
புழு
நான் இந்தப் பூமியின்
வயிற்றில் நெளியும் புழு
என் வயிற்றிலும் சில புழுக்கள்
நெளிகின்றன
அதன் வயிற்றிலும்
மேலும் பல நெளியலாம்
இச்சங்கிலி
முடிவின்மை எனில்
தொடக்கமும்
அதுதான்
பிரபஞ்சத்துகள்
அண்டவெளி எனச்
சொற்களில்
அளவிடும் புழுவிற்குச்
சிறுகுடல் – பெருங்குடல்
அமிலத்தைத் தாண்டி
வேறென்ன தெரிந்திருக்கமுடியும்
பூமிதன் நஞ்சறிந்தவன்
பூமி அறிந்தவனோ
இந்தப் பூமியும்தான்
யார் வயிற்றுப் புழு
அனைத்தையும்
தன்னுள்
புதைத்து வைத்திருக்கும்
பெரும்புழுதான்
இறையெனில்
அவனிடம் ஒன்றைக் கேட்கவேண்டும்,
‘ஐயா நீவிர் யார் வயிற்றுப் புழு?’
***
ஆனந்தம்
எல்லோரும்
ஆனந்தத்தில்தான் திளைக்கிறோம்
அதன்
அடரமைதியிலும் நிச்சலனத்திலும்
நாம்
திகைத்துப் போகிறோம்
அது
தானொழிதலின் கணத்தையும்
வெறுமையின் கால-ஒடுக்கத்தையும்
சொடுக்கிக் காட்டுகிறது
மூச்சிசைப் பொழிவில்
உள்ளிருந்து மீதூறும்
மண்ணாவின் சுவை
தாளாதுதான்
பிரசவித்துக் கொள்கிறோம்
துயர் என்னும்
இருமை இயக்கம்
கட்டமைத்துக் கொண்டுவரும்
நாடகத்தை.
***
கவிஞனை நம்பாதே
கவிதையை நம்பு என்பார்கள்
இடறாதே தோழி
நீ கவிஞனைப் பார்
பூனைகளோடு
அவன் மதில்களில் புரள்கையில்
கூர் நகக்கண்ணால்
மெல்லிய
சருமத்தைக் கிழிக்கிறானா
என்று பார்
மதுக்குப்பியைச்
சாலையில் உடைத்துவிட்டு
இயற்கை என் மதுரமெனக்
கிறுக்கிட
பேனாவை எடுக்கிறானா
என்று பார்
நாய்ச் சங்கிலியை
விடுவித்ததிலிருந்து
அத்துமீறி அலையும்
மொசுமொசு
வாலினைக் கவனி
கணக்கிலெடு
அவன் கண்ணொளி
மறைக்கும் கணங்களை மட்டும்
அவன்
புணர்ந்தபடியே
’புஸி’யாறவில்லை
எனப்
பொய்யுரைத்துப் பழகியவன்.
******
கூட்டமில்லாத; மனம் விரும்பும் இருக்கையில் அமர்ந்து பயணித்த பேருந்துப் பயணத்தின் காலையை உமது கவிதை மேலும் அழகாக்கியது.
மனதின் விரிவு விசாலமாகிறது.
வாழ்த்துகள் இமான்!