்லையை விரிவாக்குவதிலும் சரி நாம் வைத்த இம்முதல் அடி மிகப்பெரும் தாக்கத்தை நிகழ்த்தியிருக்கின்றது. இனிவரும் காலங்களில் நிலவில் மனிதன் காலனி அமைப்பதற்கும், அதனை வேற்றுகிரக குடியேற்றத்திற்கான குறைவீர்ப்பு பயிற்சி தளமாக பயன்படுத்துவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. 24.5 பில்லியன் டாலர்கள் (தற்போதைக்கு 150 பில்லியன் டாலர்கள்) செலவு செய்து இவற்றிற்கு வழிகோலாக நிகழ்த்தப்பட்ட இச்சாதனை இம்மியளவும் வீண்போகவில்லை என்பது மட்டுமே உண்மை. இதன் பின் அப்பல்லோ 17 திட்டம் வரை 12 விண்வெளி வீரர்கள் நிலவில் நடந்து ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆனால் இந்நிகழ்வுக்கென்று  வரலாற்றில் என்றும் நீங்காத இடமுண்டு. ஆம்,பூமியை ஒன்பது முறை சுற்றி வரும் தொலைவு கொண்ட நிலவிற்கு முதன் முதலாக மனிதன் சென்று கால்பதித்து மீண்டும் பூமிக்கு திரும்பினான் என்பது எத்தனை பெரிய விசயம். அவ்விசயம் அரங்கேறி இன்றுடன்(20/07/2019) ஐம்பது ஆண்டுகள் நிறைவுறுகிறது.

ஜெகதீசன் சைவராஜ்
ஜெகதீசன் சைவராஜ்

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button