கட்டுரைகள்

நாஞ்சில் என்னும் தேக்க மரம்

ஐசக் பேசில் எமரால்ட்

செறிவான மரபுப்பின்னணி மற்றும் தொன்மையான பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கியது கன்னியாகுமரி மாவட்டம் என்னும் நாஞ்சில் நாடு. இங்கு போலியற்ற அசலான பல அறிஞர்கள் கடந்த தலைமுறையில் உருவாகி இருந்தனர். அவர்களால் குமரி நிலத்தில் வரலாற்றின் தனித்துவக்கூறுகளையும், கலைகளின் பரிணாமங்களையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தனர். இலக்கிய வடிவங்களான கவிதை, நாவல் மற்றும் சிறுகதைகளில், நாட்டார் கலைகளில், நகைச்சுவையில், இசை, நடனம், அரசியல் என அனைத்தையும் விவாதத்திற்கு உட்படுத்தி மிக ஆழமான பார்வையுடன்  அணுகுவதற்கு பல அறிவுசார் பிரதிநிதிகள் இருந்தார்கள். ஏற்பின்மை பெரும்பான்மையாக இருந்தபோதும் நிகழ்த்துதல் நடந்தது.

மானுட வாழ்வில் பொருளியல் மட்டுமே முக்கிய கருதுகோளாக மாறிய சூழலில் தற்போது முன்னிருந்த சிறும்பான்மையான சிறு குழுக்கள் கூட முழுமையாக அழிந்து சிந்தனை அளவில் பொட்டல் காட்டில்  வாழ்வது போன்ற நிலைக்கு மாறிவிட்டன. பொருளியலில் அடுத்த நிலைக்கு நகர்ந்து மானுட வாழ்வில் பின்னகர்ந்து தேங்கி போகும் நிலையைதான் காணமுடிகிறது. சாமானியர் ஒருவரின் இருப்பில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளை ஒப்புமைப் படுத்தி பார்த்தாலே நிலைமையை அறியலாம். எத்தனை வளர்ச்சி, மாற்றங்கள், சிந்தனைகள் என மாறியபோதும் அந்த மனிதர் இன்றும்  அதே இடத்தில் நின்று லுங்கியை மெதுமெதுவாக  மெல்ல மேலிழுத்து கட்டுகிறார்.

நாஞ்சில் தமிழகத்தின் பிற நிலங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கேரளத்தின் நிலசாயலையும் தமிழின் தொன்மையையும் உள்ளடக்கியது.  ஒரு புறம் பிரமாண்ட மலையும் தென்னக எல்லையில் கடலும், இடையில் மலை சார்ந்து கானகமும், கடலை நெருங்கும் இடைநிலபரப்பு வயல்வெளி பசுமையும் என எழில் கொஞ்சும். அதை தக்கவைக்கும் பொருட்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் அதன் பங்கிற்கு கச்சிதமாக உதவும். நிலத்தின் வழியாக நாகரிகம், அதனிலிருந்து கலை என்பது இங்கு எவ்வாறு தோன்றி வளர்ந்திருக்கிறது என்பது சான்றாக நிறைய தொல்லிடங்களை காண முடியும். அதற்கான ஆய்வுகள் பல அறிஞர் பெருமக்களால் தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் தற்போது மீள் ஆய்வு நிகழாத நிலை.

நாம் உருவாக்கி கொண்ட கலாச்சார விழுமியங்கள் சுய பெருமைக்காகவும், போட்டி மனோபாவத்துக்காகவும் படாடோபம் அடைந்துள்ளது. அதை நிறைவேற்ற ஒரு தரப்பு அரசியல், கலை என அனைத்து ஆடைகளையும் களைந்து வெளிநாடுகளுக்கு சென்று வாழ்வை பணையம் வைத்து “இதுவே வாழ்வின் அர்த்தம்” என புதிதாக வரையறுத்துள்ள கோட்பாட்டினை வெல்கிறார்கள். வென்றபின்  அதுவல்ல வாழ்வின் பேரின்பம் என காலதாமதித்து உணர்வதும் நிகழ்கிறது. இன்னொரு தரப்பு, முதல்தரப்பைப் போல் தானும் அந்த கோட்பாட்டினை வெல்ல முட்டி மோதி பார்க்கிறார்கள். ஆனால் தந்திரமின்மையினால் தோல்வியைத் தழுவும் இவர்கள் முதல் தரப்பினைக் கண்டு வயிற்றெரிச்சல் படுவதும். பின் வயிற்றெரிச்சல் தனக்கில்லை என தன் பாவத்தை கழுவி ஏதேனும் மத ஆன்மீக நிலையங்களில் குடியேறி தன் இருப்பை கடவுளின் வழி நிறுவுதல் நடக்கும். இதை ஒரு கலாச்சார சிதைவுசார் உளசிக்கல். இன்றைய நுகர்வுக் கலாச்சார முடிச்சில் சிக்கி தோல்வியடைந்த மனிதனை ஓன்று மதுக்கடையில் காணலாம் அல்லது ஆன்மீக நிறுவனங்களில் காணலாம். கட்டற்ற ஆன்மீக போதை சமீப காலங்களில் மனிதர்களின் குதுகல வாழ்வை தடுக்கிறது என்றே படுகிறது.

கடந்த இருபத்தைந்து வருடங்களில் கலைசார் தன்மை முற்றிலுமாக அகற்றப்பட்டதற்கு நுகர்வை  நோக்கி ஓடியதன் விளைவாகவே இருக்கும். ஓடி பொருளியல் ரீதியான மகத்துவ வாழ்விற்கு சென்றபின் அதிலிருக்கும் நிறைகுறைகளை களைய ஆன்மிகம் என்னும் அமைப்பிற்குள் தங்களை முழுவதுமாக ஒப்படைத்து விட்டார்கள்.   ஏன் அந்த ஆன்மீக குழுக்களில் கலைத்தன்மை இல்லையா? என வினவலாம். ஆம்!  இசை, தியானம் போன்ற சில காரியங்கள் இருப்பினும் அதன் வீச்சு எந்த அளவு மனிதனிடம் சேர்கிறது என கேட்டால் சொற்பமே மிஞ்சும். விஸ்தாரமான கலைகளை  மதத்தின் மூலம் சுருக்கி உள்வாங்குவது மேலும் தேக்கநிலையைத் தான் வந்தடையும் என்பதற்கு நாஞ்சில் நாடு நற்சான்று. இந்த வாழ்வியல் முறையிலே காலம் கடந்து விடுகிறது. கலைகள் வழி வாழ்வில் கண்டடைய வேண்டிய  மகத்தான தருணங்கள் ரொம்பதூரம் விலகி செல்கிறது.

தேக்க நிலையை அடைந்ததற்கான காரணம் என்ன? என பார்க்கையில் அவர்களாகவே விரும்பி அந்த நிலையை அடைந்துள்ளனர் என்றே படுகிறது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட காலத்தை “இது எங்கள் வாழ்வின் பொற்காலம்” என அறிகின்றனர். அந்த நாட்களின் வாசனை அவர்களுக்கு மிகவும் பிடித்து போகிறது. அதே வாசத்துடன் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தையே கடைசிவரை வாழ்ந்து தீர்க்க வேண்டும் என முயல்கிறார்கள். புதிய சிந்தனைகள் மாற்று அரசியல் என எதையும் பரிசோதனை முயற்சி செய்வதில்லை. ஆனால் காலம் அப்படியெல்லாம் உங்களை மகிழ்ச்சியாக இருக்க சம்மதிக்க மாட்டேன் என சமர் செய்கிறது. தற்போதையை நெருக்கடிகளையும், கடந்த காலத்திற்கு செல்ல வேண்டிய முனைப்பும் தான் சிந்தனை தேக்க நிலையை அடைவதற்கு காரணமாக பார்க்கிறேன்.

தற்போதைய நவீன இளைஞர்கள் சொந்த ஊரில் வசிக்காமல் அயல் தேசங்களுக்கு பணிக்கு செல்வதும் முக்கிய காரணம்.  வெளிநாட்டிற்கு செல்லும் குமரி தமிழனின் உடல் மட்டுமே அங்கு வாழ்கிறது. மனம் குமரி மண்ணின் கடந்த காலத்தில்தான் சஞ்சாரம் செய்கிறது. ஐந்து வருடங்கள் வெளிநாட்டில் பணி செய்து தாய்நிலம் நோக்கி வருபவனில் சிறு துளி அளவிற்கான மாற்றங்கள் கூட நிகழ்ந்திருக்காது. சொந்த மண்ணில் வசிப்பதை கனவாக எண்ணும் ஒருவனால் சுயமரபுக்கு உட்பட்டு கலாச்சார ரீதியான அடுத்த நகர்விற்கு செல்வது கடினம். சிந்தனை பரிமாணம் என்பது தாய்நிலம் வழி நகர்ந்தால் மட்டுமே சாத்தியமாகும். நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் நடக்கும் யுத்தம்தான்  வாழ்வு ஒரு சலிப்பு எனும் வளையத்திற்குள் சிக்குவதன் காரணம். முழுவதுமாக சொந்த மண்ணில் பணி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் அரசியல் என்பது விளைநிலங்களை அளிக்கும் போக்கு. அதன்மூலம் இயற்கையை அளிக்கும் நிலைக்கு வந்தடைவோம். தொழில் முனையங்கள் தொடங்கபடுவதற்கு முன்னரே பாதி நிலங்கள் சூறையாடப்பட்டு விட்டன.

மானுட வாழ்வு என்பதே மேம்பாட்டுக்குரியது என உணருகையில்  மட்டுமே தற்போதைய இறுக்க நிலையிலிருந்து விடுபட முடியும். இதனைத்தையும் தாண்டி மேம்பாட்டிற்கான சிந்தனையை நோக்கி பயணிக்கையில்  உடலில் பல கோளாறுகள் ஏற்படுகிறது. நாஞ்சில் நாடு வளமான ஒரு விவசாய நிலம், நான்கு திணைகள் கொண்ட அற்புதம். சூழல் மாசுபடுதல், இயற்கை வளங்கள் சுரண்டபடுதல், காற்று மாசுபாடு, தரமற்ற இறக்குமதி உணவு வகைகள் என உடலில் அனைத்து உறுப்புகளையும் தாக்கும் எண்ணற்ற நோய்கள் வந்து சேர்ந்துள்ளன.

மற்ற எந்த நிலபரப்பை விட குமரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிகையிலான ஆபத்தான நோய்கள் காணப்படுகின்றன. காரணம் செழிப்பை நோக்கி மிகபெரிய சுரண்டல் நடைபெறுவதன் வினையே. சுரண்டலின் எதிர்வினை நேரடியாக மனிதனின் உடலை பாதிக்கிறது. உடல் ஆரோக்கியத்தினால் மனமும் மாசடைகிறது. தற்போது குமரியில் மனநோய் மிக அதிகமாக பெருகியுள்ளது. சில குறிப்பிட்ட பகுதிகளில் மிகஅதிகம். அதற்க்கு அந்த பகுதியில் கிடைக்கும் நீரின் வேதியல் சமமின்மையா? என ஆய்வதற்கு எந்த ஆய்வாளரும் இல்லை. அரசும் இல்லை. இவை அனைத்திற்கும் காரணம் அரசியல்.

தமிழக அரசியல் முதல் உலக அரசியல் வரை தற்போது எந்த நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.? அரசியல், வாழ்வில் எத்தகையை பாதிப்பையும், நன்மையையும் கொண்டு வருகிறது. நம் குடும்பத்தில் நம் சமூகத்தில் நடக்கும் காரியங்களுக்கு மூலக்காரணம் எது? ஒரு மனிதனின் இருப்பையே அரசியல் தான் தீர்மானிக்கிறது என்ற எந்த அடிப்படை பிரக்ஞையும் அற்றவர்களாக தான் தற்போதைய சமூகம் உள்ளது. அரசியலிலிருந்து முற்றிலுமாக அறுபட்ட நிலையையும் காணப்படுகிறது. நாட்டின் மிக முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழ்கையில் கூட ஆன்மீக சேனல்கள் பார்த்துக்கொண்டு வேற்று கிரகவாசி போல் வாழும் நிறைய வீடுகளை அறிவேன்.

மரபுசார் விவாதங்கள் முடிவடைந்து வந்த காலகட்டங்களில் கூட குமரி மக்கள் முகத்தில் ஒரு மலர்ச்சி தென்படும். அதுவும் இன்று அரிதாகி விட்டது. வாழ்விற்கான மகத்தான தருணங்களை அறிந்துக் கொள்ளும் நுண்ணர்வை பெற்ற மக்கள்தான் குமரி நிலத்தினர். ஆனால் அந்த நுண் உணர்வை நோக்கி செல்லும் தளம் மிக சிறும்பான்மையாக இருப்பதை எண்ணி சலிப்புடன் பெரும்பான்மையாக இருந்துக் கொள்ளலாம் என தங்களை தாங்கள் கட்டுப்படுத்திக் கொள்பவர்களும் அதிகம். இப்போது நம்மை மீள்தகவு செய்து நமக்குரிய நிலத்தின் தன்மைகளை மீட்பது காலத்தின் அவசியம். நம்மை மீட்டெடுக்கும் பொருட்டு சிந்தனையை மேம்படுத்த அமைப்பு சார்ந்து இயங்க ஊருக்கு ஒரு அறிவுசார்குழு தேவைபடுகிறது. அதன்வழி கலையை, அறிவியலை, இலக்கியத்தை, மேம்போக்கான அரசியல் நிலைபாடுகளை களைந்து அரசியல் குறித்த நுண்பார்வையை உருவாக்கும் ஆரோக்கிய விவாதங்களை முன்னெடுப்பது என அமைப்புசார் இயக்கங்களினால் செயல்படுத்த வேண்டிய பணி எக்கச்சக்கம் உள்ளது. ஊருக்கு ஊர் நூலகம், உலகின் செவ்வியல் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் திரை அமைப்புகள்(Film Club) என தேவைபடுகிறது.  இணையம் இருக்கிறதே என இவ் முன்னெடுப்பை  உதாசீனம் செய்தால் தனிநபர் சார்ந்து பெரிய பலன் இல்லாமல் போகும். இதை ஒரு சமூக செயல்பாட்டாக முன்னேடுக்கையில்தான் கூட்டு சமுதாயத்திற்கான மேம்பாடு நிகழும். அதற்கு கேரளம் சிறந்த உதாரணம்.  இவற்றின்  முக்கியத்துத்துவம் அறிந்து செயல்படுத்த பொருளியல் பலம் வாய்ந்த தன்னார்வலர்களின் உதவியும் மிக முக்கியம்.

எதன்வழி நம்மை நாம் இழந்தோம் என அறிதல்தான் முதலில் முக்கியம். அந்த அறிதலில் இருந்து தேக்க விழுமியங்களை களைவதற்கான முயற்சிகள் தொடர வேண்டும். அது ஒன்றும் நாஞ்சில் மக்களுக்கு அரிதான காரியம் இல்லை “தேக்க” மரமாக இருக்கும் நாஞ்சில் நாடு தேக்கு மரமாக மாறி  இவ்வுலகில் தன்னிருப்பை நிலைநிறுவ மேலெழும்பி வருதல் நிகழ வேண்டும். நாஞ்சில் நாட்டுக்காரன் என்ற முறையில் அதற்கான பொறுப்புணர்வுடன் சிறு மாற்றங்களையும் எதிர்நோக்கி கொண்டாட தயாராகிறேன். மேலும் இந்த நிலை குமரி அல்லாத பிற மாவட்டங்களுக்கும் பொருந்தலாம் என்றே நினைக்கிறேன்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button