
இந்த வாரம் நாம் உரையாடுவதற்காக வேறு ஒரு விஷயத்தைத் தேர்வு செய்து வைத்திருந்தேன். ஆனால் இங்கே வெள்ளி மாலை வந்த ஒரு செய்தி அதை மாற்றிப் போட்டு அவசரமாக இந்தப் பதிவை எழுத வைத்துவிட்டது. அது, ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க் (Justice Ruth Bader Ginsburg) அவர்களின் மரணச் செய்தி. அமெரிக்காவில் பாலின சமத்துவத்தின் சாம்பியன் என்று இவர் அழைக்கப்படுகிறார். அவரின் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி கடந்த நான்கு ஆண்டுகளாகவே, அரசியல் நோக்கத்தோடு ‘திண்ணை எப்ப காலியாகும்’ என்றே ஆளும் வர்க்கத்தினரால் பார்க்கப்படுகின்றது என்று பல ஊடகங்களும் பலவிதங்களில் செய்தி வெளியிட்டுவிட்டன. அமெரிக்காவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யப் பரிந்துரைப்பது அமெரிக்க ஜனாதிபதி. எனவே இந்த நியமனங்களில் அரசியல் தலையீடு உள்ளதாகவும், நீதிபதிகளின் மேல் கொஞ்சம் அரசியல் சாயமும் பூசி இங்கிருக்கும் பத்து வயதுக் குழந்தை கூட சொல்லிவிடுகிறது. ஆனால் ஜஸ்டிஸ் கின்ஸ்பர்க் இவற்றுக்குக் கொஞ்சம் அப்பாற்பட்டு தன் செயல் வழி சாதனைகள் மூலம் பெயர் வாங்கி உள்ளார். இவரின் வாழ்நாளிலேயே, இவரைப் பற்றிய பயோ-பிக் (வாழ்க்கை வரலாற்றுப் படம்) ‘On the basis of Sex’ என்று வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் மிகசிறந்த முன்னோடிகளில் ஜஸ்டிஸ் கின்ஸ்பர்க் அவர்களும் ஒருவர்.
தேர்தல் முடியும் வரை தான் இந்தப் பதவியிலிருந்து விட வேண்டும் என்று விரும்புவதாக தன் பேத்தியிடம் மிக அழுத்தமாக அவர் கூறியது இங்கு இப்பொழுது ட்ரெண்ட் ஆகி பெரிய அரசியல் அலை அடித்து வருகிறது. அதாவது, இவர் உடல் நலக் குறைவினாலோ, வேறு ஏதோ காரணங்களினாலோ பதவி விலகினால் அந்த நீதிபதி இருக்கையைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு தற்போதைய ஜனாதிபதியிடம் சென்று விடும். தேர்தல் என்றால் இந்தியாவோ, அமெரிக்காவோ எல்லாம் அரசியல் தானே.
இவரின் செல்லப் பெயர் கிகி. குழந்தையாக இருக்கும்பொழுது அவர் காலை உதைத்துக் கொண்டே இருந்தாராம். kicking baby என்பது கிகி என்று ஆனது. பின்னாளில், அவர் பழமை மனப்பான்மைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும், பெண்களின் மேல் சுமத்தப்பட்ட சமூக அடுக்குகளையும், ஆணாதிக்கத்தையும் அடி மேல் அடி வைத்து உதைத்து எறிந்து அமெரிக்கப் பெண்களின் எழுச்சி நாயகி ஆனார். ஐந்தடிக்கு கொஞ்சம் அதிகம்தான் அவரின் உயரம். ஆனால் அமெரிக்கத் தலைநகரில் அனைவரையும் பந்தாடும் சக்தியும், தன் கொள்கைகளின் துணையோடு எவரும் நிமிர்ந்து பார்க்கும் உயரத்திலும் மிகக் கம்பீரமாக தன் ராஜ வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளார் கின்ஸ்பர்க்.
1933ம் ஆண்டு பிறந்த இவர், தன் அறுபதாவது வயதில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் அவர்களால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டார். தன 87வது வயதில், செப்டம்பர் 18, 2020 அன்று இயற்கை எய்தினார். இங்கு உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் உண்டு. புலம் பெயர்ந்து வந்து சராசரியாக அரசியல் நிகழ்வுகளை கண்ணோட்டமிடும் நம்மைப் போன்றோருக்கு, நீதிபதிகள் பற்றி எல்லாம் அவ்வளவாகத் தெரிய வராது. அப்படி இருந்தும், ஏன் நம் கிகி பாட்டி இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறார்?
இங்கு நாளிதழ் வாசிக்க ஆரம்பித்த நாட்களில் இந்த ஒன்பது நீதிபதிகளின் கருப்பு வெள்ளைப் படம் ஒன்றைப் பார்த்தேன். இருப்பதிலேயே குட்டி உருவமாய், கொஞ்சம் அமெரிக்க வெள்ளை பாட்டிகளைப் போல் அல்லாத இவரின் உருவம் மனதில் பதிந்தது. இவர் யார் என்று கூகுளை நோண்டினால் ஒரு புரட்சி வரலாறு கண்முன் விரிந்தது. அமெரிக்க அரசியலமைப்பில் பெண்களின் உரிமைகள் வெளிப்படையாக அங்கீகரிக்கப்படவில்லை. சமத்துவம் பேசாத ஒவ்வொரு சட்டங்களையும் எதிர்த்து வாதாடி, அவற்றை மாற்றத் துணை புரிந்து இங்கு இப்பொழுதுள்ள பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மிகப்பெரிய நிலையான அடித்தளம் அமைத்தவர் இவர். சமூக மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவற்றை நிலை நிறுத்துவதற்குச் சட்டங்களின் தேவை மிக முக்கியம். சமூக மாற்றங்களை வழி நடத்துவதற்கும் சட்டங்கள் மிக முக்கியம். அண்ணல் அம்பேத்கர் இதை நம் இந்தியச் சமூகத்திற்கு உணர்த்தியதைப் போல், எல்லாவற்றிலும் சுதந்திரம் என்ற கொள்கையை முன்வைத்து கட்டமைக்கப்பட்ட வளர்ந்த நாடான அமெரிக்காவின் தலையைத் தட்டி பல சட்டத் திருத்தங்களின் தேவையை உணர்த்தியவர் இவர்.
‘கெட்ட பைய்யன் சார் இந்த காளி’, என்பது போல், இவரைப் பற்றிய பிம்பம் இங்கு ‘Notorious RBG’. நோட்டோரியஸ் என்பது பழமைவாதிகளுக்கு, திறமைக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு , ’நான் மேல் – நீ கீழ்’ என்று சொல்பவர்களுக்கு… இவரின் முகம், இங்கு பாப் ஐகான், ஒத்துழையாமையின் குறியீடு, மில்லேனியல்கள் கொண்டாடும் தலைவர், சட்ட மேதைகளுக்கு எல்லாம் மேதை! ‘Who is Ruth Bader Ginsburg’ என்ற குழந்தைகளுக்கான அறிமுகப் புத்தகத்தில் ஆரம்பித்து ‘Notorious RGB ‘ என்று சில ஆண்டுகள் முன்பு வந்த புத்தகம் வரை நீண்ட புத்தகப் பட்டியலோடு இவரை இந்த சமூகம் கொண்டாடுகிறது. இவர் முகம் பதித்த டீ-ஷர்ட்கள் அணிந்து இருந்தவர்களை இங்கு நடந்த போராட்டங்களில் பார்க்க முடிந்தது. எண்பத்தி ஐந்து வயதில் ஒரு மணி நேர உடற்பயிற்சி, சனிக்கிழமை சாயந்திர டிவி ஷோக்கள் என்று கடந்த சில ஆண்டுகளில் இவர் புகழ் டாப் கியர். காதில் பெரிய கல் வைத்த கம்மல் போட்டால் கூட ‘என்ன, கின்ஸ்பர்க் ஸ்டைலா’ என்று கேட்கும் அளவிற்கு இவர் ஆளுமையின் குறியீடு இங்கு மிக அழுத்தமாக உள்ளது.
இவர் எடுத்து வாதாடிய வழக்குகளின் வரிசையை ஆராய்ந்து அவரின் ராஜ தந்திரத்தையும், ‘End in mind’ என்று அவர் கடந்து வந்த பாதையையும் இங்கு மேலாண்மை வகுப்புகளில் பாடம் எடுக்க முடியும். மொத்த சமூகத்தையும் ஒரு படி முன்னேற்றிச் செல்ல, அவர் தன் கற்பாறையைச் சீர்மைப்படுத்தி சட்டப் போராட்டங்களின் நடுவில் நாட்களை நகர்த்தினார்.
1956ல் உலகப் புகழ் பெற்ற ‘ஹார்வர்ட்’ சட்டக் கல்லூரியில் 500 மாணவர்களுக்கு நடுவில், ஒன்பதே ஒன்பது மாணவிகளில் ஒருவராகச் சேர்ந்தார் நம் கிகி. அப்பொழுது அக்கல்லூரி முதல்வர் அந்த ஒன்பது பெண்களிடமும் கேட்டது ‘ஏதோ ஒரு ஆணுக்குக் கிடைத்திருக்க வேண்டிய சீட்டில் பெண்களாகிய நீங்கள் ஏன் சேர்ந்துள்ளீர்கள்?’ என்ற கேள்வியைத்தான். அந்தக் கேள்வியையும், அதே போல் பல கேள்விகளையும், இளக்காரப் பார்வைகளையும் தாண்டிதான் பெண் சமூகம் இன்று இந்த இடத்திலாவது நிற்கின்றனர்.
நிவேதிதா லூயிஸ் அவர்கள் ‘முதல் பெண்கள்’ என்று நம் வரலாற்றின் தடத்திலிருந்து முதல் பொறியாளர், முதல் சட்டமன்றப் பிரதிநிதி, முதல் டாக்டர், முதல் நட்டுவனார் வரை பலரைப் பற்றி ஆவணப்படுத்தி உள்ளார். (மிகச் சிறந்த முயற்சி மற்றும் நாம் கடந்து வந்த பாதையை தெரிந்து, புரிந்து கொள்ள உதவும் கட்டுரைகள்…) அமெரிக்காவில் முற்போக்கு என்று நாம் நம்பும், மிகப் படித்த ஹார்வர்ட் சமூகப் பின்னணியிலேயே ‘ஆணுக்கான இடத்தை பெண் பறித்துவிட்டாள்’ என்ற எண்ணவோட்டம் என்றால், நம் ’முதல் பெண்கள்’ எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்? இவர்களின் ஒவ்வொரு செயலும் அவர்களின் தன்னளவு முன்னெடுப்புகள் மட்டும் இல்லை, சமூகத் துலக்கத்தின் மைல் கற்கள். பொதுமைப்படுத்தி பார்த்தால் வளர்ந்த சமூகத்தை விடவும், வளரும் சமூகத்தின் பெண்கள் மிகப் பெரிய போராளிகள். அவர்களுக்கு உறுதுணையாக இன்னும் கொஞ்சம் அதிகமாக குடும்பமும், நம் சமூக அமைப்பும் துணை நின்று விட்டால் நிஜமாகவே நம் குழந்தைகளுக்கும், பேரன் பேத்திகளுக்கும் வானமே எல்லை.
குடும்பத்தின் துணை என்று பேசும் பொழுது கின்ஸ்பர்க் அவர்களின் கணவரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். ‘தான் பெண்ணாய் இருந்தும் மூளை என்று ஒன்று தனக்கு இருப்பதைப் புரிந்து கொண்டவர்’ என்று மார்டினைப் பற்றி மிகுந்த காதலோடு வெகு சமீபத்தில் வந்த நேர்காணலில் கூட நினைவு கூர்ந்துள்ளார் நம் கதாநாயகி. இந்த பயோ-பிக் படத்தில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதுபோல், சமைப்பது போல், இவரின் விருப்பங்களுக்கு ஊன்றுகோலாய் உத்வேகப்படுத்துபவராக என்று மிக அழகாக ஜென்டில்மேனாக மிஸ்டர் கின்ஸ்பர்க் சித்தரிக்கப்பட்டுள்ளார். சரி, அந்தப் படம் பார்க்கும்பொழுது ஆர்மி ஹாம்மரையும் (கின்ஸ்பர்கின் கணவராக நடித்தவர்) கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்.
பள்ளியில் படிக்கும்பொழுது ஆங்கில நாவல்களோ, புத்தகங்களோ அதிகமாகக் கிடைக்காது. அப்பொழுது மனதில் இருந்த பிம்பம், அமெரிக்க இங்கிலாந்து சமூகங்களில் ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான். கலாச்சாரப் படிமங்களால் பெண்ணை அவர்கள் கட்டுப்படுத்துவது இல்லை என்றும், பெண் தான் நினைத்த படிப்பைப் படித்து, நினைத்த ஆண் மகனைத் திருமணம் புரியலாம் என்றும் வானம் மட்டுமே அவர்களின் எல்லை என்றும் தீர்மானமாக நம்பினேன். ஆப்பிரிக்க ஆசியக் கண்டத்தில் பெண்கள் பிறப்பது தங்கள் சாபங்களைக் கழித்துக் கொள்ள மட்டுமே என்பது என் ஏழு ஜென்மங்களின் நம்பிக்கையால் வந்த மனதின் கணக்கு வேறு.
பின்னர், கொஞ்சம் மனதும் மூளையும் தெளிந்தபொழுது, உலகம் முழுவதும் ‘பெண்’ எனப்பட்டவளே சாபக்கணக்கு என்பதாகத்தான் நம்ப வைக்கப்படுகிறாள் எனப் புரிந்தது. இதற்குப் பின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ வாசித்த பிறகுதான், குற்றேவல் செய்வதற்காகவே, நிபந்தனை அற்ற அடிமைகளாகப் பெண் சமூகம் தலைமுறை தலைமுறையாக வளர்த்தெடுக்கப்படுகின்றனர் என்பது புரிந்தது. இதற்காகவே பெண்கள் லாயக்கற்ற அழகுப் பதுமைகள் போல் வாழப் பழக்கப்படுகின்றனர். இது உலகம் முழுவதும் ஒன்றாக இருந்து, இன்று மாற எத்தனித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எவ்வளவு பேர் முயன்றாலும், மிகக் கீழ்த்தரமான திட்டும் வார்த்தைகளில் ‘பெண் பால்’ சொற்கள் உள்ளவரை இது மாறவே செய்யாது என்பதை இந்த வளர்ந்த நாட்டுக்கு வந்த பின் இப்பொழுதும் நான் முழுமையாக நம்புகிறேன்.
நம்மைச் சுற்றி எப்பொழுதும் ஆண் என்பவனின் கடமைகள் இவைதான், பெண் என்பவளின் கடமைகள் இவைதான் என்று எல்லைக் கோடுகள் வகுத்துச் செயல்பட்டுக்கொண்டே இருந்தால் அந்த ‘முதல்’ கேள்விகள் வர வாய்ப்பேயில்லை. அந்த முதல் கேள்விகள் வருவதும், அவற்றை ஊக்குவிப்பதும்தான் மிக முக்கியம். பணியிடங்களில் கேள்வி கேட்பது கூட நம் தமிழ்ச் சூழலில் கொஞ்சம் தொலைவாகத்தான் இன்றும் உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விகள் எழுவதினால்தான் சமூகமாக நாம் முன்னேறிக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கேள்விகள் ஆண்களிடமிருந்து வந்தால் அது அறிவுஜீவித்தனமாகவும், பெண்களிடமிருந்து வந்தால் திமிர்த்தனமாகவும் நெல்லை முதல் நியூயார்க் வரை நீக்கமற பார்க்கப்படுகின்றது.
கின்ஸ்பர்க்கின் பயோ- பிக் படத்தைப் பார்க்கும்பொழுது, சில விஷயங்கள் கொஞ்சம் தமிழக பெண் விடுதலை, சமத்துவப் போராட்ட வரலாற்றை மனதில் கொண்டு வந்தது. 1970களில் கின்ஸ்பர்க் அவர்கள் பெண் சமத்துவத்திற்கான சட்டப் போராட்டத்தை முன் எடுக்கிறார். இந்தக் கருத்துக்களின் கரு எல்லாம் 1930களிலேயே நம் பெரியார் அவர்களால் அயராது முன் வைக்கப்பட்டவை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு திறன்களை கடவுள் கொடுக்கவில்லை என்பதை ‘அறிவார்ந்த’ மக்கள் ஒப்புக்கொள்வார்கள் என்பதைப் பெரியார் என்றோ முன்வைத்துவிட்டார். கடந்த 50 ஆண்டுகளில் இதைப் புரிந்து கொண்டு அமெரிக்க சமுதாயம் இந்த அளவிற்கு முன்னேற முடியும் என்றால், நூறு ஆண்டுகள் முன்பே இந்தக் கருத்து நம் மூளைகளிலும் ஏறி இருந்தால், நாம் எந்த அளவிற்கு முன்னேறி இருக்க முடியும்? கிகி பாட்டி சொன்னதைத் தட்டாமல் இந்த சமூகம் கேட்கின்றது. பெரியார் தாத்தா சொன்னதை நாம் கேட்காமல் விட்டு விட்டோம். அவரின் கைத்தடியைப் பற்றிக்கொண்டு உலகிற்கு வழி சொல்லியிருக்கக் கூடிய வாய்ப்பை நாம் நழுவ விட்டுவிட்டோம்.
முன்பை விட பெரியாரை மிக ஆழமாக வாசித்து, தெளிவாகப் புரிந்து, அவரின் பல வழிகாட்டுதல்களைச் செயல்முறைப்படுத்த வேண்டிய மிக முக்கியமான காலக்கட்டத்தில் நாம் இன்று இருக்கிறோம். பெரியாரின் 142வது பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்தப் பொழுதிலாவது நாம் அவர் சொன்னதாகப் பரப்பப்படும் ஒன்று, இரண்டு வாக்கியங்களோடு அவரைக் கடந்து விடாமல், நம் அறிவிற்குச் சரி/ தவறு என்று தோன்றும் அளவிற்கு அவரை இன்னும் உள்வாங்க முயற்சி செய்வோம்.
சமூகத்தின் சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் இனி டீ-ஷர்ட் பிரிண்ட்களாக ‘மட்டும்’ மாறி விடாமல் காப்பது நம் ஆகப் பெரிய கடமை! அந்த வகையில் நான் ‘சூப்பர் லேடி’ என்று கருதும் RBG தப்பிவிட்டார்…