நிலோஷனா – இந்தப் பெயரும் முகமும்தான் இருந்தது அவளை நினைவில் கொள்ள. ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த மூன்று வருடங்கள் மனதிற்கு மிக நெருக்கமானவை. அவளுடன் பெரிதாகப் பேசியதில்லை என்றாலும் பேசிய சில மணித்துளிகள் என்றும் நெஞ்சில் நிலைத்திருப்பவை.
நாங்கள் படித்த பள்ளி காஞ்சிபுரத்தின் புறநகர்ப்பகுதி ஒன்றில் இருந்தது. ஐந்தாம் வகுப்பு வரை இருபாலினரும் அடுத்தடுத்து, இடையிடையே அமர்ந்திருந்த காலம் போய், ஆறாப்பில் சிறுவர், சிறுமியர் என்று தனித்தனியாக உட்கார வைக்கப்பட்ட காலத்திலேயே ஆண்-பெண் பழகுவதில் ஒருவித செயற்கைத்தனமும் வந்து விட்டிருந்தது. ஒரு சிலரே அதற்கு விதிவிலக்காய் இருந்தனர். அதில் நிலோஷனாவும் ஒருத்தி.
படிப்பில் படுசுட்டியான அவளிடம் அதற்கான பொது இலக்கணம் எதுவும் இருக்காது. எந்நேரமும் துறுதுறுவென, உற்சாகமான மனநிலையிலேயே சுற்றிக் கொண்டிருப்பாள். குறுகிய வட்டத்தில் நகராமல், அனைவரிடமும் கலந்து பழகுவது அவளின் இயல்பு. ஒருமுறை நான் புத்தகம் எடுத்து வராததால், ஆசிரியை ராகவி வகுப்புநேரம் முழுக்க அவமானப்படுத்தியபடியே வெளியில் நிற்க வைத்தார். அதனால் மனமுடைந்து உட்கார்ந்திருந்த போது, “ஒருமணிநேரம் இப்படி நின்னதால உன் மதிப்பு குறைஞ்சிடுமா? ஒண்ணுமில்லை விடு. இதுக்கெல்லாம் மனசைப் போட்டு ஒழப்பிக்காதே” என்றாள்.
எப்போதும் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை. வகுப்பில் பெரும்பாலும் அவள்தான் முதல் தர எண். கணிதம், அறிவியலில் இயல்பாகவே ஈடுபாடு கொண்டிருந்தாள். சராசரி மாணவனான நான், அரிதாக ஏதேனும் ஐயம் ஏற்படும்போது அவளிடம்தான் கேட்பேன். என் நண்பர்கள் குழாமை அடுத்து, என் பள்ளிக்கால நினைவுகளில் பசுமையாக நிற்பவள் அவள்தான்.
ஒன்பதாம் வகுப்பில் சற்று தொலைவில் இருந்த வேறொரு பள்ளிக்கு மாற்றலாகிப் போனாள். அப்போது ‘farewell’ என்ற பெயரில் பிரிவை கொண்டாடும் கலாச்சாரம் எல்லாம் உண்டாகவில்லை. வெகு இயல்பாக, எந்த ப்ரக்ஞையும் இன்றி அது நிகழ்ந்தது. நானும் அது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அதன்பின் அவளை சந்திக்கவே முடியாமல் போகும் என்று நினைக்கவில்லை. முகநூலில் எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும், அவளை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. சரி, அவ்வளவுதான் என்று என் வேலைகளை பார்க்கத் தொடங்கினேன். பள்ளிப் படிப்புக்கு பின், தட்டுத்தடுமாறி பொறியியல் முடித்துவிட்டு, ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு வருடமாக பணி புரிந்து வந்தேன்.
இதைப் பெரிதாக கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டிருப்பேன், சில நாட்களுக்கு முன், லோகேஷ் அந்த விஷயத்தை சொல்லாமல் இருந்திருந்தால்…
லோகேஷ் என் அலுவலக நண்பன். சில நாட்கள் ஓய்வு வேளையில் கால்பந்து விளையாடுவதுண்டு. அப்படி பழக்கமானவன்தான். அன்று விடுமுறை நாள் என்பதால் வீட்டுக்கு வந்திருந்தான். காலையில் சாப்பிட்டுவிட்டு, புத்தகக் கண்காட்சிக்கு போவதாகத் திட்டம். செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த விஷயத்தைக் கூறினான்.
“டேய் நிரஞ்சன்… இந்த விளம்பரத்தைப் பாரேன். சுவாரஸ்யமா இருக்கு.”
“என்ன விஷயம், காட்டு”
‘Find The Lost’ என்ற தலைப்பில் வந்திருந்த அந்த விளம்பரம் கீழ்க்கண்ட வாக்கியத்தை கொண்டிருந்தது.
‘Neither Facebook, nor Google, nor the Government knows the depths of your heart. We could help you find the people there, if only you show it to us’
“என்னடா சொல்ல வர்றாங்க?”, குழம்பியபடி கேட்டேன்.
“எனக்கும் சரியா புரியலை. இரு நெட்ல பாப்போம்.”
‘LPF’ என்ற நிறுவன பெயரை டைப் செய்து தேடினான். அப்போது என் தந்தை அழைத்ததால் கொஞ்ச நேரம் வெளியே சென்று பேசிவிட்டு வந்தேன். திரும்பி வந்ததும் அவனிடம் கேட்டேன்.
“என்னடா ஏதாவது புரிஞ்சிதா?”
“பாத்தேன்டா. பெருசா இந்த நிறுவனத்தைப் பத்தி தகவல் இல்லை. இப்பதான் ஆரம்பிச்சிருப்பாங்க போல. ஆனா ஒண்ணு மட்டும் புரியுது. சில வருஷம் முன்னாடி ஆதார் மூலம் தொலைஞ்சு போனவங்கல்லாம் கண்டுபிடிக்கப்பட்டாங்கனு செய்தி வந்தது ஞாபகம் இருக்கா? அது மாதிரி நம்ம வாழ்க்கையில ஒரு கட்டம் வரைக்கும் நட்பு பாராட்டிட்டு அப்புறம் தடயம் இல்லாம தொலைஞ்சு போனவங்கள இவங்க கண்டுபிடிச்சு தருவாங்க.இதை ஒரு வணிக சேவையா செய்றாங்க.”
“ஆனா எப்படி, அவங்கள பத்தின எந்த விவரமும் இல்லையே?”
“நம்ம மனசுல இருக்கிற முகம் மட்டும்தான் அவங்கள மீட்கப்போற ஒரே தகவல் ”
“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்றா”
“இப்ப நாட்டில் இருக்கிற பெரும்பாலான மக்களோட விவரங்கள் ஆதார் டேட்டாபேஸ்ல இருக்கு, சரியா? இவங்க நாம் சிந்திக்கும் போது மூளையில் ஏற்படுற மின்-வேதியியல் வினைகளை மின்முனைகளை வெச்சு மின்னணு சிக்னல்களா மாத்திடுறாங்க. நாம ஒரு முகத்தை நினைச்சா அதை இவங்களால JPEG இமேஜா மாத்திட முடியும். அப்புறம் என்ன? அந்த முகத்தை ஆதார் டேட்டாபேஸ்ல தேடினா அவங்களைப் பத்தின முழு விவரமும் கெடச்சிட போகுது.”
“என்னடா ஏதோ சயின்ஸ் பிக்சன் படம் மாதிரி சொல்ற. இதனால அவங்க பிரைவசி பாதிக்கப்படாதா?”
“தொழில்நுட்பம் வேகமா வளர வளர, சயின்ஸ் பிக்சன் மாதிரி உலகத்தை நோக்கிதான்டா போயிட்டிருக்கோம். பிரைவசி பாதிக்கும்தான். சில இடங்கள்ல பிரைவசியை விட்டுக் கொடுத்தாதான் நமக்கு வேண்டியது கிடைக்குங்கிற மாதிரி ஆகிடுச்சு இப்ப நிலைமை. ஆதார உருவாக்கினப்பவே அது ஒரு ஈகோசிஸ்டம்(ecosystem), அதை சுத்தி நிறைய பிசினஸ் உருவாகும்னு சொன்னாங்களே நினைவிருக்கா? ‘Data is the new oil’ தான்டா இப்ப தாரக மந்திரம்.”
“ம்ம்… நான்தான் இந்த உலகத்துக்கேத்த மாதிரி நெறய அப்டேட் ஆகணும் போலயே. சரிடா, நீ யாரையாச்சு தேடப் போறியா இதை வெச்சு?”
“குறிப்பா யாரையும் சொல்ல தெரியல. ஆனா என் அப்பாவோட அப்பா சைடு உறவினர்கள், ஒரு சின்ன சண்டையில மொத்தமா, தொடர்பற்று பிரிஞ்சிட்டாங்க. சின்ன வயசுல பாத்த ஞாபகம். அவங்கள்ல யாரையாச்சு வேணா தேடி பார்க்கலாம்.”
“ம்ம்… எனக்கு அப்படி யாரும் இல்லைடா. ஆனா, பள்ளிக்காலத்துல நிலோஷனான்னு ஒரு தோழி இருந்தா, எட்டாவதுக்கு அப்புறம் அவளை பாக்கவே இல்லை. என்ன ஆனான்னு தெரியலை. அவளைத் தேடி பாக்கலாம்னு தோணுது.”
“ஓ… சரிடா. ஒரு ரெண்டு நாள் யோசிப்போம். அப்புறம் முடிவெடுப்போம்.”
அதன்பின் எங்களின் அன்றைய நிகழ்ச்சி நிரல் ஓடியது. ஆனால், இது குறித்த உற்சாகம் அந்த நாள் முழுதும் மனதின் ஓர் ஓரத்தில் சுற்றிக்கொண்டே இருந்தது. உண்மையிலேயே நிலோஷனாவை சந்திக்க முடியுமா? இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? திருமணம் ஆகியிருக்குமா? வேலைக்கு செல்வாளா? என்ன வேலை செய்து கொண்டிருப்பாள்?
சொல்லியிருந்த இரண்டு நாட்கள் ஒரு வாரமாக ஆனது. இந்தப் புது முயற்சியை செய்ய மனதில் ஒருவித தயக்கம் இருக்கத்தான் செய்தது. லோகேஷ் தனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டான். இறுதியாக, சரி என்னதான் பார்ப்போம் என்று முடிவு செய்தேன்.
வடபழனி போரம் விஜயா மாலை அடுத்திருக்கும் சிறு வணிக வளாகத்தின் முதல் தளத்தில் அந்த நிறுவனம் இருந்தது. ஒரு ஜெராக்ஸ் கடையை விட சற்றே பெரிதாக இருக்கும். பெயர்ப்பலகை தோற்றம் முதற்கொண்டு எல்லாமே எளிமையாக இருந்தது. உள்ளே இரு இளைஞர்கள் மட்டும் இருந்தனர். அதிலொருவர் வரவேற்பில் அமர்ந்திருந்தார். உள்ளே நுழைந்தவுடன் பேச்சைத் தொடங்கினார்,
“சொல்லுங்க, என்ன வேணும்?”
நிறுவனத்தின் தோற்றத்தைக் கண்டவுடன் எழுந்த சந்தேகங்களை மனதில் தேக்கியபடி சொன்னேன்,
“உங்க விளம்பரம் பாத்தேன். எனக்கு ஒருத்தங்களை கண்டுபிடிக்கணும்.”
“சரி, நல்லது. இந்தப் ஃபார்ம் ஃபில் பண்ணிட்டு காத்திருங்க. கொஞ்ச நேரத்தில் கூப்பிடுறோம்.”
வழக்கமான படிவ நிரப்பல் தான். விலை தான் சற்று பகீரென்றது. பத்தாயிரம் ரூபாய். என் மாத சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு. வாழ்க்கையில் எப்போதோ ஒரு முறை வரும் சந்தர்ப்பம் தானே. செய்து தான் பார்ப்போம் எனத் துணிந்து விட்டேன்.
சில நிமிடங்களில் மற்றொரு இளைஞர் என்னை அழைத்தார். வரவேற்பு பலகைக்கு பின்னிருந்த திரையை விலக்கிவிட்டு உள்ளே சென்றோம். உள்ளே பெரிதாக ஏதும் இல்லை. மின்முனைகளோடு கூடிய ஒரு தொப்பி, இணையத்தொடர்பு கொண்ட ஒரு கணினி, ஓர் அச்சுப்பொறி. அவ்வளவுதான்.
“ரெடியா ப்ரோ?”
“ம்ம்… ரெடிப்பா.”
“தொப்பியை மாட்டிக்கோங்க”
தொழில்நுட்பம் இப்படி காஃபி சாப்பிடுவதை போல் ஆகிவிடும் என்று நினைத்ததில்லை. குச்சி குச்சியாக துருத்திக் கொண்டு முள்கிரீடத்தைப் போலிருந்த தொப்பியை எடுத்து மாட்டினேன்.
“மைண்டை ரிலாக்ஸ் பண்ணுங்க. வேற ஏதும் நினைக்காதீங்க. உங்களுக்கு வேண்டிய முகத்தை மட்டும் நினைச்சிட்டு மனசை ஒருமுகப்படுத்துங்க.”
அவனது சொற்கள் லேசான பதட்டத்தை என்னுள் ஏற்படுத்தின. அதுவும் இத்தனை ஆண்டுகளில் முகம் மாறியிருக்குமோ? அதற்கும் ஏதாவது கண்டுபிடித்திருப்பார்கள். மனதிற்குள் புலம்பியபடியே கண்களை மூடினேன்.
முடிந்தவரை எல்லா நினைவுகளையும் உதறிவிட்டு மனதை அவள் முகம் நோக்கிக் குவிக்கத் தொடங்கினேன். சீருடையோடு அவளுடைய உற்சாகமான, புன்னகை பொதிந்த முகம் மெல்ல துலக்கமாக வெளிப்படத் தொடங்கியது. அதனை மேலும் தெளிவாக மனக்கண்ணில் கொண்டு வர முயன்றபோது,
“போதும்!”
மின்னல் வெட்டாய் அவன் குரல் இடைமறித்தது.
“நீங்க யோசிச்ச முகம் கணினியில் வந்துடுச்சு.”
உண்மையில் ஒரு கணம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. எங்கே காட்டு என்றபடி கணினி அருகில் சென்று பார்த்தேன். ஆம், நான் நினைத்த அதே முகம்தான். என் நினைவை அப்படியே படியெடுத்தது போல் இருந்தது.
“சூப்பர்பா! இவ்ளோ ஈஸியா வேலையை முடிச்சிட்டீங்களே. இப்ப இவங்களோட விவரமெல்லாம் தெரிஞ்சிடுமா?”
“இல்லை ப்ரோ! அதுக்கு சில ப்ரொஸிஜர்லாம் இருக்கு. இப்ப வீட்டுக்கு போங்க. ரெண்டு நாள்ல உங்களுக்கு மெயில் பண்றோம்.”
அதற்கு மேல் பெரிதாக ஒன்றும் பேசவில்லை. அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன்.
சொன்னபடியே இரண்டு நாட்களில் மெயில் வந்தது. அதில் அவளுடைய விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அது செங்கல்பட்டு அருகே ஓரிடத்தை முகவரியாகக் காட்டியது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மதிய சாப்பாடு முடிந்தவுடன் கிளம்பினேன். அப்போது எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை.
இரண்டு மணிநேரப் பயணத்திற்குப் பின், அவள் வீடிருக்கும் பகுதியை அடைந்தேன். வீடு நோக்கி சென்றபோது, எதிர்பாராவிதமாக அவளே எதிரில் வந்து கொண்டிருந்தாள். நான் பார்த்த அடுத்த கணமே அவளும் என்னைப் பார்த்து விட்டாள். ஒரு கணம் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றோம். பள்ளியில் பார்த்த அதே முகம். மெல்ல சமநிலைக்கு திரும்பியபோது, அவள்தான் பேச்சை தொடங்கினாள்.
“நிரஞ்சன்! இங்க எப்படி வந்த? எவ்வளவு நாள் ஆச்சு உன்னை பாத்து.”
“இது நானே எதிர்பார்க்காத ஒரு திருப்பம். எல்லாத்தையும் பொறுமையா சொல்றேன். எங்கேயாச்சு உக்காந்து கொஞ்ச நேரம் பேசலாமா?”
“சரி , இங்க பக்கத்துல நாகேஸ்வரா மெஸ் இருக்கு. அங்க ஏதாச்சு சாப்பிட்டுட்டே பேசுவோம்”
“ஓகே”
அது சிறிது தூரத்தில் இருந்தது. போகும் வழியில் LPF நிறுவனம் பற்றியும் அவளைக் கண்டறிந்த விதம் குறித்தும் சொன்னேன். ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தவள், சற்று நேரத்திற்குப் பின் ஏற்றுக் கொண்டாள். “இப்ப எங்க போயிட்டிருந்த?” எனக் கேட்டேன். தன் பாட்டிக்கு சில மருந்துகள் வாங்க வந்ததாகச் சொன்னாள்.
மெஸ் வந்துவிட்டது. இருவரும் ஒரு காஃபி சொன்னோம். சுற்றியிருந்த இரைச்சல் சற்றே எரிச்சலாக இருந்தாலும் ஒருவாறு பேச தலைப்பட்டோம்.
இப்போதும் அவள்தான் பேச்சைத் தொடங்கினாள்.
“அப்புறம், எப்படி இருக்காங்க நம்ம பிரெண்ட்ஸ்லாம்? எல்லார் கூடவும் தொடர்புல இருக்கியா?”
“நல்லா இருக்காங்க. ஒரு சிலர் கூட இருக்கேன், உன்னைதான் கண்டுபிடிக்கவே முடியலை.”
“ஆமா, என்ன பண்றது. அப்படியே டைம் போயிடுச்சு. நீ என்ன பண்ற?”
“சென்னைல ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை செய்றேன். நீ?”
“ஈரோடுல ஒரு ஹாஸ்பிடல்ல நர்சா இருக்கேன்.”
“சரி சரி. அப்புறம் எப்படி இந்த நேரத்துல இங்க?”
“அதுவா, என் மாமா புதுசா வீடு குடி போறாங்க. அதான் நாலு நாள் லீவு போட்டுட்டு வந்தேன்.”
“நான் வந்த சமயம் பாத்து நீயும் வந்திருக்க. ஆச்சர்யமா தான் இருக்கு. சென்னைல இதை கிரகப் பிரவேசம்னு சொல்றாங்க.”
“எதை?”
காஃபி வந்துவிட்டது. கொஞ்சம் பசித்ததால், மேலும் ஒரு பிளேட் பஜ்ஜியும் ஆர்டர் செய்தேன். காஃபி குடித்தபடியே பேச்சு தொடர்ந்தது.
“என்ன சொல்லிட்ருந்தேன், ஆன், வீடு குடி போறதை.”
“கிரவப் பிரதேசமா?”
“கிரகப் பிரவேசம்! சரி அதை விடு. என்னாச்சு இவ்ளோ வருஷம்? என்ன பண்ணிட்ருந்த? வேற யார் கூடயாச்சு காண்டாக்ட் இருக்கா?”
“இல்லை. பள்ளி மாறுனப்ப எல்லாரோடயும் தொடர்பு விட்டு போயிடுச்சு. அப்புறம் புது பிரெண்ட்ஸ், புது சூழ்நிலைன்னு நல்லாதான் போச்சு. எப்பயாச்சு உங்க நினைப்பு வரும். ஆனா, என்ன பண்ண முடியும். அதுதான் யதார்த்தம்னு என் புது வாழ்க்கைக்கு பழகிட்டேன்.”
“சரி சரி. நானும் அந்த சமயத்துல பெருசா எடுத்துக்கல. ஆனா இப்படி காண்டாக்டே இல்லாம போகும்னு எதிர்பாக்கல.”
“சரி விடு, அதனால என்ன இப்பதான் பாத்துட்டோம்ல. நேரமும் சந்தர்ப்பமும் தான் பல விஷயங்களைத் தீர்மானிக்குது.”
“உண்மைதான். ஸ்கூல் காலேஜ்லாம் எப்படி போச்சு. எனக்கு இன்ஜினியரிங் முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. காலேஜும் அவங்க வழிமுறைகளும் சுத்தமா ஒத்து வரலை. எப்படியோ முடிச்சிட்டேன்.”
“ஓ… என்ன பொறுத்தவரை சின்ன வயசுலருந்து டாக்டர் ஆகணுங்கிறது தான் கனவு. ட்வெல்த்ல நல்ல மார்க் வாங்குனேன். ஆனா, அந்த சமயத்தில் வந்த நீட் தேர்வால என்னால் மருத்துவர் ஆக முடியலை. ரொம்ப டிப்ரஸ்ட் ஆகிட்டேன். அப்பதான் எனக்கு தெரிஞ்ச ஒரு மேம் நர்சிங் படிக்க சொல்லி சொன்னாங்க. இதுலயே உயர் படிப்புலாம் படிச்சா டாக்டர் அளவுக்கு ஆகிடலாம்னு சொன்னாங்க. அப்புறம் கடைசியில போய் நர்சிங் சேர்ந்தேன். திருச்சில தான் படிச்சேன். இப்ப வேலைக்கு சேர்ந்து ஒரு ஆறு மாசம் இருக்கும்.”
“சே! மோசம்ல. எப்படி கிராமத்துல, மொஃபசில்ல இருக்குற நம்மளை மாதிரி ஸ்டுடென்ட்ஸ்லாம் எல்லாம் கோச்சிங் க்ளாஸ் சேர்ந்து படிக்க முடியும். பாப்போம். அடுத்து வர்ற பசங்களுக்காச்சு ஏதாச்சு மாற்றம் நடக்குதான்னு.”
“ஆமா, என்ன பண்றது. பாப்போம்.”
“இப்ப அதைல்லாம் கடந்து வந்திருப்பல்ல. ஓரளவு மெச்சூரிட்டி வந்திருக்கும்.”
“உண்மைதான். கடந்து போனதை பத்தி என்ன செஞ்சிட முடியும். இன்னிக்கு நடப்பைப் பாக்க வேண்டியது தான்.”
ஆர்டர் செய்த் பஜ்ஜி வந்துவிட்டது. அவளிடம் கொஞ்சம் எடுத்துக்கொள்ள சொன்னதற்கு பசிக்கவில்லை என மறுத்து விட்டாள். வெளியே மழைவரத் தொடங்குவது போல் இருந்தது. அச்சூழலில் பஜ்ஜி சாப்பிடுவது அம்சமாக இருந்தது. சினிமா, பாடல்கள், பொழுதுபோக்கு என கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
“இப்ப யார் பேன்? தனுஷ் தானா” என கேட்டேன்.
“எப்பவும் தனுஷ்தான்” என்றபடி சிரித்தாள்.
“சரி சரி. முன்ன மாதிரி பறவைகளைல்லாம் கவனிக்கிறீயா?” என்றேன்.
“முன்னாடி அளவுக்கு இல்லை. எப்பயாவது கண்ணில் படுறதை பார்ப்பேன். நேத்து கூட ஒரு பாரடைஸ் ஃபிளைகாட்சர் பார்த்தேன்.”
“ஆன், சொல்லிருக்க, ஞாபகமிருக்கு. அழகா இருக்கும்ல?”
“ஆமா ரொம்ப அழகு!”
அப்படியே மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று அனைத்தைக் குறித்தும் பேசினோம். அவள் மாறவே இல்லை. அதே உற்சாகம், புன்னகை. எதுவும் குறையவில்லை. பள்ளிக் காலத்திற்கே ஒருகணம் சென்று வந்ததைப் போல் இருந்தது.
கொஞ்ச நேரத்தில் விடைபெற வேண்டிய தருணம் வந்தது. இந்த விடைபெறல் முன்பைப்போல் பிரக்ஞையற்றோ, தொடர்பற்றோ நிகழ்ந்து விடவில்லை. “சரி, நிரஞ்சன். மழையா இருக்கு, பாத்து போ. முடிஞ்சா பாப்போம் திரும்ப” என்றபடி விடைபெற்றாள். இருவரின் பாதைகளும் மீண்டும் வெவ்வேறு திசைகளில் பிரிந்தன.
சற்று தொலைவிலிருந்த பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். மழை வலுக்கத் தொடங்கியது. சில உறவுகள் சந்தித்தாலும் சந்தித்துக் கொள்ளாவிட்டாலும், பேசினாலும் பேசிக்கொள்ளா விட்டாலும், கிணற்றில் போட்ட கல் போல அப்படியே இருக்கும். அப்படிப்பட்ட ஒன்றுதான் நிலோஷனாவினுடையது என்று புரிந்தது. தாம்பரம் செல்லும் பேருந்து தண்ணீரை அடித்தபடி வந்து நின்றது. விரைந்த கூட்டத்தின் நடுவே முண்டியடித்தபடி ஏறினேன்.
உண்மை நிகழ்வு எனில், மிகவும் மனமகிழ்ச்சி. மிக எளிமையான, அருமையான நடை?, விறுவிறுப்பான பதிவும் கூட. அந்த அறிவியல் நிறுவனம் வரும் இடங்களில், ஏதோ “சுஜாதா”வின் புத்தகம் படிப்பது போல் தோன்றியது. வாழ்த்துகள் தோழரே!