
உங்களுக்கு நம்பிக்கை வராது. இருந்தாலும் சொல்கிறேன். இப்படிதான் அந்த உரையாடலில் தொடங்கிற்று.
“சார்..எனக்கு வயது அறுபதை நெருங்கிக்கொண்டிருந்தது. என் வாழ்நாளில் இதுவரையில் யாருக்கும் முத்தம் கொடுத்ததேயில்லை”.
தினசரிகளை சுரத்தையின்றி புரட்டி கொண்டிருந்த நான் நிமிர்ந்து குரல் வந்த திசையில் பார்த்தேன். வெள்ளை வெளேரென்று வேட்டி உடுத்திய உருவம் என் பக்கத்தில் நின்றது. நான் சுற்றி முற்றி பார்த்தேன். நூலகத்தில் யாருமே இல்லை. நான் மட்டும் தான். இதோ இவரும். அந்த ஸ்டேட்மென்ட்டை என்னிடம் தான் சொல்லியிருப்பார் என்று ஒருவாறு யூகித்தறிந்தேன்.
கண்களில் ஒளிமங்கிய அந்த மனிதர் பளிச்சென்று சிரித்தார். ஆள் பார்ப்பதற்கு ஆறடிக்கு நின்றிந்தார். தலை பஞ்சு பஞ்சாக வெளுத்திருந்தது. வாலிபத்தில் நல்ல முறுக்குடன் இருந்திப்பார் என்பதை அவரின் உடல் வாகைப் பார்த்து அனுமானித்துக் கொண்டேன். நூல் பிடித்தாற் போல தட்டையாக இருந்தார். அரைக்கை சட்டைக்கு வெளியே தொங்கிய வலது கையில் மெருகு போன கோல்ட் வாட்ச் கட்டியிருந்தார். முகத்துக்கு பொருந்தாத ஒரு கண்ணாடி அணிந்திருந்தார்.
அவர் தன்னை இன்னார் என்று அறிமுகப்படுத்தி கொள்ளவில்லை. அவர் கட்டியிருந்த வேட்டியின் முனையில் ‘VR’ என்று சலவைக்காரர் அவருக்கு புனைபெயர் வைத்திருந்ததை நான் ரகசியமாகப் பார்த்து தெரிந்து கொண்டேன். அவர் தயங்கித் தயங்கி நிற்பதைப் பார்த்து, “சார், மன்னிக்கவும். நீங்கள் என்னிடம் ஏதோ சொன்னீர்கள் என்று நினைக்கிறன். நான் சரியாக கவனிக்கவில்லை” என்று பொருத்தமேயில்லாமல் நானாக அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
காற்றைத் தந்து விடவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டது போல யோசித்து யோசித்துச் சுழலும் அந்தக் காலத்து மண்டை வீங்கிய சீலிங் ஃபேணின் ‘கடக் கடக்’ சத்தம், சட்டெனெ சிணுங்கும் செல்போன் ரிங்டோன்கள், லைப்ரரியில் இருக்கிறோம் என்றோ மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருக்கக் கூடுமோ என்ற எந்தக் கவலையுமில்லாமல் போனில் பேசும் மனிதர்கள் என்று பொதுவாகவே நூலகத்தின் ஒரு படிமமாக படிந்து கிடக்கும் மௌனத்தை யாரேனும் மெல்லிய ஓசையால் கெடுத்தால் கூட எனக்கு சற்று எரிச்சல் உண்டாகும் தான். ஆனால், அன்றைக்கு அப்படியில்லை. பெருமாள் முருகனின் ‘பீக்கதைகள்’ என்ற புத்தகம் தூசிபடிந்து இருந்தது. நூலின் தலைப்பு ஏதோ ஒரு உணர்வை என்னுள் கடத்தவே தூசியைப் பொருட்படுத்தாமல் எடுத்துக்கொண்டு கிளம்பும் நேரத்தில் வெறுமனே தினசரிகள் இருக்கும் பிரிவில் பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் தான், ஒரு மெல்லிய குரல், துயரம் தோய்ந்த அந்தக் குரல் கேட்டுத் திரும்பினேன்.
“சார்..எனக்கு வயது அறுபதை நெருங்கிக்கொண்டிருந்தது..”
நான் இருபது வருடங்களாக இந்த லைப்ரரியின் உறுப்பினன். லைப்ரரிக்கு வரும் வாசகர்கள் நிறையப் பேரை எனக்குத் தெரியும். அதற்காக பழக்கம் என்றில்லை. சும்மா மரியாதை கருதி முகமன் சொல்லிக்கொள்வதோடு சரி. யாரிடமும் பேசவோ பழகவோ முயன்றதுகூட இல்லை. நான் உண்டு என் புத்தக தெரிவு உண்டு அவ்வளவுதான். அப்படியாகத்தான் அவரையும் எனக்குத் தெரியும். சோகம் அப்பிய அந்த முகத்தை (இனிமேல் VR) ஓரிருமுறை பார்த்த நினைவு. ஆனால் VR –க்கு முன் பின் தெரியாதவரிடம் வெளிப்படையாக இப்படியொரு அந்தரங்கமான ஸ்டேட்மெண்ட் கொடுக்கத் தோன்றியதை நினைத்து நான் ஏதேதோ உணர்வுகளில் உழன்றேன். ஏனெனில் நான் அறிந்தவரையில் அவர் யாரிடமும் சிரித்துப் பேசி நான் பார்த்தது கிடையாது.
VR யாரிடமும் பேசமாட்டார் என்று பொதுவில் நூலகத்தில் எல்லோருக்கும் தெரியும். யாரும் முகமன் சொல்வதைக் கூட அவர் பொருட்படுத்தி நான் பார்த்ததில்லை. அவர் வருவார்; தனக்கான ஏதேனும் ஒரு தினசரியை எடுத்து கொண்டு மூலைக்கு போய் உட்கார்ந்துகொள்வார். அச்சான ஒவ்வொரு எழுத்தையும் (விளம்பரங்கள் உட்பட) கடைசி வரி வரை முணுமுணுப்பது போல வாசித்து திருப்தி அடைவார்.
அவர் வாசிக்கும் . தினசரியை யாரும் கேட்டால், மனிதருக்கு அப்படியொரு கோபம் வரும். “ஏங்க இவ்ளோ நேரம் சும்மா அந்த டேபிள்ல்ல கிடந்தது; சீந்துவாரில்லை. சும்மா புரட்டலாம்ன்னு எடுத்தாக்கா ஒடனே போட்டிக்கு வந்துடுவீங்களே..எங்கிருந்து தான் வருவீங்களோ “ – என்று பொருமித் தள்ளிவிடுவார்.
VR-ஐ அறியாத புது வரவுகள் யாரேனும் அவரிடம் அப்படிக் கேட்டால் பதில் இப்படியாகத்தான் இருக்கும். ‘சார் இதுக்கு ஏன் இவ்ளோ கோவப்படுறீங்க?’ என்று யாரும் அவரிடம் திருப்பிக் கேட்கமாட்டார்கள். அவரின் சுபாவம் அனைவரும் அறிந்ததே.
தினசரியை தனித்தனி தாளாக பிரித்துத் தரவும் அவர் அனுமதிப்பதில்லை. அவர் வாசித்து முடித்த தினசரியைப் பார்க்கவேண்டுமே, அத்தனை நறுவிசாக வைத்திருப்பார். பச்சைப் பிள்ளையைக் கொஞ்சுவது போல.
வாசித்து முடித்த பின்னர் தானாகப் போய், ‘இந்தாங்க நீங்க கேட்ட பேப்பர், முழுதும் படித்து விட்டேன். ஒரு குப்பையும் இல்ல” என்பார். ‘பின்ன ஏன்யா நீ இவ்ளோ நேரம் வச்சிருந்த?’ன்னு யாரும் அவரிடம் கேட்டதில்லை.
“எங்க.. அந்த தம்பி போயிடுச்சா, பேப்பர் கேட்டுச்சு, நான் வாசிச்சிட்டு தரேன்னு சொன்னேன். அதுக்குள்ள போயிடுச்சா. இந்த காலத்து புள்ளைவொளுக்கு பொறுமையே கிடையாது. அந்த தம்பிய திரும்ப பாத்தாக்க நான் வருத்தம் தெரிவிச்சதா சொல்லுங்க” என்று பொதுவாக அங்கு இருப்பவர்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவார்.
அந்த VR தான் இப்போது என் பக்கத்தில் நிற்கிறார். தயங்கித் தயங்கி அவர் நிற்கும் தோரணை எனக்குச் சற்று நெருடலாக இருந்தது. “வாங்க சார் உட்காருங்க” என்றேன்.
“சனி ஞாயிறுகளில் உங்களை நான் பார்த்துருக்கேன். சாருக்கு எங்க வேலை?”
சொன்னேன்.
“ஓஹோ. நல்ல பொறுப்புள்ள பதவி தான். நானும் கவர்மெண்ட் செர்வண்ட் தான் சார். எகனாமிக்ஸ் டிபார்ட்மென்ட்” என்றவர், அவருக்கு என்ன குறையோ சட்டென எரிச்சலாகி, ‘விளங்காத டிபார்ட்மெண் ட்’ என்றார். “VRS வாங்கிட்டேன் சார். இன்னும் ஒரு வருஷம் சர்விஸ் இருக்கு. உடம்புக்கு முடியல சார். அதான்” – நான் கேட்காமலே அவராக சொல்லிக்கொண்டிருந்தார்.
“ம்ம்…”
“PF க்ராஜூவிட்டி லோன் டுயூ அது இது என்று பிடித்தது போக அஞ்சு லட்சம் கையில வந்துச்சி சார். பத்தாததுக்கு ஹோம் லோன் வேற போட்டிருந்தேன். அதுக்கு ஒரு வருஷம் டுயூ பாக்கியிருந்தது. VRS வாங்கும் போது அதையும் சேத்து கொடுத்துட்டேன். அதுவும் மெடிக்கல் செலவு போக ஏதோ சாவுற வரைக்கும் சோத்துக்கு சிக்கல் இல்ல, கையில இருக்கிறத வச்சிக்கிட்டு நிம்மதியா காலம் தள்ள வேண்டியது தான்” என்றார். அவர் கண்களில் துளிர்க்கத் தயாராக இருந்த கண்ணீரை நான் கவனிக்க கூடாது என்று என் பார்வையைத் தவிர்த்தார்.
‘அத ஏன்யா எங்கிட்ட சொல்றீங்க. நான் இருக்கிற இருப்புக்கு’ என்று உள்ளுக்குள் எழும் சொற்களை நாக்கில் புதைத்தபடியே , “உடம்புக்கு என்னாச்சு சார். ஏதோ மெடிக்கல் செலவு சொன்னீங்களே” என்று வெக்கமேயில்லாமல் நடித்தேன். .
“அட ஆமாம் சார், சும்மா அட்டாக்”, என்று மேசையில் ஊன்றிய இடது கையில் அலட்சியமாகத் தட்டிக் கொண்டே சொன்னார்.
“என்னாது….?”
“ஏன் சார் நீங்க இப்படி பதறுறீங்க..? ஏன் உங்களுக்கு வேண்டியவங்க யாரும் அட்டாக் வந்துருக்கா? இதெல்லாம் இப்போ தலைவலி, உடல்வலி மாதிரி எல்லோருக்கும் வருதுங்க. வயசு வித்தியாசம் கிடையாது. அட விடுங்க அதுவும் என்னை போன்ற ஆட்களுக்கு இதெல்லாம் வரலைனா தான் அதிசயம், என்ன சொல்றீங்க” பெருமூச்சுவிட்டார்.
பின்னர் சுவாரஸ்யமாக கேட்டார், “சொல்லுங்க சார். உங்க வீட்ல யாருக்கு அட்டாக் வந்துச்சி”.
மீண்டும் ஒரு “ம்ம்” போட்டேன்.
தேவையில்லாமல் எங்கேயோ வந்து மாட்டிக் கொண்டதைப் போல ஒரு உணர்வு. நேரம் இப்படித்தான் என்னிடம் எப்பொழுதும் இரக்கமே காட்டியதில்லை. எனக்கு என்று எங்கிருந்து தான் வருகிறது என்று தெரியாது . அப்படி ஒரு அட்ட தரித்திரியம். நேராக வந்து ஒட்டிக்கொள்ளும். ‘எல்லாம் என் போறாத காலம்’ என்று நொந்துகொண்டேன்.
இப்படித்தான் ஒருமுறை மதிய விருந்து என்று நண்பரொருவர் அழைத்திருந்தார். சென்றிருந்தேன். மட்டன் பிரியாணி, சிக்கன் தந்தூரி, பயிர் பாயசம், ஐஸ் கிரீம், பான் பீடா என்று அதகளப்பட்டது விருந்து. நான் செய்முறை செய்து விட்டு யாரேனும் கம்பெபனிக்கு கிடைப்பார்கள் என்று உட்கார்ந்திருந்தேன். ஆனால், உட்கார முடியவில்லை. பார்ட்டி ஹால் முழுவதும் பிரியாணி வாசம் பரவிக் கொண்டிருந்தது. பசியை சோதித்தது. யாரேனும் வரமாட்டார்களா என்று நினைத்துகே கொண்டே செல்போன் பார்த்துக் கொண்டிருந்த பொது சொல்லிவைத்தாற் போல ஒரு புண்ணியவான் வந்து சேர்ந்தான். உண்மைக்கு அவன் புண்ணியவான் தான் என்பது இந்த விருந்து முடியும் போது உங்களுக்கு புரியும்.
சும்மா நலம் விசாரித்துவிட்டு, “வாங்க சார் சேர்ந்து சாப்பிடுவோம்” என்றேன்.
“மன்னிக்கணும் சார், நீங்க சாப்பிடுங்க, வீட்டில் வஞ்சிரம் மீன் எனக்காக தயார் ஆகிட்டு இருக்கு. சாப்பிட வந்துவிடுவதாக சொல்லிவிட்டு வந்துருக்கேன். வீட்ல காத்திருப்பாங்க”, என்றார்.
சும்மா இல்லாமல் நான் தான் அவரை வலுக்கட்டாயமாக பந்தியில் என் பக்கத்தில் அமர்த்தினேன். தாமாக சமாதானமாகி, “உங்க வற்புறுத்தலுக்காகத்தான். ஆனா, நான் சும்மா உட்கார்ந்து எழுந்துவிடுவேன்” என்று ரொம்பவே நாகரீகமாக நடந்து கொண்டார்.
எனக்கு முன்னே அந்த புண்ணியவான் சாப்பிடத் தொடங்கிவிட்டார். சரியாக அவர் வரையில் வந்து பிரியாணி பரிமாறிவிட்டு அடுத்த முறைக்கு எடுக்கப் போன சமையல் பணியாளன், நண்ப புண்ணியவான் மறுசோறு வாங்கும் வரையில் பந்தி நடக்கும் இடத்தை எட்டிக் கூடப் பார்க்கவில்லை. நான் அவரை பார்த்தேன், இலையை மறைக்கும் அளவுக்கு கறித் ண்டுகள் பார்ப்பதற்கே முகத்தில் அடிப்பது போல இருந்தது. நான் அவரைப் பார்ப்பதை பற்றியோ, சேர்ந்து சாப்பிட அழைத்ததைப் பற்றியோ, சற்று முன்னர் வரையில் சாப்பிடுவதை பற்றிய அலட்டிக் கொள்ளாததையோ, எனக்கு இன்னும் உணவு வழங்கப்படவில்லை என்பதையோ, அவர் மனைவி வஞ்சிரம் மீன் குழம்போடு காத்திருக்கிறார் என்பதைப் பற்றியெல்லாம் எந்த எண்ணமுமேயில்லாமல் அவர் பாட்டுக்கு கொத்து கொத்துவென்று கொத்திக்கொண்டிருந்தார்.
பந்தியில் எழுந்த கூச்சலில் மீண்டும் பிரியாணி தட்டுடன் விநியோகம் ஆரம்பமானது. ஆவலுடன் தேடினேன். மருந்துக்கு கூட சிறியதொரு கறித் துண்டு கிடைக்கவில்லை. ஒருவேளை தீர்ந்து போயிருக்கும் என்று பக்கத்தில் பார்த்தால், அந்த இலையில் இரண்டு துண்டுகள் பெருசு பெருசாக. எனக்கும் சேர்த்து அவருக்கு கிடைத்திருந்தது. கொடுத்துவைத்தவர். முகமுழுக்க மகிழ்ச்சியுடன் சாப்பிடத் தொடங்கினார். இவர் கண்டிப்பாக ஒரு புண்ணியவானாகத்தான் இருப்பார் என்று நினைத்து கொண்டேன். என் வாழ்வில் இன்னும் எத்தனை புண்ணியவான்கள் வருவார்களோ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு வெறும் குஸ்காவை தின்று விட்டு கை கழுவப் போகும் போது பார்த்தேன், டேக்ஸாவில் பாதிக்கு மேலே சோறு இருந்தது, அதில் பெரிய பெரிய கறித் துண்டுகள் கேட்பாரற்றுக் கிடந்தன.
“பின்ன ஏன்டா..?” என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
இது போல பல. இப்போது கூட , “சார், இன்னைக்கு சண்டே. ஸ்டாஃப் யாரும் வரல, நீங்க செத்த நேரம் பாத்துக்கிட்டா தோ சாப்பிட்டிட்டு ஓடியாந்துருவேன், காலையில் பிரேக் ஃபாஸ்ட் கூட செய்யல. ஒரு பத்து நிமிஷம்.” என்று நூலக புண்ணியவான் கேட்டுக்கொண்டதின் பேரில், கேட்டுக் கொண்டது என்ன கேட்டுக் கொண்டது..கிட்டத்தட்ட ‘நீங்க இருங்க’ என்று உத்தரவிடும் தொனியில் சொல்லிவிட்டுப் போக, நான் வாசகன் என்ற பொறுப்போடு கூடுதலாக தற்காலிக பகுதி நேர நூலகராகவும் பொறுப்பேற்றுக் கொண்டேன்! விளைவு VR –ன் துயரங்களை நான் கேட்டே ஆகவேண்டிய சூழலில் சிக்கி கொண்டேன். இதுவும் என் நேரம்! தலையில் அடித்துக் கொண்டேன்.
“அக்கா தங்கச்சி தம்பின்னு எங்களது பெரிய குடும்பம் சார். நான் தான் வீட்ல மூத்த ஆள். அப்பா சைக்கிள் கடை வச்சிருந்தார். வாடகை கடை தான். ஆனால், வாடகைக்கு விட எங்களிடம் அப்போதே மூன்று சைக்கிள் இருந்துச்சுன்னா பாத்துக்குங்களேன். சோத்துக்கு பிரச்சனை இல்லதான். அதே சமயம் சுகமா இருந்தோம்ன்னு சொல்வதற்கில்லை. டிகிரி முடிச்சு நான் வேலைக்குச் சேரவும் எங்க அப்பா இறந்து போகவும் சரியா இருந்துச்சி. ஒருவேளை அதுக்கு தான் அவர் உயிரை பிடித்து வைத்து காத்துக் கொண்டிருந்தாரோ என்னவோ! நான் தான் கஷ்டப்பட்டு அக்கா தங்கச்சி தம்பி எல்லோரையும் படிக்க வச்சு கல்யாணம் காட்சின்னு செஞ்சு வச்சு கரை ஏத்துனேன் . இப்போ அது அது அததுங்க வாழ்க்கையைப் பாத்துக்கிட்டு போயிருச்சுங்க எப்படியோ , நல்லா இருக்கட்டும்”, என்று VR தன் சுய வரலாறு பாடிக்கொண்டிருந்தார்.
நான் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அல்ல அல்ல கேட்பது போல பாவம் செய்து கொண்டிருந்தேன். அவர் பேசியது ஒன்று கூட என் உள்ளுக்குள் செல்லவில்லை என்பதைப் பற்றிய எந்த கவலையுமின்றி அவர் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே இருந்தார்.
நான் வாசலை நோக்கினேன்.’ இந்த பாழாய்ப்போன நூலகர் எங்கு போய் தொலைந்தானோ?’ என்று மனதுக்குள் திட்டி கொண்டிருந்தேன்.
“சாப்பிட்டு வரேன்ன்னு போனவர் இன்னும் காணோம் பாருங்க”, என்று பொறுமை இழந்து VR யிடமே சொன்னேன்.
அவர் அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. எதையோ சுவாரஸ்யமாக சொல்லிக் கொண்டிருந்தார் போல..வாய் ஓயாமல் அசைந்து கொண்டிருந்தது. அந்த கன்னம் ஒடுங்கிய முகத்தில் அப்படியொரு மலர்ச்சி.
தனக்குத் திருமணமான தகவலை அவர் தெரிவித்தது நான் எதேச்சையாக கவனித்ததில் புரிந்தது.
‘ஓ’ என்றேன்.
“மன்னிக்கணும் செல்வம். கொஞ்சம் லேட் ஆகிடுச்சு, நீங்க புக் எடுத்திட்டிங்க தானே. என்ட்ரி போட்டுருங்க”, என்று பெருத்த ஏப்பத்துடன் வந்தார் நூலகர்.
‘உன்னய கொன்றுவேன் டா’ என்பது போல வறண்டதோர் சிரிப்பை உதிர்த்தேன்.
‘யப்பா ஆபத்பாண்டவா .. இப்பவாது வந்தியே..’ என்று மனதுக்குள் நன்றியும் சொன்னேன்
“சரி சார். அப்ப நான் வரேன். கொஞ்சம் ஒர்க் இருக்கு. ஞாயிற்றுக்கிழமைன்னு தான் பேரு , நாளைக்கு செய்ய வேண்டிய ஒர்க்கை, பிளான் பண்ணி டிக்டேட் செய்ய வேண்டியிருக்கே” என்று அலுத்துக் கொண்டே எழும் போது ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் VR.
“சார், வாங்களேன் ஒரு டீயைப் போடுவோம்”.
நான் வெளிறிப் போனேன்.
“இல்ல சார், சாப்பிடுற நேரம் ஆகுது.இப்போ டீ குடிச்சா சரிவராது” என்றேன்.
“அட வாங்க சார், மணி பனிரெண்டு தான் ஆகுது. “
வலுக்கட்டாயமாக என்னைக் கூட்டிக் கொண்டு போனார். எனக்கு விருப்பம் இருந்தும் இல்லாமலும் நானும் அவர் பின்னால் போனேன்.
“அட்டாக் வந்து, ஒரு பத்து பதினஞ்சு நாள் ஆஸ்பத்திரியில் கிடந்தேன். கேக்க ஆளு கிடையாது. வந்து பாக்க நாதியில்லை. நேர நேரத்துக்கு மருந்து மாத்திரைன்னு அங்கிருந்த நர்ஸுங்க தான் பாத்து கிட்டுதுவோ. ஆஸ்பத்திரியில் நர்ஸுங்களின் தேவை என்னன்னு இந்த அறுவது வருஷ வாழ்க்கையில அப்போதான் முதல் முறையா புரிஞ்சிது சார்”
உருக்கமாகப் பேசியவரின் முகத்தை உற்று கவனித்தேன். அவர் முகம் பார்ப்பதற்கு என்னவோ போல் இருந்தது. அதில் படிந்துள்ள துயரம் என்னை என்னவோ செய்தது.
முதல் முறையாக அவர் வார்த்தைகளுக்கு செவி கொடுக்க வேண்டும் என்று உண்மையில் தோன்றியது.
“ஏன் சார், உங்களுக்கு திருமணம் ஆனதாக சொன்னீர்கள். மனைவி, பிள்ளைகள்..?” என்று ஒருவித பதற்றத்துடன் கேட்டேன்.
“தொடர்ந்து மாத்திரை மருந்துன்னு புள்ளை பெத்தவ பத்தியம் இருக்கிறாப்பல இருக்கிறது என்னங்க வாழ்க்கை. எதுக்காக யாருக்காக நம்மள இப்படி காபந்து பண்ணிக்கணும்ன்னு ஒவ்வொரு மாத்திரையை சாப்பிடும் போதும் தோணும்”.
“ப்ச்.”
“உங்களுக்கு தெரியுமா சார், சகித்துக் கொள்ளவே முடியாத அந்த பினாயில் வாடையில் பதினைந்து நாட்கள் நான் ஆஸ்பத்திரி கிடந்த போது, சாப்பாடு டிபன் வாங்கிக் கொடுக்கக் கூட ஒருத்தரும் இல்லை”.
அவர் சொற்களில் படிந்துள்ள துயரம் என்னை விடாமல் துரத்தியது. அவரின் குடும்பத்தை பற்றி நான் கேட்டதை வேண்டுமென்றே அவர் தவிர்ப்பது போல எனக்குப் பட்டது. மேற்கொண்டு அவரிடம் அதைப் பற்றி கேட்கலாமா வேண்டாமா என்று நான் யோசிக்கும் நொடியில் அவரே ஆரம்பித்தார்.
“அட ஆமா சார், திருமணம் பண்ணிக்கொண்டேன். அவங்க டீச்சர். ரெண்டு மூன்று நாட்கள் கூட அந்த சொந்தம் நீடிக்கல. அவங்களுக்கு விருப்பம் இல்லை போல. விவாகரத்து கேட்டாங்க. நான் முடியவே முடியாதுனு எவ்வளவோ போராடி பார்த்தேன். ஒரு கட்டத்தில் அவங்க கேக்கறதில் இருக்கிற நியாயம் புரிந்தது”
கண்களை கசக்கிக் கொண்டார்.
“ஏன் என்று தெரியாது. அவங்களுக்கு இறுதி வரையில் என்னைப் பிடிக்கவேயில்லை. அப்படி இப்படி என்று இருவது வருஷங்கள் அதுலே ஓடிப் போச்சு”.
“அண்ணே, டீயை எடுங்க” – இடைமறித்தான் டீக்கடைப் பையன்.
அந்த இறுக்கமான சூழலிலிருந்து அரை நொடி இடைவெளி இருவருக்குமே தேவைப்பட்டது. சட்டென சுதாரித்துக் கொண்டவர் போல, ‘வேற ஏதும் சாப்பிடுறீங்களா?’ என்றார்.
“சார், எனக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் போல இருக்கு. சாரி. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்கலைன்னா”, என்றேன்.
அனுமதித்தார்.
நான் நுரையீரல் அடி தொடும் வரையில் புகையினை ஆழ்ந்து உள்ளிழுத்தேன். புகையை வெளி விட்டபடி கேட்டேன், “வேறு கல்யாணம் பண்ணியிருக்கலாமே சார், நீங்க அரசு வேலையில வேற இருந்துருக்கீங்க.. வயசும் இருந்துருக்கும், பின்ன ஏன்?”, என்றேன்.
நிமிர்ந்து ஒரு முறை என்னைப் பார்த்தார். ஏன் அப்படிச் செய்தார் என்று எனக்குப் புரியவில்லை.
“அக்கா புள்ளைங்க தங்கச்சி புள்ளைங்க, தம்பி புள்ளைங்க என்று ஒரு பதினோரு பிள்ளைகளை தூக்கி வளர்ந்திருக்கேன் சார். உரம் விழுந்துவிடாமல் என்னால் பிறந்த குழந்தையை குளிக்க ஊத்த முடியும் தெரியுமா. அது எல்லாம் பழக்கத்துல்ல வர்றது”
நீண்ட ஒரு ‘ம்’ மிற்கு பிறகு கைகளை விரித்து வானத்தைப் பார்த்தார்.
“அதான் சொந்தம் இருக்கு, தூக்கி வளர்த்த பிள்ளைகள் இருக்காங்க பின்ன ஏன் சார் சும்மா யாரும் இல்லைனு வருத்தப்படுறீங்க?”
கண்களை சுருக்கி வெம்மையாகச் சிரித்தார்.
“என் வீட்டில் பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லை. சாவின் நுனியில் தனி ஆளாக நிற்கிறேன் சார். தீடீரென்று வீட்டில் தனியாக செத்துக் கிடந்தால், யார் யாருக்கு தெரிவிப்பார்கள் என்று நினைத்தாலே கவலையாக இருக்கிறது. தனிமை கொடுமை சார். என் அனுபவத்தில் சொல்கிறேன் சாவும் போது கண்டிப்பா ஒரு துணை வேணும் சார். மருந்து மாத்திரையின் கசப்பை விட தனிமை தரும் கசப்பு இருக்கே ஒரு கசப்பு..அது கொடும் கசப்பு சார்”, என்று தோள்களை உதறியபடி சொன்னார்.
“சாரி சார், செவுத்துக்கு கிட்டேயே பேசிகிட்டு இருக்கிறேனா, மனுசங்க கிட்ட பேசியே நாளாகிப் போச்சு, அதாம் ஏதோ ஒளறிப்புட்டேன். மனசுல வச்சுக்காதீங்க. ஆமா, கேக்க மறந்துட்டேன், உங்களுக்கு எத்தனை பிள்ளைங்க?”
நெடிய மௌனத்திற்கு பிறகு சொன்னேன். ‘ரெண்டு.’ நான் நான் சொன்ன பொய்யை அவர் கண்டுபிடிக்க வாய்ப்புகள் இல்லை.
“வரேன் சார். உங்கள சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று தளர்வாக நடந்து போனார். அவர் நிழலாகி மறையும் வரையில் நான் அவரைப் பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றேன்.
VR யை சந்தித்த மறு ஞாயிற்றுக்கிழமை லைப்ரரிக்குச் சென்றிருந்தேன். அவர் அங்கு இல்லை. விசாரித்ததில் ஒரு வாரமாக அவரை யாரும் பார்க்கவில்லை என்றார்கள்.
“உங்கள் யாருக்காவது அவரின் முகவரி தெரியுமா?” என் குரல் எனக்கு மட்டுமே கேட்டது.
********