வெற்றிச் சக்கரவர்த்தி நெப்போலியனின் வீரமும் வீழ்ச்சியும்…! – றின்னோஸா
கட்டுரை | வாசகசாலை

ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஒரு சாம்ராஜ்யத்துக்கே பேரரசன் ஆவது எல்லாமே திரைப்படங்களில் மட்டும்தான் சாத்தியமாகும். ஆனால், சினிமாவில் வருவது போல நிஜ வாழ்க்கையிலும் ஒரு உண்மையான மாவீரன் இருந்தார். அவர்தான் பிரான்ஸின் சக்கரவர்த்தி நெப்போலியன் பொனபார்ட் (Napoleon Bonaparte).
உலகாண்ட பேரரசனாக, உலகம் போற்றும் மாவீரனாக, மகா சக்கரவர்த்தியாக போற்றப்பட்ட நெப்போலியனின் எழுச்சியும் வீழ்ச்சியும் பல சதிகளும் சக்சஸ்களும் நிறைந்த ஒரு வரலாற்று சரித்திரம்.
வீரத்துக்கும் விவேகத்துக்கும் பேர் போன, யார் முன்னும் மண்டியிடாத, எதிரிகளின் தந்திரங்களை தன்னுடைய ராஜதந்திரத்தால் தவிடு பொடியாக்கும், உலகையே தன் காலடியில் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டு அதை நிறைவேற்றியும் காட்டிய அந்த வீரனின் பெயரை விலக்கிய ஒரு வரலாற்றுப் பக்கத்தை பார்க்கவே முடியாது! அந்தளவுக்கு துணிவுக்கும், வீரத்திற்கும் வரலாற்றில் நிலைத்திருக்கும் ஒரு பெயர்தான் நெப்போலியன் போனபார்ட்
ஈடு இணை இல்லாத போர்வீரன். இந்த உலகம் இதுவரைக்கும் பார்க்காத ஒரு திறமையான ராஜாதந்திரி. கோர்சிகாவின் விடுதலையில் ஆரம்பித்து அகண்ட ஐரோப்பிய சாம்ராஜ்ஜியத்தை நோக்கி நகர்ந்த நெப்போலியன் போனபார்ட்டின் வாழ்க்கை எப்போது படித்தாலும் உடல் சிலிர்க்க வைக்கும் ஒரு அதிரடியான வீர வரலாறு!
மத்திய தரைக்கடலில் உள்ள கோர்ஸிகா என்னும் சிறிய தீவில் உள்ள ஐயாட்சோ என்ற சிறிய கிராமத்தில், 1769 ஆகஸ்ட் 15இல், கார்லோ போனபார்ட் என்ற சட்ட நிபுணருக்கும், லெட்டீஷியா சமோசினோ என்ற பேரழகுப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தார் நெப்போலியன். இவர் பிறந்ததே ஒரு சரித்திரம்தான். சார்லஸ் தம்பதிகளுக்கு மொத்தம் 13 குழந்தைகள் பிறந்தாலும், அதிலே 8 குழந்தைகள்தான் உயிர் பிழைத்தது.. அதில் இரண்டாவது குழந்தை நெப்போலியன் போனபார்ட்.

இவர் குடும்பத்தினர் இத்தாலியப் பாரம்பர்யத்தைச் சேர்ந்திருந்தாலும், 200 ஆண்டுகளாக கோர்சிகாவிலேயே வாழ்ந்து வந்ததால் கோர்ஸிகாவையே தங்களுடைய சொந்த மண்ணாக கொண்டாடினார்கள். இந்த கோர்சீகா தீவில் போனபார்ட் சமூகம் உயர் ஜாதியாக, நல்ல செல்வாக்கு மிகுந்த சமூகமாக இருந்தாலும் கூட, நெப்போலியன் குடும்பம் பொருளாதாரத்தில் பின் தங்கித்தான் இருந்தது.
பதினெட்டாம் நூற்றாண்டில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை பிரிட்டன் தனக்கு அடிபணிய வைத்திருந்தாலும் பிரிட்டனுக்கு தலைவணங்க மாட்டோம் என தனக்கான தனி ராஜ்ஜியத்தை அமைத்து கெத்து காட்டியது இத்தாலி. அந்த இத்தாலிக்கு அடிமைப்பட்டு அவதிப்பட்டு வந்தது கோர்சிகா தீவு. எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் புரட்சியும் வறுமையுமாகவே கழிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு விடிவு வர வேண்டும் என்று போராடிய குழுவுக்கு தலைமை தாங்கினார் நெப்போலியனின் தந்தை கார்லோ போர்னாபாட்.
1768ல் கோர்சிகாவை விட்டு வெளியேறிய இத்தாலி போகிற போக்கில் அந்த தீவை பிரான்சுக்கு விற்று விட்டுப் போனது. பிரான்ஸ் தனக்கு விற்கப்பட்ட கோர்சிகா தீவின் போராளிகளை வித்தியாசமான முறையில் கையாண்டது. போராளிகளுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை போன்ற பல லக்சுரிகளை ஒரு பக்கமும் கடும் தண்டனை மறு பக்கமும் என இரண்டு சாய்ஸ்களை வழங்கியது.
தண்டனையை யார்தான் விரும்புவார்? எனவே வேறு வழி இல்லாமல் பலர் பிரான்சுக்கு கட்டுப்பட்டார்கள். பெரும்பாலானோர் தம் சுய வெறுப்பு விருப்புகளை விடுத்து பிரெஞ்சு அரசு வழங்கிய சலுகைகளை ஏற்றுக்கொள்ள முன் வந்தனர். அதில் ஒருவர்தான் அந்த போராட்டக் குழுவுக்கு தலைமை தாங்கிய கார்லோஸ். அதன் பிறகு கார்லோசின் குடும்பத்தை பிரான்ஸ் அரசு நன்றாகவே கவனித்துக் கொண்டது. பல சலுகைகளை வழங்கியது. அதில் முக்கியமானது அவரது பிள்ளைகள் அனைவருக்குமே பிரான்சில் உள்ள மிகப் பிரபலமான சிறந்த பாடசாலைகளில் அரசு சலுகையோடு இலவசமாக கல்வியை கற்றுக் கொள்வதற்கான வசதி. இதனாலேயே நெப்போலியனும் அவருடைய சகோதரர்களும் பிரான்ஸ்சில் தங்கள் கல்வியைத் தொடர்ந்தார்கள். நெப்போலியன் எனும் வீரனை உருவாக்கியதில் முக்கிய இடம் இந்தப் பள்ளிகளுக்கே சாரும்.
மாணவ பாராயத்தில் நெப்போலியன் பள்ளியில் எப்போதும் முதல்நிலை. கணிதம், வரலாறு, புவியியல், மொழி, இலக்கியம் ஆகிய துறைகளில் அதிக அக்கறை காட்டினார். ஆனாலும் இவருடைய தாய்மொழி இத்தாலி என்பதால் பள்ளியில சக மாணவர்கள் அவரை மிகவும் துன்புறுத்தினார்கள். இந்த கடும் கேலி கிண்டலால் மனம் உடைந்த நெப்போலியனுக்கு யாருமே நண்பர்கள் இல்லாமல் போனது. இதனால் புத்தகங்கள்தான் அவருடைய உற்ற நண்பனாகவும் அவருடைய தனிமைக்குத் தோழனாகவும் மாறியது. அதனாலேயே கையில் கிடைத்த எல்லா புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினார். அவருடைய வாசிப்பு அவருக்கு ஒரு புதிய உலகத்தை திறந்து விட்டது. சுதந்திரம், நிலவுடைமை, போராட்டம் என்று பல விடயங்களை அறிமுகப்படுத்தி வைத்தது.
நெப்போலியன் எப்பவுமே தனிமையை விரும்பி. ஆனால், மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்கவர். தைரியமும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிக அளவில் இவரிடம் காணப்பட்டது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வரைக்கும் சோர்ந்து போகாத கண்சிஸ்டன்சி எப்போதுமே அவரிடம் இருந்தது. தன் கனவுகளுக்கு உருவம் கொடுக்க வேண்டும் என்ற வெறி எப்போதும் அவருக்குள்ள அணையாத தீயாக கொழுந்து விட்டு எரிந்துகொண்டே இருந்தது. அகண்ட ஐரோப்பாவில் மிகப்பெரிய பிரஞ்சு சாம்ராஜ்யம் என்பதே இவர் ஒரே லட்சியமாக இருந்தது.
ஒரு முறை நெப்போலியனின் பள்ளி ஆசிரியர் ஒருவர், “இந்த இளைஞன் கருங்கல்லால் ஆக்கப்பட்டிருந்தாலும் அவன் உள்ளே ஓர் எரிமலை கணத்துக் கொண்டே இருக்கிறது” என்று குறிப்பிட்டாராம்.
15 வயதில் பள்ளிப் படிப்பை முடித்த நெப்போலியன், தனக்கு இயல்பாகவே இருந்த ஆர்வம் காரணமாக பிரஞ்சு துப்பாக்கிப் படைப்பிரிவில் (Artillery) இணைந்தார்.
அவருடைய 16வது வயதில் அவருடைய தந்தை வயிற்றுப்புற்று நோயால் இறந்து போக, குடும்பத்தைப் பாத்துக்கொள்ளும் முழு பொறுப்பும் நெப்போலியன் தலையிலேயே வந்தது. அதனால் எப்படியாவது தன் வேலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என தன்னை தயார்படுத்திக் கொண்டார். அதனாலேயே ரெண்டு வருடங்களில் படித்து முடிக்க வேண்டிய படிப்பை ஒரே வருடத்தில் முடித்தார். பள்ளிப் படிப்பை திறம்பட முடித்த நெப்போலியன் பிரெஞ்சு ராணுவ அகாடமியில் சேர்ந்து ராணுவப் பயிற்சிகளையும் மேற்கொண்டார். மிகக் குறைந்த வயதிலேயே தனது அசாத்திய திறமையால் பிரெஞ்சுப் படையின் படைத்தளபதியாக உயர்வும் பெற்றார். அப்போது அவர் வயதை ஒத்த அனைவரும் ஏதோ வேலையில் செட்டிலாகி, காதல் கல்யாணம், குழந்தை என இருந்தனர். ஆனால், நெப்போலியனோ கிளியின் கழுத்தை குறி வைத்த அர்ஜுனன் போல ஒரே குறிக்கோளுடன் இருந்தார். தனது கனவுகளுக்கு உருவம் கொடுப்பது மட்டுமே அவரது ஒரே நோக்கமாக இருந்தது.
“ஒரு மேசை இழுப்பறைகளுள் பல காகிதங்கள் சீராக அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது போல் என் மூளையிலும் பல செய்திகள் ஒழுங்காகத் திணிக்கப்பட்டு இருக்கின்றன. எனக்கு வேண்டியதை வேண்டிய போது சிரமமோ, களைப்போ இன்றி தேர்ந்தெடுத்து பயன்படுத்திக்கொள்ள என்னால் முடியும்” என்பது நெப்போலியனின் சுயவிமர்சனம். அது 100 சதவிகிதம் உண்மையே. ஒரு நாளுக்கு 15 முதல் 20 மணி நேரம், இடைவிடாமல், சோர்வில்லாமல் உழைப்பார். அவரது அசத்திய ஞாபக சக்தி அனைவராலும் வியக்கப்பட்டது.
மிகச் சிறந்த பேச்சாற்றல் கொண்டவர். வார்த்தைகளால் மக்கள் கூட்டதை வசியம் பண்ணத் தெரிந்தவர். அமைதியாக இருப்பார். வாய்விட்டு சிரிக்க மாட்டார். இது போல பல தனித்துவமான குணாதிசயங்களை கொண்டிருந்தார் நெப்போலியன்.
பிரெஞ்ச் ராணுவத்தில் வேலை செய்த காரணத்தால் நெப்போலியன் தன் வாழ்க்கையில் பெரும் பகுதியை பிரான்ஸில்தான் கழித்தார். இச்சமயத்தில் ரூஸோ, வால்டேரின் கருத்துக்கள் இவரை மிகவும் கவர்ந்தது. இதனால் கோர்சிகாவின் வரலாற்றை எழுத அவர் ஆசைப்பட்டார். தனது தாய் நாடான கோர்சிகா பிரான்சின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், பிரான்சின் ஆதிக்கத்தின் கீழ் தனது மக்கள் அல்லல் படுவதையும் நினைக்க நினைக்க நெப்போலியன் ரத்தம் கொதித்தது.
ஆனால், உண்மையாக சொல்லப்போனால் பிரெஞ்சு மக்கள் ஒன்றும் அத்தனை கொடூரமானவர்களாக இருக்கவில்லை. அங்கே பத்து சதவீதமாக இருந்த லூயி மன்னர்களின் ஆதிக்க சாதியினரால் 90 சதவிகிதமான பொதுமக்கள் மிகவும் கீழ்த்தரமாகவும் இழிவாகவும் நடத்தப்படுவதைக் கண்டு நெப்போலியனின் ஆத்திரம் மேலும் அதிகரித்தது.
இச்சமயத்தில்தான் பொறுத்தது போதும் பொங்கி எழு என லூயி மன்னர்களின் ஆதிக்கத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிரான மக்கள் புரட்சி பிரான்சில் வெடித்தது. தியூல்லரி அரண்மனை தாக்கப்பட்டு லூயி மன்னன் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

இந்த புரட்சி நடந்த 1789ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெப்போலியனுக்கு பிரெஞ்சு ராணுவத்தில் அதிகாரியாக பதவி கிடைத்து. உருவத்தில் பிரெஞ்சு இராணுவ வீரனாக இருந்தாலும் உள்ளத்தில் தனது தாய் நாடான கோர்சிகாவின் விடுதலைக்கான திட்டங்களை மறைமுகமாக தீட்டிக்கொண்டே இருந்தார். உலகின் மிகப் பெரிய பலம் பொருந்திய ராணுவ அமைப்பில் ஒன்றான பிரெஞ்சு ராணுவத்தில் தான் பெற்ற பயிற்சியை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தும் திட்டங்களை தீட்டிக் கொண்டிருந்தார் நெப்போலியன்.
மெல்ல மெல்ல பிரெஞ்சு படைகளுக்கு எதிராக ஒரு சிறிய குழுவை மறைமுகமாகத் திரட்டி, பிரெஞ்சு ராணுவத்துக்கு எதிரான தாக்குதலை அவ்வப்போது நடத்தி வந்தாலும் அந்த தாக்குதல்கள் அனைத்தும் வலிமை மிக்க பிரெஞ்சு ராணுவத்தால் சுக்கு நூறாக முறியடிக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் பிரெஞ்சு இராணுவத்துக்கு எதிரான கலகங்களைச் செய்வது நெப்போலியன் தலைமையிலான குழு என்று தெரிய வந்த பொழுது நெப்போலியன் பிரெஞ்ச் ராணுவத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். இதே கால கட்டத்தில்தான் லூயி மன்னருக்கு எதிரான ஆவேசமான போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்தது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கரை கடந்து போன மக்கள் போராட்டத்தின் விளைவாக, வேறு வழியில்லாமல் லூயி மன்னர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். ஆனால், அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மக்கள் அரசும், உயர் வர்க்கத்துக்கு கட்டுப்பட்ட ஆட்சியையே மேற்கொண்டது.
ஆனால் இந்த நேரத்தில் நடந்த ஒரு நல்ல விடயம் என்னவென்றால் லூயி மன்னர் ஆட்சி கவிழ்ந்ததால், நெப்போலியனுக்கு மீண்டும் பிரெஞ்சு ராணுவத்தில் வேலை கிடைத்தது. அச்சமயத்தில் இளம் வீரன் நெப்போலியனுடைய துணிச்சலும் தைரியமும் பிரெஞ்சு ராணுவத்தையும் மக்களையும் மிகவும் கவர்ந்தது. ஆட்சிக்கு வந்த அரசு மீது அதிருப்தி கொண்ட மக்கள் ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தபோது அந்த குழுக்களை எல்லாம் அடக்கும் பொறுப்பு நெப்போலியனிடம் வழங்கப்பட்டது. அதை மிகவும் வெற்றிகரமாக செய்தும் முடித்தார் துடிப்பான இளம் வீரன் நெப்போலியன்.
1795இல் பிரான்சின் துலான் துறைமுகத்தை முற்றுகை இட வந்த பிரிட்டிஷ் படைகளை பின்னங்கால் பிறடியில் அடிக்க ஓட ஓட விரட்டி அடித்த நெப்போலியனின் வீரத்தைப் பார்த்து அசந்து போனது பிரஞ்சு ராணுவம். அந்த வீர தீரச்செயல் அவர் வாழ்வில் ஒரு திருப்பு முனையானது. இந்த சம்பவம்தான் நெப்போலியனை பிரெஞ்சு ராணுவத்தின் உள்நாட்டு படைத்தலைவன் ஆக்கியது.
அதன் பின் பிரெஞ்சு ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்ட நெப்போலியன் சில காலத்திலேயே பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், போதிய ஆதாரங்கள் இன்றி பிறகு விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் தன் உடல், பொருள், ஆவி அத்தனையையும் கொடுத்து பிரெஞ்சு ராணுவத்துக்கு உண்மையாக உழைத்த போதும் தன்னை பிரான்ஸ் அவமானப்படுத்தி விட்டது என்று மனம் உடைந்த நெப்போலியன் அதற்காக பலி தீர்த்துக் கொள்ள தனக்கான தருணம் வரும் வரை காத்திருந்தார்.
அந்த தருணம் 1796 இல் இத்தாலியப் படைகள் வடிவில் வந்து சேர்ந்தது. பிரான்சை முற்றுகையிட்டு இருந்த இத்தாலி ராணுவத்தை விரட்டி அடிப்பதற்கு திறமை வாய்ந்த ஒரு தலைவன் தேவைப்பட்டான். யார் தலைமையில் ராணுவத்தை திரட்டலாம் என்று யோசித்த போது பிரெஞ்சு இராணுவத்துக்கு நெப்போலியன் தவிர வேறு யாருமே நினைவுக்கு வரவில்லை.
இப்போது காற்று நெப்போலியனுக்கு சாதகமாக வீசத் தொடங்கியது. எந்த அரசு நெப்போலியனை அவமானப்படுத்தி வேலையில் இருந்து துரத்தியதோ அதே பிரெஞ்சு அரசு இப்பொழுது நெப்போலியனை தேடி வந்தது. தேடிவந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட நெப்போலியன் இத்தாலிக்கு எதிரான படையெடுப்பை தலைமை தாங்கி நடத்தும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். அந்தப் போரில் நெப்போலியன் வகுத்த வியூகங்கள் எல்லாம் பிரெஞ்சு அரசை மிரள வைத்தது. இத்தாலியப் படைகளை ஓட ஓட விரட்டி அடித்தது நெப்போலியன் படை. எதிரி நாடான இத்தாலி படைகளை அவர்கள் மண்ணிலேயே முறியடித்த பின்னர், நெப்போலியனின் புகழ் நாடெங்கிலும், இல்லை உலகெங்கிலும் பரவத்தொடங்கியது.
இத்தாலியின் செல்வங்கள் அத்தனையும் பிரான்ஸ் வசமாகின. பல அழகிய இத்தாலிய கலைப் பொருள்கள் ஃபிரான்ஸ்க்கு எடுத்துவரப்பட்டன. குறிப்பாக இத்தாலியின் மிகச் சிறந்த 150 ஓவியங்கள் பிரான்ஸ் வசம் வந்தன. இத்தாலி வெற்றிக்குப் பின் நெப்போலியன் பிரெஞ்சு மக்களிடையே மிகப்பெரிய ஹீரோவானார். வியப்பும், மதிப்பும் பெருக பெருக மக்கள் நெப்போலியானை சிகப்புக் கம்பளம் விரித்து கொண்டாடத் தொடங்கினர்.
இத்தாலியப் படை யெடுப்பை வெற்றியுடன் முடித்த நெப்போலியன், இங்கிலாந்தை தோற்கடிக்கும் நோக்கத்தோடு அடுத்து 1798ல் எகிப்தியப் படையெடுப்பை மேற்கொண்டார். கீழை நாடுகளுடன் பிரிட்டன் கொண்ட தொடர்புகளை துண்டித்து அதன் வர்த்தக சாம்ராஜ்ஜியத்துக்கு ஒரு செக் வைக்க விரும்பிய நெப்போலியன் எகிப்தின் மீது படையெடுத்தார். எகிப்தை வெற்றி கொள்வதன் மூலம் இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்புகளையும் விரிவுபடுத்திக் கொள்ள முடியும் என்பது அவர் திட்டம்.
1798இல் எகிப்தின் படையெடுப்பில் 400 சிறு கப்பல்கள் கலந்து கொண்டன. 38000 வீரர்கள் சென்றனர். ராணுவத்தை மட்டுமே அழைத்துச் செல்லாமல் கூடவே விஞ்ஞானிகள், அறிஞர்களையும் அழைத்துச் சென்றார் நெப்போலியன். அவர்கள் எகிப்தை அக்கு வேறு ஆணி வேறாக ஆய்வு செய்து எகிப்து பற்றிய ஒரு கலை நூலையும் எழுதினார்கள். இதுவும் நெப்போலியனின் சாதனைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. எகிப்தின் புகழ்பெற்ற அலெக்ஸாண்ட்ரியா நகரைக் கைப்பற்றிய பிறகு, கெய்ரோவை நோக்கி முன்னேறிய நெப்போலியன் படை ‘பிரமிடுகளின் போர்’ (Battle of the Pyramids) என அழைக்கப்பட்ட போரில் எகிப்தின் தலைநகர் கெய்ரோவையும் கைப்பற்றியது.
வீரம், விவேகம், அதிரடியான போர் யுக்திகள், கலையின் பால் ஆர்வம், பிரான்ஸ் நாட்டின் மீதான அதீத காதல் என நெப்போலியன் மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் ஹீரோவாக உருவெடுக்கத் தொடங்கினார்.
ஆனால், ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல புகழ்பெற்ற பிரிட்டிஷ் கடற்படைத் தளபதி நெல்சனின் தலைமையில் நிகழ்ந்த நைல் நதிப் போர் தோல்வியில் முடிந்தது. 40 கப்பல்களில் சென்ற பிரஞ்சுப் படையில் 2 கப்பல்களே மிஞ்சின. 5000 வீரர்களை பலியிட்டு, நெப்போலியன் தோல்வியே கண்டாலும், திட்டமிட்டு இதனை ஓர் வெற்றிச் செய்தியாகவே பரப்பினார் நெப்போலியன்.
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த நெப்போலியன் பிரான்சில் உள்நாட்டு கலவரங்கள் தீவிரமாய் இருக்கின்றன என்று கேள்விப்பட்டு மீண்டும் நாடு திரும்பினார்.
நாட்டின் குழப்பங்களை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட நெப்போலியன் பிரெஞ்சு மக்கள் உதவியோடு ஆட்சியில் இருந்த அரசை அதிகாரத்தை விட்டுத் நீக்கி, 1802ஆம் ஆண்டு தன்னைத்தானே நிரந்தர கன்சுலாக நியமித்துக் கொண்டார். நெப்போலியனின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பமாகியது.
மக்கள் புரட்சியினால் அமைதி இழந்த பிரான்சில் நெப்போலியன் மன்னரான பிறகுதான் அமைதி நிலவியது. அதைத்தொடர்ந்து ஒரு பொது ஐரோப்பிய ஒப்பந்தம் குறித்து ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் பேசினார் நெப்போலியன். இதுவே பிரான்சை ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரமிக்க நாடாக பின்னாளில் மாற்றியது.
அடுத்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு அதாவது 1804ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி தனது 35வது வயதில் பிரெஞ்சு தேசத்தின் சக்கரவர்த்தியாக முடிசூடிக்கொண்டு அரியணையில் அமர்ந்தார் நெப்போலியன்.
“பிரான்சின் அரசமுடி நிலத்தில் வீழ்ந்து கிடந்ததைக் கண்டேன். என் வாளால் அதை எடுத்துக் கொண்டேன்’ என்றார் நெப்போலியன்.
தொடர்ந்து பல போர்களில் ஈடுபட்ட நெப்போலியன் போர்ச்சுகல் இங்கிலாந்து தவிர்த்து இத்தாலி, போலந்து ப்ரஷ்யா, டென்மார்க், ஸ்பெயின், ஜெர்மனி உற்பட பல ஐரோப்பிய நாடுகளை கைப்பற்றி தனது ஆட்சியை விரிவுபடுத்தி ஐரோப்பாவில் அத்தனை தேசங்களையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
மிகப்பெரிய பிரஞ்சு சாம்ராஜ்யம் என்ற இவர் கனவு நனவாகியது.
“ஒரு பாடகன் தன் வயலினை நேசிப்பதுபோல நான் அதிகாரத்தை நேசிக்கிறேன். ஒரு கலைஞனைப் போல அதை நான் உபாசிக்கிறேன்” என்று கூறியவர் நெப்போலியன்.

ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் நெப்போலியன் கையில் அதிகாரங்கள் குவிந்திருக்கும் வண்ணம் அரசியல் அமைப்பு ஒன்று தயாராகியது. இதன்படி 3 கான்சல்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. ஆனால், உண்மையில் முதல் கான்சலான நெப்போலியனிடமே எல்லா அதிகாரமும் இருந்தது. மற்ற இருவரும் மக்களின் ஜனநாயக கண்துடைப்புக்கு அமர்த்தப்பட்ட அதிகாரமற்ற கைப் பொம்மைகளாகவே இருந்தனர். சொல்லப்போனால் கொல்லப்பட்ட 16ஆம் லூயியை விட நெப்போலியன் பிரான்சில் அதிக அதிகாரம் பெற்றார்.
நெப்போலியன் தனது ஆட்சியில் திறமைக்கு எப்போதுமே வாய்ப்பு கொடுத்தார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடித்தார். வேலை வாய்ப்புகளைப் பெருக்கினார். பாரிசில் பல நகர சீரமைப்புத் திட்டங்களை நிறைவேற்றினார். மொத்தத்தில் ஐரோப்பாவின் செல்வமும் வனப்பும் மிளிரும் அழகுமிக்க நகராக பாரிசை மாற்றினார்.
பிரான்ஸ்சில் இருந்த மிகச்சிறந்த ஓவியர், சிற்பி, கவிஞர், பாடகர், எழுத்தாளர், நடிகர், கட்டடக்கலை நிபுணர் போன்றோரின் பட்டியலைத் தயாரித்து அவர்களை ஊக்குவித்து ஆதரித்தார். அவர்களுக்கு தக்க மதிப்பு அளித்து விருது தந்து கௌரவித்தார். இன்று வரை பிரான்ஸ் கலைகளின் தேசமாகத் திகழ நெப்போலியனே காரணம்.
தேசியக் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் காட்டினார். பிரஞ்சு மொழி, லத்தீன் மொழி, விஞ்ஞானம், அறிவியல் போன்ற படங்களை கற்பிக்கப் பல இலக்கணப் பள்ளிகளை உருவாக்கினார். உயர்கல்வி வாய்ப்புக்களைக் கூட்டினார். பிரஞ்சுப் பல்கலைக்கழக முக்கிய அதிகாரிகளை நெப்போலியனே நியமித்தார். மாணவர்களுக்கு கல்வியை கட்டாயமாக்கினார். 1795இல் பிரஞ்சு மொழி இலக்கிய விஞ்ஞானக் கழகம் தொடங்கப்பட்டது. பல மொழி மற்றும் அறிவியல் சார் ஆய்வுக்கு இது உதவியது.
நாட்டின் நிதித் துறையிலும் நெப்போலியன் பல முக்கிய தீர்மானங்களை கொண்டுவந்தார். பிரான்ஸ்சில் வரி வசூல் முறையை ஒழுங்கு படுத்தினார். கடுமையான நிதி சிக்கனம் கடைப்பிடிக்கப்பட்டது. ஊழல் செய்தவர்களுக்கு கடும் தண்டனை தரப்பட்டது. நிதித் துறை முறையாக பேணப்பட்டது. 1800 இல் பிரஞ்சு வங்கி (Bank of France) நிறுவப்பட்டது. இது வங்கித் துறையில் பல புரட்சிகளை பிரான்ஸ்சில் உருவாக்கியது. நாட்டில் பல கால்வாய்கள் வெட்டப்பட்டன. துறைமுகங்கள் சீரமைக்கப்பட்டது. உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது. பல புதிய தொழில் நிறுவனங்கள் வரிச்சலுகை வழங்கி ஆரம்பிக்கப்பட்டது. இதனால் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது ஆக மொத்தத்தில், நெப்போலியன் ஆட்சியில் பிரான்ஸ் மட்டுமல்ல ஐரோப்பாவே மிகவும் செழித்து வளர்ந்தது.
நெப்போலியன் செய்த இரண்டு முக்கியமான செயல்களில் ஒன்று போப்பாண்டவருடன் செய்து கொண்ட சமய ஒப்பந்தம். இரண்டாவது ‘Code of Napoleon’ எனும் சட்டக் கோர்வையை உருவாக்கியது.
போப்பாண்டவருடன் செய்து கொண்ட சமய ஒப்பந்தம் நெப்போலியனுக்கும் ரோம கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பாண்டவர் ஏழாம் பியசும் இடையே கையெழுத்தானது. 1801 இன் ஒப்பந்தம் (The Concordat of 1801) என குறிப்பிடப்படும் இந்த ஒப்பந்தம் பிரெஞ்சுப் புரட்சிக்கு பிறகு, கத்தோலிக்க மதத்தை மீண்டும் பிரான்சில் பொதுவான மதமாக மாற்றி, திருச்சபைக்கு சட்டப்பூர்வமான அனுமதிகளை வழங்கியது. இந்த ‘The Concordat of 1801’ ஒப்பந்தத்தின் மூலம், கத்தோலிக்க மதம் ஐரோப்பாவில் மறு உயிர் பெற்றது.
இரண்டாவது, நீதித்துறைக்குப் பயன்படும் மிகச் சிறப்பான ஒரு சட்டத் தொகுப்பைக் கொண்டு வந்தது. நிலங்கள் பற்றிய சட்டத்தொகுப்பு, குற்றங்கள் பற்றிய சட்டத் தொகுப்பு என விரிவாக அது எழுதப்பட்டது. அரசியல் சட்டங்களிலும் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது அது. நெப்போலியன் உருவாக்கிய Code Of Napoleon – நெப்போலியனின் சட்டத் தொகுப்புகள் என்று அழைக்கப்படும் இந்த சட்டத்தொகுப்புதான் இன்னும் பிரஞ்சு சட்டமாக நீடிக்கிறது. உலகின் மிகச்சிறந்த சட்டத் தொகுப்புகளில் ஒன்றாக போற்றப்படும் இதனை உருவாக்கியதாலேயே ‘சட்டத்தொகுப்பின் ஜாம்பவான்’ என இன்று வரை நெப்போலியன் போற்றப்படுகிறார்.
நெப்போலியன் தன் வாழ்நாளில் ஏறத்தாழ 40 போர்க்களங்களைச் சந்தித்திருக்கிறார். அதில் கிடைக்காத பெருமை இவருக்கு Code Of Napoleon சட்டத்தொகுப்பில் கிடைத்தது. இதனைப் பின்னாளில் அவரே ஒப்புக் கொண்டார். சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்ற புரட்சிக்கருத்துதான் இச்சட்டத்தின் சாரம். இதனாலேயே ஐரோப்பாவிலேயே பிரான்ஸ்தான் பல புரட்சிகரமான மாற்றங்களை முதலில் ஏற்றுக்கொண்ட நாடு என்று பெருமையை இன்று வரை தக்க வைத்திருக்கிறது.
பல வெற்றிகளைக் கண்ட நெப்போலியனின் சறுக்கல் ரஷ்யாவை கைப்பற்ற வேண்டும் என்று எண்ணியதில் ஆரம்பித்தது. நெப்போலியனின் முதன்மை நோக்கம் ஏகாதிபத்திய ரஷ்ய இராணுவத்தை தோற்கடித்து, ரஷ்ய மன்னர் ஜார் அலெக்சாண்டர் I ஐ மீண்டும் ஐரோப்பிய கான்டினென்டல் அமைப்பில் சேரும்படி கட்டாயப்படுத்துவதாகும். 1812 ஜூன் 21 அன்று நெப்போலியன் ராணுவம் ரஷ்யா நோக்கி நகர்ந்தது. நெப்போலியன் படை வருகிறது என்று தெரிந்தும் ரஷ்யா சுதாரித்துக் கொண்டது. எல்லாவற்றையுமே அதி துல்லியமாக கணிப்பிடும் நெப்போலியனே தவறிய புள்ளிதான் ரஷ்யா.
பிரெஞ்சு இராணுவம் ரஷ்யாவை முற்றுகையிட்ட போது மாஸ்கோ வெறிச்சோடி கிடந்தது. இதை நெப்போலியன் படை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் ரஷ்யாவின் ஜார் மன்னன் தன்னிடம் வந்து சரணடைவான் என்று எதிர்பார்த்து நெப்போலியன் காத்திருந்தார். ஆனால், வந்ததோ பனிக்காலமும், கடும் குளிரும், கஷ்டமும் மட்டும்தான். அடுத்து என்ன செய்வது என்று யோசிப்பதற்கு முன்பே பல லட்சம் பிரெஞ்சு வீரர்கள் குளிராலும், பசியாலும், நோய் தாக்கத்தாலும் உயிரிழந்திருந்தார்கள். 6 லட்சம் போர் வீரர்களோடு சென்ற நெப்போலியன் படை வெறும் 40 ஆயிரம் வீரர்களோடு நாடு திரும்பியது. ரஷ்யாவில் கிடைத்த பெரும் தோல்வி நெப்போலியனின் ஆட்சியை ஆட்டம் காணச் செய்தது. எதிர்பாராத இந்த தாக்குதல் இன்னொரு பேரிடியாக நெப்போலியன் தலையில் விழுந்தது.
அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போன நெப்போலியனின் ஆட்சி கலைக்கப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். ஆனாலும் பீனிக்ஸ் பறவை போல எழுந்து அங்கிருந்து தப்பி வந்த நெப்போலியன் மீண்டும் படை திரட்டத் தொடங்கினார். மக்களின் பேராதரவு இருந்ததால் மிக இலகுவாகவே படைதிரட்டி இழந்த ஆட்சியைப் பெற்று மீண்டும் பிரான்ஸ் பேரரசின் சக்கரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார்.
வெற்றிப் போதை தலைக்கு ஏறியதில் மேலும் மேலும் ஐரோப்பாவை கைப்பற்றி தனது ராஜ்யத்தை விரிவாக்க எண்ணிய நெப்போலியன் ஜூன் 18, 1815இல் பெல்ஜியத்தின் வாட்டர்லூ (waterloo) என்ற இடத்தில் நிகழ்த்திய யுத்தமே அவரது இறுதி யுத்தமாக மாறிப்போனது.
இப்போது ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தங்களுக்குள் ஒன்றாக அணி சேர்ந்து கொள்ள, நெப்போலியன் படை அவர்களுக்கு எதிராக தனித்து போராடிய வேண்டிய நிலை உருவானது. ஆனாலும் ‘One Man Army’ ஆக, தனித்து நின்று எதிரிகளை துவம்சம் செய்தது நெப்போலியன் படை. இரு பக்கமும் யுத்தம் அனல் பறந்தது.

வாட்டர்லூ யுத்தம் நெப்போலியனின் வீர வரலாற்றில் ஒரு சறுக்குப் புள்ளி. மாவீரனாக, பிரான்சின் பெருந் தலைவனாகக் கருதப்பட்ட நெப்போலியன் போனபார்ட், தன் கனவுகளின் உச்சியில் இருந்து வாட்டர்லூவில் மண்ணில் சரிந்து வீழ்ந்தான்.
தொடர்ந்து 23 ஆண்டுகளாக வெற்றியை மட்டுமே சுவைத்த அந்த மாவீரன் வாட்டர்லூவின் களத்தில், தனது ஆட்சியின் பொற்கோலத்தை இழந்தார். ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்துவதற்கான பிரெஞ்சு முயற்சிகளை முடிவுக்கு கொண்டு வந்து, நெப்போலியனின் ஏகாதிபத்திய சக்தியை நிறைவுக்கு கொண்டு வந்தது வாட்டர்லூ யுத்தம்.
ஒட்டு மொத்த ஐரோப்பாவையும் தன் கைப்பிடிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பேராசை கடைசியில் பெருநட்டமாக மாறி நெப்போலியனின் பரந்து விரிந்து சாம்ராஜ்யத்தின் முடிவுப் புள்ளியானது.
வாட்டர்லூ தோல்வியின் பின் நெப்போலியன் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தப் பட்டதால் கடைசியாக வேறு வழியின்றி பதவியை துறந்தார். நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்த போது பிரிட்டிஷ் படைகளால் பிடிக்கப்பட்டு ஹெலினா எனும் சிறிய தீவில் சிறைப்படுத்தப்பட்டார்.
தன் இறுதிக் காலம் வரை அந்த தீவிலேயே தனிமையில் சிறைவாசம் அனுபவித்த நெப்போலியன் தன் தந்தையைப் போலவே வயிற்று புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார் என்று கூறப்பட்டாலும் மறுபுறம் நெப்போலியன் சிறைபட்டிருந்த புனித ஹெலினா தீவில் இருந்த அவரது அறையின் சுவர், அவரைக் கொலை செய்யும் நோக்கத்துடனேயே விஷம் கலந்த களிமண்ணால் கட்டப்பட்டிருந்தது என்றும், அதை தினமும் அவர் சுவாசித்தால், அந்த நச்சு மெல்ல மெல்ல அவரது உடலில் பரவி இறந்ததாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ நெப்போலியனின் மரணம் இன்று வரை சந்தேகம் நிறைந்த மர்மமாகவே தொடர்கிறது.
எப்படி நெப்போலியனின் வீரமும் விவேகமும் பேரும் வெற்றிகளும் உலகப் பிரசித்தி பெற்றனவோ அதே போலத்தான் நெப்போலியனின் காதலும். தன்னை விட 6 வருடங்கள் வயதில் மூத்த, இரு குழந்தைகளுக்குத் தாயான ஜோசஃப்பைன் என்ற விதவை மாதிடம் காதல் வயப்பட்ட நெப்போலியனின் காதல் கதையும் அவர் சந்தித்த போர்களைப் போல விறுவிறுப்பானது.
காதலித்த பெண்ணையே மணமுடித்துக் கொண்ட நெப்போலியன் தன் மனைவி ஜோசஃப்பைன் மேல் எவ்வளவு பிரியம் வைத்திருந்தார் என்பதற்கான ஒரு சிறிய உதாரணம், போப் பயஸ் VII ஆல் நடத்தப்பட்ட முடிசூட்டு விழா. டிசம்பர் 1804 இல் நோட்ரே டேம் டி பாரிஸில் நடந்த முடிசூட்டு விழாவின் போது நெப்போலியன் முதலில் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டு பின்னர் ஜோசஃப்பைனின் தலையில் கிரீடத்தை வைத்து, தனது ராஜ்ஜியத்தின் பேரரசியாக அவளை அறிவித்தார். அந்தளவுக்கு அவர் அவளை நேசித்தார்.
ஆனாலும் இரண்டு குழந்தைகளுடன் ஒரு வயதான விதவையான ஜோசஃப்பைனை நெப்போலியன் திருமணம் செய்தது நெப்போலியனின் குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் குடும்பத்தின் எதிர்ப்பு ஆரம்பம் முதலே இருந்து வந்தது.
ஜோசஃப்பைன்னை திருமணம் செய்து சரியாக இரண்டு நாட்களில் இத்தாலியில் பிரெஞ்சு இராணுவத்தை வழிநடத்த புறப்பட்டு சென்றுவிட்டார் நெப்போலியன். அந்தப் பிரிவு அவரை காதல் துயரில் வாட்டியது. இந்தப் பிரிவின் போது அவர் அவளுக்கு காதல் பித்து தலைக்கேற எழுதிய பல கடிதங்கள் ஆழ்ந்த அன்பின் தீவிரத்தால் நிரம்பி வழிந்தன. இன்று வரை நெப்போலியன் ஜோசஃப்பைனுக்கு எழுதிய காதல் கடிதங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.
நெப்போலியன் போனபார்ட் மற்றும் அவரது மனைவி ஜோசஃபின் டி பியூஹர்னாய்ஸ் இடையேயான உறவு பல ஆண்டுகளாக ஒரு காவியக் காதலாக பாராட்டப்பட்டது. ஆனால், நெப்போலியனுக்கும் சரி ஜோசஃபினுக்கும் சரி திருமணத்தைத் தாண்டிய உறவுகள் பல இருந்தன.
லெப்டினன்ட் ஹிப்போலிட் சார்லஸ் உட்பட பல காதலர்கள் ஜோசஃப்பைனுக்கு இருந்தனர். லெப்டினன்ட் சார்லஸ் ஜோசஃப்பைனுக்கு எழுதிய காதல் கடிதம் பிரிட்டிஷ்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு நெப்போலியனை பகிரங்கமாக அவமானப்படுத்தும் நோக்கில் பத்திரிகைகளில் பரவலாக பகிரப்பட்டது.
ஜோசபினுக்கும் நெப்போலியனுக்கும் இடையிலான உறவு இந்த சம்பவத்துக்கு பிறகு பழைய மாதிரி இருக்கவில்லை. வெளியான அந்தக் காதல் கடிதங்கள் நெப்போலியன் புகழை மட்டுமல்ல, அவர் ஜோசஃப்பைன் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் சேர்த்து காலி செய்தது.
என்னதான் நெப்போலியன் தன் மனைவியை அத்தனை துரோகத்துக்கு பிறகும் தொடர்ந்து நேசித்தாலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜோசஃப்பைனுக்கு குழந்தை பிறக்க முடியாது என்பது தெரிய வந்த போது விவாகரத்து குறித்து தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினார்.
தனக்குப் பின் இந்த ராஜ்யத்தை கட்டி காப்பதற்கு ஒரு வாரிசு வேண்டும் என்றும், பிரான்சின் நலனுக்காகவும் எனக்கு ஒரு வாரிசை உருவாக்கி தரக்கூடிய ஒரு பெண்ணை நான் கண்டிப்பாக மறுமணம் செய்ய வேண்டும் என்பதை நவம்பர் 1809 இல் ஜோசஃபினைக்கு எடுத்துக் கூறினார் நெப்போலியன். அதிருப்தியும் கோபமும் இருந்தபோதிலும், ஜோசஃப்பைன் வேறு வழியின்றி விவாகரத்துக்கு ஒப்புக்கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆன பிறகு ஆஸ்திரிய இளவரசி மரிய லூயிசாவைத் திருமணம் செய்து கொண்டார் நெப்போலியன். ஆனாலும் அப்போதும் கூட அவரால் அவர் காதல் மனைவி ஜோசப்பைனை மறக்க முடியவில்லை. அவள் மேலிருந்த காதலும் பாசமும் கொஞ்சமும் குறையவே இல்லை. விவாகரத்து பெற்ற பிறகும் கூட ஜோசஃப்பைன்தான் பேரரசி பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காலம் மாறி, காட்சிகள் மாறி, தொடர் தோல்விகளால் துவண்ட நெப்போலியன் பிரான்சை விட்டு நாடு கடத்தப்பட்டிருந்த போது ஜோசஃப்பைன் இறந்த செய்தியைக் கேள்வியுற்றார். செய்தி கேள்விப்பட்டதும் மறு நொடியே அவர் அமைதியாக தனது அறைக்குள் சென்று தன்னைப் பூட்டிக்கொண்டவர் அடுத்த மூன்று நாட்களுக்கு அறையை விட்டு வெளியே வரவே இல்லை. வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி நெப்போலியானைத் தாக்கியது. போரில் தோற்று, ராஜ்ஜியம் இழந்து, புகழ் இழந்து, பொருள் இழந்த போதெல்லாம் அவரைத் தாக்காத துயரம் ஜோசஃப்பைனின் இழப்பில் ஆழமாகத் தாக்கியது. தாங்க முடியாத பிரிவு துயரத்தில் மூழ்கிப்போனார் நெப்போலியன்.

நெப்போலியன் பெரும் தோல்விக்கு ஒரு காரணம் அவரது மனைவி ஜோசஃப்பைனின் துரோகம் என்று கூறப்பட்டாலும், 1821இல் அவரது மரணப் படுக்கையில் நெப்போலியன் உச்சரித்த கடைசிப் பெயர் – ஜோசஃப்பைன்!.