இணைய இதழ்இணைய இதழ் 71கவிதைகள்

நலங்கிள்ளி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

வே‌ண்டுகோள் 

உன்
அப்பள வார்த்தைகளை
வீசிச் சென்றால்
நொறுங்கவே
செய்யும்

உன் தீ கருத்தை
நீரில் அமிழ்த்தினால்
அணையவே செய்யும்

உன் பனி முகத்தை
ஆதவனிடம்
அர்ப்பணித்தால்
மறையவே செய்யும்

உன் வெயிலை
ஒளித்து வைத்தால்
இருள் வரத்தான் செய்யும்

உன் பகையை
கூர்தீட்டி
ஒடச் செய்தால்
முட்டவே செய்யும்

உன் நேரத்தை
விரயமாக்கினால்
காலங்கள் கழியவே
செய்யும்

உன்
எதிரான சிந்தனை
லாவகத்தில்
ஒடிகின்ற கிளைகளை
எப்படி ஒட்டி
உயிரூட்ட முடியும்

ஒரு நிமிடம்
நின்று
என் சொல்
கேள் !

***

அவள் வருகை 

ஒர் அளவில்
தொடங்கி
பெரிதாய்
முற்படப்போகும்
ஓவிய முன்னோட்டம்
மனக்கண் முன் விரிகிறது

நாட்பட்ட புண்ணிற்கு
மூலிகை மருந்தினை
கீழ்த்திசை வைகறை
அனுப்பி வைக்கிறது

பெரும் புயலுக்கு முன்
சூழும் அமைதி
ஆகாயத்தின் சூழ்நிலை
மாரியை வழங்குவதற்கான
நம்பிக்கை

உலர் திராட்சைகள்
உயிர்பெற்று
அகிலச் சுவை கூட்டி
சமுத்திரக் கனவில்
மிதக்க விடும் தொடரலை

சோலை
வண்டுகளின்
விரகங்கள்
தீர்க்கப்பட்ட பின்
ஒய்வறியாது
அவயத்திற்குள்ளாகிற
பொழுதுகள்

நாட்பட்ட
வலை அறுபட
முற்றுகையிட்ட
கூட்டத்தைத் தாண்டி
ஏற்றுக்கொண்ட
உன் பூ மாலை

ஒரு சிமிட்டலில்
வேரறுந்த
யாக்கையின்
கடைசிச் சொட்டு
உப்பு நீர்

கனவற்ற
மலைக் குரங்கின்
களி நடனத்தில்
முகம் சுழிக்க
வைத்த செயல்

கடைசிப் பக்க
கையெழுத்தில்
கண்டுபிடித்த
ஒற்றெழுத்தின்
குற்றம்

மிகுதியாய்
எழுதிவிட்ட
அயர்ச்சியில்
நற்சொற்களை
தவறவிடுவது

புலால் மறுத்த
குருவியின்  ஆசை
அச்சமூட்டும்
வெஞ்சினம்

திறக்கப்படாத
பெட்டிக்குள்
எவ்வளவோ
விருப்பங்கள்
அவையனைத்தும்
தருக நீ
வருக… வருக…

*********

nalangilli7@gmail.com

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button