
குடும்பப் பணிவிடைகளுக்குப் பின்
நண்பகலில் கழிப்பது
காலைக்கடன்
மிஞ்சியது வீணாகக்கூடாதென
விழுங்குவதெல்லாம் உணவு
கட்டிக்கொண்டவனிடமும்
கொட்டிவிடா காமத்திற்குப்
பெயர் கற்பு.
படித்தவளின்
சுயசிந்தையின்மையே
அடக்கம்.
சிலிர்த்து சிலகாகிக்கும் மென்உணர்வு,
வன்மையாய்
உடலெங்கும் விரவுகையில்
கர்ப்பிணியின் வயிற்றில்
படரும் வெப்பக்கரத்தில்
விரவும் குளிர்ச்சி ‘புனிதம்’.
ஊடலில்,
மெலிதாய் குறுகுறுத்து
அலையலையாய்
முனைவரை கூசி
விரைக்கும் முலையின் திமிர்ப்பை
கோதி சாந்தப்படுத்துவது ?