சிறுகதைகள்

நிறைவு – கா.சிவா

சிறுகதை | வாசகசாலை

பாரிமுனையிலிருந்து வில்லிவாக்கம் வரை வந்த  பேருந்திலிருந்து தோளில் மாட்டிய பேக்குடனும், கையில் ஒரு நீலநிற பிளாஸ்டிக் கவருடனும் இறங்கிய கலா, சின்னம்மா வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வழியில் கடையில்  தென்பட்ட இளஞ்சிவப்பான தேன்மிட்டாய் பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொண்டாள். சங்கரைப் பார்க்க போகிறோம் என்ற எண்ணம் அவள் மனதை ஒருவித பரவசத்தில் ஆழ்த்தியது. தன்னைப் பற்றி, தன்னுள்ளத்தைப் பற்றி , அவனைப் பற்றிய தன் எண்ணங்களையெல்லாம் இன்று அவனிடம் கொட்டிவிட வேண்டும். இத்தனை வருட மன பாரங்கள்  இன்றோடு இறங்கிவிடும் என்ற நினைப்பே பெரும் நிம்மதியை அளித்தது.

 

பதினைந்து வருடங்களுக்கு முன் கிராமத்து வீட்டில், சங்கரை முதன் முதலாகப் பார்த்தபோது உண்டான அதே பரவசம் , அந்நிகழ்வை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சில் எழும். தன்னைவிட ஐந்து வயதும், ஏழு வயதும் மூத்த அண்ணன்களுடன் இருந்த கலா, பக்கத்து வீட்டில் சின்னம்மாவிற்கு பையன் பிறந்திருக்கிறான் என்று சொல்லியபடி அம்மா சென்றபோது உடன் சென்றாள். இவர்கள் வீட்டில் மூன்று பேருமே நல்ல கருப்பு. இரண்டு ஆயாக்களும் மூன்று இளம் பெண்களும் சூழ அமர்ந்திருக்க நடுவில் அமர்ந்திருந்த சின்னம்மாவின் மடியில் பளபளப்பான வெண்ணிறத்தில் சிறு குழவி, மென் இமைகள் மூடி தூங்கிக் கொண்டிருந்தது.

 

மூன்று வயதான கலா, பச்சிளங்குழவியை முதல்முறையாகப் பார்த்தாள். லேசான நடுக்கமும், பரவசமுமாக கையை நீட்டி குழந்தையைத் தொட்டாள். நேற்று தெருவில் பறந்தும், உருண்டும் வந்த எருக்கம் பஞ்சைத் தொட்டபோது உணர்ந்த மென்மை  எனத் தோன்றியது. இவள் விரல் பட்டவுடன் உடல் சிலிர்த்து புளியம் பூப்போல வாயைத் திறந்து, அக்குழந்தை முறுவலித்தபோது இளஞ்சிவப்பான பல்லில்லா மொருதை தெரிந்தது. அருகிலிருந்த பெண்கள் ” பாரேன், அக்கா தொட்ட ஒடனே சிரிக்கிறத” என ஆச்சர்யப்பட்டார்கள். அவர்கள் சொல்வதற்கு முன்பாகவே கலாவிற்கு, ஏனென்று தெரியாத பிரியம் அந்தப் பிள்ளை மேல் உண்டாகிவிட்டது.

 

அந்த நிகழ்வை பரவசமாய் நினைவுகூரும் போதெல்லாம், அன்று அவனை மடியிலேந்தியிருந்த தன் முகத்தில் அவன் சிறுநீர் அடித்ததையும் சற்று, உளக்கூம்பலோடேயே நினைத்துக் கொள்வாள். கலாவிற்கு சங்கர்மேல்  ஏனென்று விளக்கமுடியாத  பிரியம் உண்டானதைப் போலவே, அவனுக்கு இவள் மேல் காரணமில்லா வெறுப்பு இருந்தது.

 

பிறரிடம் சிரித்து விளையாடிக் கொண்டிருப்பவன் முகத்தில், இவளைப் பார்த்தவுடனேயே  புன்னகை மறைந்து ஒரு ஒவ்வாமை தோன்றிவிடும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு காரணங்களினால் அந்த வெறுப்பு தோன்றும். இவளுக்கு இரண்டு அண்ணன்கள், அவனுக்கோ இரண்டும் அக்காக்கள். சங்கரின் அம்மா அவனிடம் பிரியமாகயிருப்பதால், அக்காக்களின் வெறுப்பினூடேயே அவன் வளர்ந்தான். கலாவின் அண்ணன்கள் இவளை செல்லம் கொஞ்சியபடி இருப்பதைக் காணும்போது சங்கர் உள்ளே சுருங்குவான்.

 

சங்கர் பனங்காய் வண்டியை ஓட்டி விளையாடும்போது கலா சைக்கிள் ரிம்மை வைத்து விளையாடினாள். தன்னிடம் இருக்கும் ரிம்மை அவனுக்கு கொடுக்கலாம் என அவனை நெருங்கியபோது, அவன் முகத்தில் தெறித்த வெறுப்பு இவளை பின்வாங்கச் செய்தது.

 

அதிக தூரம் நடக்காமல் அண்ணன்களின் சைக்கிளில் அமர்ந்து பள்ளிக்கு செல்லும் கலாவை வெறித்தபடி, அவனுடைய அக்காவின் கையைப் பிடித்தபடி அதே பள்ளிக்கு நடந்துவருவான் சங்கர்.

 

சற்று குதிப்பது போல நடப்பதால், கழுதை குதிரைபோல நடப்பதாக சங்கரை பிள்ளைகள் கேலி செய்வார்கள். என்ன செய்வதென்றறியாமல் பார்த்து நிற்கும் கலாவின் மேல் பெருங்கோபம் பொங்கும் இவனுக்கு.  கலாவை யாரும் கிண்டலாகப் பேசி  கேலி செய்யமாட்டார்கள். அப்படி செய்தால் அவள் அண்ணன்களிடம் சொல்லிவிடுவாள் என்ற பயம்.

 

 

ஆனால் கலாவிற்கு சங்கரின் மீதான பிரியம் சற்றும் குறையவில்லை. அவன் சிறியவன் புரியாமல் கோபப்படுகிறான். தன் அன்பை சொன்னால் புரிந்து கொள்வான் என்றே ஒவ்வொரு முறையும் நெருங்கிச் செல்ல முயற்சித்து, அவனின் கடுகடுத்த முகத்தைக் கண்டு மனம் சுருங்கி திரும்புவாள்.

 

ஐந்து வயதிலேயே வயலில் சிறு வேலைகளைச் செய்வதற்காக சங்கரை அவன் அம்மா இழுத்துச் செல்வாள். அவன் களைத்துச்  சோர்ந்து திரும்பி வரும்போது, கடினமான எந்த வேலையும் செய்யாமல் வீட்டு வாசலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் கலா, தன் புதுப் பொம்மைகளை இவனுக்குக் கொடுக்க முயற்சிப்பாள். இவளைப் பார்த்தவுடன் அவன் முகம் கோபத்தில் சிவப்பதற்கான காரணம் புரியாமல் திகைத்து நிற்பாள் கலா.

 

அடுத்த வீதியிலிருந்த காவேரியக்காவின் திருமண நிகழ்விற்கு தரையில் பாய் விரித்து பந்தி போட்டார்கள். வழக்கம் போலவே முதல் பந்தியிலேயே பிள்ளைகளை அமர வைத்தார்கள். பரிமாறிய கலாவின் அண்ணன், கலாவிற்கு பிடித்தமான பணியாரத்தையும், உட்காருவையும் அவளுக்கு அதிகமாக வைத்தான். எதிரில் அமர்ந்திருந்த சங்கரின் முகத்தைப் பார்க்க கலாவால் முடியவில்லை .

 

பிள்ளைகளுக்கிடையேயான அன்பைப் பற்றியோ, வெறுப்பைப் பற்றியோ பெரியவர்கள் கண்டு கொள்வதில்லை. அதே போலவே, பெரியவர்களின் கவலைகளிலும், பிரச்சனைகளிலும் பிள்ளைகள் கவனம் கொள்வதில்லை. எனவேதான், இரண்டு வருடங்களுக்குமுன்  ஏன் சென்னைக்கு அழைத்து வந்தார்கள் என்பதைப் பற்றி எதுவும் யோசிக்க முடியாமல்,  அவசர நகரத்தில் எப்படி காலூன்றுவது என்ற திகைப்பை கலாவும் சங்கரும் அடைந்தார்கள்.

 

கலாவின் இருப்பிடம் நுங்கம்பாக்கத்திலும், சங்கரின் வீடு வில்லிவாக்கத்திலும் அமைந்தது. பத்தாவது முடித்தவுடனேயே கலா அதிகமான கனத்தை சுமக்கவேண்டிய அவசியமில்லாத, வீட்டிற்கு அருகிலிருந்த  துணிக்கடையொன்றிற்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். பெரிய அண்ணன் ஊரிலேயே இருந்தான்.  சின்னவன் ஒரு தனியார் நிறுவனத்தில் தற்காலிகப் பணியாற்றினான்.

 

இப்போது பத்தாவது படிக்கும் சங்கர்  இருமுறை மட்டுமே கலாவின் நுங்கம்பாக்கத்து  வீட்டிற்கு வந்துள்ளான். முதல்முறை வந்தபோது, பேச்சுப் போட்டியில் வென்றதற்காக கலா பெற்றுவந்த , பொன்னிறத்தில் ஒளி வீசிய கோப்பையை அலமாரியில்  கண்டு முகம் சுருங்கினான். இரண்டாவது முறை வந்தபோது, புதிதான கட்டிலில் புது மெத்தையில் கலா மட்டுமே படுத்து உறங்கியதையும்,  அருகில் பெஞ்சில் அவளுக்காக வைக்கப்பட்டிருந்த ஆப்பிள், சாத்துக்குடி பழங்களையும் கண்ட சங்கரின் உள்ளத்திலும் கண்ணீர் பெருகியது.

 

புதுக் கட்டில் பற்றிய நினைவு தோன்றியவுடன், கையில் அமர்ந்த கரப்பான் பூச்சியை உடல் அதிர்ந்து  அனிச்சையாய் தட்டிவிடும் வேகத்தில் அந்நினைவை தள்ளினாள். இயல்பாக,  ஒரு வாரமாய் ஊரில் சந்தித்தவர்களைப் பற்றி எண்ண ஆரம்பித்தாள். அனுமந்தக் குடியிலிருக்கும் தோலெல்லாம் சுருங்கி, பார்வை குறைந்த  ஆயா வாகாக தலையையும், தோள்பட்டையையும் காட்டும் பசுவை வருடுவது போலவே கலாவின் முகத்தையும், கையையும் வருடியபடியே பேசினார்.  கோட்டையூரில் இருக்கும் அத்தை இவளுக்காக ஆமவடை செய்து தின்னக் கொடுத்தபோது, பள்ளிப் போட்டிகளில் முதலிடம் பிடித்ததற்கான பதக்கத்தை வாங்கும் மலர்ச்சியை இவள்  அடைந்தாள். பள்ளத்தூரில் மாமன் மகன்  சந்தையில் கறி வாங்கி வந்து, சமைத்ததை இவள் உண்டதைக் கண்டபோது அவரது தோற்றம் காண முடியாத ஒன்றைக் கண்ட  நிறைவில் தளும்பியது.  சிவலாங்குடியில் சொந்தக்காரர்களின் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று பேசிய போது அவர்களின் புன்னகையும், பரிவும் தன்னிடம் அன்பு காட்ட இத்தனை பேர் உள்ளார்களே என பெரும் நிறைவாய் உணர்ந்தபோதும் சங்கரின் வெறுப்பான முகம் தொண்டைக்குள் ஒட்டிய வெங்காயத் தோல்போல் மனதை அறுவியது.

 

எத்தனை பேர் அன்பாய் இருந்தென்? தன் இத்தனை வருட அன்பை புரியாமல் ஒருவன் இருக்கிறானே. அவன் புரிந்து கொள்ளாமல் இருப்பதைவிட, அதை வெளிப்படுத்தாமல் இருக்கும் தன் மேலேயே அதிகமான வெறுப்பு ஏற்பட்டது. முயற்சி செய்யாமலா இருந்தாள். ஆவலுடன் அருகில் செல்லும் ஒவ்வொரு முறையும் அந்த கடுகடுத்த வெறுப்பு படர்ந்த முகத்தை பார்த்தவுடன் செலவுக்குள் நுழையும் நண்டுபோல மனம் ஒளிந்து கொள்கிறது. இவ்வளவு வெறுப்போடு இருப்பவன்மேல் ஏன் அன்பு பொங்க வேண்டும். போடா கழுதையென விட்டுவிட்டாலென்ன? என்று அவ்வப்போது உள்ளுக்குள் ஒரு குரல் கேட்கும். அவன் வெறுப்பாக இருப்பதற்காக என் அன்பை ஏன் விடவேண்டும்? நான் அன்பாகத்தான் இருப்பேன். எதற்காகவும் மாற்றிக் கொள்ளமாட்டேன். இந்த சின்ன விசயத்திற்காக அன்பை விட்டுவிட முடியுமாயென்ன… என பதில் கூறிக் கொள்வாள்.

——

கதவைத் திறந்த  சின்னம்மாவின் முகத்தில் ஆச்சர்யமும், பரிவும் ஒருங்கே ஒளிர்ந்தது. கருமை தூக்கலான மாநிற முகத்தின் புன்னகை வசீகரமாக இருந்தது.

 

” வா கலா. நல்லாயிருக்கியா? ஊருக்கு போனியாமே! எல்லாரும் நல்லாயிருக்காங்களா?”

 

கிராமத்து பெரியவர்களின் அதே இயல்பில் கேள்விகளாக அடுக்கினார். கலா எல்லாக் கேள்விகளுக்குமே புன்னகைத் தலையாட்டலையே பதிலாக அளித்தாள்.  சங்கரின் சின்ன அக்கா ரமா மட்டுமே உள்ளே  இருந்து புன்னகைத்தாள்.

” சங்கர் எங்கேம்மா” என ஆவலுடன் வினவினாள்.

” இப்பத்தான் காய்கறி வாங்கறதுக்காகப்…. போனான். ரெண்டு நாளைக்கு முன்னாடி ஏதோ கனா வந்துச்சாம். காலையில எந்திரிச்ச ஒடனே உன்னப்பத்தி விசாரிச்சான். இதுவரைக்கும் ஒன்னப்பத்தி எதுவுமே அவன் கேட்டதுமில்ல, சொன்னதுமில்ல. என்ன கனாடான்னு கேட்டதுக்கு ஓங்கிட்டதான் சொல்லுவேன்னு சொல்லிட்டான்” என்றபடி கையைக் கொண்டு தன் தாடையை தாங்கியவாறு ஆச்சர்யப் பாவனையோடு சொன்னார்.

 

கலாவின் முகம் ஏன் விகசித்தது என்றோ விழிகளில் ஏன் நீர் திரண்டது என்றோ புரியாமல், தான் ஏதாவது தவறாக சொல்லிவிட்டோமா? என்று சங்கரின் அம்மா  தான் சொன்னவற்றை மீண்டும் யோசித்துப் பார்த்தார். தவறாக ஒன்றும் தென்படாததால், ” என்னாச்சும்மா, கலா ” என அதிர்ச்சியான குரலில் கேட்டார்.

 

” ஒன்னுமில்லம்மா, ரயிலில் வந்தது ஒரே களைப்பா இருக்கு.  குளிச்சிட்டு வந்திடறேன்” என்று கூறியபடி குளிக்க தயாரானாள்.

*****

 

இரு கைப்பிடிக்குள்ளும் காய்கறி நிரம்பிய இரண்டு பைகளை மாட்டிக் கொண்டு  மிதிவண்டியை ஓட்டிக் கொண்டுவந்த சங்கரின் நினைவெல்லாம் கலாவைப் பற்றிய எண்ணங்களே அலையடித்துக் கொண்டிருந்தது. நேற்று அதிகாலை அந்தக் கனவு கண்டு விழித்தபின்தான் கலாக்கா மீது இவனுக்குள் இவ்வளவு வெறுப்பு இருந்ததே தெரியவந்தது. கலாக்காவின் முகத்தை நினைவுக்கு கொண்டுவர எத்தனை பிரயத்தனப் பட்டாலும் முடியவில்லை. இவனெங்கே அவரின் முகத்தைப் பார்த்தான். தூரத்தில் தெரியும் தெளிவற்ற தோற்றத்தின் சிறு அசைவிலேயே கலாக்காவை அறிந்துவிடுவான்.

அவர் கையில் என்ன வைத்துள்ளார், என்ன செய்து கொண்டிருக்கிறார்,  யாரெல்லாம் அவருடன் இருக்கிறார்கள் என ஓரப்பார்வை பார்த்தவுடன் மனதில் சூடு ஏறிவிடும். உடலே கொதிப்பதுபோல தகிக்கும்.

 

கலாக்காவைப் போல பல பேர் இருந்தாலும் அவர்களெல்லாம் வேறெங்கோ உள்ளார்கள். பக்கத்து வீட்டிலிருக்கும் கலாக்கா தன்னைவிட மகிழ்வாக இருப்பதைத்தான்  இவனால் தாள முடியவில்லை. அவரின் நினைவு வந்தாலே ஒருமாதிரி அருவருப்பு தோன்றி நாவில் கசப்பூறத் தொடங்கிவிடும். தன்னிடம் இருப்பவை, தன் மேல் அன்பாய் இருப்பவர்கள் எல்லாம் ஆழத்தில் அமிழ்ந்து,  கலாக்கா மட்டும் பிரமாண்ட உருவத்தில் எழுந்து தன்னை காலடியில் போட்டு புழுவை நசுக்குவது போல தேய்க்கப் போவதாகத் தோன்றும். அவரின் முகம் பெரியதாக வீங்கி, நாக்கு தொங்க விழிகள் பிதுங்கித்  தொங்குவதாகவும் கற்பனை செய்து கொள்வான்.

 

சிறு கனவு எல்லாவற்றையும் எளியதாக, எடையற்றதாக ஆக்கியபோதுதான் தன் மனம் எவ்வளவு கனத்தை தாங்கிக் கொண்டிருந்தது என்பது சங்கருக்குப் புரிந்தது. கனவிலும் பெரிதாக ஒன்றுமில்லை. இவனுக்கு எப்போதும் கிளிகளின் கூர்மையான மூக்கும் , அவை வில்லைப் போன்று பறப்பதும் மிகவும் பிடிக்கும். அன்றைய கனவில்  வாகை மரத்தின் கிளையின் சிறு பிளவிலிருந்து வெளிவந்த  பச்சைக்கிளியொன்று எல்லாத் திசைகளையும் நோட்டமிட்டபின், கீச்சிட்டபடி பறந்தது . இவன் மனதில் எழுந்த உந்துதலால் மரத்திலேறி  பொந்துக்குள் கைவிட்டு, இன்னும் வண்ணம் பெறாத முட்டையிலிருந்து வெளிவந்த இரண்டு கிளிக்குஞ்சுகளை வெளியே எடுத்துப் பார்த்தான். அதன் தொளதொளப்பான ஈரமும்  உடலில் ஒட்டிக் கொண்டிருந்த மயிர்ப்பிசிறுகளும் ஒருவித அருவருப்பை உண்டாக்கியபோது கலாக்காவின் நினைவு எழுந்தது. சட்டென அவை இருந்த பொந்துக்குள்ளேயே போட்டான். சற்று யோசித்து, டவுசர் பையில் வைத்திருந்த கருநீல  நாவல் பழங்களை கையில் அள்ளி  அந்தக் கிளிக்குஞ்சுகளின் அருகே போட்டுவிட்டு மரத்திலிருந்து கீழே இறங்கினான். தரையில் கால் வைக்கும்போது, கீச்கீச்சென்ற  ஒலியைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். பச்சை மஞ்சள் நீலம் என எல்லா வண்ணங்களும் கலந்த இறகுகளுடன் இரண்டு கிளிகள் அந்தப் பொந்துக்குள்ளிருந்து  பறந்துவந்து இவன் தோளில் அமர்ந்தன. அவ்வளவு அருகில் அவன் கிளிகளைப் பார்த்ததேயில்லை. பிரமிப்போடு அவன் பார்த்துக் கொண்டிருத்தபோதே அக்கிளிகளின் முகம் கலாக்காவின் சாயலாக மாறின.

 

இவன் ஆச்சர்யத்தில் மலர்ந்த முகத்துடன் விழித்துக் கொண்டான். மனதில் நிகழ்ந்த மாற்றம் என்னவென்று தெளிவாக புரியாவிட்டாலும் பெரும் பாரம் அகன்றதை உணர்ந்தான். அவர்மேல் பெரும் பிரியம் உண்டானது. கலாக்காவை காணவேண்டுமென ஆசை எழுந்தது. அன்று காலை இவன் முகத்தைப் பார்த்த  அம்மா,” என்னடா தம்பி! ஒம்மொகம் இன்னைக்கி இவ்வளவு பிரகாசமா இருக்கு” எனச் சொல்லியபடி இவன் தலையின் இருபக்கமும் கையை வைத்து வழித்து சொடக்கு ஒடித்து மாய்ந்து போனார்.

—–

தன் வீட்டு வாசலில் நின்ற பக்கத்து வீட்டு  ரகு அண்ணன், பதட்டமாக உள்ளே பார்த்தவாறு வாசலருகே நின்றார். சைக்கிளை  நிறுத்தும்போது ” தம்பி, ஒரு ஆட்டோ புடிச்சிக்கிட்டு வா ” என்று அம்மாவின் குரல் கேட்டது.

” எங்கேம்மா போகனும்”

 

” ஆஸ்பத்திரிக்கி போகனும். சீக்கிரம் கூட்டிக்கிட்டு வா ”

சைக்கிளை அப்படியே நிறுத்திவிட்டு தெருமுனையிலிருந்த பிரதான சாலைக்கு ஓடி ஒரு ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி, அவசரம் ஆஸ்பத்திரி போகவேண்டுமெனக் கூறி அழைத்து வந்தான். கதவினோரம் நின்று கவனித்த அம்மா ஆட்டோவைப் பார்த்தவுடன் உள்ளே ஓடி,  இவன் அக்கா மற்றும் பக்கத்துவீட்டு அக்காவுடன் சேர்ந்து கலாக்காவை தூக்கிக் கொண்டு வந்தார்கள். பார்க்க வேண்டுமென ஆவலோடிருந்த கலாக்காவை இம்மாதிரியான கோலத்தில் பார்த்து ஒருகணம் திகைத்து நின்றுவிட்டான். ” டேய்” என அம்மாவின் சத்தம் உலுக்கியதும் சுயநினைவுக்கு வந்தான்.

 

கலாக்காவின் உடைகள் சரியாக அணியப்படாமல் இருந்தன. தன் உணர்வற்றவராக. முகம் வெளிரக் கிடந்தார். சங்கர் முதலில் ஆட்டோவினுள் ஏறிக் கொண்டு அவரை உள்ளே வாங்கினான். அப்படியே அமர்ந்து அவர் தலையை தன் மடியில் வைத்துக்கொண்டான். அக்காவின் கால்களைப் பிடித்தபடியே உள்ளே ஏறிய அம்மா, அவற்றை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்தார். ரகு அண்ணன் ஓட்டுநர் அருகில் அமர்ந்து கொண்டு, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு போகச் சொன்னார். அவர்  கையில் வைத்திருந்த பெரிய நீலநிற பிளாஸ்டிக் கவரில் எக்ஸ்ரே படமும் பேப்பர்களும் தெரிந்தன.

 

வெட்டப்பட்ட செடிபோல தொய்ந்து கிடந்த கலா அக்காவின் பிரியம் பொலியும் முகத்தை, சங்கர் முதல்முறையாகப் பார்த்தான். கலா லேசாகத் திறந்திருந்த தன் விழிகளால் அருவருப்போ, வெறுப்போ  தோன்றாமல் தன்னைப் பார்த்த சங்கரின் முகத்தை  கடைசியாகப் பார்த்தாள். அவன் முகத்தில் தெரிந்த கனிவையும் பரிதவிப்பையும் கண்டு, தான் சொல்ல நினைத்தவற்றை, எத்தனை வார்த்தைகளாலும் உணர்த்திவிட முடியாததை அவன் உணர்ந்துவிட்டான் எனப் புரிந்து கொண்டதைக் காட்டும் விதமாக   முகம் பெரும் நிறைவால் ததும்பியது. இமைகள் மூடியபோது விழிகளுக்குள் நிறைந்திருந்த கண்ணீர் கோடுகளாக வழிந்து சங்கரின் கரங்களைச் சுட்டது.

 

 

 

 

 

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button