இணைய இதழ்இணைய இதழ் 71சிறுகதைகள்

சங்கிலி பூதத்தார் – உத்தமன் ராஜா 

சிறுகதை | வாசகசாலை

‘நாட்டிலேயும் நல்ல நாடு, நல்ல நாடு…
நாவலர்கள் வாழும் நாடு, வாழும் நாடு…’

என்றவாறு தூரத்தில் சங்கிலி பூதத்தார் கோவிலில் வில்லிசைப் பாடல் ஆரம்பித்தது

செங்கோடன் ஊருக்குப் பொதுவாக கேட்குமாறு பரமனிடம் சுத்திவளைச்சு கேட்டான், ‘சொத்து பிரிக்க முன்னாடி அத்தை ஒருத்தி இருக்கா, அவளுக்க மகனுக்கு செய்முறை செய்யிறதுக்கு பண்ட் ஒதுக்கனுமுல்லாடே.’

பரமன் மவென் சொன்னான், ‘ஏய்யா நாட்டாமைதனம் பண்ணுதவம்லாம் உயிரோட இருக்க, உமக்கு உம்ம மக்கமார பண்ட் ஒதுக்க சொல்லிட்டுதாம் வந்திருக்கிரோஎன அவையம் போட, ஊர்க்கூட்டத்தில் ஒரே அமளி, துமளி.

பெறவு என்னடே அவனவன் செய்யிற செய்முறைய செய்யிதான் இல்ல செய்யாம போறேன் ஒமக்கு எங்கடே பொத்துகிட்டு வருது, இங்க என்ன கஞ்சிக்கில்லாம வீடு, வீடாக் கையேந்தியா பொழச்சிக்கிட்டுருக்கோம். உயிரோட இருக்கப்பயே தொகை ஒதுக்க உம்ம மாதிரி கையில எந்நேரமும் உறமோரு எல்லாவனும் வச்சிருப்பானா..சோலிய பாத்துகிட்டு அவனவன் போவனா.. பெருசா பேச வந்துட்டாம் பெரிய மனுசம்னு…’

பெத்த அப்பன் செத்துக்கிடக்கான், ஊர்ல பொது ஆளுனு யார்கிட்டயோ போயி துட்டக்குடுத்து வரவு, செலவு பாக்க சொல்லுதியயோ..ஏம்யா செங்கோடனுக்கும், பரமனுக்கும் மக்கமாரு இல்லாம போயிட்டானா?’

உங்க அப்பன் இருந்த பூர்வீக வீடுன்னு சொல்லுதியலலே, வீடு பாதி இடிஞ்சும், இடியாம உங்க அப்பனுக்கு நேத்து ராத்திரி உசுறு இழுத்துக்கிட்டு கிடந்த மாதிரி கிடக்கு, இந்த 2 அடி நடைபாதைக்கு உள்ளருந்து ஐஸ்பெட்டிலெ கிடக்க உங்கப்பன் பொணத்த எப்பிடிவே முதல்ல வெளிய கொண்டாருவிங்க, அதை மட்டமா இடிச்சுத் தரத் துப்பில்லாத பயலுக என்னடே ஊர்ச்சபையில பேசவந்திட்டிங்கஎன ஊருக்குப் பொதுவாய் சொக்காரன் ஒருத்தன் கேட்டான்.

அதெல்லாம் 30ம் நாள் முடிஞ்சுதான் பேசணும், உன் சோலிய பாத்துகிட்டு போடே, எங்கப்பன் சொத்தப் பிரிக்க நீ எவம்டே?’ என செங்கோடன் பொரிந்து தள்ளினான். ‘அக்கா தங்கச்சி பங்கெல்லாம் சேர்த்து 4 பங்கு வக்கணுமில்ல?’

30-ம் நாள் முடிந்த பின்பு ஒருநாள் ஆளவரமில்லாத நேரம் பார்த்;து செங்கோடனின் தங்கை அசல் வீட்டுப் பத்திரம் மொத்தத்தையும் களவாடிச்சென்று செங்கோடனிடம் கொடுத்துவிட்டாள், பரமனுக்கோ, பரமனின் மகனுக்கோ இதுகுறித்த எந்தத் தாக்கலும் தெரியப்படுத்தவில்லை. பரமனுக்கும் பாத்தியப்பட்ட பத்திரத்தை தனியொரு சம்பந்தமில்லாத ஆளாக செங்கோடன் தங்கை மூத்தவனுக்குத்தான் எல்லாம் உண்டு எனச் சொல்லி, பத்திரத்தின் நகல்கூட இல்லாமல் எடுத்துச்சென்றுவிட்டார்கள்.

எப்பா செங்கோடா, மொத்தமே முக்கால் சென்ட் இடத்துக்கும் கம்மியாத்தான் இருக்கும், யாராச்சும் ஒரு ஆளு வாங்குனாலே இடம் காணாதே, என்னடே 4 பங்கு வக்கணுமிங்க. அக்கா, தங்கச்சிக்கு ரூவாயக் கொடுத்துட்டு விட்டுக்குடுத்துப் போங்கப்புஎன பெரிய தலைக்கட்டு ஒருத்தர் சொல்ல, ‘அப்பிடின்னா பரமன் வீட்டையும் சேர்த்து எழுதித் தாராம்னாச் சொல்லு மொத்தமா வாங்கிக்கிடுதேன்எனச் செங்கோடன் பணத்திமிரில் கொக்கரித்தான்.

பரமனின் மகன் கரண்ட் மீட்டர் மாற்றும் வகைக்கு பத்திரம் தேவைப்படும் பொருட்டு பத்திரத்தைத் தேடிப்பார்த்தபோது பத்திரம் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து பக்கத்து வீட்டு ஆள் மூலமாக விசாரித்தபோது, செங்கோடன் உரிய பதில் சொல்லாததால் கச்சேரியில் புகார் செய்யப்போவதாக அவன் சொல்ல, அதன்பிறகே பத்திரத்தைக் களவாடிச் சென்ற விபரம் தெரியவருகிறது

’10 எழுத்து இருந்தா 5 எழுத்து எங்கப்பனுக்கும் பாத்தியமிருக்கிற பத்திரத்த இவ யாரு எடுத்துட்டுப்போவ, இவளுக்கு என்ன உரிமை இருக்குனு இவ தூக்கிட்டுப் போயி அங்க குடுத்துருக்கா, எதிர் வீட்டுல தான் இருக்கேன், எங்கப்பனுக்கும் இவங்களுக்கும் தான ஆகாது, பொது ஆள்னு சொல்லி எங்க தாத்தன் செத்த அன்னைக்கு வரவு, செலவு பாத்து கணக்கு ஒப்படைச்சிருக்கேன், சிறுக்கிவிள்ள எங்கிட்ட நேர்ல சொல்லவேண்டாம், மூணாம்மத்த ஆள வச்சித் தகவல் சொல்லிட்டு எடுத்துட்டு போக வேண்டியதான? பொதுவா ஒரு ஆள்கிட்ட போயி சொன்ன எங்கப்பன் சொத்தப் பிரிக்க நீ எவம்னு கேப்பானுவோ, இதே மாதிரி எதிர்வீட்டுக்காரன் நீயே எடுத்து வச்சிக்கிட்டு அவன் 2 கிலோமீட்டர் தள்ளி இருக்கான், அவனச் சொல்லுதியேனு நாளைக்கு என்னயவும் ஒருத்தன் கேட்பான்லா, தாத்தன் சொத்துல பங்கு எனக்கும் உண்டுனு இவனவள மாதிரி இவனுவளுக்கு முந்திக்கிட்டு பத்திரத்த நான் தூக்கி வச்சிருந்தம்னா எனக்குக் களவாணிப்பட்டம் கெட்டிருவானுக, அதுக்கும் ஊருல நாலுபேரு கொடி பிடிப்பாம்லா.’

‘கையெழுத்துப் போட வீடு தேடி வந்து கூப்புட்டாத்தான் சொத்துப் பிரிக்க வருவம்னு சொன்ன சிறுக்கிக, இதுக்கெல்லாம் முறையாச் சொல்லிட்டுத்தான செய்யணும், உபதேசம் ஊருக்கு மட்டும்தான் போல.’

‘நான்தான் கையெழுத்துப் போடக் கூப்புட வருவம்னு சொன்னதுக்கு, சின்னப்பயலாம் சபைக்கு எப்பிடி வரலாம், நானென்ன காதலிச்சா கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிருக்கேன், யாரு வரணுமோ அவங்கதான் வரணும்னு சொல்லுத சிறுக்கி, அரிசி பெட்டி நான் தூக்குற அன்னிக்கு நான் வரக்கூடாதுனு சொல்ல வேண்டியதான, அப்போ காரியம் ஆவணும்னா சின்னப் பயலும் பெரிய மனுசன், காரியம் முடிஞ்சு போச்சுனா சின்னப்பயலா.. என்னங்கடா உங்க நியாயப் புண்ணாக்கெல்லாம்?’ என ஆத்திரத்துடன் கத்திக்கொண்டிருந்தான் பரமன் மகன்.

செத்துப் போன அப்பனுக்குக் கிழமை விசாரிக்க, பாத்திரம் தூக்க அண்ணன் மகன் பொதுப்பிள்ளை, பெரிய மனுசன், அன்னக்கு நிப்பாட்ட வேண்டியதான நீ எவம்னு? என் வீட்டில தண்ணிக்குடம் தூக்குனாத் தீட்டாம், பக்கத்து வீட்டிலருந்து தண்ணி தூக்கிட்டு வராங்கஅது சரி, அவன் குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் பல தலைமுறையா ஆகாது, அவன் வீட்டுத் தண்ணிய எனக்குச் சொந்தமான நடைபாதை வழியா எப்பிடில தூக்கிட்டு வரலாம்னு நானென்ன சண்டைக்கு நின்னனா? தண்ணியும் காத்தும் ஊரு, ஒலகத்துக்குப் பொதுவான விசயம்னு அன்னக்கி அத பெருசுபடுத்தல.’

‘தண்ணிக்குடம் தூக்கிட்டு வந்து 2 அடி நடைபாதைக்குள்ள நடுப்பாதையில சுவரோட சுவரா குடத்தோட மாட்டிக்கிட்டு, அவனுகள பிடிச்சு வெளிய இழுத்துவிட்டம்ல, அந்தச் சமயத்துல பெரிய மனுசன், இப்ப சின்னப்பய’

‘தற்கொலை செஞ்சு செத்த ஆளுக்கு, இயற்கை மரணம்னு கையெழுத்துப் போட்டு சர்ட்டிபிகேட் வாங்கிக் குடுத்து, வரவு செலவுக் கணக்கு 2 தடவை விளக்கம் குடுத்து அந்த நோட்டையும் பொது ஆள் கிட்ட ஒப்படைச்சுட்டுப் போகத் தேவை பெரிய மனுசன், இப்ப சின்னப் பய நல்லாருக்குடா உங்க நாட்டாமத்தனம், நல்லா வாயில பெரிய பெரிய கொழக்கட்டையா எத்தன தூக்கிக் குடுத்துருப்பிங்க!’

‘செல்லப்பெட்டில இருந்து, சின்ன விளக்கு வரைக்கும் மூத்தவனுக்குத்தான். ஆனா, பழைய வீட்டை இடிக்கும்போது பக்கத்துல கூட வரமாட்டாராம், அதுக்கெல்லாம் பெரிய மனுசன் வரமாட்டாராம், இடிச்சுப் போட்ட வீட்டுல அள்ளுன ஓடு, நெல் உரல், மாவு ஆட்டுற உரல், அம்மிக்கல் எல்லாம் ஊர்ப்பய வீட்டுக்கிட்ட கெடக்கு, அத இன்னிக்கு தேதி வரைக்கும் அள்ளிப்போடத் துப்பில்ல, பனங்கம்பு அள்ளிட்டுப் போக ஆள் செட் பண்ணுறதுக்கு பெரிய மனுசன் வருவாரு, ஆனா, வீடு பங்கு வச்ச தெக்குப் பக்கம் இல்லாம ரோட்டடில எனக்கு குடுத்தாத்தான் வீட்ட இடிக்கச் சம்மதிப்பேன்னு சொல்லுவாரு.. இவருதான் அசல் பெரிய மனுசன்’

‘முறைப்படி கையெழுத்துப் போட அக்கா, தங்கச்சிய கூப்பிடுறதுக்கு எல்லாரும் போகணும், ஆனா பங்கு பிரிக்கிறது மட்டும் தலைகீழாப் பிரிப்பானுங்க, இது எந்த ஊர் முறை? இதலாம் அக்கா, தங்கச்சி கேட்க மாட்டா, ஊர்ச்சபைலயும் கேட்கமாட்டாங்கஅது உங்களுக்குள்ள கலந்து பேசிக்கோங்கனு சொல்லுற ஊரு, பொதுச்சுவர் தரலனா ஊர விட்டுத் தள்ளி வச்சுடறேன்னு சொல்லும், அதுக்கு மட்டும் எதுக்கு வருது சபையும், சங்கமும், தலைகீழாச் சொத்துப் பிரிச்சாத்தான் வீட்டை இடிப்பேன்னு சொல்றவன் பக்கம் ஜால்ரா தட்டுது ஊரு, அங்க பொதுச்சுவர் தரலன்னால ஒதுக்கி வைச்சுருவேன் பாருனு ராகம், தாளம், பல்லவினு எல்லாம் உட்கார்ந்து எழுதுறாக.. என்னய்யா நையாண்டி.!’

‘வீட்ட இடிக்கச் சொல்லி கலெக்டர் கிட்ட மனு போட்டு, பி.டி. விசாரிச்சு, பஞ்சாயத்து ஆபிஸ்ல விசாரிச்சுட்டாங்க அதுக்கும் பதில் சொல்லல. 2 வருசம் வீட்டுத்தீர்வை கெட்டாம கெடக்கு, அதுக்கு மூத்தவன் பதில் சொல்லாம நான் பதில் சொல்லிருக்கேன். ஊர்ப்பயகிட்ட 500 கடன் வாங்கி தீர்வைய நான் கெட்டிருக்கேன். 4 பங்குக்கு 5 பங்கு வைங்க, நான்தான் கார்டியன்னு சொல்லி பிரச்சினை பண்ணுனா எப்பிடி நீங்க பிரிச்சிட்டு போவீங்க?’

‘பத்திரம் தலைப்பிள்ளை பேர்ல இருக்கு, அவர் பேர்லதான் கரண்ட் இருக்கு, 1985 வாங்கிருக்காரு, அடிக்கட்டை நோட்ட எடுத்துச் செக் பண்ணுனாத் தெரியும்னு சொல்லியாச்சு, சம்பந்தப்பட்ட நபர் உன்னோட ஒரு ஆளுக்காக நாங்க வேலை பாக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க, ரைட்டு.. பத்திரமும், வீட்டுத் தீர்வையும் 18 வருசமா என்னோட பேர்ல இருக்கு, .சி எடுத்தும் கொடுத்தாச்சு, சம்பந்தமில்லாம மூலப் பத்திரம் கேட்காங்க, அது இல்லங்க, நோ அப்சக்சன் லெட்டர் பங்காளிகிட்ட வாங்கிட்டு வாங்கன்றாக, அங்க பேச்சுவார்த்தை இல்லங்க, சொத்துப் பிரிச்சு அவங்க பேருல இருந்தாதான அவங்க பங்காளி, அவங்க பேர்ல எந்த ரிக்கார்டுமே இல்லாதப்ப அவங்ககிட்ட எப்பிடி நோ அப்சக்சன் வாங்க முடியும். அன்டர்டேக்கிங் லெட்டர் தர்றேன, எது வந்தாலும் நேரடியா நானே பொறுப்புனு, இல்லனா விசாரிச்சுப் பாருங்க, யாராச்சும் எழுத்துப்பூர்வமா அப்சக்சன் இருந்தா நிப்பாட்டி வைங்க, இல்ல அப்பிடியெல்லாம் பண்ண முடியாது, சரிங்க நேம் டிரான்ஸ்பர் பண்ண வேண்டாம் இருக்கிற மீட்டர கேன்சல் பண்றதுக்கு லெட்டர் தர்றேன், புது மீட்டர் அப்ரூவ் பண்ணுங்க, புது மீட்டருக்கு ஏற்கனவே ஆன்லைன்ல அப்ளிகேசன் குடுத்துட்டேன். இந்தாங்க அப்ளிகேசன் காப்பி, மீட்டர் மாத்துறதுக்கு எதுக்கு செத்தவரோட டெத் சர்டிபிகேட்? வாரிசுதாரர் சர்ட்டிபிகேட்? வாரிசுதாரர் இல்லனு நோ அப்சக்சன்? வீட்டுத்தீர்வை மட்டும் இருந்தாப் போதும்னு ஆர்.டி. ஆக்ட் சொல்லுது.’

‘என்னோட இடம்னு பிரிச்சாச்சு, என்னோட இடத்துக்குள்ள இடிச்சுப் போட்ட மண்ண அள்ளுறதுக்கு பெரிய மனுசன்கிட்ட அனுமதி வாங்கணுமாம், வாப்பா சோனையா நல்லாருக்கியா.. நீ வேணா கோவப்படுன்னு.. வடிவேல் காமெடி மாதிரிலா இருக்கு’

‘ஆஸ்பெஸ்டாஸ் சீட்ட உடனே அறுத்துவிடுன்னு ஒரு அம்மையார் கேட்டாங்க, அந்த அம்மையார்க்கு இங்க என்ன சம்பந்தம்னு தெரியல யாரு சொத்துக்கு யாரு வாரிசு?’

‘என்னோட இடத்துல வீடு கட்டுறதுக்கு, அது எப்பிடிக் கட்டலாம்னு கொத்தனார்கிட்ட இராத்திரி 09.30 மணிக்கு சண்டை போட்ட பயலுக்கு, மறுபடியும் பொதுச்சுவர்க்கு எவ்வளவு வேணுமோ குடுத்திரலாம்னு அதே கொத்தனார்கிட்ட போயி சமரசம் பேசப் போறியே நீயெல்லாம் சோறு தான் சாப்பிடுதியா?’

‘பெட்டிச் சாவிய ஒடச்சுப் பத்திரத்த எடுத்துட்டுப் போனத ஊர்ல ஒரு பய கேட்கலயே, என்னங்கடா உங்க ஊர் நியாயம். என்னங்கடா உங்க சட்டம்?’ 

‘வீடு இடிஞ்சு விழுந்தாலும் எவன் செத்தாலும் கவலையில்லை, வீட்டுக்கு முன்னாடி பஞ்சாயத்து பைப் இருக்கு, தெருக்காரன் மேல எவன் மேலயாச்சும் இடிஞ்சு விழுந்து அவன் கோர்ட், கேசு, நட்ட ஈடுன்னு போனாம்னா? எவனும் செத்தே போயிட்டாம்னா பதில் எவன்லே சொல்றது?’

‘அரிசிப் பெட்டி போட்ட பாத்திரம் சில்வர்ல எடுத்துட்டு வந்துட்டு, அதுக்கப்புறம் போயி பித்தளைப் பாத்திரத்த மாத்துறிங்களே, அதே சில்வர் பாத்திரத்த வேற எவனாவது ஒரு நல்ல காரியத்துக்கு எடுத்துப் போவாம்லா அந்த ஓர்மை வேண்டாமா? எவன் அப்பன் வீட்டுக் காசு?’

‘நானே விட்டுக்குடுத்த ரோட்டடி இடத்துக்கு 4 மடங்கு தர்றியான்னு எங்கிட்டயே விலை பேசுறியே, வேசிக்கும் உங்களுக்கும் என்னடா வித்தியாசம்?’

‘வீட்டுத் தீர்வை 2 வருசம் கெட்டாம கிடந்த நான் எதுக்குவே பஞ்சாயத்து ஆளுக்குப் பதில் சொல்லணும், எல்லாம் மூத்தவனுக்குத்தான் உண்டுனா, அப்ப இதுக்கு? ‘

‘வீட்ட இடிச்சதுக்கு பஞ்சாயத்துல ஆட்சேபணை இல்லைனு பேப்பர் வாங்கிக் குடுக்கணுமாம், அது பொதுவுல இருந்த வீடாம்..ஆனா, வீடு இருந்த இடத்த அவங்களுக்குப் பத்திரம் முடிச்சிடுக்கிடுவாங்களாம், அது பொதுவு இல்லயாம், உங்களுக்குச் சாதகமாக வர்ற விசயமெல்லாம் பொதுவுல கிடையாது, உங்களுக்கு ஊழியம் பாக்கணும் வந்தா அது பொதுவா? ஈனப்பிறவிகளா!’

‘ஊரான் வீட்டு வயக்காட்டுல வேலைக்குப் போனா அவனவன் துருத்திய மூடிக்கிட்டு வேலையா பாக்க வேண்டியதான, அவன் குறைச்சு வெட்டுதான், இவன் குறைச்சு வெட்டுதான்னு என்ன வெங்காயப் பேச்சு, அங்க போயி மம்பட்டியத் தூக்கிட்டு மைனர்த்தனம் பண்றிங்களே, பெத்த அப்பன் செத்து 1 மாசத்துக்குள்ளயே. ஒரு அப்பனுக்கு 2 திதி ஒரே வருசத்துல வேற வேற வீட்டுல குடுக்கிங்க, இப்ப உங்க சாத்திரம், மண்ணாங்கட்டிலாம் எங்கல போச்சு?’

‘வீடு இடிஞ்சு விழுந்து எதும் பிரச்சினை ஆகிறக்கூடாது கூப்பிட்டுப் பேசுங்கனு ஒரு பெரிய மனுசன்கிட்டச் சொன்னா, கொரோனா லாக் டவுண் முடியட்டும் பேசுவோம்னு பதில்தம்பி சர்ட்டிபிகேட் கேட்டு போன் பண்ணுறாங்க, அத குடுத்துருப்பா இப்பிடித்தான் அங்க ஒரு வீட்டுல ரேசன் கார்டு தரமாட்டேன்னு சொன்னாங்க அப்புறம் கச்சேரிக்குப் போயி பிரச்சினை ஆகிருச்சுனு பூச்சி காட்டுறாங்க’

‘என்னோட வீட்டுல வயரிங் வேலைக்கு என்னோட இடத்துக்குள்ள கம்பி ஊணும்போது பக்கத்து வீட்டுக்காரன் பிரச்சினை பண்ணினா எவனும் என்னனு கேட்கல அவன் வீட்டு வேலை பார்க்கும்போது சாந்து என்னோட வீட்டுக்குள்ள விழுகுது வேலைய நிப்பாட்டச் சொல்லி நான் பிரச்சினை பண்ணலவிழுந்த சாந்த அள்ளச் சொன்ன இல்ல கழுவி விட்டு வேலைய பாருன்னு சொன்ன இல்ல சாக்குப் போட்டு வேலை பாருன்னு சொன்னா அதெல்லாம் அள்ள முடியாது எவன்கிட்ட வேணும்னாலும் போய்ச் சொல்லுங்கான்எவன் வந்து எதிர்த்துக் கேட்பான்னு திமிரு’

‘எவாளோ எடுபட்டு ஏறிக்கிட்டு போனதுக்கு என் வீட்டுல மண்ணள்ளிப் போட, அது என் தலைல தான் விடியணுமா துள்ளத் துடிக்க இதுக்குள்ளய எத்தன பேரு செத்துக்கிடந்துருக்காங்க அதெயெல்லாம் முழுசா பேசுவோமா?’

எனப் பேசிக்கொண்டிருக்கும்போதேஏய்ய்ய்ய்என ஆக்ரோசத்துடன் சங்கிலி பூதத்தார் பரமன் மகனுக்குள் வந்திறங்கினார். ஊர்ச்சனங்கள், ‘ஏய்யா சங்கிலி கருப்பா, இந்தப் பயறு தாங்காதுப்பா இவ்ளோ ஆவேசமா வந்திறங்கிட்டியே..சொல்லுப்பா உனக்கு என்ன வேணுமோ செஞ்சு தர்றோம்னு சொல்ல..

எப்பா, இந்தப் பயரு என்னோட பயறுப்பா..நான் காப்பாத்தித் தருவேன்பா, செஞ்சு தர்றேன் எல்லாத்தையும் சரியாக்கித் தாரேன்என்றவாறு மயக்கத்தில் சங்கிலி கருப்பர் மலையேறிட்டார்.

********

g.uthamanraja@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button