சிறார் இலக்கியம்

முயலும் ஆமையும் – புதுக்கதை

ஞா.கலையரசி

ஒரு நாள் சிங்க ராஜாவிடம், தன் குறையைக் கூறி தீர்வு பெறுவதற்காக முயல் வந்திருந்தது.

“உனக்கு என்ன பிரச்சினை?” முயலிடம் கேட்டது சிங்கம்.

” வணக்கம் ராஜா!  முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப் போட்டி நடந்ததாவும், அப்ப பாதியில முயல் தூங்கிட்டதால ஆமை ஜெயிச்சிட்டதாவும் யாரோ எழுதி வெச்ச கதையால எங்க இனத்துக்கே ரொம்ப அவமானமா இருக்குது.

எங்கப் போனாலும், ‘போட்டிக்கு நடுவுல தூங்கிட்டு ஆமைக்கிட்ட தோத்தவங்க தானடா நீங்க! சரியான தூங்குமூஞ்சி தோத்தாங்குளி!’ன்னு கிண்டல் பண்றாங்க. அந்தப் பழி சொல்லை நான் நீக்கணும்னு ஆசைப்படறேன்.  அதுக்கு நீங்க தான் உதவி செய்யணும் ராஜா!” என்று முயல் சொன்னது.

“அதுக்கு நான் எப்டி உதவ முடியும்?” என்று கேட்டது சிங்கம்.

தனக்கும் ஆமைக்கும் மறுபடியும் ஓட்டப் பந்தயம் வைக்கவேண்டும் என்று ராஜாவிடம் முயல் வேண்டுகோள் வைத்தது.

“நீங்கள்லாம் என்ன சொல்றீங்க?” என்று அங்குக் கூடியிருந்த மற்ற விலங்குகளைப் பார்த்துக் கேட்டது சிங்கம்.

முயல் கேட்பது நியாயம் தான் என்றும், மறுபடியும் ஒரு போட்டியை நடத்தினால் அதன் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் மற்ற விலங்குகள் ஒரே குரலில் கூறின.

“மன்னிச்சிடுங்க ராஜா. நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்” என்று எழுந்து நின்றது குளத்து ஆமை.

“ஏன் ஒத்துக்க மாட்டே?” என்று ஆமையிடம் கோபமாகக் கேட்டது சிங்கம்.

“போட்டியில ஓடற ரெண்டு பேருமே, சமமான பலம் உள்ளவங்களா இருக்க வேணாமா? அப்படி இல்லைன்னா, பின் தங்குறவங்களுக்குச் சில சலுகைங்க கொடுத்துப் போட்டிப் போட வைக்கிறது தானே நியாயம்? அது தானே சமூக நீதி?

முயல் தாவித் தாவி படுவேகமா ஓடும்.  என் மேல கனமான ஓடு இருக்கு. அதத் தூக்கிட்டு நான் நடக்கிறதே கஷ்டம்.  முயல் முழுசா ஓடி முடிக்கும் போது, நான் பாதி தூரத்துல தான் இருப்பேன். இதெல்லாம் உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருந்தும் என்னை பந்தயத்துல கலந்துக்கச் சொல்றது சரியா?  நான் சொல்றது தப்புன்னா, என்னை மன்னிச்சிடுங்க ராஜா!” என்று பணிவாகச் சொன்னது ஆமை.

“ஆமை சொல்றதும் சரி தான். அப்ப ஒன்னு செய்யலாம். முயல் ரெண்டு கிலோ மீட்டர் ஓடணும். ஆமை அதுல பாதி, அதாவது ஒரு கிலோ மீட்டர் ஓடினாப் போதும். யாரு மொதல்ல வராங்கன்னு பார்க்கலாம்.” என்றது சிங்கம்.

“அதெல்லாம் முடியாது ராஜா.  ஆமையும் முழு தூரத்துக்கு தான் ஓடி வரணும்” பிடிவாதமாக சொன்னது முயல்.

“அப்பப் போட்டியே வேணாம் ராஜா. முன்கூட்டியே நிச்சயமா தெரிஞ்ச முடிவுக்கு, எதுக்கு நேரத்தை வீணாக்கணும்?  இப்பவே நான் தோல்வியை ஒத்துக்கறேன். முயல் தான் ஜெயிச்சிதுன்னு பட்டம் கொடுத்துடுங்க” என்றது ஆமை.

“ம்ஹூம் முடியாது.  இங்கக் கூடியிருக்கிற எல்லாருக்கும் முன்னாடி, போட்டியில கலந்துகிட்டு நான் ஜெயிச்சிக் காட்டணும்” என்றது முயல்.

“அப்படின்னா நான் கலந்துக்கறேன்,  ஆனா ஒரு கண்டிஷன்!” என்றது ஆமை.

“என்ன அது?” என்றது ராஜா.

“நாங்க ஓடுற பாதை, பாதி தூரம் மணலா இருக்கணும்.  பாதி தூரம் தண்ணியா இருக்கணும்” என்றது ஆமை.

அதிர்ச்சியான முயலோ “அச்சச்சோ! என்னால தண்ணியில நீந்த முடியாது. நான் ஒத்துக்க மாட்டேன்” என்றது.

சிங்க ராஜாவுக்கோ பொல்லாத கோபம் வந்துவிட்டது.

“அடேய் முயல் ! நானும் ரொம்ப நேரமாப் பார்த்துக்கிட்டிருக்கேன்.  ராஜான்னு கொஞ்சங்கூட மரியாதை இல்லாம, எல்லாத்துக்கும் மறுப்புச் சொல்லிக்கிட்டிருக்கே? எல்லாமே உன் இஷ்டப்படி தான் நடக்கனுமா? ஆமை சொன்னது மாதிரி தான் பாதை இருக்கும்.  நீ ஓடித் தான் ஆகனும். ஓடலேன்னா, உனக்கு மரண தண்டனை கொடுத்துடுவேன்!” என்று கர்ஜித்தது.

தெரியாமல் வந்து வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டோமே என நினைத்து அழுகை அழுகையாக வந்தது முயலுக்கு.

வேகமா நீந்த முடியாம போய் போட்டியில் தோத்துட்டாலும் அசிங்கம், போட்டியே வேணாம்னு விலகினாலும் மரண தண்டனை. என்னதான் செய்யறதுன்னு முழித்த முயல், வேறு வழியில்லாமல் ஆமையிடம் சென்றது.

அழாத குறையாக அதன் காலை பிடித்து கெஞ்சி, எதயோ கேட்டது முயல். ஆமையும் அதற்கு ஒப்புக் கொண்டது.

அதன்படி முதலில் ஆமையைத் தூக்கிக் கொண்டு முயல் மண்ணில் ஓடியது. பின்னர் ஆறு வந்ததும், முயலை முதுகில் சுமந்துக் கொண்டு ஆமை நீந்தியது.

மிக குறைந்த நேரத்தில் பாதையை கடந்து, உலக சாதனை படைத்து இரண்டும் ஒன்றாக வெற்றி பெற்றன.

ரெண்டு பேருடைய ஒற்றுமையையும் பார்த்த சிங்ஜராஜா ரொம்ப சந்தோஷத்தோட,

“ஒருத்தருடைய பலம் இன்னொருத்தரோட பலவீனம். ஆனா ரெண்டு பேரும் ஒத்துமையா சேர்ந்து வேலை செய்தா, சாதனை செய்ய முடியுங்கிறது எவ்வளவு பெரிய உண்மை. இந்த உண்மையை உங்க ரெண்டு பேரு மூலமா நாங்க எல்லாரும் இன்னிக்கு தெரிஞ்சிக்கிட்டோம். பாராட்டுகள்,” அப்படின்னு சொன்னதாம் சிங்கம்.

அங்க இருந்த விலங்குகள் இருவருக்கும் கைகுலுக்கி வாழ்த்துக் கூறி விடை பெற்றன.

“ஒற்றுமைதான் உயர்வுக்கு வழி என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இந்த போட்டியில் கலந்து கொண்ட ஆமையும் முயலும் தானே. நாமும் இனிமே ஒற்றுமையா இருப்போம். சரிதானே !”

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button