இணைய இதழ்இணைய இதழ் 94மொழிபெயர்ப்பு கவிதைகள்மொழிபெயர்ப்புகள்

பாப் பீக்ரி கவிதைகள் – தமிழில்: ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி

மொழிபெயர்ப்பு கவிதைகள் | வாசகசாலை

நானா நார்சிசஸ்?

நான் மரங்களுக்கு மத்தியில் எழுகையில், சூரிய வெளிச்சமோ
மண்ணிலிருந்து துரிதமான உதயத்திற்கான
உற்சாகத்தில் குலுங்குகிறது
நீராவிப் பனிமூட்டங்களோ
மலைமேலுள்ள அலங்கோலமான
மாயபூதங்களைப் போல மிதக்கின்றன
பின்னிப் படர்ந்த புதிய இலைகளோ,
காட்டில் வீசும் காற்றுக்கு சிறு சிறு புள்ளிகளாய்
பச்சை வண்ணமிடுகின்றன
எனது நினைவுகள் முன்பும் விருப்பங்கள் முன்பும்
தொங்க விடப்பட்டவாறு
ஒவ்வொரு வெளிசுவாசத்திலும்,
நான் என் ஞாபாகங்களிடமிருந்து பறிக்கப்படுகிறேன்

ஒரு வளைந்த புல்லின் நுனியிலுள்ள
குமிழ் வடிவ பனித்துளியானது
விடுவிக்கப்பட்டு, அந்தரத்தில் நீண்டு, விழுவதற்கு முன்பு
முட்டாளின் உலகத்தை குவியின் மேற்பரப்பில்
பிரதிபலித்ததை மாற்றி
ஒரு பெயர்சூட்டப்பட்ட பொருளைக் காண்பிக்கிறது,
அதன் உறவும் பந்தமும்
நினைவுகள் தெறிக்கப்படவுள்ள
ஒரு குறித்த நேரத்தின் நினைவாணி.

காளான் மாளிகைகளின் மேற்பரப்புகளிலும்
நிழல்களிலும் மத்தளமிட்டு
மிருதுவான பூமியின் மேல் இங்கு-அல்லது-அங்கு என
உருண்டோடும் நீர்த்துளிகள்:
எனது பாட்டியின் சிறிய தெய்வீகக் கண்கள்,
அவளது பொம்மைக் கடையில் எனக்கு
கோலிகுண்டினைப் பரிசளிக்கையில்,
அது ஒளியை
தனது வானவில் சுழல் நரம்புகள் கொண்டு வளைத்தபோது,
எனக்குச் சொந்தமான மலர் முகத்தின்
விரிந்த சிற்றலையின் கீழ்
அதன் சிறுபுள்ளிகள் மற்றும் தொடர்ச்சியான உட்புறக் குமிழிகள்.

[நார்சிசஸ் – கிரேக்க புராணங்களின்படி தண்ணீரில் தெரியும் தனது பிம்பத்தின் மீது காதல் வயப்பட்டு உயிரை விட்டான்.]

*****

காளியாஹாஃயை சந்திக்கையில்

நாம் குளிர்கால சங்கிராந்திக்கு விரைகையில்
இடங்களையும் நெடுந்தொலைவுகளையும் போர்த்தி மூடவுள்ள
இருளானது பெருகுவதை நான் கண்டேன்,
மேலும் அதனுள்ளே சட்டென்று வேகநடையிட்டுக் கடந்தேன்,
ஈரப் பாதைக்கு மத்தியிலுள்ள
கல்லறைகள், தரைப்பனி மற்றும்
அதன் உறைய வைக்கும் குளிரிடமிருந்து
நழுவி வெளியேறினேன்,
வீட்டைச் சென்றடைவதற்கான அவசரத்தில்
அதன் நடுங்கச் செய்யும் வீரியத்தை நின்று ரசிக்கவோ
அதன் பொக்கிஷத்தன்மையை
சிறிது நேரமெடுத்து அனுபவிக்கவோ
மறந்தேன்,
குளிர்காலத்தின் எடையற்ற தன்மையைக்கொண்டு
என் மீது அதன் அழுத்தத்தைத் தரட்டும்,
ஆதலால் தற்போது வேறு வழியில்லாமல் நான்
மண்பாதையில் தொடர முடியாமல் மடிந்து, உறைந்தேன்,
சில வினோத காரணங்களுக்காக
பிரகாசிக்கும் ஜன்னல்களையும்
தெருவிளக்குகளையும் கண்டு
நொந்து போனேன்.

[காளியாஹாஃ – ஸ்காட்டிஷ் மற்றும் ஐரிஷ் கேலிக் மொழிகளில் கிழவி (சூனியக்காரி) என்று பொருள். கெல்டிக் மரபுப்படி அவர்களின் மூத்த பூர்வகுடிகளில் ஒருவரானவள், குளிர்காலத்தின் அளவையும் வீரியத்தையும் கட்டுப்படுத்தும் தெய்வமாய்த் திகழ்கிறாள்.]

*****

ஆசிரியர் குறிப்பு:

கவிஞர்  பாப் பீக்ரி
புகைப்பட கிரெடிட்: கெவ் ஹோவர்ட்

பாப் பீக்ரி இங்கிலாந்தின் மிடில்ஸ்பரோவில் வசிக்கிறார். அவர் ஒரு கவிஞர், நாடக ஆசிரியர் மற்றும் அரங்கேற்றாளர். அவரது படைப்புகள் ஃபின்னிஷ், உருது, ஸ்வீடிஷ், டச்சு, ஸ்பானிஷ், எஸ்டோனியன், கேலிக், கரேலியன் மற்றும் தமிழ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும் ஏராளமான தொகுப்புகளில் மற்றும் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது சமீபத்திய நூல் வெளியீடுகள்: தி லாஸ்ட் அல்மனாக் (யாஃபிள் பிரஸ், 2023), வென் வி வேக் வி திங்க் வி ஆர் வேலர்ஸ் பிரம் ஈடன் (ஸ்டெர்வெல் புக்ஸ், 2021), அண்ட் தென் வி சா தி டாடர் ஆப் தி மினோட்டார் (தி பிளாக் லைட் என்ஜின் பிரஸ், 2020), சிவில் இன்சோலென்சிஸ் (ஸ்மோக்ஸ்டாக், 2019), ரொமன்செரோஸ் (ட்ரங்க் ம்யூஸ் பிரஸ், 2024).

*******

sriram_dc@yahoo.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button