
1
கம்பளிக்கு வெளியே எட்டிப் பார்த்த கால் சுண்டு விரலைக் குளிர்
தீண்டியது. அரவம் ஒன்று தீண்டியதைப் போல ஷ்ஷ்….என்றவாறு தன் கம்பளியை இன்னும் இழுத்துப் போர்த்தி கால்களாலேயே கச்சிதமாகத் தன்னைச் சுற்றிக்கொண்டு முக்காடிட்டுக் கொள்கிறாள். உறை சுற்றப்பட்ட சாக்லேட் போல்
இருக்கிறது அவளைப் பார்க்க. இரண்டு முனைகளும் திருகப்பட்ட சாக்லேட் உறை
போலவே அவள் தலைமாட்டிலும், கால்மாட்டிலும் கம்பளி அழகாகத்
திருகப்பட்டிருக்கிறது. உறக்கம் என்பதே ஒரு இனிப்புப் பண்டம்தான். ஆனால்
அந்த இனிப்பின் சுவை பலருக்கும் பிடிபடாததாய் இருக்கின்றது. சுவை
பிடிபட்டவர்கள் அதன் மேல் வெகு பிரேமையாய் இருக்கிறார்கள். அதற்கு
உண்மையாய் இருக்கிறார்கள். ஒருதலைக் காதலர்களைப் போல் எல்லாவற்றையும் ரசிக்கிறார்கள்.
கம்பளிக்குள் நிரம்பியிருக்கிற கதகதப்பு அந்தக் குளிருக்குப்
போதாததாய் இருக்கிறது. குளிரில் எழுந்து போகச் சோம்பேறித்தனப்பட்டுக்
கிடந்ததால் அடக்கப்பட்ட சிறுநீர் தூக்கத்தைத் தொடர
விடவில்லை. தொலைக்காட்சியில் காலைச் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும் ஒலி கேட்கிறது. மெதுவாக முக்காட்டை விலக்கி மணி பார்த்தாள். 7.40 ஆகியிருந்தது. அறைக்கு வெளியே கணவரின் கடுமையேறிய குரல்….
“என்னதான் தூக்கமோ 8 மணி
வரைக்கும்? அதெப்படித்தான் முடியுது?” என்றது.
வழக்கமான அர்ச்சனை தான்.. பழகிப் போய் விட்ட விடை வேண்டாத கேள்விக்கு என்ன பதில் சொல்ல?
கழிவறைக்குப் போய்விட்டு வந்து தூக்கத்தைத் தொடர மனம் விரும்பியது.
ஆனால், அது நடக்க வாய்ப்பில்லை.
கார்த்திகை,மார்கழி மாதங்களில் போர்வைக்குள் புதைந்து கிடப்பதை விட
சொர்க்கம் என்ன இருக்கிறது? இந்த மனிதருக்கு அதெல்லாம் சொல்லிப் புரிய
வைக்க முடியாது. அவருக்கு அட்டவணைப்படி வாழ்க்கை இருக்க வேண்டும். என் அப்பாவை இப்போது நினைத்துக் கொள்கிறேன். அப்பாவும் அதிகாலையிலேயே எழுந்து
கொள்கிறவர்தான். இருந்தாலும், நான் தூங்கிக் கொண்டிருப்பதை ரசிப்பவர். அவர்
எழுந்து வரும்போது தூங்கிக் கொண்டிருக்கும் என் மீது இன்னொரு போர்வையைப் போர்த்தி விடுவார்.
“ஆமாமா.. வெகு லட்சணமா இருக்கு… பொட்டப்புள்ள.. 8 மணி வரைக்கும்
தூங்குது. வீட்டு வேலை ஒண்ணும் இன்னும் பழகல… எழுப்பி விடாம இன்னும்
போத்தி விடறீங்க?”
”நம்ம பொண்ணு நம்ம வீட்டுலதான்டி செல்லமா இருக்க முடியும். போற எடத்துல
புருசன் எப்படிக் கெடைக்கப் போறானோ? கொழந்த குட்டின்னு ஆயிட்டா இப்போ
மாதிரி தூங்க முடியுமா? தூங்கிட்டுப் போகட்டும்டி”
நமக்குப் பிரியமான ஒருவரின் தூக்கத்தை நாம் அருகிருந்து ரசிப்பது
சுகமானது. அதுவும் குழந்தைகளின் தூக்கத்தை அருகிருந்து ரசிப்பது ஒரு
தேவதையைத் தொழுதல் போன்றது. உறக்கத்திலேயே விரியும் அதன்
புன்னகை, திடீரென்ற விசும்பலில் கோணிக்கும் இதழ்கள், கலைந்த
கேசம், மை தீட்டிய மூடிய விழிகள், மூச்சின் லயத்தில் ஏறியிறங்கும் குட்டி
வயிறு…என எல்லாமும் வானில் நிகழும் ஒளி அற்புதங்கள் போன்றவை.
2
வேலை விசயமாக வெளியூரில் இருந்து நேற்று தான் திரும்பினேன். வரும்போது வீட்டில் வளர்ப்பதற்காகக் கொஞ்சம் செடிகள் வாங்கி வந்திருந்தேன். அவைகளை நட வேண்டும். உள்ளே போன் அடித்துக் கொண்டிருந்தது. எடுத்தால் எதிர் முனையில் அண்ணனின் மகள்.
“பாப்பூ..நல்லா இருக்கியா?”
அந்தப்பக்கம் குரல் சரியில்லை. கமறியது போலிருந்தது.
“என்ன பாப்பா..என்னாச்சு?”
“அத்தே…தாத்தாவுக்கு நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு வர்றோம்..”
உடல் முழுதும் பதறித் துடிக்க.. “எந்த ஆஸ்பத்திரி?”
“கோயம்புத்தூர் பெரியாஸ்பத்திரிக்குத்தான் வரோம்… இங்க இருக்கிற
டாக்டர்கிட்டக் காமிச்சதுக்கு… கோயம்புத்தூருக்கு எழுதிக்
கொடுத்திருக்காங்க அத்த…”
”எதுல வரீங்க?”
“ஆம்புலன்ஸ்ல…”
அவ்வளவுதான்.. நான் என் மனதின் வேகக் கட்டுப்பாட்டை
இழந்திருந்தேன்…ஆம்புலன்ஸ்ல வர்ற அளவுக்குன்னா ரொம்ப முடியாம
இருக்குமோ? நெஞ்சுக்குழி வழக்கத்தை விட அதிகமாகத் துடிக்கத்
துவங்கியது.
அப்பா… அப்பா… அப்பா…
போட்டது போட்டபடி கிடக்க உடை மாற்றிக் கொண்டு போனில் கணவருக்குத் தகவல் சொல்லிவிட்டு ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினேன்.
ஆஸ்பத்திரி வளாகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு பாப்பாவுக்கு போன்
அடித்த போது ஆம்புலன்ஸ் உக்கடம் தாண்டி விட்டதாகச் சொன்னாள். மனசு ஒரு
நிலையாய் இல்லை. இதுவரை ஒரு காய்ச்சல் என்று கூட அப்பா ஆஸ்பத்திரிக்குப்
போனதில்லை. ஒருமுறை அம்மா உயிரோடு இருக்கும்போது அப்பாவுக்கு முதல்
அட்டாக வந்தது. அது கொஞ்சம் சிவியர் என்று டாக்டர் சொன்னார். அம்மா அழுது
கொண்டேயிருந்தாள். அப்பாவும் கூட கொஞ்சம் பயந்து விட்டிருந்தார். தன்
கணக்கு வழக்குகளையெல்லாம் தன் உற்ற நண்பரிடம்
ஒப்படைத்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாகத் தப்பிப் பிழைத்து வந்தார். அதன்
பிறகு இரண்டாவது அட்டாக். அப்படியென்றால், இது மூன்றாவது…என் மனம்
அதிகமாக பயப்படத் துவங்கியது.
அவசர சிகிச்சைப் பிரிவின் அருகிலேயே காத்துக் கொண்டிருந்தேன். உள்
நுழையும் ஒவ்வொரு ஆம்புலன்ஸ் கதவு திறக்கப்படும்போதும் “குப்.. குப்’ என்று
எனக்கு வியர்த்து வந்தது. மூச்சு முட்டுவதைப் போலொரு பிரமை. சின்னக்
குழந்தை போல ஒவ்வொரு வண்டிக்குள்ளும் அப்பாவைத் தேடினேன்.
இதோ இன்னொரு வண்டி வந்து நிற்கிறது.
உள்ளே தேடுகிறேன். அப்பாதான்…
அப்பாதான்…ஆம்புலன்ஸின் மேற்கூரையில் பதிக்கப்பட்ட கைப்பிடியை ஒரு
கையிலும், தன் இடது மார்பை ஒரு கையிலும்
பிடித்தவாறு…
”அப்பா… அப்பா…”
அழைக்கிறேன்.
திரும்பிப் பார்க்கிறார்.
”வ்வ்வலிக்குதும்மா”
அதற்குள் ஸ்ரெச்சர் வந்து விட்டிருந்தது. எங்கள் உதவியோடு அப்பா அதில்
ஏறிப் படுத்துக்கொள்ள விரைவாக உள்ளே கொண்டு செல்லப்பட்டார்.
பாப்பா ஆம்புலன்ஸில் இருந்து அப்பாவின் செருப்பை எடுத்துக் கீழே
போட்டாள். செருப்பு புதிதாய் இருந்தது. அப்பாவின் செருப்பை ஓரமாக எடுத்து
வைத்துவிட்டு நாங்களும் எங்களின் செருப்புகளை நுழைவாயிலில் கழற்றிவிட்டு பதைபதைப்புடன் உள் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த
மருத்துவர்களிடம், ”நெஞ்சுவலி” என்று சொன்னோம். எங்களை வெளியே போகச் சொன்ன மருத்துவர்கள் சிகிச்சைக்காக அவரை ஐசியூவுக்குள் கொண்டு சென்றார்கள்.
நாங்கள் மருத்துவப் படிவங்கள் சிலவற்றில் முன் அலுவலகத்தில் சீல்
வைப்பதற்காக நகர்ந்தோம். அவர்கள் சொன்னபடி வாங்க வேண்டிய
கையெழுத்துகளையும், சீல்களையும் வாங்கிக் கொடுத்த பிறகு அங்கிருந்த
நர்ஸிடம் அப்பாவின் பெயரைச் சொல்லி, ”எப்படியிருக்கிறார்?” என்று கேட்டேன்.
“டாக்டர்ஸ் பாத்துக்கிட்டிருக்காங்க… நீங்கெல்லாம் வெளிய வெயிட் பண்ணுங்க”
வெளியே வராண்டாவில் நின்று கொண்டிருக்கிறோம். காலியான வராண்டா நம் மனதின் வெறுமையைக் கூடுதலாக்குகிறது. பல தனியார் மருத்துவமனைகளில் முன் பகுதிகளில் இப்போதெல்லாம் நல்ல அலங்காரங்கள் செய்யத்
துவங்கியிருக்கிறார்கள். செயற்கைப் புல்வெளிகள், நீரூற்றுகள், மீன்
தொட்டிகள், மாறுபட்ட சிலைகள், ஓவியங்கள், சுவரில் ஒட்டப்பட்ட ரம்மியமான
காட்சிகள்… அவைகளைப் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்… உடம்பு சரியில்லாம இங்கே வரும்போது இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனமான அலங்கரிப்புகள் என்று? ஆனால்,இப்போது எனக்கு அவற்றின் அவசியம்
புரிந்தது. அதுபோல் ஏதாவது இப்போது இங்கே இருக்க வேண்டும்…நான் என்
மனதின் சஞ்சலத்தை அடக்கிக் கொள்ள, என் கவனத்தை திசை திருப்ப…
ஆனால், காலியான வராண்டாவும், அங்கே குழுமியிருக்கும் நோயாளிகளின்
உறவினர்களும், அவர்களின் துக்கம் படிந்த முகங்களும் என்னை அச்சுறுத்திக்
கொண்டிருந்தன. அப்பாவுக்கு ஒண்ணும் இல்லன்னு டாக்டர்ஸ் சொல்லிடணும். ஒருகணம் நானே டாக்டர் ஆகி அப்பாவுக்கு ஒண்ணும் இல்லைன்னு என்னிடமே
சொல்லியும் கொண்டேன். சுவரில் கண்காணிப்பு கேமராக்கள்
பொருத்தப்பட்டிருந்தன. ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் டீனிடம் புகார்
தெரிவிக்கும்படி ஒரு அறிவிப்பு ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தது. ஒரு போன்
நம்பரும் அதில் எழுதப்பட்டிருந்தது. வெறுமை தாங்கவியலாது பார்வையைத்
திருப்பினேன். தூங்குமூஞ்சி மரமொன்று தன் கிளைகளை விரித்துச்
சிறகடித்தவாறு தன் மென் மலர்களை உதிர்த்துக் கொண்டிருந்தது. சன்ன
முனகலாகப் பறவைகளின் சத்தங்கள்.
இப்போது இந்தக் கட்டிடம் இருக்கும் இடத்தில்தான் தொண்ணூறுகளில் கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்த சமயத்தில் ஒரு குண்டு வெடித்தது. ஒரு செவிலியர் மாணவி கூட உயிரிழந்திருந்தார். தேவையில்லாமல் மனம் எதையெதையோ இணைத்துக் கோடு போட்டுக் கொண்டிருந்தது.
3
”ராஜன் ஆறுமுகம்… அட்டெண்டர் இருக்கீங்களா?”
நாங்கள் ஓடிப் போய் முன் நின்றோம்.
“சொல்லுங்க சிஸ்டர்.”
“ராஜன் ஆறுமுகம் அட்டெண்டரா?”
”ஆமாங்க”
“ஒரு ப்ளாஸ்டிக் பக்கெட், ஒரு மக், ஒரு பெட்சீட் வாங்கிட்டு வந்துடுங்க”
பெட்சீட் எங்கள் பையில் இருந்தது. நான் கேட்டுக்கு வெளியே போய் ஒரு
பக்கெட்டும், மக்கும், பாப்பாவுக்கு ஒரு பார்சல் டீயும் வாங்கி
வந்தேன். ’நீ இந்த டீயைக் குடி’ அவளிடம் கொடுத்துவிட்டு
வாங்கி வந்த பொருட்களோடு பையில் இருந்து எடுத்த பெட்சீட்டையும்
எடுத்துக்கொண்டு நர்ஸ் அமர்ந்திருந்த இடம் நோக்கிச் சென்று அப்பாவின்
பெயர் சொல்லி அவரிடம் கொடுத்தேன்.
“அப்பாவைப் பாக்கலாங்கலா?”
“நாங்களே கூப்பிடறோம்.வெளீல வெயிட் பண்ணுங்க.”
அவர் அவரது வேலையைக்
கவனிக்கத் தொடங்கி விட்டார். அடுத்ததாய்ச் சொல்வதற்கு ஒன்றுமில்லாமல்
போகவே நான் அங்கிருந்து நகர்ந்து முதலில் நின்றிருந்த இடத்துக்கே வந்து
நின்றுகொண்டேன். பாப்பா ஓடி வந்து, “அத்தே! என்ன சொன்னாங்க?” என்றாள்.
“என்ன சொல்லப் போறாங்க… கூப்பிடறேன்னாங்க..தாத்தாவைப் பார்க்க விடல.”
அவள் அப்பாவுக்கு வலி வந்ததிலிருந்து இங்கு வந்தது வரையான சம்பவங்களின்
கோர்வையைச் சொல்லிக்கொண்டே டீயைக் குடிக்கத் துவங்கினாள். அங்கே
அப்பாவின் கழற்றி விடப்பட்ட புது செருப்புகள் என் கண்களில்
பட்டன. அதைக் கவனித்த பாப்பா.. ”கெளம்பும் போது பழைய செருப்பை எடுத்துக்
கொடுத்தேன். தாத்தாவுக்குக் கோபம் வந்து புது செருப்பை எடுன்னு திட்டினாரு
அத்தே. அதே மாதிரி புது பெட்சீட்டை எடுத்து வைன்னு சொல்லி புதுசுதான்
கொண்டு வந்திருக்கேன்.” என்றாள். நான் மெதுவாகப் புன்னகைத்தேன்.
எங்காவது கிளம்பும்போது அப்பாவுக்கு எல்லாம் ‘நீட்டாக’
இருக்கனும். இப்போது தனித்து விடப்பட்டிருக்கும் அந்தச் செருப்பைப்
பார்க்கும்போது அடிவயிறில் ஒரு பீதி கிளம்பியது. அண்ணனுக்குக் கடுமையான
காய்ச்சல் என்பதால் ஆம்புலன்ஸில் வரவில்லை. அண்ணன் மகனும், பாப்பாவும்
வந்திருந்தார்கள். அவர்கள் இருவரையும் சாப்பிடப் போகச் சொல்லி விட்டு நான்
அனிச்சையாக அப்பாவின் செருப்புகளின் அருகே போய் அமர்ந்து
கொண்டேன். செருப்புகளில்அப்பாவின் பாதச்சுவடுகளும், விரல்களின் அழுத்தத்
தடயமும் பனிபடர்ந்த பின்புலத்தில் தெரியும் ஓவியம் போல லேசாகத்
துலங்கியது. புது செருப்பு என்பதால் அவைகளில் இன்னும் பலமாக விரல்களின்
சுவடுகள் அழுந்தியிருக்கவில்லை. அப்பாவின் கை விரல்கள், கால் விரல்கள்
போலவேதான் என் விரல்களும் இருக்கும். குளித்து விட்டு வரும் ஒவ்வொரு
முறையும் நீரில் ஊறிய என் கால் விரல்களைப் பார்க்கும்போதும் அப்பாவின்
விரல்களை நினைத்துக் கொள்வேன். இப்போது யாராவது பார்க்கிறார்களா
என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் என் செருப்புகளைக் கழற்றிவிட்டு
அப்பாவின் செருப்புகளுக்குள் என் கால்களை நுழைத்துக் கொண்டேன்.
4
எனக்குத் தெரிந்து அப்பா ஒரு கடுமையான உழைப்பாளி. ஒருநாள் வேலைக்குப்
போகாமல் வீட்டில் இருக்கிறார் என்றால் அன்றைக்கு வீடு ரெண்டு பட்டு
விடும். அன்றைக்கு எனக்கும், என் அண்ணனுக்கும் பள்ளிக்கூடம் இருந்ததென்றால் தப்பித்தோம். இல்லாவிட்டால் அவர் என்ன வேலை செய்தாலும் நாங்கள் கூட
பங்கேற்க வேண்டும். விளையாடப் போக முடியாது. எங்கள் கூட்டாளிகள்
வேலிக்கருகில் நின்று சமிக்ஞை ஒலியெழுப்புவார்கள். அப்படியும் நாங்கள்
போகவில்லையெனில் எங்கள் வீட்டுக்கருகில் கிழக்கேயும், மேற்கேயுமாக
காரணமேயில்லாமல் நடந்து கொண்டிருப்பார்கள். எங்கள் அம்மாவுக்கு டிமிக்கி
கொடுத்துவிட்டு ஓடி விடுவதைப் போல அத்தனை எளிதானதல்ல எங்கள்
அப்பாவிடமிருந்து வேலை செய்யாமல் தப்பிப்பதென்பது. ஒரு ராணுவ அதிகாரியின் மிடுக்கோடும், ஒழுங்கோடும் அவரது செயல்கள் இருக்கும்.
நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். நான் தொண்ணூறு
சதவிகிதம் அவரின் செயல்பாடுகளையும்,சிந்தனைகளையும், உள்வாங்கியிருந்தேன் அல்லது ஒத்திருந்தேன். ஆனால்,அண்ணன் அப்படியே நேரெதிர். அப்பாவின் விருப்பத்திற்கு மாறாகவோ அல்லது எதிராகவோ எதுவும் எங்கள் வீட்டில் நடந்து விட முடியாது. எல்லாவற்றிலும் நேர்த்தி என்பது அவர்
எதிர்பார்ப்பது. நான், என் அம்மா, அண்ணன் மூவருமே நேர்த்திக்கு
அப்பாற்பட்டவர்கள். “மெதுவாகச் செஞ்சுக்கலாம்..என்ன குடியா முழுகிடப்
போகுது?” என்று எல்லாவற்றையும் தள்ளிப் போடும் சோம்பேறிக்
கோட்பாட்டாளர்கள் நாங்கள். அதற்காக அப்பாவிடம்,திட்டும், அடியும்
வாங்கினாலும் அடுத்த முறையும் அப்படியே செய்து மாட்டிக் கொள்வோம். எவ்வளவு அடித்தாலும் அப்பாதான் இன்று வரை என் வாழ்க்கையின் துடிப்பான,
முதலும், முடிவுமான மனிதர். பெண் என்பதற்காக எந்த விதமான சட்டகத்தினுள்ளும் என்னை அடைத்திடாத அன்பான அப்பா.
5
யாரையும் எப்போதும் அப்பா தொந்தரவு செய்ததில்லை.
அப்படித்தான் அவரது மரணம் கூட அமைந்து விட்டது. நெஞ்சு வலியென்று
ஆம்புலன்ஸில் அழைத்து வந்தபோது ஆம்புலன்ஸில் இருந்து இறங்கி
ஆஸ்பத்திரிக்குள் ஐசியுவிற்குள் போன அரைமணி நேரத்தில் அழைத்து இறந்து
விட்டார் என்கிறார்கள்.
நாங்கள் பதறிப் போய், ”சிஸ்டர், நீங்க வேற யாரையோ சொல்றீங்க போல…இப்போதான் உள்ள போனாரு. அவரு பேரு ராஜன். அப்பா பேரு ஆறுமுகம். நல்லாப் பாருங்க” என்றோம்.
“ஏம்மா..ஒரு நாளைக்கு எத்தன கேசுங்களப் பாக்குறோம்?பேர் தெரியாமயா
கூப்பிடுறோம்?சந்தேகம்னா யாராவது ஒருத்தர் உள்ளார வந்து பாத்துக்கோங்க..”
கனிவில்லாத மொழியில் சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.
நான் கண்களில் ரத்தம் வடிய ஒரு குப்பிக் குடிநீரோடு ஐசியுக்குள்
நுழைகிறேன். மடங்கி மடங்கிக் கிடந்த வாராந்தாவில் ஓடுகிறேன். ஒவ்வொரு
படுக்கையாய் அப்பாவைத் தேடுகிறேன்.
”இங்கே வாம்மா..!” நர்ஸ் அழைக்கிறார். நான் அவர் மேஜை அருகில் சென்று
அழுதுகொண்டே கேட்கிறேன்,
”சிஸ்டர்..என் அப்பா..”
“உங்க அப்பா பேரு என்ன?”
”ராஜன்..”
”அவங்க அப்பா பேரு?”
”ஆறுமுகம்”
”நீ யாரு?”
”அவரோட மக”
“ராஜன் ஆறுமுகம்.. இந்தாம்மா.. இந்தப் பேப்பர்ல ஒரு கையெழுத்துப் போடு”
”நான் அவரப் பாக்கனும்”
”மொதல்ல கையெழுத்துப் போடு.. அப்புறமா எந்த பெட்டுல இருக்குன்னு
சொல்றேன்..ஆனா பாத்தா நீ அழுகக் கூடாது..அப்படின்னா பாக்கலாம். அழுவேன்னா பாக்க வேண்டாம். பக்கத்து பெட்டுல ட்ரீட்மெண்ட்ல இருக்கிறவங்களுக்கு நீ அழுதா தொல்லையாயிடும். நான் சொல்றது புரியுதா?”
“ம்”
தன் மேஜையின் வலது பக்கவாட்டில் சுட்டுகிறாள்.
நான் விழுந்தடித்து ஓடுகிறேன். அந்தப் படுக்கையில் குறுக்காக அப்பா..! தொடுகிறேன்!
நிஜமாகவே அப்பா இறந்து விட்டாரா? அப்பா..அப்பா. என்று அழைத்துக்கொண்டே
அவரின் மார்பையும், நெற்றியையும் தொடுகிறேன். ஒரு இளம்சூடு… அப்பா மடித்து வைக்கும் போர்வைக்குள் இருக்கும் அதே இளம் சூடு. அப்பா..பக்கத்துப்
படுக்கைக்கு கேட்காத குரலில் அப்பாவை அழைத்துக்கொண்டே மெல்லிய குரலில் அழுகிறேன். என்னைத் தூக்கி வளர்த்த அப்பா இப்போது உயிரோடு
இல்லையா? அதெப்படி? அப்பாக்களுக்கு இறப்பு கூட வருமா? உயிர் போகும்
தருவாயில் துடித்திருப்பார் போல… கொஞ்சம் கோணலான திசையில் கிடந்தது
உடல். அப்பாவின் காலடியில் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த புதுப்
போர்வை மடிப்புக் கலையாமல் கிடந்தது.
“ஆஸ்பத்திரிக்குப் போறோம்.. நாலுபேர் பாக்கறதுக்கு
வருவாங்க…போவாங்க… ஆஸ்பத்திரியில விரிப்பெல்லாம் நல்லா இருக்காது. அந்தப்
புதுப் போர்வையை எடுத்துப் பையில வை” என்று ஆம்புலன்ஸுக்கு போன் செய்து காத்திருக்கும்போது, அப்பா பாப்பாவிடம் சொன்னது காதில் கேட்பது
போலிருக்கிறது.
’‘போதும்மா…வெளிய போயிக் காத்திருங்க…எல்லாம் முடிஞ்சதும் கூப்பிடறோம்.’’
என்று நர்ஸ் சொன்னார்.
வெளியே எப்படி வந்தேன் என்று தெரியவில்லை. உறவினர்கள், ”பாத்தியா?” என்று கேட்டதும் உடைந்து வெடித்துச் சிதறினேன்.
இரண்டு மணி நேரம் கழித்து எல்லா ஃபார்மாலிட்டீஸ்களும் முடிந்த பிறகு
ஸ்ட்ரெச்சரில் அப்பாவின் உடலைத் தள்ளிக் கொண்டு வந்தார்கள். அப்பா
வற்புறுத்திக் கொண்டு வந்த போர்வையில் அப்பாவைக் கிடத்தி தலையருகே ஒரு
முடிச்சும், காலருகே ஒரு முடிச்சும் இட்டு வைத்திருந்தார்கள்.
புதுப் போர்வை!!
நான் வெடித்து அழுதேன். கரையோரம் குவிந்திருந்த மீன் கூட்டத்துக்குள்
எறியப்படும் சிறு கல்லினால் அதிர்ந்து கலையும் மீன்களைப் போல
அங்கிருந்தவர்கள் என் அழுகையில் ஒருகணம் திடுக்கிட்டுத்
திரும்பினார்கள்.
6
வீட்டில் என்னதான் கஷ்டம் என்றாலும் கூட அப்பாவுக்கு போர்வைகள்
தரமானதாக வேண்டும். போர்வைகள்,கம்பளிகள் எப்போதும் வீட்டில் அதிகமாகவே இருக்கும். போர்வைகள் மீது அப்பாவுக்கு அப்படியொரு பிரியம் இருந்தது. நல்ல
தூக்கம் என்பது நல்ல போர்வைகளுக்குள்தான் இருக்கிறது என்று அப்பா
தீர்க்கமாய் நம்பினார். தீபாவளி சமயங்களில் காதி கிராஃப்டில் பணியாற்றும்
அப்பாவின் நண்பர் கணபதி அய்யாவிடம் சொல்லி தள்ளுபடியில் போர்வைகளாக
எடுத்து வந்து விடுவார்.
”நோம்பியும் நாளுமா இன்னும் வீட்டுல யாருக்கும்
துணி எடுக்கல… போர்வைக்குத்தானா இப்போ அவசரம்?”
அம்மா திட்டிக்கொண்டிருப்பாள்.
“போடி..ஒரு மனுஷன் கஷ்டப்பட்டு வேலவெட்டிக்குப் போயிட்டு வந்தா நல்லா
தூங்கனும்டி… அதுக்குப் போர்வையில்லேன்னா எப்படி?”
அப்பா அப்படித்தான்.
ஒரு பாய் விரிப்பார். அதன் மேல் ஒரு போர்வையை விரிப்பார். குளிர்காலமாக
இருந்தால் கம்பளி விரிப்பார். போர்த்திக் கொள்ள ஒரு போர்வை. குளிர்காலமாக
இருந்தால் போர்வையோடு கம்பளியும் இணைத்து இரண்டாகப் போர்த்திக்
கொள்வார். அப்பா எப்போதும் இடப்புறமாகவோ அல்லது வலப்புறமாகவோ
ஒருக்களித்துத்தான் படுப்பார். தூங்காமல் தீவிர ஆலோசனையில் இருக்கும்போது மட்டுமே மல்லாந்து படுத்து இரு கைகளையும் நெற்றியும், கண்களும் மறைந்திருக்கும்படி வைத்துக் கொண்டிருப்பார்.
மழைக்காலம்,குளிர்க்காலங்களில் வேலைக்குப் போகாத நாட்களில் அப்பாவுடைய முதல் வேலை காலை எழுந்தவுடன் வீட்டில் இருக்கும் எல்லாப்
போர்வைகள், கம்பளிகள், தலையணைகளை எடுத்து வெயிலில் காயப்போடுவதுதான். நன்றாக வெயில் படும்படி விரித்து வைப்பார்.மதிய சாப்பாடு முடிந்த வேளையில்
சென்று மறுபடியும் எல்லாவற்றையும் திருப்பிப் போடுவார். பிறகு ஒரு
குட்டித் தூக்கம். கண் விழித்ததும் ஒரு நாலு மணிவாக்கில் எல்லாப்
போர்வைகளையும் உதறி சுருக்கில்லாமல் மடித்து வைப்பார்.
“வெயில் போவதற்குள் எடுத்து வெக்கனும் தேவா. இல்லாட்டி மறுபடியும் எல்லாம் தணுத்து விடும். அது மட்டுமில்ல…கொஞ்சம் தணுக்கத் தொடங்கிருச்சுன்னா போர்வை வெயில்ல போட்டு கதகதப்பா இருக்கில்லியா பூரான், தேள் மாதிரியான
புழு, பூச்சிகள் போர்வைக்குள்ள போய் படுத்துக்கும். அதனால உதறித்தான்
மடிக்கனும். புரியுதா? என்று எனக்கு வகுப்பெடுப்பார்.
இரவு தூங்கும்போது வெயிலில் போட்ட போர்வைகளைப் போர்த்திக் கொள்ளும்போது ஒரு கதகதப்புப் பரவுமே அதைச் சொல்லில் எழுதிக் கடக்க முடியுமா? தெரியவில்லை. மோகத்தின் உச்ச நிலையில் வெப்பமடங்கி சரணாகதியடைந்து விட்ட
ஒரு சூரியனைத் தழுவிக் கிடப்பது போல… சாம்பிராணிப் புகை கமகமக்கும் போது
பரவும் மெல்லிய நறுமணம் போல போர்வை சேமித்து வைத்திருந்த வெப்பம் நம்
உடலுக்குக் கடத்தப்படும்போது தோன்றும் கிளர்ச்சியும், தண்மையும்
அலாதியானது. மழையில் நனைவதைக் கொண்டாடிக் குதூகலிக்கும் நாம் என்றாவது வெயிலைக் கொண்டாடியிருக்கிறோமா? சபித்திருக்கிறோம் தானே? வெயிலின் உறக்கமே
இரவு. வெயில் உறங்கும்போது அதற்கே தெரியாமல் போர்வைக்குள் பதுக்கி
வைத்திருந்த சிறு வெயிலை ரசிப்பதும், சுகிப்பதும் எவ்வளவு சுகானுபவமானது
இல்லையா?
அப்போது அப்பா பூரிப்புடன் கேட்பார்..
”நல்லா சூடா இருக்கில்லம்மா?”
“ஆமாப்பா”
வெயிலைச் சேகரித்து சூடான ஒரு தின்பண்டப் பொட்டலத்தைப் போல இரவில்
பரிசளித்த அப்பா…அப்படியே அப்பாவைக் கட்டிக் கொள்வேன்.
அப்பாவுக்கு ஏன் இப்படிப் போர்வைப் பைத்தியம் என்று கேட்பேன் அம்மாவிடம்.
”அப்பா தன் சிறுவயதில் வறுமையான பொழுதுகளில் குளிரின் கடுமையில்
பாட்டியின் கிழிந்த புடவை, கித்தான் (சாக்கு) போன்றவற்றை
விரிக்கவும், போர்த்தவுமாய் பயன்படுத்த வேண்டிய சூழலில் வளர்ந்தவர். பாய்
கூட இல்லாத நிலைமை. அதனால் இருக்கலாம்.” என்றாள் அம்மா. அவள் கண்களில் அப்போது மின்னியது, அவள் அப்பாவோடு வாழ்ந்த வாழ்வின் தீர்க்கரேகைகளோ என்று இப்போது தோன்றுகிறது.
7
ஆம்புலன்ஸில் அப்பாவை ஏற்றிக்கொண்டு ஊருக்குப் போய்ச் சேரும் போது
மணி நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது.
அப்பா இறந்த அந்த இரவில் அவரை ப்ரீஸர் பாக்ஸில்
கிடத்தியிருந்தார்கள். அப்படியே தூங்குவது போலப் படுத்திருந்தார். அந்த
இரவில் பூக்கடைகள் அனைத்தும் மூடப் பட்டிருந்ததால் மாலையேதும்
கிடைக்கவில்லை. அதனால், ஒரு வெள்ளை வேட்டியைப் போர்த்திச் சாதாரணமாகப் படுக்க வைத்திருந்தார்கள் பெரியவர்கள். அப்பாவிடம் பிரேதக் களை ஏதும் தெரியவில்லை எனக்கு. ஒரு அப்பா என்பவர் ஒருபோதும் பிரேதமாகி விட முடியாது
என்றுணர்ந்தேன். நான் சாய்ந்து கொண்ட முதல் ஆணின் தோள். நான் தவழ்ந்த முதல் ஆணின் மார்பு. என்னை அணைத்துக் கொண்ட முதல் ஆணின் கைகள். அப்பாக்கள் ஏன்
மகள்களுக்கு ஒரு ஆணாக மட்டுமே அறிமுகமாவதில்லை? என் கைப்பிடித்து ‘அ’
பழக்கிய அப்பாவின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. காடு,கரைகள்,வயல்வெளிகள் என என்னை முதல் வெளிச்சத்துக்கு நடத்திப் போன அப்பாவின் கால்கள் கட்டப்
பட்டிருக்கின்றன. இந்த இரவு சீக்கிரம் முடிந்து விடக் கூடாதா? காலையில்
வழக்கம் போல் அப்பா அதிகாலை எழுந்து, ”டீ போடும்மா” என்று சொல்ல மாட்டாரா?
என்றிருந்தது. அழுகை..அழுகை..தொடர் அழுகை..
இரவு ஒரு மணியாகி விட்டதால் உறவினர்கள் அனைவரும் உள் அறைகளுக்குச் சென்று விட்டார்கள்.
“சவத்தைக் கிடத்தியிருக்கும் வீட்டின் கதவைத் தாளிடக் கூடாது… அதே
மாதிரி சவத்தைத் தனியே கிடத்தி விட்டு எல்லோரும் உள்ளே போயிராதீங்க”
சொல்லி விட்டுப் பெரியம்மாவும் போய்ப் படுத்து விட்டார். அப்பாவை சவம்
என்று விளித்த பெரியம்மாவின் மேல் ஆத்திரம் பொங்கியது. படு காத்திரமாக
ஏதாவது திட்டி விடத் தோன்றியது. அன்றைய இரவில் அந்த ஹாலில் நானும் எதுவுமே பேசாமல் ஆழ்நித்திரைக்குள் படுத்திருக்கும் என் அப்பாவும் மட்டுமே!
”அப்பா..ஏம்ப்பா இப்படி? பேசுப்பா..பேசுப்பா..” என்று
அரற்றிக் கொண்டே ப்ரீஸர்பாக்ஸ் அருகேயே சுருண்டு படுத்திருந்தேன். பழைய
நினைவுகள், அழுது கொண்டே முகமெல்லாம் வீங்கிப் போய்
படுத்திருக்கிறேன். எப்போது கண்ணயர்ந்திருப்பேனோ… மயங்கினேனோ
தெரியவில்லை… ப்ரீஸர் பாக்சுக்குள்ளிருந்து அப்பா,
“என்ன தேவா.. இப்படிக் குளிருது? அந்தப் போர்வைகளெல்லாம் எங்கே? எத்தனை
போர்வை வாங்கினாலும் நம்மளுக்குக் பத்தாது… எடுத்துட்டு வா சீக்கிரம்.”
என்றவாறு புரண்டு படுத்தார்.
நான் அதிர்ந்து எழுந்து போர்வையை எடுக்க உள்ளே ஓடினேன்.
அருமை இந்தக் கதை சற்றுப் பழைய நினைவுகளை மீண்டும் முடுக்கி விடுகிறது. எல்லா வார இறுதி நாட்களில் ஒன்று நான் ஊருக்கு போவேன் இல்லை. அம்மாவும் அப்பாவும் பெங்களூர் வருவார்கள். அன்றும் அப்படித்தான் சனிக்கிழமை காலை பெங்களூரு வருவதாக இரவு என்னிடம் பேசிவிட்டு உறங்கப் போனவர் அதிகாலை நேரத்தில் நிரந்தரமாக உறங்கி விட்டார் என்பதை அறிந்து உள்ளிருந்தே வெடித்துச் சிதறி இருந்தேன். என்னை அறியாமல் கண்ணீர் தானாகவே அணைகள் அற்ற காட்டாறு போல பாய்ந்தோடியது. அத்தனை கண்கள் என்னை பார்த்து அவர்களுக்குள்ளே ஒரு முடிவு செய்து இன்னும் கூர்மையாக்கி தொடர்வதை அறிந்தேன் ஆனாலும் அழுகை நிற்கவே இல்லை. அவர்களுக்கு என்னத் தெரியும் என்னிடம் காலை வருவதாகச் சொல்லி இரவே விட்டுச் சென்றவர் பற்றி. அந்த நேரத்தில் என்னால் பைக் ஓட்டிச் செல்ல முடியாது என்பது நன்கு தெரியும். அந்த அதிகாலையில் வாடகை கார் தேடித் தேடி அலைந்தேன். இறுதியாக 1 மணிநேர தேடலில் ஒரு வண்டியைப் பிடித்து உடனே கிளம்பினேன். ஓட்டுனரிடம் வழி சொல்லிக் கொண்டே வழி எங்கும் வலியால் அழுதேன் துடித்தேன். இறுதியாக ஊரில் இறங்கி வாடகை பாக்கியை கொடுத்துவிட்டு ஓட்டம் பிடித்தேன் வீட்டை நோக்கி. வீட்டை அடைந்ததும் அழுகை இன்னும் இன்னும் அதிகமானது. அதே பிரீசர் பெட்டியின் உள்ளே கிடத்தப்பட்ட அப்பாவைப் பார்த்தேன். எப்போதும் நேராகவே பார்க்கும் அந்தக் கண்கள் மூடி இருந்தது. எங்களுக்காக ஓடித் தேய்ந்த பாதங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. அம்மாவோ கதறி அழுது அழுது என் தோள்மேல் சாய்ந்து மயங்கியே போனாள். பிறகு தான் என் தம்பியின் நினைவே வந்தது. அவனும் அழுது மயங்கிக் கிடந்தான். அவனை எழுப்பி அணைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றேன். திண்ணையில் அமரவைத்து நானும் அருகில் அமர்ந்து கொண்டேன். சில நிமிடம் பேசாமல் யோசித்தேன். நானும் அப்படியே அழுதால் இவனையும் அம்மாவையும் யார் தேற்றுவார் என்று நினைத்து அழுகையை நிறுத்தி அவனிடம் ஆறுதல் சொன்னேன். என்னை நானே தேற்றிக் கொண்டு எழுந்தேன். இதுவரை ஆன செலவுகளுக்கும் இனி செய்யவேண்டிய செலவுகளுக்கும் பணத்தை எடுத்து வந்தேன். எல்லா உறவுகளும் என் அப்பாவின் அலுவலக நண்பர்களும் வந்தார்கள். அன்றுவரை நான் பிறந்து வளர்ந்த அந்தச் சிறிய தெருவில் எந்த இறப்பிற்கும் அவ்வளவு கூட்டத்தைப் பார்த்தது இல்லை. தெருமுழுதும் தலைகளால் நிரம்பி விட்டது. மாலையில் எல்லா இறுதிச் சடங்குகள் முடிந்து அவரை குழிக்குள் இறக்கி வைக்கும் வரை தேக்கி வைத்த கண்ணீர் நான் எவ்வளவோ முயன்றும் முடியாமல் துடித்தேன் அழுதேன். எல்லாருக்கும் அவரவர் கணக்கை முடித்து அனுப்பி விட்டு வீடு திரும்பினேன். வீடே சூண்யமாகி இருந்தது. சுவரில் சாய்ந்து அழுது ஓய்ந்து இருந்த அம்மாவைப் பார்த்தேன். அம்மா அந்த நிலையிலும் என்னை அருகில் அழைத்தார். மங்கிய குரலில் பணம் வேணுமா என்று. எல்லாருக்கும் கொடுத்துவிட்டேன் அம்மா நீ வருத்தப் படாதே என்று சொல்லிவிட்டு வெளியில் அமர்ந்தேன். அம்மாவுடன் சேர்த்து பத்துப் பேர் இருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் இரவு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்தேன். அம்மாவை தேற்றி ரெண்டு தோசையாவது சாப்பிட வைப்பேன் என்று நினைத்து வாங்கி வந்தேன். எவ்வளவு முயன்றும் அம்மா தொடவே இல்லை. தம்பி எப்போதும் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவான். அவனுக்கு ஆறு தோசை உள்ள பொட்டலத்தை கொடுத்தேன். அவனும் அதை தொடவே இல்லை. நான் எவ்வளோ முயன்றும் முடியாமல் போக. நானும் ஒரு மூலையில் போய் சுருண்டு படுத்துக் கொண்டேன். இப்படியே இரண்டு நாட்கள் கடந்தது. மூன்றாம் நாள் இருவரையும் வற்புறுத்தி சாப்பிட வைத்து நானும் சாப்பிட்டேன். உங்கள் கதை என்னை எங்கெங்கோ கொண்டு சென்றது.