(சாஹித்ய அகாடெமி வெளியீடான இந்திய சிறுகதைகள் (1900-2000) தொகுப்பு நூலை முன்வைத்து)
சாஹித்ய அகாடெமி வெளியீட்டில் வந்துள்ள நூலான ‘இந்திய சிறுகதைகள்’ என்ற நூலை வாசித்தேன். இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான இந்திய மொழி எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்வு செய்து தொகுத்திருக்கிறார்கள். இத்தொகுதியை இரு பகுதியாக பிரித்துள்ளார்கள். 1900-1950 , 1950-2000 என்று இரு பாதியாகப் பிரித்து அக்காலகட்டங்களின் தன்மைகளை பிரதிபலிக்கும் வகையிலான கதைகளை தேர்வுசெய்துள்ளார்கள். சிறந்த சிறுகதைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல்வேறு ஆழமான மற்றும் அடிப்படையாக உள்ள பிரச்சனைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கதைகளை சேர்த்திருக்கிறார்கள். தொகுப்பின் அளவைக் கருதி பல முக்கியமான படைப்பாளிகளின் சிறுகதைகளை இதில் சேர்க்க முடியாமல் போயிருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள கதைகள் வறுமை, பஞ்சம், இயற்கைச் சீற்ற பாதிப்பு, சாதி ஏற்றத் தாழ்வுகள், பிரிவினைக் காலத் துயரம், பெண்களின் உலகம், பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பழமைவாதம், பாலியல் சிக்கல்கள், சுரண்டல்கள், பொருள் மோகம், துறவு, ஆன்மீகம், கால மாற்றம், அடையாளச் சிக்கல்கள், போலித்தனங்கள் போன்ற பல்வேறு விஷயங்களை பேசக்கூடியவைகளாக உள்ளன. இதில் எனக்குப் பிடித்த சில கதைகளை பற்றி மட்டும் சிறு குறிப்பு தரலாம் என்று நினைக்கிறேன். அனைத்துக் கதைகளையும் பற்றிக் குறிப்பெழுத முடியாது. நிறையவே உள்ளது.
முதல் பகுதியில் வங்காளச் சிறுகதையாக தாரா ஷங்கர் பானர்ஜி அவர்களின் ‘படகோட்டி தரிணி’ என்ற கதை சேர்க்கப்பட்டுள்ளது. இக்கதை ஒரு காவியத்தன்மை கொண்டதாக முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. அது மிக மிக உண்மை என்பதை வாசித்துப் பார்த்தபோது உணர முடிந்தது. வங்காளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பற்றிய ஒரு சித்தரிப்பு. சாதாரணமாக மழை பெய்தாலே தாழ்வாக இருக்கும் கிராமப் பகுதிகள் வெள்ளத்தில் மிக எளிதாக பாதிக்கப்படுவதை இக்கதை காட்டுகிறது. சர்வ சாதாரணமாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெள்ளம் ஒரு கிராமத்தைச் சூழ்கிறது. மக்கள் வீட்டை விட்டு காலி செய்து பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்கிறார்கள். பட கோட்டி தரிணி அவன் மனைவியை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறான். இருள் சூழ்ந்த நேரத்தில், தரிணி மனைவியோடு மூழ்கடிக்கின்ற வெள்ளத்தின் நடுவே சிரமத்தோடு செல்கிறான். உயிர் பிழைப்பது ஒன்றே ஒரே சிந்தனையாக மனதைப் பிடித்திருக்கும் சூழலில் மனைவிக்கு ஆறுதல் தரும் வகையில் தரிணி உரையாடிக்கொண்டே செல்வது பெரும் சோகத்தை நமக்குள் கடத்துகிறது. ஆனால், கடைசியில் மனைவி நீரில் மூழ்கி இறந்துவிடுவாள். முன்பு ஒருமுறை ஆற்றில் விழுந்துவிட்ட ஒரு பெண்ணைக் காப்பாற்றிய தரினியால் வெள்ளத்தின் போது மனைவியை காப்பாற்ற முடியாமல் போவது பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. உணர்ச்சிவசப்பட வைக்கும் வார்த்தைகளையோ மிகைப்படுத்தல்களோ இல்லாத மிக எதார்த்தமான கதை. ஆனால், காவியத்தன்மை கொண்ட சோகம் நம்மையும் பீடிக்கும்.
இதே போல வெள்ளத்தை பற்றிய இன்னொரு கதையாக மலையாளத்தில் தகழி அவர்கள் எழுதிய ‘வெள்ளத்தின் போது’ இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அக்கதையில், வெள்ளத்தின் போது மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும்போது ஒரு வீட்டின் கூரையில் நிர்கதியாக ஒரு நாய் மாட்டிக்கொள்ளும். யாராவது தன்னைக் காப்பாற்றுவார்களா என்று ஏங்கியபடி அது நிற்கும். ஆனால், கடைசி வரை ஒருவரும் வராத நிலையில் அதன் துயரக்குரல் மட்டும் அதிகரித்துகொண்டிருக்கும் வெள்ளப்பெருக்கிற்கு நடுவில் கேட்கும். இக்கதை இக்கட்டான சூழலில் மனிதனின் தன்மை எப்படி இருக்கும் என்பதை பதிவு செய்கிறது. இதை வாசிக்கும்போதே ஜாக் லண்டனின் கதைகள் நினைவில் எழுந்தவாறே இருந்தது. மனிதன் வெறுமனே சுயநலமும், உயிரியல் சார்ந்த வேட்கைகள் கொண்டவன் மட்டும்தான். அன்பு, காதல் போன்ற விஷயங்கள் எல்லாம் அவனது பலகீனத்தால் ஏற்பட்டவைகள் என்று கருதும் லண்டன், டார்வினின் கோட்பாடான என்ற தகுதியானது தப்பிப் பிழைக்கும் (survival of the fittest) என்ற கருத்தை ஆழமாக நம்பினார் அதை தன் கதைகள் வழியாக பரிசீலித்தும் பார்த்தார். ‘உயிராசை’ என்ற அவருடைய கதையில் மனிதனுக்கும் ஒரு ஓநாய்க்கும் நடக்கும் கடுமையான போட்டி பற்றிய சித்தரிப்பு வரும். உணவுக்கான அந்தப் போட்டியில் மனிதன் ஓநாயை தோற்கடித்து வெற்றி பெறுவான். ரத்தமும் சதையுமாக இக்கதையை சித்தரித்து எழுதியிருப்பார். இக்கதையை அதே தன்மை குறையாமல் புதுமைப்பித்தன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
பிரேம்சந்த் அவர்களின் ‘கோடி துணி’ என்ற கதை மிகவும் புகழ்பெற்றது. இக்கதையை பிரேம்சந்த் கதைகள் என்ற மொழிபெயர்ப்புத் தொகுதியில் முன்னரே வாசித்திருக்கிறேன். இக்கதையில் வரக்கூடிய தந்தை, மகன் இருவரும் வறுமையில் வாடியவர்கள். மனைவி இறந்துகிடக்கிறாள். ஆனால், அதைப் பற்றிய உணர்வின்றி தந்தையும் மகனும் இருக்கிறார்கள். ஊர் பெரியவர் ஒருவர் உடலை அடக்கம் செய்ய துணி வாங்க காசு கொடுக்க, அந்தக் காசை குடித்து காலி செய்கிறார்கள். வறுமை நிலை மனிதர்களை எப்படி அடிப்படையான மனிதத் தன்மையிலிருந்து நீக்குகிறது என்பதை காட்டக்கூடிய கதை. பிரேம்சந்த் அவர்களின் கதையில் அணிகளோ அலங்கார வார்த்தைகளையோ பார்க்கமுடியாது. நேரடியான கதைகூறல். அவருடைய கதைகள் அவருடைய வாழ்க்கை அனுபவத்தில் இருந்து பெற்றவைகளின் தொகுப்பு என்று கூட சொல்லாம். அத்தோடு அக்கதைகள் சற்று முற்போக்குத் தொனி கொண்டவைகளாகவும் இருக்கும்.
‘ரம்ஜானி’ என்ற கதை கால மாற்றத்தை பற்றிய அழகான கதை. குதிரை வண்டிகள் ஓடிய காலத்தை பதிவு செய்வது. குதிரையை வைத்து பிழைப்பு நடத்தி வந்த ரம்ஜானிக்கு புதிதாக வந்திருக்கும் ரிக்ஷா ஒரு சவாலாக, வாழ்க்கையின் முட்டுக்கட்டாகத் தோன்றுகிறது. இப்போது மக்கள் எல்லோரும் ரிஷாவில் போவதால் குதிரைவண்டி செயலிழக்கிறது. வேலையற்று வீட்டில் இருக்கிறான். குதிரையோ சரியான உணவின்றி வாடுகிறது. குழந்தைகள், மனைவி எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள். கடைசியாக மாற்றத்துக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டவனாக ரம்ஜானி குதிரையை விற்று ரிக்ஷா வாங்க முடிவெடுக்கிறான். இக்கதையில் ரிக்ஷாவின் வருகையின் போது மாற்றத்திற்கு தங்களை உட்படுத்தி கொள்வதில் குதிரை வண்டிகாரர்களுக்கு இருந்த மனத்தடையும், அது சார்ந்த சிறு கலக்கமும் மிக இயல்பாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. மாற்றம் குறித்த இக்கதை எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான். இன்று ரிக்ஷாவின் காலம் முடிந்து ஆட்டோ, கார் என்றாகிவிட்டது. அதே போல கைப்பேசி, இணையதள வசதிகள் பரவலாகிக் கொண்டிருந்த நேரத்தில் எஸ்.டி.டி டெலிபோன் பூத்களும், இன்டர்நெட் கடைகளும் இதே போன்றதொரு நிலையைத்தான் சந்தித்தன. ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மக்கள் இது போன்ற மனத்தடையையும் சிக்கல்களையும் தான் சந்திக்கிறார்கள்.
உருது சிறுகதைகள் இரண்டு இத்தொகுப்பில் உள்ளது. இரண்டுமே சற்று அதிர்சிகரமானது தான். ஒன்று சாதத் ஹசன் மண்டோ அவர்களின் ‘டோபா டேக் சிங்’ என்ற கதை. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பற்றிய அங்கதமான கதை. பிரிவினையின்போது ஒரு மனநல விடுதியில் உள்ள நோயாளிகளை இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் பிரித்து இடம் பெயரச் செய்வதைப் பற்றிய கதை. இக்கதையில் பல்வேறு வகையான பைத்தியங்கள் என்று உருவகமாக மண்டோ பலருடைய மனோநிலையை கடும் விமர்சன பூர்வமாக எழுதியிருப்பார். இது வெறுமனே ஒரு அங்கத எழுத்து மட்டுமே கிடையாது, மண்டோவின் மனதை கடுமையாக பாதித்த பிரிவினைகால துயரத்தின் வெளிப்பாடு. ‘சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்’ என்ற மொழிபெயர்ப்பு கதைகள் அடங்கிய மண்டோவின் தொகுப்பு ஒன்று தமிழில் வெளியாகியிருக்கிறது. அதில் இதே போன்ற காத்திரமான கதைகள் உள்ளது. அவருடைய கதைகளின் முழுமையான தொகுப்பும் தமிழில் வெளியாகியுள்ளது.
இத்தொகுப்பின் இன்னொரு உருது சிறுகதை இஸ்மத் சுக்தாய் அவர்களுடையது. ‘கனத்த போர்வை’ என்ற அந்த கதை பெரும் அதிர்ச்சி தரக்கூடிய கதை. இக்கதைதான் எனக்கு இஸ்மத் சுக்தாய் பற்றிய முதல் அறிமுகம் தந்தது. இதற்கு முன்பு அவர்களுடைய எந்த ஒரு கதையையும் நான் வாசித்தது கிடையாது. இன்றும் பெரிய அதிர்ச்சியளிக்கும் விவாதத்திற்குரிய விஷயத்தை 1950களுக்கு முன்பே எழுதியிருப்பது பெரும் வியப்பாக இருக்கிறது. ஒழுக்கம் சார்ந்த புறக் கட்டுப்பாடுகளின் மூலம் மட்டுமே சமூகம் ஆரோக்கியமாகவும் ஒழுங்காகவும் இருக்கும் என்று நம்பகூடியவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு கதை இது. ஒழுக்கம் சார்ந்த புறக் கட்டுப்பாடுகள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மிக அவசியம்தான், ஆனால், அது மட்டுமே தீர்வல்ல; அகம் சார்ந்த தனி மனிதனின் சுய கட்டுப்பாடு தான் முழுமையான தீர்வாகமுடியும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் புறவயமான ஒழுக்கக் கட்டுபாடுகளை விதித்துவிட்டால் மட்டுமே பாலியல் சார்ந்த ஒழுக்க மீறல்களைத் தடுத்துவிடலாம் என்று எண்ணகூடியவர்களுக்கு பெண்களுக்குள்ளே ஏற்படக்கூடிய தன்பால் உறவை பெரும் கேள்வியாக முன்னிறுத்துகிறது இக்கதை (இது ஆண்களுக்குள் ஏற்படும் தன்பால் உறவுக்கும் பொருந்தக்கூடியது தான்). இக்கதையின் மூலம் இஸ்மத் சுக்தாய் ஒழுக்கமற்ற நிலையை பரப்புகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்ற வழக்கை கூட சந்திக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், இக்கதை இதுபோன்ற நிலைக்கு பின்னால் உள்ள காரணத்தையும் சேர்த்துதான் பதிவுசெய்கிறது.
எம்.டி வாசுதேவன் நாயர் அவர்களின் மலையாள சிறுகதையான ‘ஷெர்லாக்’ என்ற கதை இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இக்கதையில் தன் அக்கா வசிக்கும் அமெரிக்காவிற்கு செல்லும் தம்பி சில நாட்கள் அங்கு தங்குகிறான். புதிய நிலத்தில், அந்நியப்பட்ட ஒரு வாழ்வையும், விரக்தியூட்டக்கூடிய தனிமையையும் சந்திக்கிறான். அக்காவும் அவளுடைய கணவனும் வேலைக்குச் சென்றுவிட வீட்டில் தனியாக இருப்பவனுக்கு துணையாக இருப்பது ஒரு பூனை மட்டுமே. வளர்ப்பு பூனை. எந்நேரமும் தூக்க கலக்கத்திலே அது இருக்கிறது. உணவுக்காக அது மறைந்து உறங்கும் இடத்தில் இருந்து வெளியே வருகிறது. அத்தோடு இவன் வீட்டில் செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் அப்பூனையும் இவனை ரகசியமாக பின்தொடர்கிறது. அல்லது அதுபோன்ற ஒரு பிரம்மை அவனுக்கு ஏற்படுகிறது. துப்பறிவதுபோல இப்பூனையின் செயல்பாடுகள் இருப்பதால் அதற்கு பிரபல துப்பறியும் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸின் பெயரை எம்.டி.வி அவர்கள் வைத்திருக்கிறார் போலும். பூனையின் தூங்கிவழியும் தோற்றமும், செயலற்ற மந்த நிலையும், அவன் இருக்கும் மயான அமைதிகொண்ட அந்த புறநகரின் பகல் பொழுதின் குறியீடு போலவே இக்கதையில் வருகிறது. இத்தகைய ஒரு நிலையை நம் புறநகர்களிலும் கூட நாம் உணர முடியும். பெரும்பாலும் பெரும் தொழிலகங்கள், நிறுவனங்கள் எல்லாம் மாநகரின் மையத்தை நோக்கியதாகவே இருப்பதால், புறநகர் வாசிகள் பெரும்பாலோர் வேலைக்காக அங்கு சென்று விடும்போது, அப்புறநகர் பகுதிகளில் ஆளரவமற்ற ஒரு அமைதி பகல்களில் இருக்கிறது. இக்கதை 60,70 கள் காலகட்டத்தில் வேலைக்காக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு குறிப்பாக மேற்கத்திய நாடுகளான ஐரோப்பா, அமெரிக்காவிற்கு பலர் புலம்பெயர்ந்து செல்லத்தொடங்கிய காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்த ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட இக்கதை அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் வாழ்வைப் பற்றிய ஒரு சிறு சித்திரம் என்று சொல்லலாம். புலம் பெயர்ந்தவர்கள் சந்திக்கும் பல சிக்கல்களில் மிக முக்கியமானது அடையாளம் சார்ந்த சிக்கல்களே. குறிப்பாக புலம் பெயர்வதின் தொடக்க காலங்களான உலகமயமாக்களுக்கு முந்திய காலங்களில், அந்நிய நிலங்களில், புதிய கலாச்சாரங்களோடு இலகுவாய் தங்களை பொருத்தி கொள்வதில் நிறைய சிக்கல்கள் அவர்களுக்கு இருந்திருக்கும். ஆனால், உலகமயமாக்கல் விரிந்து விஸ்தரித்துவிட்ட இக்காலத்தில் அத்தகைய சிரமங்கள் நிறையக் குறைந்துவிட்டன என்றாலும் அந்நியபட்ட தனிமையுணர்வு இன்றும் இருக்கத்தான் செய்கிறது. அத்தோடு தங்களுடைய அடையாளம் சார்ந்த சிக்கல்கள், தங்களின் பிறந்த இடம்,மொழி,வேர்கள் பற்றிய உணர்வும் அது சார்ந்த தேடலும் அவர்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கும். புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியத்தை ஆங்கிலத்தில் DIASPORIC LITERATURE என்று வகைப்படுத்துகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுர மாவட்டங்களில் சில ஊர்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தபோது ஒரு புதிய அனுபவத்தை காணமுடிந்தது. ஓரிரண்டு கடைகள் மட்டுமே உள்ள சிறிய கிராமங்களில் கூட பெரிய மாளிகைகள் போன்ற வீடுகள் பூட்டிய நிலையில் இருந்தன. அவ்வீடுகளின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வாழ்பவர்கள். மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் வருடத்திற்கு சில நாட்கள் மட்டும் ஊருக்கு வந்து தங்குகிறார்கள். மற்ற நேரங்களில் அவ்வீடுகள் பூட்டியே இருக்கும் என்றார்கள். ஏப்ரல் மே மாதங்களில் அவ்வூர்களில் நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் குடும்ப திருமண நிகழ்வுகளை இங்கு வரக்கூடிய விடுமுறை நாட்களில் ஏற்பாடு செய்துகொள்கிறார்கள். இப்பகுதிகளில் வெளிநாடுகளுக்கு செல்வது என்பது ஒரு அந்தஸ்தாகவே கருதப்படுகிறது. சிலர் மாப்பிளைக்கு தங்கள் பெண்ணை திருமணம் செய்து தருவதற்கு அவர் வெளிநாட்டிற்குச் சென்றிருக்கவேண்டும் என்பதை ஒரு தகுதியாக கூட கருதுகிறார்கள் என்று கேள்விப்பட முடிந்தது. இன்று மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்வது, அங்கு வாழ்க்கையை அமைத்துகொள்வது என்ற எண்ணம் நிறைய இளைஞர்களுக்கு அதிகரிப்பதை காணமுடிகிறது; கேட்கவும் முடிகிறது. மாறி வரக்கூடிய நம் பொருளாதார சூழல் அத்தகைய மனோநிலைக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
வாஸந்தி அவர்களின் சிறுகதைகள் எதையும் இதற்க்கு முன் நான் வாசித்தது இல்லை. இத்தொகுப்பில் ‘கொலை’ என்ற ஒரு சிறுகதையை சேர்த்திருக்கிறார்கள். ஊரிலே செல்வாக்காக இருக்ககூடிய ஒரு கூட்டுக்குடும்பத்தில் அதற்கு உள்ளே நடக்க கூடிய விஷயங்கள் வெளியே தெரியாமல் உள்ளது. அக்குடும்பத்தில் எல்லா முடிவுகளையும் எடுக்கக்கூடிய பொறுப்பு வயதான தாத்தாவிற்கு மட்டுமே உள்ளது. பெண்கள் வெளியே எங்கு செல்லவேண்டுமானாலும் தாத்தாவின் அனுமதியில்லாமல் செல்லமுடியாது. அதுபோல சினிமாவுக்கு செல்லவோ, கல்வி கற்க பள்ளிக்கூடம் செல்ல என எதற்கும் அனுமதியில்லை. பெண்களுக்கு கல்வியளிப்பது ஆபத்தானது என்று தாத்தா நினைக்கிறார். அவருடைய எதேச்சதிகாரத்தை மீறி அவ்வீட்டு பெண்கள் எதையும் செயமுடியாமல் அவர்களுடைய விருப்பங்கள் எல்லாம் நிறைவேறாமல் போவதைக் கண்டு மனம் புழுங்குகிறார்கள். அப்படிதான் அவ்வீட்டு பெண்களில் ஒருவர் வாழ்க்கை வெறுத்து தற்கொலை செய்துகொள்கிறாள். ஆனால், அத்தற்கொலைக்கான காரணம் வெளிவராமலே போகிறது. யாரிடமும் தங்கள் நிலையை சொல்ல முடியாத அப்பெண்கள் அந்த தாத்தா எப்போது மரணிப்பார் என்று காத்துக்கிடக்கிறார்கள். இக்கதை காட்டக்கூடிய நிலை இன்று நிறைய மாற்றம் பெற்றிருக்கலாம். ஆனால், புறவயமாக பார்க்க அன்பு நிறைந்ததாக மகிழ்ச்சியான குடும்பம் என்று சொல்லபடுகிற பலவற்றில் மறைமுகமாக ஆணாதிக்கமும், அதிகாரமும் செயல்பட்டுகொண்டே தான் இருக்கிறது. அது நேரடி வன்முறையாக இல்லாவிட்டாலும் உணர்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தன் தாக்குதல்களை செலுத்திகொண்டே தான் இருக்கிறது. பெண்களின் நிலையைக் குறித்து பேசக்கூடிய நிறைய சிறந்த திரைப்படங்கள் சமீப காலங்களில் தொடர்ச்சியாக வந்துகொண்டே தான் இருக்கின்றன. அப்படி வெளியான சில முக்கியமான படங்களாக எனக்கு நினைவுக்கு வருவது LUNCHBOX, REVELATION, THE GREAT INDIAN KITCHEN போன்ற படங்கள்.
இதுபோன்ற கலை இலக்கியப் படைப்புகள் தொடர்ந்து வெளிவரும்போதும் அதிகமாக வாசிக்கப்படும்போதும் அது சமூகத்தின் மனசாட்சியோடு உரையாடக்கூடியதாக உள்ளது. இத்தொகுப்பில் இன்னும் நிறைய சிறந்த கதைகள் பல்வேறு இந்திய மொழிகளில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. வாசிக்க வேண்டிய முக்கியமானதொரு தொகுப்பு இது.
இந்திய சிறுகதைகள் (1900-2000)
சாஹித்ய அகாடெமி வெளியீடு
தொகுப்பாசிரியர் : இ.வி. ராமகிருஷ்ணன்
தமிழில்: பிரேம்
******