தொடர்கள்
Trending

நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;10 ‘கூடா ஒலிச் சேர்க்கைகள்’ – சுமாசினி முத்துசாமி

தொடர் | வாசகசாலை

அமெரிக்காவில் என்னளவில் நான் மொத்தத்தில் வெறுக்கும் ஒரு விஷயம் உண்டு. அமெரிக்காவில் மட்டுமல்ல எந்த இடத்திலும் என்னளவில் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று இது. நம்மூரிலும் இந்த கலாச்சாரம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு மிக அதிகமாக உள்ளது. படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் வளர்த்தெடுக்கும் ஒரு கலாச்சார மாற்றம் போல் பெரிய மாயையை இது கொடுக்கிறது.

அது, தேவை இல்லாமல் கெட்ட வார்த்தை பேசுவது.

சிறு வயதில், ”தீயினால் சுட்ட புண் ஆறினாலும் நாவினால் சுட்டது எப்பொழுதும் மனதில் தகிக்கும்” என்று மீண்டும் மீண்டும் சொல்லியே வளர்க்கப்பட்டேன். அதிலும், ”கோபம் வரும் பொழுது முறை தவறிய வார்த்தைகள் என்பது எதிரில் இருப்பவரது தராதரம் அல்ல, உன் தராதரம்” என்பதை என் தந்தை கூறிக்கொண்டே இருப்பார். கடந்த காலம் போல் தோன்றும் அந்த நாட்களிலும் சரி, சொந்த கிராமத்திலும் சரி,  சென்னை, பாண்டி என்று சுற்றுலா வரும் போதும் சரி, இப்படி வார்த்தைகள் காதில் விழத்தான் செய்தன.  சென்னையில் கொஞ்சம் அதிகமாக விழுந்தது போல்தான் அன்று உணர்ந்தேன். சென்னைக்கு மாற்றல் ஆகிப் போக வேண்டுமா என்று அப்பா யோசித்த  காரணங்களில் அன்று இதுவும் ஒன்றாக இருந்தது.

இப்படியாக வளர்ந்த எனக்கு கல்லூரியும் வேலையும் உலகின் குறுக்கு வெட்டுத் தோற்றங்களை உணர்த்த ஆரம்பித்தன. நாளுக்கு நாள் கடுமை கூடுவதுதான் வாழ்க்கை. அதற்கு மேலும், வார்த்தைகளாலும் கடுமை ஏற்ற வேண்டுமா என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இந்தக் கடுமை வார்த்தைகளைச் சொல்லி, சொல்லி… கேட்கப்பட்டு மீண்டும் கேட்கப்பட்டு… பலரது தோல்கள் தடிமனாக்கிவிட்டன. இன்று இங்கு மிகவும் வளர்ந்த சமுதாயத்தின் அங்கம் என்று பறை சாற்றும் பலரும் இப்படியான வார்த்தைகளை உபயோகப்படுத்துவதுதான் நாகரிகம் என்ற அளவுக்கு வந்துள்ளனர். தமிழ் மண்ணில் வேலை பார்க்கும் பொழுது நம் மக்களில் பலர் பேசாத சில வார்த்தைகள் இங்கே வந்ததும் மற்றவர்களைக் காயப்படுத்த ஆரம்பித்து விட்டன.

‘The wolf of Wall Street’ என்ற படம். ஜோர்டன் பெல்போர்ட் என்ற மனிதனின் சுயசரிதைதான் படம். பங்குத் தரகராக ஆரம்பித்த பெல்போர்டின் வாழ்க்கைப் பயணம் பின்பு அவர் எப்படி குற்றவாளியாக மாறி, அதன் பின்னர் அதிலிருந்தும் எப்படி அவர் வெளிவந்தார் என்பதை மிகத் தத்ரூபமாக லியோனார்டோ டிகாப்ரியோ நடித்திருப்பார். பார்க்கவில்லை என்றால் கவலைப் படாதீர்கள். என் பரிந்துரைகளில் ஒன்றல்ல இது. தன் வாழ்க்கை மற்றவருக்குப் பாடம் ஆகட்டும் என்று பெல்போர்ட்  அவர்கள் எழுதிய புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படம் பல விஷயங்களுக்குப் பெயர் பெற்றாலும் என் மனதில் அந்தப் படத்தில் வரும் வசனங்களுக்காகப் பதிந்து விட்டது.

இந்தப் படம் பார்த்து முடித்ததும் வார்த்தைகள் தவறி விழுந்து கொண்டே இருந்தால் வாழ்க்கையும் வழி தவறி விடும் என்ற எனது சிறு வயது பாலபாடம்தான் மனதில் மேலும் பதிந்தது. ஆடி, எல்லாம் அடங்கி, குற்றவாளியாகி பின்னர் அவர் ஊக்கமூட்டும் மேலாண்மைப் பேச்சாளர் ஆவார். ஒரு பெரிய முரண் இதில் உள்ளது. இந்த மோட்டிவேஷனல் பேச்சாளர்கள் (motivational speakers) தன்னைத் தானே ஊக்கப்படுத்த ‘வார்த்தைகள்’ எவ்வளவு முக்கியம் என்று நிறைய விளக்கம் தருவார்கள். சுய முன்னேற்றப் புத்தகங்களில் ஆரம்ப நிலைப் பாடங்களில் ஒன்று ‘வார்த்தைகளின் முக்கியத்துவத்தைப்’ பற்றியதுதான். ஆனால் அதில் எப்படி சரியில்லாத வார்த்தைகள் வரும் என்பது பெரிய முரண். ஏனென்றால் என்னளவில், முறை தவறிய வார்த்தைகள் என்பவை எதிரில் இருப்பவருக்கானது அல்ல, நம் தராதரம்.

ஒப்பந்த திட்ட வடிவமைப்பு / முன்மொழிவு பதில்  (Response to request for proposal) என்பது IT கம்பெனிகளின் வியாபாரத்திற்கு அடித்தளம்.  ஒவ்வொரு புது கிளையண்ட்டிற்காகவும் வருடத்திற்கு இரண்டு மூன்று தடவை பெரிய பவுசில் நடப்பதுதான்.  அதாவது கிளையண்ட் ஒரு வேலையை, ”எப்படி பண்ணுவீங்க, எவ்வளவு நாளாகும், எவ்வளவு செலவாகும்” என்று ரெண்டு மூன்று கம்பெனிகளிடம் கேட்பர்.  அதற்கு எல்லாம் கணக்குப் போட்டு இவ்வளவு பைசா, இத்தனை நாள் என்று சொல்லுவோம். கூடவே எப்படி வேலையைச் செய்து முடிப்போம் என்று ஒரு குத்துமதிப்பாகக் கதை சொல்லி அனுப்புவோம். இதற்கு நடுவில் ‘மானே, தேனே’ என்பதைப்போல் நாங்கள் இதில் வல்லவர்கள், அதில் சிறந்தவர்கள், எங்கள் பழம்பெருமை பெரிய கெத்து வாய்ந்தது என்று அங்கேயும் இங்கேயும் வெட்டி ஒட்டி சேர்த்து அனுப்புவோம். சின்ன வேலைக்கு உத்தேச மதிப்பு, திட்டம் (estimate, plan) கேட்டால் சின்ன தலைவலி. பெரிய வேலைக்கு இதே உத்தேச மதிப்பு, திட்டம் கேட்டால் பெரிய தலைவலி.

அதாவது நேசமணி கான்ட்ராக்டரிடம் பங்களாவை பெயிண்ட் அடிக்க, ‘எனக்கு இப்படி இப்படி வேண்டும், எவ்வளவு காசு ஆகும், எத்தனை நாளாகும்’ என்று ராதாரவியோ , அவர் மேனேஜர் சுந்தரேசனோ கேட்டு ஒரு லட்சம், ஒரு மாசம் என்று முடிவு செய்திருந்தார்கள் அல்லவா…?  அதுவும் இதுவும் ஒன்று! கம்பெனி ஆட்களான நாங்கள் எல்லாம் காண்ட்ராக்டர் நேசமணிக்கள். ராதாரவியும் மேனேஜரும், மேன்மைதகு கிளையண்ட்.

பெரிய வேலைக்கு, பல நிலைகளில் இந்த ‘பதிலளிப்பு’ வேலை  நடந்தாலும் பெரும்பாலும் மூன்று வாரங்கள் கடைசி நிலையில்  பிடிக்கும். அதில் முதல் வாரத்தை விட மூன்றாவது வாரம் ‘சோறு தண்ணீர்’ இல்லாத நிலைதான். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க யார் கிடைத்தாலும் அவர்கள் மண்டையையும் சேர்த்துப் பிய்த்துக்கொள்ள  வைத்து விடுவார்கள். நான்கு ஐந்து பேர் கொண்ட மையக் குழுவாக இப்படி ‘ப்ரோபோசலில்’ வேலை செய்வார்கள். அது போக மொத்தக் குழுவில் பதினைந்திலிருந்து சில சமயம்  முப்பது பேர் வரை கூட இருப்பர்.

எப்பொழுதுமே உண்மையான மனித இயல்பும் திறமையும்  மிகுந்த அழுத்தத்தில் சுலபமாக வெளி வந்துவிடும். ஒவ்வொரு ‘ப்ரோபோசல்’ முடிக்கும் போதும் அந்த மையக் குழுவில் இருப்பவர்கள் முகம் எல்லாம் சுருங்கி, உடலும் வதங்கிச் சோர்ந்து நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவார்கள். அதோடு சேர்த்து குறைந்தபட்சம் ஒன்று ரெண்டு பெயரிடமாவது ஒரண்டை இழுத்து வைத்து விடுவார்கள். அடி தடி கண்டிப்பாக நடக்காது. ஆனால் அதற்கு  ஒரு இரு படிகள் கீழ் தொழில்முறையில் சூடான வார்த்தைகள்  பரிமாறப்படும்.  வெகு சில சமயம் சிலர் பெரிய பஞ்சாயத்து கூட ஆக்கி விடுவார்கள்.

இப்படியான வேலைகளுக்கு உதவியாளருக்கு உதவியாளராக வேலை பார்க்கும் பொழுதே எப்படி வேலை பார்க்க வேண்டும் என்று கற்றுக்கொள்வதற்கு முன் எப்படியெல்லாம் வேலை செய்யக்கூடாது என்றும், எதில் எல்லாம் சறுக்கி விடக்கூடாது என்றும்தான் நான் கற்றுக்கொள்ளச் சொல்லிக் கொடுக்கப்பட்டேன்.

ஒரு நிகழ்வு. இது நடந்து ஏழு வருடங்களுக்கு மேலாகிறது. அப்பொழுது நான் சென்னையில் இருந்தேன். இப்படியான ப்ரோபோசல் வேலையில் கடைசி வாரம். கிட்டத்தட்ட அதற்கு முந்தைய ஐந்து மாதங்களாகவே பலருக்கு இதுதான் பெரும்பான்மையான வேலையாக இருந்தது. அலுவலகத்தில் தொடர்ச்சியாக ஒரு இரண்டு மூன்று வாரங்களுக்கு  மிக அதிகமான வேலை. சனி, ஞாயிறு இல்லை, ஒவ்வொரு நாளும் பன்னிரெண்டு, பதிமூன்று மணி நேரம் லேப்டாப்பும் மீட்டிங்குங்மாக மட்டுமே இருந்தது. கம்பெனிக்கு பெரிய வேலை என்பது பெரிய கல்லு, பெரிய லாபம். அடித்துக் கொள்வதும், பிடித்துக் கொள்வதும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே மாறி மாறி நடந்து கொண்டிருந்தது.

கடைசியாக எங்கள் திட்டம் என்ன என்று நேரடியாகக் கலந்தாலோசித்து, நாங்கள் அனுப்பின கதை எல்லாம் சரியா என்று தெரிந்துகொள்ள நான்கு கிளையண்ட் அமெரிக்காவில் இருந்து ஏரோபிளேன் பிடித்து வருவதாக இருந்தது (client visit). கிளையண்ட் வருவதற்கு மூன்று நாள் முன்பே அமெரிக்காவில் இருந்து பெரிய ஆபிசர்கள் (client partner, account manager) எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்க்க வந்து விட்டனர்.

கிளையண்ட்டிடம் படம் காட்ட நிறைய வித்தைகளைக் கைவசம் வைத்திருந்தோம். என்ன படம் போட்டாலும் உள்ளே கொஞ்சமாவது ‘கதைக் கரு’ தெளிவாக இருக்க வேண்டுமே. எப்படி அவர்களின் பூர்வ ஜென்ம தொல்லையிலிருந்து கூட சாப்ட்வேர் கொண்டு அவர்களை விடுவித்து விட முடியும் என்று ஒரு ஸ்லைடு. அவர்கள் கம்பெனி, மோட்சத்தை அடைய எப்படி ஆற்றலை அதிகரித்து, காசை சேமித்துத் தருவோம் என்று இரண்டாவது ஸ்லைடு. இதுதான் ‘பைனல்’ டச். இதைப் பற்றிய  விவாதம் ஒரு நான்கு மணி நேரத்திற்கு மேல் சென்று கொண்டிருந்தது.

சென்னை பெத்த ஆபிசரும், அமெரிக்காவில் இருந்து வந்திருந்த  பெத்த ஆபிசரும் ஒரு கட்டத்தில் ‘உனக்குப் புரியல, உனக்குத் தெரியாது, இப்படி சொன்னா நான் பொறுப்பு இல்ல, இது சரிவராது, ஏன் முன்னாடியே பண்ணல ‘ என்பது போன்ற கருத்துக்களுக்குக் கொஞ்சம் தடித்த வார்த்தைகளால் வடிவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அது போக ‘நீ இப்படித்தான் சொல்லி அந்த புரஜெக்ட் கிடைக்கல’ என்று ஒருவரும் இன்னொருவர், ‘நீ சொன்னதக் கேட்டுதான் இந்த ப்ராஜெக்ட் செய்து முடிக்க முடியல, நீயா வந்து கோடு அடிப்ப’ என்று மற்றொருவரும் சொல்ல ஆங்கிலத்தில் தனி மனிதத் தாக்குதலுக்கு டாப் கியரில் சென்று விட்டனர்.

அந்த மீட்டிங் ரூமில் ஆறு பேர் இருந்தோம். நான் அப்பொழுது அங்கிருந்தவர்களில் ஜூனியர். ஒவ்வொருவராக இருந்த அந்த ரூமில் நான் மட்டும் ‘ஒருத்தி’யாக இருந்தேன்.  மக்கள் மன்றத்தில் பயன்படுத்தத் தகுதி அற்ற வார்த்தைகளின் பிரயோகம் தட்டுத் தடுமாறாமல் வந்து விழுந்தது. அங்கு இல்லாத பலரும் பைரவர் வாகனத்தின் தாய் வழிச் சமூகத்தின் நீச்சம் ஆனார்கள்.

சில வார்த்தைகள் வரவே கூடாது. அலுவலகத்தில் அவை கண்டிப்பாகக் கூடாது. அதுவும் கூட வேலை செய்யும் பெண்ணின் முன் சில வார்த்தைகள் வரவே கூடாது என்பது போன்ற சில எதிர்பார்ப்புகள் நல்லவேளையாக இன்னும் கொஞ்சம் அலுவலகங்களில் உண்டு. இருவரின் நாக்கிலும் இவற்றின் விதிவிலக்குகள் மட்டுமே நர்த்தனம் செய்தது. தாய்மையைக் கொண்டாடும் தேசத்தில் தன் முன்னிற்கும் ஒருவரைத் திட்ட அதுவரை பார்த்தேயிருக்காத அவரின் தாயை எதற்கு இழுக்க வேண்டும்? பத்தே நிமிடத்தில் சூழல் முற்றிலும் மாறிவிட்டது.

அதுவரை மற்ற நால்வரும் மற்றொருவரின் நொந்த முகத்தைப் பார்த்து கொண்டியிருந்தோம். வார்த்தைகள் தடம் மாறவும் சேரைத் தள்ளி விட்டுவிட்டு, நீங்கா தோழமையான போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டேன். ’சரக்’ என்ற சத்தத்தில் ஒரு நிமிடம் அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அதோடு ரூம் அமைதியாகி விட்டது. நான் ரூமை விட்டுப் போன பின்பு என்ன பேசினார்கள் என்று தெரியாது. இரண்டு நிமிடத்தில் அனைவரும் வெளியே வந்துவிட்டனர். திரும்பி உள்ளே சென்றவுடன் ஒரு பெத்த ஆபிசர் தனக்கு இன்னொரு வேலை கவனிக்க வேண்டும் என்று சொல்லிச் சென்று விட்டார். அடுத்தவர் தப்பித் தவறிக் கூட வேறு எந்த வார்த்தைகளையும் விடாமல் உரையாடி  அந்த ஸ்லைடை முடிக்க ஆலோசனை கூறிவிட்டார்.

சேரை விட்டு எழுந்தது எதேச்சையாகக் கொஞ்சம் எரிச்சலோடு அன்று நடந்தது. ஆனால் அது கொடுத்த பலன் பலமுறை பின்னர் கை கொடுத்தது.

அதுவரை அலுவலக அனுபவத்தில் பெத்த இடத்தில் வார்த்தை விளையாட்டுகளைப் பல முறை பார்த்து இருந்தாலும், இப்படி வண்டி வண்டியாக அழுக்கு மூட்டை மொழியை அதுவரை கேட்டதில்லை. இனியும் கேட்டுவிடவே கூடாது என்பதும் அவா!. கடுப்பு, வெறுப்பு  மற்றும் ஏதோ ஒரு கருமை அடுத்த சில நாட்களுக்கு மனதிலிருந்தது. யாரோ இருவர்தான். நான் வெறும் பார்வையாளர்தான். இருந்தும், அன்று பரிமாறப்பட்ட வார்த்தைகள் மனதை அழுத்திக்கொண்டே இருந்தன.

கிளையண்ட்டும் வந்து இரண்டு கம்பெனிகளின்  அருமை பெருமைக் கதைகளை மிகச் சிறப்பாகக் கேட்டுவிட்டு மகாபலிபுரம் பார்த்துவிட்டு, தங்க மோதிரம், உயர்ந்த வேலைப்பாடுகளால் ஆன சதுரங்கப் பெட்டி, சேலை எல்லாம் வாங்கிக் கொண்டு கிளம்பிச் சென்று விட்டனர். அதன் பின், IT கம்பனிகளில் முக்கியமான சம்பிரதாயமான ‘லஞ்ச்’க்கு ஐந்து நட்சத்திர உணவகம் செல்லும் ஒரு சடங்கும் நடந்தேறியது. சாப்பிட்டு முடிக்கும்போது பெத்த ஆபிசரில் ஒருவர் வந்து தான் ஜென்டில்மேன் என்றும், சில விஷயங்கள் சரி என்று தெரிந்தால் ஆணித்தரமாகப்  பேச வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்துவதாகவும் கூறினார். அதைத்தான் தான் அன்று செய்ததாகவும் கூறினார். ஒட்டு மொத்தத்தில் ‘சாரி’ என்ற வார்த்தையின் எந்த வடிவமும் அதில் இல்லை.

திரும்பி கார் எடுக்க வரும்போது நான் அவரிடம், ‘ஒரு டவுட்ங்க, தெரியாம கேட்கிறேன், தப்பா எடுத்துக்காதீங்க’ என்று இழுத்து விட்டு ”ஏன் திட்டும் போது ஒருவரை ஒருவர் பெண்பால் சொற்களிலும், முறை தவறிப் பிறந்தவர் என்பது போல் பிறப்பைச் சொல்லித் திட்டுவதற்குப் பதில், ’நீங்கள் பிறப்பைக் கொடுக்க முடிந்தவரா’ என்ற  ஆண்பாலுக்குரிய வார்த்தையை உபயோகித்தால் அது சரியான ஆங்கில உபயோகமாக இருக்கும் அல்லவா?” என்று கேட்டேன். அவர் சிரித்தார். நான் அந்த நிகழ்விலிருந்து கடந்துவிட்டேன்.

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button