கவிதைகள்
Trending

ஒலிவியா கேட்வுட் கவிதைகள் – தமிழில் அனுராதா ஆனந்த்

மொழிபெயர்ப்பு கவிதைகள் | வாசகசாலை

ஆணின் சிரிப்பு அல்லது திட்டமிடப்படாத ஒரு கொலை.

1) என்னை கவனித்துக்கொள்பவளின் அப்பாவிடம் வேடிக்கையாக
ஒன்று சொன்னேன்.அவர் ஊஞ்சலில் இருந்து கீழே விழும் அளவு சிரித்தார்.
என்னை வீட்டிற்குள் அழைக்கும் அளவு சிரித்தார்.

2) முதல் முறை என்னை ஒருவன் முத்தமிட்ட போது அவனுடைய
நண்பர்கள் சிரித்தனர். மூச்சு திணறும் அளவு, அவன் தன் நாக்கை
என் தொண்டையினுள் செலுத்திய அதே தாள கதியில் சிரித்தனர்.

3) சிரிப்பு நாம் மூச்சு விடும் வழமையான முறையினின்று ஒரு மாற்றத்தை
கோருகிறது .
உ-ம் : நான் சுவாசிக்கத் திணறுகையில் அவனும் திணறுகிறான்.

4) நான் வேலைபார்க்கும் அடுமனையின் முதலாளி ஒரு நாளைக்கு
மூன்று முறை என்னைத் தன் அறைக்கு அழைக்கிறார். என் பதின்ம உடம்பை
என்னவெல்லாம் செய்ய ஆசைப்படுகிறார் என்பதை விரிவாக விளக்குகிறார்.

5) இன்று ஒரு போலீஸ்காரர் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.
என்‌ முதலாளி, “நான் உன்னை அந்த சுவற்றில் சாத்திப் புணருவேன்” என்று
சொல்வதைக் கேட்டு தன் சீருடையின் பெல்ட்டைப் பிடித்துக்கொண்டு
அடக்கமுடியாமல் சிரிக்கிறார்.

6) இளைஞர்கள் என்னைப் படகிலிருந்து தூக்கி பாறைகளுக்கு எவ்வளவு பக்கத்தில்  வீச முடியுமோ
அவ்வளவு பக்கத்தில் வீசுவதை ( நான் செத்து போய்விடாது கவனமாக) ஒரு விளையாட்டாகச் செய்கிறார்கள்.

7) இளைஞர்கள் விளையாட்டாக என்னை இரவில் பூங்காவில் தனியாக
விட்டுச் செல்கிறார்கள், அவர்கள் திரும்பி வரவேபோவதில்லை என்று
நான் பதற்றம் அடையும் வரை…

8) நீருக்கடியில் என் தலையைப் பிடித்து இருத்துவதை ஒரு விளையாட்டு
போலச் செய்கிறார்கள்.

9) சிரிப்பு ஒரு வரிக்கு பதிலாக வருவதில்லை மாறாக அவ்வரியின் இடையிடையே
நிறுத்தற்குறியைப் போல வருகிறது…மூச்சு விடவோ, இருமலுக்கோ
இடைநிறுத்துவதைப் போல.
உ-ம் : நான் சுவாசிக்கத் திணறுகையில் அவன் சிரிக்கிறான்
நான் பேரம் பேசும்போது சிரிக்கிறான்
நான் வலியில் அலறும் போது சிரிக்கிறான்.

10) கொண்டாட்டக் கூடுகையில் ஒரு வீட்டின் விருந்தினர் அறையில்
தூங்கிக் கொண்டிருக்கிறேன். வலியில் கண் முழிக்கிறேன். என் அருகில்
தரையில் இருந்த அறிமுகமில்லாதவன் தன் கைகளை என்னுள்
செலுத்திக்கொண்டிருக்கிறான்… இருட்டில் சரியான சாவியைத் தேடுபவனைப் போல.

11) நான் படுக்கை விரிப்பைச் சுற்றிக் கொண்டு அந்த வீட்டிலிருந்து
வெளியேறுகிறேன். ஆண்களுக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது
– பயந்த பெண், தங்கள் படுக்கை விரிப்பினுற்குள் நிர்வாணமாக.
அவர்களிடம் நடந்ததைச் சொல்கிறேன்.அவனுடைய கால்களையும்
கைகளையும் பிடித்து, வலையில் இறந்து கனத்துக்கிடக்கும்
கானாங்கெளுத்தியைப் போல தூக்கி வெளியில் எரிகிறார்கள்.
நான் நலமாக இருக்கிறேனா என்று விசாரிக்கவோ, என்
உடைகளை எடுத்துக் கொடுக்கவோ தோன்றாமல் விழுந்து
விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

12) இளைஞர்கள் எல்லாவற்றையும் விளையாட்டாகச் செய்கிறார்கள்.

13) மேற்கு மிசாவின் எலும்பு சேகரிப்பாளன் தான்  தான் என்று
ஒருவன் சொல்லும்போது என் காதலன் சிரிக்கிறான். அவன் கொன்ற
பெண்களின் உடம்புகள் புதைக்கப்பட்ட இடங்களைக் காண்பிக்கிறேன்
என்று சொல்ல இன்னும் கடுமையாகச் சிரிக்கிறான்.

14) என் காதலனின் பூட்டிய கதவுகளுக்கு உள்ளிருந்து அலறுகிறேன்.
வெளியேறும்போது அவனுடைய நண்பன் தொலைக்காட்சியை சத்தமாக
வைத்து சிரித்துக்கொண்டிருக்கிறான்.

15) பல வருடங்கள் கழித்து அந்த நண்பனை மறுபடி சந்திக்கும்போது
முகமன் எதுவுமே கூறாமல்,
” உன்னைப் போல ஒரு பெண் கிடைத்தால்
நானும் அவளை என் அறையில் பூட்டி வைப்பேன்”
என்கிறான் சிரித்துக்கொண்டே.

16 ) சிரிப்பென்பது நகைச்சுவையின் பொருட்டு வருவதல்ல.
அது பகிரப்பட்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடு, பிணைப்பின் அடையாளமாக
வெளிப்படுவது.
உ-ம் : ஆண்களின் சிர்ப்பொலி கேட்டால்
அந்த அறையினுள் நுழைய மாட்டேன்.
இருட்டில் தவழ்ந்து வீட்டிற்கு ஓடுவேன்.

 

ஒலிவியா கேட்வுட் பற்றிய குறிப்பு;

”பெண்கள் தங்களுக்கு உண்மையாக நிகழ்ந்தவற்றையே
பொய்யானது என்றும், தாங்களே அவற்றை மிகைப்படுத்துவதாகவும்
நம்பவைக்கப் படுகிறார்கள். உங்கள் நியாபகங்கள்  தப்பானவை என்று உங்களையே நம்பவைத்துவிடுவார்கள்.”

1992 இல் பிறந்த கவிஞர், எழுத்தாளர், பெண்ணிய செயற்பாட்டாளர் மற்றும் கல்வியாளரான ஒலிவியா, பால் பேதம் சாரந்த வன்முறை, பாலியல் துன்புறுத்தல், அதைத் தடுக்கும் வழிகள் மற்றும் அதிலிருந்து மீள்வது குறித்தான செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். Megan Falley என்ற கவிஞருடன் இணைந்து Speak like a girl என்ற ஒரு நிகழ்வை நடத்துகிறார். அதன் மூலம் பல ஊர்களுக்குச் சென்று ஊடாடும் கவிதை பகிர்வு ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அமெரிக்காவின் மாகாணங்கள் அனைத்திற்கும் சென்று கவிதைகள் மூலம், பாலியல் மற்றும் உடல் சார்ந்த புரிதல்களை பதின் பருவத்தினருக்கு எளிதில் புரியுமாறு எடுத்துக்கூறும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கவிதைகள்‌ அல்லது கதைகளின் வாயிலாக அவர்களுடைய அனுபவங்களைப் பகிர ஊந்துதலாக இருக்கிறது இந்நிகழ்வு.

காணாமல் போகிற பெண்களைப் பற்றிய கவலையும் தேடலும் முற்றுப்பெறாத அந்த சிக்கலில் உழலுகின்ற மக்களும் இவருடைய கவிதைகள் பலவற்றின் பாடுபொருளாக விளங்குகின்றனர்.

தன்னுடைய 16 வது வயதில் பாலியல் வன்முறையை எதிர்கொண்டவர். அதை காவல்துறைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்த அவர்

சந்தித்த ஐந்து வருட காலப் போராட்டத்தை, ‘ஐந்து வருட விசாரணை’ என்கிறார். தான் திரும்பத் திரும்ப பல முறை பல பேர்களுக்கு நடுவில் அந்தச் சம்பவத்தையே விளக்கிச் சொல்ல வேண்டிய கொடிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்.

மனதிடத்துடன்  அதைக் கடந்து வந்து இன்று பெண்ணிய செயற்பாட்டாளராக பணியாற்றுகிறார்.

“கவிதைகளின் மூலமாகத் தங்களுடைய உண்மைகளைச் சொல்ல சமூக

வலைதளங்களை பெண்கள் பயன்படுத்த வேண்டும்” என்று தற்காலப் பெண்ணியத்தின் குரலாக ஒலிக்கிறார் ஒலிவியா.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button