இணைய இதழ்இணைய இதழ் 71கவிதைகள்

தாமரைபாரதி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

அழுக்காறு

உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதை
திடீரென மறையும் அந்திமேகமாய்
காற்று கொண்டுவரும் குளிர்ச்சியால் வருடாதீர்
எனது உயரத்தை உங்களால் ஒருபோதும்
தாங்கமுடிவதில்லை என்பதை மறைமுக
உதாசீன மழையாகப் பொழியாதீர்
உங்கள் வரையறைக்குள் வரமுடியாத
என்னை
வலுக்கட்டாயமான சிரித்த முகத்துடன்
வரவேற்க வேண்டாமே
என் வளர்ச்சிதானே ஒரு சிறு பிள்ளையின் காரணமறியா அழுக்காறாக உங்களைப்
பாடாய்ப் படுத்துகிறது
நேர்முகமாய்ச் சொல்லுகிற அந்தப் பெருந்தன்மை என்னைப் போல்
ஏன் உங்களுக்கு வாய்க்கவில்லை
சூசகத்தின் உச்சங்களில் இருந்துகொண்டு
மறைமுக யூகவெளிகளில் நீங்கள் அனுப்பும்
பிணந்தின்னிக் கழுகுகள் என்னைத் தாமதாமாகவே வந்தடைகின்றன
என்றாவது முகத்திற்கு நேராய்
நிகழ்ந்து விடுகிற பாராட்டை
என்மீது எறியப்படும் நேராயுதமெனவே கருதுவேன்
உங்களுக்கு ஒருபோதும் பிடிக்காத
என்னை வெட்டுங்கள்
துளிர்தளிர்விட்டு வளர்வேன்
வேரொடு பிடுங்குங்கள்
விதைகளைத் தூவுவேன்.

***

வீழ்நாள் படாஅமை

சதவீதக் குறியீட்டின் சாய்கோட்டை
எதிராக எழுதச் சொல்லும்
உங்கள் அறிவின் மேதைமை வியப்பளிக்கிறது
எப்போதும் உங்களுக்கு ஒரே காதுதான் கேட்கிறது
அல்லது
ஒருவர் பேசுவதை மட்டுமே கேட்கிறீர்கள்
பிறருக்கு வாய்ப்பளிக்காத
மற்றொரு காதினைக் கொண்டு என்ன செய்ய
அல்லது
பேசவே கூடாத பிறர் வாயினைக் கொண்டு என்ன செய்ய
இந்த நாளின் வாய்க்குள் ஏகப்பட்ட வன்சொற்கள்
இந்த நாளின் காதுக்குள் ஏகப்பட்ட
அவச்சொற்கள்
மிளகாய் அரவை எந்திரத்தின் இரைச்சல்களாய் அலைவுறும் சொற்கள் இந்த நாள் முழுதும் தொடர்கின்றன
முடிவில் சதவீதக் குறியீட்டின் இரண்டு குட்டி சுழியங்கள் விழிகளாகித் தங்களுக்குள் இடம் மாறுகின்றன
நெளிகிறது சாய்கோடு
கொஞ்சம் நெடியுடனும்
கொஞ்சம் வலியுடனும்.

***

வெறுப்பு

உங்களை விட அதிகமாக அன்பாயிருக்கிறேன்
உங்களை விடவும் அதிகம் படித்திருக்கிறேன்
உங்களை விடவும் அதிகம் உழைக்கிறேன்
உங்களை விடவும் அதிகம்
எல்லாவற்றையும் நேசிக்கிறேன்
உங்களை விடவும் அதிகம்
தெரிந்து வைத்திருக்கிறேன்
தவறுகள் கோணல்கள் குறித்து
அதிகம் விவாதிக்கத் தயாராயிருக்கிறேன்
ஆனாலும் எனக்கு மேல்கீழ் பேதமில்லை
யாரோ ஒருவர் வீழும்போது
தாங்குவதற்கு எனது கரங்கள்
முதலில் நீள்கின்றன
யாரோ ஒருவரின் விழியைத் துடைக்க
எனது விரல்கள் நீள்கின்றன
யாரோ ஒருவரின் பசி போக்க
எனது இதயம் நீள்கிறது
எதிலும் எங்கும் பங்கேற்க விடாமல்
என்னைத்தான் நீங்கள்
எப்போதும் மறுக்கிறீர்கள்
செய்யக் கூடாது
கட்டாயம் செய்யக்கூடாது
நிச்சயமாக செய்யவே கூடாது
கண்டிப்பாக உள்நுழையக்கூடாது
பிடித்த உணவை உண்ணக்கூடாது
அனைத்து கூடாதவைகளையும் நான்
செய்துகொண்டுதானிருக்கிறேன்
உங்களைப் பற்றி என்னால்
புகாரளிக்க இயலாது
அப்படியே புகாரளிப்பினும்
புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது
அப்படியே நடவடிக்கை எடுப்பினும்
அது என் மீதுதான்
எனது கசப்பான அனுபவங்களின் மீதுதான்
இங்கிருந்து விடுபடுதல் மீண்டும் என்
பால்யத்திற்குச் செல்வதாகிறது
இங்கிருந்து வெளியேறுதல்
நேர்புவி நாட்டமுடைய தாவர வளர்ச்சியாகிறது
இங்கிருந்து மீளுதல்
சொத சொதத்த புதைகுழி நிகழ்வாகிறது
உங்கள் தெருக்களில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டவன்
அனுமதித்த போது எனது கால்களில் செருப்பில்லை
கால்களில் செருப்பிருந்தபோது
இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டேன்
தோளில் துண்டைப் போட்டபோது
சபையில் தரையில் அமர்ந்தேன்
நாற்காலியில் அமர்கையில் அதன்
கால்களை உடைக்கிறீர்கள்
கூரை வீடுகளை எரிப்பீர்கள் என்பதால்
ஓட்டு வீடுகளையும் மாடி வீடுகளையும் கட்டுகிறேன்
நீங்கள் அவற்றைச்
சுக்கு நூறாக உடைப்பீர்கள் எனத் தெரிந்தும்…
அங்காடித் தெருக்களில்
எனக்கென ஒரு கடையில்லை
ஒப்பந்தங்களில்
எனக்கென ஒரு கையெழுத்தில்லை
மேடைகளில் எனக்கான இருக்கையை
நானே எடுத்துச் செல்வதாகிறது
எதுவுமே வேண்டாமென
எனக்கெனக் குடிக்க ஒரே ஒரு மண்பானையை மட்டும் செய்தேன்
நீங்களோ பானையில் முதலெழுத்தில்லாத கமலத்தைக் கலந்தீர்கள்.

***

வேறு உலகம் 

பட்டாம்பூச்சிகளின் சரணாலயத்தில்
பூச்செடிகளுக்குப்
பதில் பார்த்தீனியச் செடிகளைத்தான்
என்னால் நட முடிகிறது
உங்கள் பறவைகள் இளைப்பாற
கிளையேதுமில்லை
உங்கள் கால்நடைகள் தாகந்தீர்க்கவியலா
அமில நதி எனது
காகங்களின் கொத்தல்களுக்கு ஒரு பருக்கை கூட எச்சில் இலையிலும் இல்லை
உள்வெளியாய்ப் பரந்து கிடக்கிற
மனவானில் புறாக்களைப் பறக்க விட்டால்
என்னிடமிருக்கின்றன வீழ்த்தும் அம்புகள்
ஒத்திசைவின்றித் தொடரும் உரையாடலை
கருணையேயின்றி சிறு எறும்பாய் நசுக்குவது நலம்,
விட்டு விடுதலையாதல் நனி நலம்!

********

thamaraibharadhi@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. விதைகளை தூவவில்லை .நாற்று போல அழுந்த பதித்திருக்கிறீர்கள் கவிதைகளை ஆழமான பதிவுகள் சார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button