தொடர்கள்
Trending

நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;12 ‘பழைய ஏற்பாடும் பத்துக் கட்டளைகளும்’ – சுமாசினி முத்துசாமி

தொடர் | வாசகசாலை

பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவை ‘வாய்ப்புகளை வாரி வழங்கும் தேசம்’ என்று கூறுவார்கள். ‘நானும், என் சுற்றமும், என் சந்ததியினரும் என் மண்ணில் நிம்மதியாக பிழைக்க வேண்டும்’ என்பதைத் தவிர என்ன பெரிய எதிர்பார்ப்பு ஒருவனுக்கு தன் மண்ணின் மேல் இருக்க முடியும்? இந்த அடிப்படை நம்பிக்கை வாழும் மண்ணின் மேல் ஒரு சமூகத்திற்கே இல்லாமல் போவது போன்ற கொடுமை வேறு எதுவும் இல்லை. “இன்று அகதிகளாக மாறியிருக்கும் அனைவருமே நேற்று வரை நம்மைப் போல் இயல்பாக இருந்தவர்கள்தாம். இன்று இயல்பாக இருக்கும் யார் வேண்டுமானாலும் நாளை அகதிகளாக உருமாறலாம். இது அச்சுறுத்தலோ அக்கறையுடன் கூடிய ஓர் எச்சரிக்கையோ அல்ல, நிதர்சனம்.” என்று திரு.மருதன் அவர்கள் தன் ‘அகதிகள்’ என்னும் புத்தகத்தில் கூறி இருப்பார்.

வாய்ப்புகளை வேண்டி மட்டுமல்லாது, உயிரோடாவது வாழ்ந்து விட வேண்டும் என்ற ஒற்றை உயிர்த் துடிப்பின் வேட்கையோடு பலர் அமெரிக்காவிற்குக் குடியேற வந்த வண்ணம் இருந்தார்கள், இன்னும் வந்துகொண்டே இருக்கிறார்கள்.  1620களிலேயே தன் மதத்தை, தன் மதம் சார்ந்த நம்பிக்கைகளை தன் சொந்த தேசம் பின்பற்ற விடவில்லை என்று இந்த மண்ணிற்குக் குடி வந்தவர்களும் உண்டு. பின்னர் முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் தப்பித்து இந்த நாட்டில் தஞ்சமடைந்தவர்களும் உண்டு.  தன் சொந்த மண்ணில் நடக்கும் போரையோ உள் நாட்டுக் கலவரத்தைத் தவிர்க்கவோ இன்னும் இங்கே பலர் குடியேறுகின்றனர்.  அப்படி இங்கு வந்த பலர் இன்றும் தன் மதக் கோட்பாடுகளை, கலாச்சாரத்தை மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் தான் விரும்பியபடி பின்பற்ற அனைத்து சுதந்திரத்தையும் இந்த நாடும், நியூயார்க் நகரமும் வழங்கி வருகிறது. சில விதிவிலக்கு நிகழ்வுகள் உண்டு. ஆனால் விதிவிலக்குகள் நடைமுறைகளாகக் கண்டிப்பாக இந்த நியூயார்க் நகரத்திற்குள் (இன்னும்) இல்லை என்று நான் நம்புகிறேன்.

உலக அரசியலின் முதல் படி தெரிந்தவர்களுக்குக் கூட அமெரிக்கா இஸ்ரேலின் நட்பு நாடு என்பதும், உலகப்போரின் கொடூரங்களிலிருந்து தப்பிக்கப் பல யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினர் என்பதும் தெரிந்திருக்கும். அமெரிக்கா பல தேசங்களின், பல கலாச்சாரங்களின் பிரதிபலிப்பு. நாம் விரும்பினால், இந்த நாட்டிலிருந்து கொண்டு பல தேசங்களைப் பற்றித் தெரிந்துக்கொள்ள முடியும்.

இரண்டாம் உலகப்போரின் ‘வதை முகாம்கள்’ என்ற உயிர் நடுங்கும் கதைகள் மூலமே முதலில் யூதர்கள் எனக்கு அறிமுகமானார்கள். பின்னர் பாலஸ்தீனமும் அறிமுகம் ஆன பொழுது கருணைக் காற்று எந்த திசையில் அடிக்க வேண்டும் என்று குழப்பியது. நிறைய கேள்விகளையும், விடை தேடும் ஆர்வத்தையும் ‘ஜெருசலேம்’ என்ற  பெயர் சிறு வயதில் விதைத்துக் கொண்டே இருந்தது. பின்னர் திரு. பா ராகவன் அவர்களின்  ‘நிலமெல்லாம் இரத்தம்’, திரு.முகிலின்  ‘யூதர்கள்’ ஆகிய புத்தகங்கள் இவர்களின் மேலும், இந்த நிலத்தின் அரசியலின் மேலும் வெளிச்சத்தைப் பாய்ச்சியது.

மிகப் பிரபல பிம்பமான, ‘யூதர்கள் பெரும் புத்திசாலிகள், பலர் பெரும் பணக்காரர்கள், அனைவரும் மதக்கோட்பாடுகளை பின்பற்றுபவர்கள்’ என்பத்தைத்தான் நானும் நம்பினேன்.  இவர்களைப் பற்றி வரும் ஏதோ ஒரு செய்திக் குறிப்பும் இந்த செயற்கைக் கட்டமைப்பு  பிம்பத்தைப் பெரிதாக்கிக் கொண்டேதான் இருக்கின்றது. ‘மொசாட்’ என்ற பெரும் பெயரின் சாகசக் கதைகள் வேறு ஒரு பக்கம். எத்தனை விதமான சர்ச்சைகளும், கருத்து வேறுபாடுகளும் இருந்தாலும், ஒரு விதத்தில் யூதர்கள் இன்றும் ஒரு பிரமிப்பை உலகத்திற்குக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

அமெரிக்கா வந்த பின்பு எழுத்துக்களாய் மட்டும் அறிமுகமானவர்கள், நிஜத்தில் இரத்தமும் சதையும் உடைய மனிதர்களாகவும் அறிமுகம் ஆனார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் கலாச்சாரமும் சில பழக்க வழக்கங்களும் அறிமுகம் ஆக ஆரம்பித்தது. உலகின் வரலாற்றில் பல திருப்புமுனைகளில் இவர்களைப் பற்றி வாசித்து உள்ளோம். ‘யூதர்கள்’ என்ற வார்த்தையே ஆர்வத்தைக் கிளறிக்கொண்டுதான் இருந்தது. இதனால் இவர்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்துக் கொண்டேதான் இருக்கின்றது.

இங்கு பலசரக்குக் கடைகளில் ‘கோஷர்’ (kosher) உணவு என்று தனியாக கிடைக்கும். கோஷர் என்பது யூத உணவு முறை சட்டங்களுக்கேற்ப தயார் செய்யப்படுவது.  ஒரு வித சிக்கன் சூப், அழகிய சடைப் பின்னல்கள் போல்  இருக்கும் தேன் சேர்த்துச் செய்யப்பட்ட செல்லா பிரெட்கள் (Challah braided breads) , யூத பேக்கரிக்களில் விற்கப்படும் விதவிதமான ஆப்பிள் கேக்குகள், குகேள் (kugel -உருளையும், நூடுல்ஸும் சேர்த்துச் செய்யப்படுவது- கொஞ்சம் இனிப்பாக இருக்கும்) என்று இவர்கள் உணவு  முறையே முதலில் தெரிய வந்தது.

நாங்கள் இருக்கும் இடத்தில் சில யூத பண்டிகைகளுக்குப் பள்ளிகளில் விடுமுறை உண்டு. நாடு முழுவதிலும் கிடையாது. யூதர்கள் அதிகமாக இருக்கும் சில மாகாணங்களில் மட்டும் இந்த விடுமுறை உண்டு. இதன் மூலம்  இவர்களது பண்டிகைகளும் அதன் தாத்பரியங்களும் கொஞ்சம் அறிமுகம் ஆனது.

பிரமாண்டங்களின் மூலம் மட்டுமே இவர்களை அறிந்து வந்திருந்த நிலையில் ஒரு ‘ஆச்சரியம்’ போல் இவர்களின் இன்னொரு பாகமும் தெரிய வந்தது. நியூயார்க் நகரத்தில் வித்தியாச உடை அணிந்திருந்த சில ஆண்களைப் பார்க்க நேர்ந்தது. கருப்பு வெள்ளை நீளமான கோட் சூட் உடையில், கருப்பு வெல்வெட் தொப்பி அணிந்து, தாடி வைத்து, காதுகளுக்குப் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் நீளமாய் முடி வளர்த்து அதைச் சுருட்டியும் விட்டிருப்பர். இந்த நகரத்திற்கு வரும் எத்தனையோ கோடி மக்களில் யாரோ ஒருவர் என்று தோன்றியது. பின்னர் மீண்டும் மீண்டும் அவர்களைப் பார்க்கும் பொழுது, ‘யார் இவர்கள்’ என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வந்தது. கூகிள் ஆண்டவர் வழக்கம் போல் பதிலுரைத்தார்.

யூதர்களுள் ஒரு ‘மிகத் தீவிர’ மரபுவழி (ultra-orthodox), மதம் சார்ந்த பழக்கங்களை இந்த நூற்றாண்டிலும் பின்பற்றும் மக்கள் இவர்கள். அவர்களின் மத நூலான ‘தோரா’ சொல்லும் வழியில் யூத மத கோட்பாடுகளுக்கு உட்பட்டு மட்டுமே வாழ்பவர்கள். ‘இட்டிஷ்’ என்னும் மொழி பேசுபவர்கள். இட்டிஷ் என்பது ஜெர்மானிய பேச்சு வழக்கில் ஹீப்ரு சொற்கள் கொண்ட மொழி. இவர்களின் வாழ்க்கை முறையில் நிறைய, மிகவும் நிறைய சட்ட திட்டங்கள்கள் உள்ளன.

வெளியிலிருந்து பார்க்கும் பொழுது ‘யூதர்கள்’ என்று நமக்கு ‘ஒன்றாய்’ தெரிகிறது. ஆனால் யூதர்களுக்குள்ளும் உட்பிரிவுகள், கிளை பிரிவுகள் என்று பல உண்டு. பெரும்பாலோனோர் மதக் கோட்பாடுகளோடு கடவுளை நம்பினாலும், தன் மதத்திற்குள்ளேயே இருக்கும் அல்ட்ரா- ஆர்த்தோடாக்ஸ் பிரிவை முற்றிலும் ஏற்றுக்கொள்ளாவதில்லை. பலவற்றில் இவர்களுக்குள் வேறுபாடும் கருத்து வேற்றுமையும் உள்ளன. பொதுச் சமூக யூதர்கள் ‘டெமோகிராட்டிக் ‘ கட்சியையும், மரபுவழி பழமைவாத யூதர்கள் ‘ரிபப்ளிக்கன்’ கட்சியையும் பெரும்பான்மையாக ஆதரிக்கின்றனர்.

அல்ட்ரா- ஆர்த்தோடாக்ஸ் பிரிவில் ஸ்மார்ட் போன் வைத்துக்கொள்ளத் தடை. இணையம் உபயோகிக்கத் தடை. அவர்களுக்கு மட்டுமேயான தனி பள்ளி. அங்கு அடிப்படை ஆங்கிலம், அடிப்படை கணிதம் மற்றும் கொஞ்சம் அறிவியல் உண்டு. முழுவதும் தோராவை மட்டுமே பள்ளிகளில் கற்பிப்பர். உயர் படிப்பு கிடையாது. குழந்தைகளுக்கான காமிக் புத்தகங்களில் மத குருவான ‘ராபைகள்’ தான் சூப்பர் ஹீரோக்கள். இதைத் தவிர மத நம்பிக்கையை ஊட்டும் புத்தகங்கள் மட்டும்தான் இங்கு உண்டு.

பெண்கள் பாண்ட் அணியத் தடை. திருமணமான பெண்ணின் முடி பழக்கமில்லாத ஆண்களுக்கு முன் வெளியே தெரியக்கூடாது. திருமணத்திற்கு முன் பெண்ணிற்கு மொட்டை போட்டு அதற்குப் பின் ‘விக்’ வைத்துக்கொள்வர், இல்லையென்றால் முடியை ஸ்கார்ஃப் வைத்துக் கட்டி மூடிக் கொள்வர்.   பெண்கள் குழந்தைகளை வளர்க்க, வீட்டு வேலைகளை செய்ய மட்டுமே பழக்கப்படுத்தப் படுகின்றனர். இளவயதிலேயே திருமணம். அனைத்து சட்டங்களும், நடைமுறை நிகழ்வுகளும் ராபை அவர்களாலேயே நிர்ணயம் செய்யப்படும். நியூயார்க் நகரம் போன்ற ஒரு ‘அல்ட்ரா’ மாடர்ன் நகரத்தில், இவர்களைப் பற்றிய அறிமுகம் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இந்த ஆச்சரியம் மேலும் இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளத் தூண்டியது. (வெகு)சில நன்கு உரையாடும் யூத நண்பர்கள் பணியிடத்திலிருந்தாலும், இங்கு நான் எழுதும் அனைத்தும் அவர்களின் வாய்வழி செய்திகள் மட்டுமே கிடையாது. சில நாளிதழ் செய்திகள், அதற்குப் பின் இவர்களைப் பற்றிய தேடல் என்று கொஞ்சம் கொஞ்சமாக நான் வியந்து தெரிந்து கொண்ட விஷயங்கள்தான். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளதுதானே! இவர்களின் பழக்க வழக்கங்களின் அடிப்படைக் கொள்கைகளை விளக்கி இவர்கள் தரப்பிலிருந்து பல தகவல்கள் இணையத்தில் உள்ளன. அதற்கு முற்றிலும் எதிர்ப்பதமாக இவர்களின் முறை பழமைவாதம், பெண் அடிமைத்தனம்  என்று லௌகிக கோட்பாடு கொண்டவர்கள் வாதம் செய்துகொண்டே இருக்கின்றனர்.

தோராவில் மனிதர்கள் பல்கி, பெருகி வாழ வேண்டும் என்ற கட்டளை உள்ளது என்பதினால் தாங்கள் அதிகம் குழந்தைகள் பெற்றுக்கொள்வதாக இவர்கள் கூறுகிறார்கள். பெண்கள், பிள்ளை பெரும் மெஷின் அல்ல என்று இதை மற்றவர்கள் குறை கூறுகிறார்கள். பத்து, பன்னிரண்டு குழந்தைகள் கூட ஒரு குடும்பத்தில் இங்கு உண்டு. திருமணம் ஆகும் வரை உடல் இச்சை ஆசைகள் எதுவாயினும் அது பெரும் பாவச் சிந்தனை,  பாவச் செயல். திருமணம் என்பது சந்ததியரைப் பெருக்கிக் கொள்ள மட்டுமே என்று நம்பப்படுகிறது. ஒரு ஆண், கடவுளின் மேலும் மனைவியின் மேலும் சேர்த்து அன்பு செலுத்த முடியாது என்பதினால் இயல்பான ஆண், பெண் திருமண உறவிலும் நிறைய சட்ட திட்டங்கள் உண்டு. மதத்தின் வழி வாழ்வது மட்டுமே இவர்களின் கோட்பாடு. தோராவின் கட்டளைகள் மதச்சார்பற்ற சமுதாயத்துடன் (secular or  outside world) பெரும்பாலும் பொருந்தாது என்பதை அவர்கள் முழுவதும் நம்புகிறார்கள்.

குடும்ப வன்முறை அதிகமாக உள்ளது, குழந்தைகள் துன்புறுத்தப்படுகின்றனர், தவறான வழிகளில் கையாளப்படுகின்றனர் என்பது இந்த சமூகத்தின் மேல் உள்ள மிகப் பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் அனைவரும் இவர்களைப் போற்றுவது ஒரு விஷயத்திற்காக. இவர்களிடையே இருக்கும் மிகப் பெரிய பலம்- அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை. அவர்கள் வாழும் இடங்களில் கூட்டுச் சமூகமாக வாழ்கிறார்கள். ஒருவருக்கு உடல் நலக்குறைவு இருந்தால் கூட மற்றவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். அதை விடுங்கள், ஒரு குடும்பத்தின் மேலோ, தனி நபரின் மேலோ  கோர்ட்டில் வழக்கு நடந்தால் கூட மொத்த சமூகமும் பணம் போட்டு அந்த வழக்கை நடத்துகின்றனர்.  இந்த சமூகத்தை விட்டு எவரேனும் வெளியேற வேண்டும் என்று நினைத்தால், மொத்த சமூகமும் வெளியேற நினைப்பவரை ஒதுக்கி வைத்து விடுகிறது. மொத்தத்தில், அவர்களின் நம்பிக்கையை ஆதரிப்பவரை  அரவணைத்துச் செல்கின்றனர். தங்களுள் ஒருவராக வளர்ந்த எவரேனும் கேள்வி கேட்டால் அவர்களை மீட்டு கொண்டுவர சாம, தான, பேத, தண்ட என்று அனைத்து முறைகளிலும் முயல்கின்றனர்.

பல ஊடங்கங்களும், பல சமூக ஆராய்ச்சி நிறுவனங்களும் இவர்களின் வாழ்க்கை முறையை, அதன் தாக்கத்தைப் பல விதங்களில் ஆராய்ந்து ஆவணப்படுத்தி வருகின்றனர். இவர்களிலிருந்து கொஞ்சம் ‘மாடர்ன்’ ஆகிய சிலர், ‘மாடர்ன் ஆர்த்தோடாக்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றனர். பழக்கவழக்கங்களில் பல ஒன்றினாலும், அவர்கள் பொதுச் சமூகத்தின் கல்வி முறையை ஏற்றுக்கொள்கிறார்கள். அல்ட்ரா ஆர்த்தோடாக்ஸ் முறையில் இருக்கும் பெரும் பின்னடைவு என்பது குழந்தைகள் உலக விஷயங்கள் தெரியாமல் வளர்வது. அதனால் இந்த முறையை விட்டு அவர்கள் வெளியே வந்தாலும் வாழ வழி எளிதில் அமைவதில்லை.

இந்த கொரோனா நோய்த் தொற்று காலத்தில் நியூயார்க் நகரின் இயல்பு எல்லா நிலைகளிலும் மாறிவிட்டது.  நகர் முழுவதும் கூட்டம் கூடுவதற்கு, வழிபாட்டுத் தலங்களுக்கு, கடைகள், நிறுவனங்கள் நடத்துவதற்கு என்று பல கட்டுப்பாடுகளை நகர நிர்வாகம் விதித்திருந்தது. இவற்றால் இந்த சமூகம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.  முதலில் பெரிய குடும்பங்கள் சிறிய வீடுகளில் நாள் முழுவதும், இணைய டிவி வசதி இல்லாமல் அடைப்பட்டு இருக்கின்றனர். ஒரு நாளுக்கு மூன்று முறை, ஆண்கள் குழுவாகச் சேர்ந்து செய்யும் அவர்களின் வழிபாட்டு முறை தடைப்பட்டு விட்டது. ‘யூதர்கள் அவர்களின் மதத்தைத் தொடர முடியாது’ என்ற வரலாற்றின் ரண சுவடுகள் வேறு அவர்களை என்றும் அழுத்தி வருகிறது.  இதனால், இது நோய்த் தடுப்பிற்காக  மட்டுமே எடுக்கப்பட்ட முடிவு என்று ஊரடங்கு  ஆரம்பித்தவுடன் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவை எல்லாம் சேர்ந்து, ஏப்ரல், மே மாதங்களில் நியூயார்க் நகரின் ப்ரூக்லின் பகுதி மிக அதிக பாதிப்பைச் சந்தித்தது. நாளிதழ்களில் ‘அல்ட்ரா ஆர்த்தோடாக்ஸ்’ மக்கள் ஊரடங்கை மதிக்கவில்லை என்று கட்டம் கட்டி எழுதிக்கொண்டே இருந்தனர். இது கண்டிப்பாக மேலும் இவர்களைக் காயப்படுத்தி விட்டது.  பொதுவெளியில் அவர்கள் இந்த ஊரடங்கை எதிர்த்துப் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

‘மிக்வாஹ்'(Mikvah) என்று ஒரு சடங்கு இவர்களிடையே உண்டு. திருமணமான பெண்கள் தங்கள் மாத சுழற்சி கழிந்து ஏழு நாட்களுக்கு பின் தங்களை புனிதப் படுத்திக்கொள்வதற்காக(!) செய்யும் சடங்கு இது. ‘புனித குளங்கள்’ என்று அழைக்கப்படும் (மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான்) இடங்களுக்குச் செல்வர். ஒவ்வொரு மாதமும் அங்கு அந்த தண்ணீரில் மூழ்கி எழுந்த பின்தான் அவர்களால் தங்கள் கணவரோடு இயல்பான திருமண வாழ்க்கை வாழ முடியும். ஒவ்வொரு பெண்ணாக  தனியாகத்தான் இந்தக் குளத்தில் மூழ்கி வெளியே வருவார்கள். அப்படி என்றாலும் ஒரே தண்ணீர், தொடும் இடங்கள் எல்லாம் ஒன்று என்பதினால் நோய் பரவ வாய்ப்புகள் உண்டு.  இதனால் நகர நிர்வாகம் மூட உத்தரவிட்டு விட்டது. இது இவர்களின் வாழ்க்கை முறையை இன்னும் அதிகமாகக் காயப்படுத்தி விட்டது.

இவர்களைப் பற்றி முன்பே பேசி இருந்ததினால் நண்பர் ஒருவர் நெட்பிலிக்ஸ்ஸில்  ‘unorthodox ‘ என்ற தொடரைப் பரிந்துரை செய்திருந்தார். உடனே பார்க்க முடியவில்லை. ஆனால் சில மாதங்களுக்குப் பின்,  அந்த சிறு தொடர் எம்மி விருது பரிந்துரைப் பட்டியலில் வந்த பின்புதான் பார்த்தேன். கொஞ்சம் மனதை அழுத்தும் தொடர். முடிந்தால் பாருங்கள்- அதோடு சேர்த்து, ‘Making unorthodox’ம்  பாருங்கள். நெட்பிலிக்ஸ் இன்னும் இரண்டு பரிந்துரைகள் அதுவே செய்தது- ‘One of us’ என்னும் டாக்குமெண்டரி, அப்புறம் ‘Shtisel’ என்னும் தொடர்.

மதம், மனிதனைச் சீர் படுத்த தேவை என்ற எண்ண உருவில் உருவாகியது, சீர் குலைக்க அல்ல. அண்ட ரகசியத்தின் அற்ப அணு மனித இனம். மதத்தை வளர்க்கப் பல நேரங்களில் மனிதத்தைக் கொன்று கொண்டிருக்கிறோமோ என்ற கேள்வி மனதைக் குடைந்துக்கொண்டே இருக்கிறது.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button