
ஞானசேகரன், எல்லாவற்றையும் என்னிடம் அன்று கொட்டிவிட வேண்டும் என்றுதான் வந்திருக்கிறாரோ என்று தோன்றியது. அவர் மூஞ்சியே சரியில்லை. பயங்கரக் குழப்பத்தில், தாங்க முடியாத எரிச்சலில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். படபடப்பாய் இருந்தார். பின் கழுத்து, முன் கழுத்து என்று வியர்த்துக் கொட்டியது. இவ்வளவு படபடப்போடு ஏன் வந்தார், வீட்டில் ஓய்வெடுக்கலாமே என்று தோன்றியது. எதற்கு அத்தனை அவசரமாய் அழைத்தார்?
‘பத்மா காபில’ சந்திப்போமா… என்றவர் அடுத்த வார்த்தைக்கு இடமில்லாமல் லைனைக் கட்பண்ணி விட்டார். வரத் தோதா இல்லையா என்பதைக் கூடக் கேட்கத் தயாரில்லை. வான்னா வா… அவ்வளவுதான். கண்டிப்பாகச் சொல்வதிலேயே அவரது நெருக்கம் புரியும். சரியாகப் புரிந்து நெருங்கியவன் நான்தான். ஆனாலும் அன்றைய அழைப்பு சற்று விநோதம்தான்.
முப்பது வருஷத்துக்கும் மேலாகப் பழக்கம். டிபார்ட்மெண்டில் நுழைந்தது முதல் கைகோர்த்துக் கொண்டவர். அதென்னவோ தெரியாது. விடாமல் இருவரும் ஒரே ஆபீசில், ஒரே ஊரில் தொடர்ந்து பணியாற்றினோம். எப்படித்தான் அமைந்ததோ. யாரும் எங்களைப் பிரிக்க நினைக்கவில்லை. ‘ரெண்டு பேரா எப்பவும் இருப்பாங்களே… அதுல ஒருத்தர்தானே…’ என்றுதான் விளிப்பார்கள்.
நான் குணசேகரன். ஒருவேளை எங்கள் பெயர்களே எங்களை ஒன்று சேர்த்துவிட்டதோ என்னவோ…? கலைஞரின் பராசக்தி நாயகர்கள்போல. அதில் பிரிக்கவல்லவா செய்தது? கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் இருக்கும் ஒர்க் ஷாப்புடன் இணைந்த ஆபீசிற்கு சர்வீஸ் கமிஷன் வேலை கிடைத்து முதல் நாள் போய்ச் சேர்ந்ததிலிருந்து என்னோடு ஒட்டிக் கொண்டார். அல்லது அவரோடு நான் ஒட்டிக் கொண்டேன். ஏனென்றால் எனக்கு அஞ்சாறு வருஷம் சீனியர். நான் ஏற்கனவே தற்காலிகமாகக் கொஞ்சம் சர்வீஸ் போட்டிருந்ததால், வேலைகள் ஒன்றும் எனக்குச் சிரமமாய்த் தெரியவில்லை. போன முதல் நாளே சரளமாய் ஆரம்பித்து விட்டேன் என் பணிகளை.
புதுச… எப்டியிருப்பாரோ… ஏதாயிருப்பாரோன்னு பயந்திட்டிருந்தோம் தம்பீ… இன்னைக்கே எங்களுக்குத் திருப்தி வந்திருச்சு… என்று சொல்லி தோளில் கைபோட்டு என்னை டீ குடிக்க அழைத்துப் போனார் மானேஜர் பாண்டுரங்கன்.
மொத நாளே தோள்ல கை போடறாம் பார்த்தியா… ஜாக்கிரதையா இருந்துக்க… எமப்பயலாக்கும்… என்றவர் ஞானசேகரன்தான். அவருக்கு கலைஞரின் திரைப்படங்கள் ரொம்பப் பிடிக்கும். எதற்கெடுத்தாலும் அவர் வசனங்களை உதாரணமாய்க் காட்டுவார். அதை உச்சரித்த நடிகர்திலகத்தைப் போற்றுவார். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டு வந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி… இது சத்தியவாக்குப்பா… உலக நடைமுறை இன்னைக்கும் அப்படித்தானே இருக்கு… என்று சொல்லி மகிழ்வார். எச்சரிப்பார். அந்தத் தலைமுறையில் பலர் அப்படித்தான் இருந்தார்கள். கலைஞரின் மேடைப் பேச்சு என்றால் உயிரை விடுவார்கள். பைத்தியமாய் அலைவார்கள். ஆபீசில், தான் அந்தக் கட்சியின் ஆதரவாளன், அபிமானி என்று காட்டிக் கொள்வதில் அத்தனை பெருமை.
எனது தற்காலிகப் பணியிலேயே லஞ்சம், கையூட்டு என்பதைத் தவிர்த்தவன் நான். வேலை நிலைத்தால்போதும் என்ற ஒரே எண்ணம் மட்டும்தான். அதற்காகவே எனக்கு நீட்டிப்புக் கிடைத்தது அந்தத்துறை சேர்மனிடமிருந்து. கடின உழைப்பிற்கு மரியாதை இல்லாமல் போனதேயில்லை. படு ஊழலான அதிகாரி கூட தன் கீழ் வேலை செய்பவன் நல்லவனாய் இருக்க வேண்டும், சின்சியராய் இருக்க வேண்டும் என்று நினைப்பான். ஏதோவொருவகையில் அதற்குப் பலன் கிட்டித்தான் இருக்கிறது. எனது வேலைக்கு அங்கீகாரமாக, அந்த அலுவலகத்தில் உள்ள ஒவ்வொருவராய் லீவு போட்டுப் போட்டு, அவர்கள் இடத்திலெல்லாம் நான் வேலை பார்த்துப் பார்த்து விடாமல் அஞ்சு வருஷம்வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். முதன் முதலில் என்னவாய் அப்பாய்ண்ட் ஆனேனோ அதே ஸ்டெனோ உத்தியோகத்தையும் விடாமல் அந்தச் சேர்மனுக்குப் பார்த்துக் கொண்டு, யார் எனக்காக லீவு போட்டார்களோ அவருடைய சீட் வேலைகளையும் சேர்த்துச் சுமந்தேன். பொதி மாடா இருந்தாலும் பரவாயில்லை, வேலையில் இருந்தால் சரி. அது ஒன்றுதான் அப்போது என் குறி.
என்னை இன்னும் உயரத்தில் கொண்டு போனது எனது நேர்மைதான். நான் உண்டு என் வேலை உண்டு, மற்ற உள்வேலைகளைக் கண்டுகொள்வதே இல்லை. அதனால் சேர்மனுக்குச் செல்லப்பிள்ளை ஆனேன். குணா… குணா… என்று அவர் அழைக்கும்போது, அப்பா… இதோ வந்துட்டேன்… என்று சொல்லத்தோன்றும். அவர் எனக்கு அப்படித்தான். சர்வீஸ் கமிஷன் ஆர்டர் வந்தபோது விடமாட்டேன் என்றார். செக்ரடேரியட்ல சொல்லி உனக்கு இதே டிபார்ட்மெண்ட் வாங்கிடறேன் பார்… என்றார். நான் பயந்து போனேன். பரீட்சை எழுதி, வென்று கிடைத்த வேலையில் எதுவும் சிக்கல் வந்துவிடக் கூடாதே என்பதுதான். கடைசியில் மனசில்லாமல்தான் ரிலீஃப் பண்ணினார். போ… இனிமே எம்மூஞ்சில முழிக்காதே… என்று அன்பாய் விடை கொடுத்தார்.
திருச்சிக்கு வந்ததிலிருந்து ஞானசேகரன்தான் நெருக்கம். மற்ற எவரும் அத்தனை ஒட்டவில்லை. அவரின் கட்சி சார்ந்த பார்வையில் நான் தலையிடுவதில்லை. ஆனால் கலைஞரின் வசனங்களைப் படம் படமாய் அவர் மனப்பாடமாய்ப் பொழிவது என்னை ஆச்சரியப்படுத்தும். குரல் எஸ்.எஸ்.ஆர் போல இருக்கும். தமிழ் தெளிவாய் உச்சரிப்பார். ள, ழ, ல… ஸ, ஜ, ஷ…இவை துல்லியமாய் விழும். அது எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவர் பேசப் பேசக் கேட்டுத்தான் நானே எவ்வளவு சரளமாய் எழுதித் தள்ளியிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டேன்.
பொதுவாக தன் வேலையில் கரெக்டாக இருப்பவன், ஒரு சிஸ்டமான வாழ்க்கையை மெயின்டெய்ன் பண்ணுபவன், இவர்களின் அடையாளங்கள் பெரும்பாலானோரை அத்தனை ஈர்ப்பதில்லை. அவர விடுங்க… பாவம்… அவ்வளவுதான். ஒதுங்கி விடுவார்கள். அல்லது ஒதுக்கி. அப்படியாப்பட்டவர்களுக்கு நண்பர்கள் கம்மியாய் இருப்பதும் இயல்புதானே. ஞானசேகரனும் ஏறக்குறைய அந்த வகை என்பதால் எங்களிருவருக்கும் ஒட்டிக் கொண்டதில் வியப்பில்லை.
என் அறைக்கு வருவார். நான் வைத்திருக்கும் மனோகரா பட வசனம், பராசக்தி பட வசனம், மந்திரிகுமாரி… பாடல்கள் என்று படிக்கவும், டேப்பில் போட்டுக் கேட்கவும் என்றே வந்து டேரா அடிப்பார். தினசரி காலை முரசொலி படிக்கவில்லையென்றால் அவருக்கு ஓடாது. அதில் கலைஞரின் கடிதத்தை வாய்விட்டுப் படிக்க வேண்டும். சபாஷ்… அருமை… என்று அவ்வப்போது அவர் மகிழ்ச்சி தெறித்து விழுந்து கொண்டேயிருக்கும். பராசக்தி கோர்ட் சீன் வசனத்தை அப்போது நான் மனப்பாடமாய்ச் சொல்வேன். அதுவும் நடிகர்திலகத்தைப் போல் கையை ஆட்டிநீட்டி நான் சொல்வதை மிகவும் ரசிப்பார். அருமைடா தம்பி… என்று பாராட்டு எழும். அன்றைய இரவு டிபன் அவர் செலவாயிருக்கும். காலம் ஓடிப் போயிற்று. அவர் நட்பு விடாமல் நீடிக்கிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
கல்யாணம், காட்சி, குழந்தை குட்டிகள் எல்லாமும் இதே திருச்சி ஊரில்தான். இன்று சர்வீசை விட்டு வெளியேயும் வந்தாயிற்று. ஒரே ஒரு பையன் அவருக்கு. இன்னும் திருமணம் செய்யவில்லை. மூன்று சிஸ்டர்கள் இருந்தார்கள். அவர்களின் திருமணத்தை முடித்துவிட்டுப் பிறகு பண்ணிக் கொள்வோம் என்று இருந்தார். அது முப்பத்தஞ்சுக்கு மேலே கொண்டு விட்டுவிட்டது. அப்படி இப்படியென்று ஒரு கல்யாணத்தைப் பண்ணி, அப்புறம் நாலஞ்சு வருஷம் கழிச்சு ஒரு குழந்தையப் பெத்து, இன்னைக்கு அவனுக்கும் வயசு இருபத்தஞ்சாச்சுன்னு வைங்க… ஆனாலும் வீட்ல இன்னைக்கு வரைக்கும் அவருக்கு நிம்மதியில்லை… இருக்கும் ஒரு பையனும் அம்மா பக்கம்…! அவன் இவருக்கு நேர் எதிர். எதிரி என்றே கூறலாம். இவர் சார்ந்திருக்கும் கட்சியில் அவனுக்கு அப்படியொரு காட்டம். அது அவன் பாடு என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாராம். ஆனால் அவ்வப்போது கலைஞரின் புத்தகத்தை அவன் எடுத்துப் படித்துக் கொண்டிருப்பதைச் சொல்லி மகிழ்வார். என்னுடன் இப்படிப் பழகுபவர் வீட்டில் ஏன் ஒரு மாதிரி? என்று அடிக்கடி எனக்குத் தோன்றும். அன்பொழுகப் பேசும் இவர், மனைவியிடமும் அப்படித்தானே இருக்க வழியுண்டு?
அதென்னவோ… கேட்டா… எல்லாம் என் தலைவிதி என்பார். என்னங்க… பொழுது விடிஞ்சு பொழுது போனா சண்டதானா? மனுஷனுக்கு நிம்மதிங்கிறதே கிடையாதா? என்னைக்கோ சொல்லிட்டேன்… நாம ரெண்டுபேரும் பிரிஞ்சுக்குவோம்னு. அதையும் கேட்க மாட்டேங்கிறா. இருந்து கழுத்தறுக்கிறா. ஒரு நாளைக்கு ஆத்திரம் தாங்காம கொலை பண்ணிடுவேனோன்னு எனக்கே பயமாயிருக்கு. ஒரு செகன்ட்ல நிதானம் தவர்றதுதான இம்மாதிரித் தப்பெல்லாம்.
கொலை கிலைன்னெல்லாம் பேசாதீங்க. தப்பு. .ஒரு பையன் வேறே இருக்கான். அவன் காது கேட்க இப்டியெல்லாம் பேசலாமா? அப்புறம் அவன் உங்களை எப்படி மதிப்பான்?
அவதானங்க என்னைப் பேச வைக்கிறா? நாளும் பொழுதும் சண்டைன்னா மனுசனுக்கு நிம்மதி வேணாமா? எந்த விஷயத்துலயும் ஒத்துப் போறதில்ல. எதச் சொன்னாலும் மறுத்து மறுத்துப் பேசுறது, எடுத்தெறிஞ்சு பேசுறது, வேண்டாம்ங்கிறது, முடியாதுன்னு போய் சுருட்டி மடக்கிப் படுத்துக்கிறது, சமைக்கிறதுல்ல… ஏன் சமைக்கலன்னு கேட்டா அப்டித்தான்ங்கிறது. சரி கெடக்கட்டும்னு ஓட்டல்ல போய் வாங்கிட்டு வந்தா, அதையும் சாப்பிடாமப் போட்டு வைக்கிறது, தூக்கி எறியறது என்னெல்லாம் ஆர்ப்பாட்டம்ங்கிறீங்க…?
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதனால் இப்படி ஏற்படுகிறது என்று ஒரே யோசனையாயிருந்தது. மனசுக்குள் இருவருக்கும் வெறுப்பு மண்டிப் போயிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. ஆனால் ஒன்று, அந்தம்மாவுக்கு இவர் சார்ந்திருக்கும் கட்சி பிடிக்காது என்பது மட்டும் தெரியும். நீங்க ஒரு அரசு ஊழியர். கவனமிருக்கட்டும் என்று சொல்லுமாம்.
என்னோட முப்பத்தஞ்சாவது வயசுல என்கிட்ட வந்த அவ. கலைஞரோட எழுத்துக்களை நான் அவ வர்றதுக்கு முன்னாடியிருந்தே படிச்சி உரு ஏத்தினவன்…! இவ வந்தா அதை அழிச்சிட முடியும்? மொழி அறிவு போதாது. தமிழோட பெருமை தெரில அவளுக்கு. ரசனை இல்லை. அது பிறப்புலயே வரணும். படிச்சிப்பார்த்திட்டு அப்புறம் பேசுன்னு எத்தனையோ தடவை சொல்லியாச்சு. அவளுக்கு இந்து இங்கிலீ்ஷ் பேப்பரைத் தவிர வேறொண்ணும் தெரியாது. அதையே முஞ்சிக்கு முன்னாடி வச்சிக்கிட்டு மண்டுவா…! யார் சொல்லி யாரைத் திருத்த முடியும்? தமிழ் புக்கெல்லாம் படிச்சா அவளுக்குக் கேவலம்.
இப்டியே கருத்து வேறுபாடு வளர்ந்து வளர்ந்து எனக்கும் அலுத்துச் சலிச்சு, வெறுத்தே போச்சுங்க. என்னத்துக்கு இந்தக் கச்சடாங்கிற எண்ணம் வந்திடுச்சு… – துக்கம் பீறிடும் அவரிடம். .
சரி தொலையுதுன்னு அவுங்க சொல்றதத்தான் கேட்டுட்டுப் போங்களேன். உங்களுக்குத் தேவை நிம்மதி. பீஸ் ஆஃப் மைன்ட்… பீஸ் ஆஃப் மைன்ட்ன்னு புலம்புறீங்கல்ல, அதுக்கு ஒரே வழி இதுதான். நீங்க சொல்ற வழிக்கு அவுங்க வரல்லேன்னா அவங்க வழிக்கு நீங்க போயிடுங்க. வேறே வழி?
அதெப்படிங்க. அவ சொல்றது சரியாயிருக்கணும்ல. பொண்டாட்டிங்கிறதுக்காக எல்லாத்துக்கும் தலையாட்ட முடியுமா? அவ சொல்ற பிரகாரம் செய்திட்டே போனேன்னு வச்சிக்குங்க, அப்புறம் ஒட்டு உறவுன்னு ஒண்ணும் இருக்காது. ஒத்த ஆளாத் திரிய வேண்டிதான். அவளுக்கு எங்க வீட்டு உறவுகளே ஆகலைங்க. எல்லாரையும் அவமதிக்கிறா. அதுனாலயே எல்லாரும் ஒதுங்கிட்டாங்க. என்னைத் தனியாளாக்கிட்டாங்க. கிறுக்கன் மாதிரித் திரியறேன்னு வச்சிக்குங்களேன். எனக்கு மன ஆறுதல் தர்றது நான் வச்சிருக்கிற புத்தகங்கள்தான். மன வேதனையாயிருக்கும்போது கலைஞர் கடிதங்களா எடுத்துப் படிப்பேன். நெஞ்சுக்கு நீதின்னு ஒரு புக் படிச்சிருக்கீங்களா? அதைத் தீவிரமாப் படிக்க ஆரம்பிச்சிடுவேன். கொண்டு தர்றேன். படிச்சுப் பாருங்க. அவரோட ராமானுஜர் பார்த்திருக்கீங்களா? டி.வி.சீரியல்… அதுல சநாதனத்தோட முற்போக்கு சிந்தனைகளை எத்தனை அழகா விவரிச்சிருப்பாருங்கிறீங்க? அவசியம் நீங்க பார்க்கணும். உங்க மொபைல்ல தேடுங்க கிடைக்கும். நாத்திகச் சிந்தனையுள்ள ஒருத்தர்ட்டேயிருந்து வந்த காவியமாக்கும் அது. ராமானுஜரை எத்தனை பெருமைப்படுத்தியிருக்கார்னு தெரிஞ்சிக்கோங்க. நான் ஒத்த ஆளாத் திரியறதுக்கும் இந்தப் பைத்தியம் ஒரு காரணம்னு கூடச் சொல்லலாம். கார்ல போகும்போது கலைஞர் ஸ்லோகங்களைக் கேட்பாராம். யாருக்காவது தெரியுமா இந்த ரகசியம்? மனுஷன் மனசுக்குள்ள ஆன்மீகம்ங்கிறது ஒரு மூலைல இருந்திருக்குங்கிறேன். ஆனா பகுத்தறிவுச் சிந்தனைகளை முதன்மைப் படுத்தினவரு. அவ்வளவுதான்.
நீங்க புக் படிக்கிறதை அவுங்க தடுக்கலேல்ல. அத்தோட விடுங்க. எதையும் மனசுல போட்டுக்காதீங்க. அதான். அவுங்க உங்களக் கைவிடப் போறதில்ல. நீங்க அவுங்கள நிச்சயம் கைவிடமாட்டீங்க. ஒருத்தருக்கொருத்தர் ஆதரவுன்னு இருந்திட்டுப் போகவேண்டிதானே…!
குணசேகரன். எனக்கிருக்கிற ஒரே ஆப்த நண்பர் நீங்க. அதுனால எதுவானாலும் நல்ல யோசனையாச் சொல்லணும் நீங்க. குடும்பம்ங்கிறது என்ன? எல்லாரும் சேர்ந்து இருக்கிறதுதான். அம்புட்டுப் பேர்ட்டயும் சண்டை போட்டுட்டு தனியாப் போறதில்ல. அவுங்க வீட்ல எல்லாரும் அங்கங்க தனித்தனித் தீவுகளாக் கிடக்காங்கங்கிறதுக்காக நானும் அப்டி இருக்கணுமா? எங்க வீட்டுக்குள்ள நுழையுறப்பவே தெரியும்ல பெரிய குடும்பம்னு. கலந்துகட்டித்தான இருக்கணும். பிரிச்சிட்டுப் போக நினைச்சா?
என்னங்க சொல்றீங்க? அறுபதத்தாண்டிட்டீங்க இன்னமுமா? பிரியறதானா எப்பவோல்ல பிரிஞ்சிருக்கணும்? இத்தன வருஷத்துக்கப்புறமுமா அப்டிப் பேசறாங்க? எனக்கு மிகப் பெரிய ஆச்சரியமாய் இருந்தது. கல்யாணம் ஆன புதிதில் அரசல் புரசலாக ஏதேனும் சொல்லிக் கொண்டே இருப்பார்தான். எல்லாம் போகப்போகச் சரியாப் போகும் என்பேன் நான். கொஞ்சம் விட்டுப் பிடிங்க என்று கூடச் சொல்லியிருக்கிறேன்…!
நான் கரைவேட்டி கட்டுறது அவளுக்குப் பிடிக்கலைங்க. கண்டுக்காம விட வேண்டிதானே? இவள யாரு பார்க்கச் சொன்னா? அதுக்குத் திட்டுறாங்க. நான் எத்தனை வருஷமா இந்தக் கட்சி அபிமானியா இருக்கிறவன். எங்கிட்ட இவ பாச்சா பலிக்குமா? கலைஞர் மேலே உள்ள பிரியத்துக்காகவே உயிராக் கிடக்கிறவன். நேத்து வந்த இவ எதையாச்சும் சொன்னா நான் உதறிட முடியுமா? அவ சார்பா என் நடவடிக்கைகளை என்னைக்காவது நினைச்சுப் பார்த்திருப்பாளா? மதிச்சிருப்பாளா?
இவளுக்காக எத்தனை கல்யாணம் காட்சிக்குப் போகாம இருந்திருக்கேன் தெரியுமா? எதுக்குக் கூப்டாலும் உடனே என்ன சொல்லுவா தெரியமா? நீங்க போயிட்டு வாங்க. இதுதான் அவ பதில். ஒண்ணுக்குக் கூட என்னோட வந்ததில்லீங்க. ஏண்டா, எங்கயானாலும் நீ மட்டும்தான் வருவியா? உம்பொண்டாட்டிய நாங்கல்லாம் பார்க்கக் கூடாதா? அவ மூஞ்சியே எங்களுக்கு மறந்து போச்சேடா. அவளையும் அழைச்சிண்டு வராம, அதென்ன நீ மட்டும் வர்றது? இனிமே அப்டி வந்தியோ தெரியும் சேதி… – இப்டி எத்தினி பேர் எங்கிட்ட சொல்லியிருக்காங்க தெரியுமா? நானா மாட்டேங்கிறேன். வந்தாத்தானே? அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணுங்க – சொல்லிவிட்டுக் கண்கலங்கியிருக்கிறார் ஞானம்.
அவர் பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்றே பல நாட்கள் யோசித்திருக்கிறேன் நான். ஒரு மனோதத்துவ நிபுணர் சிந்திப்பதை விட அதிகமாய்ச் சிந்தித்திருக்கிறேன். உடன் பிறவா நண்பராய் இருந்து கொண்டு கையறு நிலையில் தவித்திருக்கிறேன். இங்கே இன்னொன்றையும் நான் சொல்லியாகத்தான் வேண்டும்.
நான் அடிக்கடி அவர் வீட்டுக்கு வருவதையே அவர் மிஸஸ் விரும்பவில்லை என்பதை ரொம்பவே தாமதமாய்த்தான் நான் புரிந்து கொண்டேன். வாசலில் நின்ற என்னைப் பார்த்துவிட்டு, கதவைத் திறக்காமல் உள்ளே சென்றதைப் பார்த்தவன் நான்.
எதானாலும் உடனே அவர்ட்டப் போய் உளறிட்டிருக்காதீங்க. அவர்தான் உங்களுக்கு என்னென்னத்தையோ போதிக்கிறார்னு நினைக்கிறேன். அதான் நான் சொல்றதையே எதையும் நீங்க செய்ய மாட்டேங்கிறீங்க. எதையானாலும் எதுத்து மறுத்துப் பேசறீங்க. முதல்ல அவர் ஃப்ரென்ட்ஷிப்பைக் கட் பண்ணுங்க… – இப்படியும் சொன்னதாக ஒருநாள் ஞானம் என்னிடம் சொன்னார். அன்றிலிருந்து அந்தத் தெருப்பக்கமே செல்வதைத் தவிர்த்து விட்டேன். அப்புறம் நாங்கள் சந்திப்பது கூட சற்றுக் குறைந்து போனது. இப்போது சொன்னாரே அந்த பத்மா காபி சென்டர். அங்குதான் நாங்கள் சந்தித்துக் கொள்வது. காலம் காலமாய் இருக்கும் நட்பை, அதன் நெருக்கத்தை ஒரு பெண் வந்து எப்படி விலக்கி விட்டார்கள் பார்த்தீர்களா? கணவனின் உறவுகளையே வெட்ட நினைப்பவர், என்னையா விட்டு வைப்பார். நானெல்லாம் தூசு.
நல்லாயிருக்கே கதை. அதுக்காக அந்த ரோட்டுப் பக்கமே போகக் கூடாதுன்னா? அப்டிப் போனாத்தானே தில்லை நகர் பக்கம். அரசாங்கம் போட்டு வச்சிருக்கான் ரோடு. போறோம் வர்றோம். இவங்க யாரு சொல்றதுக்கு?
அட நீ ஒண்ணு! அவங்களா சொன்னாங்க? நாந்தான் போறதில்லன்னு சொல்ல வந்தா? என்னத்தவோ உளர்றியே? – மனைவி உமாவைச் சாடினேன் நான்.
எத்தனையோ ஆண்டுகளாய் அவர்களின் சண்டை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கு ஒரு முடிவேயில்லை என்று ஆகிப்போனது. நான் அவர்களைக் கண்கொண்டு பார்த்து வெகு நாளாயிற்று. பொதுவான திருமணங்கள் பலவற்றில் நான் என் மனைவியோடு சென்றிருக்கிறேன். ஆனால் பாவம் ஞானசேகரன். தனித்தேதான் வருவார். ஒன்றில் கூட அவரை அவரது துணைவியாளர் பரிமளாவோடு நான் பார்த்தததில்லை. அப்படி வந்துவந்து அதுவே அவருக்குப் பழகிவிட்டது.
அந்தம்மா சொல்லும் எத்தனையோ காரியங்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்துப் போய்த்தான் கழித்துக் கொண்டிருக்கிறார் அவர். ஆனால் அவர் வழி உறவுகளையும் விட்டு விலகியாக வேண்டும் என்பதை மட்டும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பது எனக்கு நன்றாய்ப் புரிந்தது. அதனாலேயே அவர்களுக்குள் இன்றுவரை சண்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வளவு நேரம் அவர் என்றும் என்னைக் காக்க வைத்ததில்லைதான். பெரும்பாலான சமயங்களில் அவர்தான் முதலில் வந்து நின்று கொண்டிருப்பார். பத்மா காபியில் ஸ்ட்ராங்காக ஒரு காபியை உறிஞ்சிச் சுவைத்துவிட்டுத்தான் எங்கள் விடுப்பு நாளின் ஸ்வாரஸ்யங்களைத் துவக்குவோம் நாங்கள். அன்று அனைத்துக் கோயில்களுக்கும் சென்று விடுவது என்று முடிவெடுத்து விட்டோமானால் முதலில் ஸ்ரீரங்கத்தில் தொடங்கி, அப்படியே திருவானைக்கா வந்து, பின் சமயபுரம் சென்று அங்கிருந்து உறையூர் வழி ஜங்ஷனுக்கு வண்டியேறி, அரசு மருத்துவனை ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டு, வயலூர் நோக்கிச் செல்வோம். அத்தோடு முடியும் என்று நினைத்தீர்களா? திரும்பவும் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து மெயின்கார்டு கேட்டிற்கு வண்டியேறி இறங்கி, மலைக்கோட்டையை நோக்கிச் செல்வோம். கட்சி அபிமானம் வேறு. இறை வழிபாடு என்பது வேறு. நட்புக்காக இதைச் செய்யக் கூடாதா? கோயில் கலைகளை ரசிக்க வரக்கூடாதா? வாங்க போகலாம் என்று கிளம்பி விடுவார். அன்பின் வழியது அவரது செயல்கள். ஆத்திக நாத்திகர் அவர்.
ராத்திரி ஒன்பது மணிவாக்கில் ஸ்ரீரங்கத்தில் இருந்து ஒருவர் வாளி வாளியாய்த் தன் சைக்கிளில் தொங்க விட்டுக் கொண்டு அடிவாரத்தில் தன்னுடைய வழக்கமான யதாஸ்தானத்தில் வந்து நிற்பார். அவரிடம் சென்று தாமரை இலையில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தேங்காய்ச் சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் என்று வகைக்கு ஒன்றாய் நாக்கில் ஜலம் ஊற வாங்கி வயிறு புடைக்க உண்டு விட்டு, வீடு வந்து மலையாய்ச் சாய்வோம். போட்ட சோறு ஆளை அப்படி இப்படி அசைய விடாது. இன்றுவரை அந்தப் பரிசாரகரும் வந்துகொண்டுதான் இருக்கிறார். எங்களுக்குத்தான் குடும்பம் குழந்தைகள் என்று ஆகிவிட்டது. அவரின் வாழ்க்கை நிலை உயர்ந்ததா இல்லையா என்று பல சமயங்களில் யோசிப்பதுண்டு. எதுவும் அவரிடம் நாங்கள் கேட்டதில்லை. என்னவோ அப்படி ஒரு மரியாதை.
மனிதர் சந்தோஷமாயிருக்கிறார் என்று மட்டும் நினைத்துக் கொள்வதுண்டு. இப்படி வாழ்க்கை பூராவும் எடுப்புச் சாப்பாடு சுமந்தே கழிக்கும் இவருக்கு இருக்கும் நிம்மதி கூட எனக்கில்லையே என்றார் ஞானசேகரன்..
என்ன உங்க முகமே சரியில்லையே…! ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க. இப்டி உட்காருங்க… என்றவாறே காபியை வாங்கி அவரிடம் நீட்டினேன். நான் சொன்னதைக் கேட்டு அங்கிருந்த ஒருவர் எழுந்து அவருக்கு இடம் கொடுத்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரே ஒரு காபியைக் குடித்துவிட்டு, மணிக்கணக்காக அங்கே உட்கார்ந்து வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். வெறுமே வேடிக்கை பார்ப்பவர்களையும் கண்ணுற்றிருக்கிறேன். இன்று ஒருவர் எழுந்து இடமளித்தது அதிசயம்தான். சடக்கென்று அந்த இடத்தில் பாய்ந்து ஞானசேகரன் அமர்ந்தது எனக்குள் சற்றே சிரிப்பை வரவழைத்தது. ஆனாலும் கையில் பெற்ற காபியை இருக்கையில் வைத்ததும், அவரது விரல்கள் சற்றே நடுக்கமுற்றதும் எனக்குள் பயமேற்படுத்தியது.
ஏன், என்னாச்சு? வழக்கமான B.P மாத்திரை போடலியா? ரொம்பப் படபடக்குறீங்களே? என்று கேட்டவாறே குனிந்து அவர் முகத்தைப் பார்க்க யத்தனித்தேன். யாரும் பார்த்து விடக் கூடாது என்று குனிந்து கொண்டது போலிருந்தது அவரது இருப்பு. இரண்டு சொட்டுக் கண்ணீர் கீழே. ஆதரவாய் அவரை அணைத்துப் பிடித்தேன்.
வருத்தப்படாதீங்க. காபியைச் சாப்பிடுங்க. சாவகாசமாப் பேசலாம் என்றேன். பலரின் பார்வை எங்களை நோக்கித் திரும்பியிருந்தது.
அத்தனை கொதிப்பிலும் எப்படி உள்ளே ஊற்றினார்? காபி ஆவி பறக்கப் பறக்க தொண்டைக்குள் இறங்கியது. சட்டென்று எழுந்தார். புறப்படத் தயாரானது போலிருந்தது.
இப்டி வாங்க… என்று சைகையில் தெரிவித்தவாறே என்னைத் தனியே இழுத்துப் போனார்.
நா அப்புறமாப் பேசறேன். இப்பக் கிளம்பறேன். என்னைக்குமில்லாம காலைல ரொம்பப் பிரச்னையாகிப் போச்சு. பெரிய சண்டை… ஓங்கி அறைஞ்சிட்டேன் அவளை. அடி ரொம்பப் பலமா விழுந்திடுச்சி. என்னவாவது பண்ணிக்கிடுவாளோன்னு பயமாயிருக்கு. இப்ப நா இங்க வந்ததே தப்புன்னு தோணுது. ஒரே மனக் குழப்பம். என்னானாலும் விட்டுட முடியுமா? கடைசிவரைக்கும் கூட்டிப் போய்த்தானே ஆகணும்? காலம் மாறாமையா போயிடும்? நான் வர்றேன். அப்புறம் பார்க்கலாம். ஸாரி… உங்களை அலைக்கழிச்சதுக்கு. குழம்பிட்டேன்… தப்பா நினைச்சிக்காதீங்க…
– சொல்லிக் கொண்டே பஸ் நிறுத்தத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாய்ச் விரைந்தார் ஞானசேகரன். வந்ததும் தெரில போனதும் தெரில. எதுக்கு வரணும்? எதுக்காக இப்டித் தவிச்சு ஓடணும்? கலக்கத்தோடு அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன். பலரின் பார்வையும் அவரை நோக்கியே…! அவரின் கையில் கலைஞரின் “நெஞ்சுக்கு நீதி” நூல் அடங்கியிருந்தது. எனக்குப் படிக்கத் தருகிறேன் என்றாரே அதற்குத்தான் எடுத்து வந்திருப்பாரோ? மறந்துவிட்டுக் கொண்டு செல்கிறாரோ என்று தோன்றியது எனக்கு. எந்த விபரீதமும் நிகழாமல் வீட்டில் அவர் சமாதானமடைய வேண்டும் என்று என் மனம் பிரார்த்தித்தது.
*****