
“கல்யாணம் என்று ஒன்று இருந்தால் தானா. Will you be my companion வாழ்நாள் முழுவதும் என் துணையாக, I mean துணைவியாக வருவாயா?”
தியாகு அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை எவ்வளவு நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குள் ஆத்திரமும் அசூயையும் பொங்கி வழிந்தது.
கைபேசியைப் படுக்கையில் விட்டெறிந்துவிட்டு ஜன்னலோரமாய் போய் நின்று கொண்டேன். மாலை நேரத்தின் இளம் வெயில் என் மனதின் உஷ்ணத்தை அதிகரிக்கவே செய்தது. எப்போதும் நான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வது இந்த மாடியறையில் தான். முழுவதும் என் விருப்பம் போல் இந்த அறையை அலங்கரித்து வைத்திருந்தேன். அழகான ஒரு மாடிப் பூந்தோட்டமும் அமைத்து செழுமையாகப் பராமரித்துக் கொண்டிருந்தேன். ஆனால், இன்றைய எனது கொதிக்கும் மனநிலையை எந்த மலர்க்கொத்தாலும் குளிரச் செய்ய முடியவில்லை.
“நந்தினி சித்தீ.”
பாவாடையை நளினமாக இரண்டு விரல்களால் தூக்கிப் பிடித்தபடி கொலுசணிந்த பாதங்களை அழுத்தித் தாவிக் குதித்துப் படியேறிக் கொண்டிருந்தாள் மீனுக்குட்டி.
“சித்தி, இவ்வளவு நேரமா மாடியில் என்ன பண்றே. பாட்டி தேடுறாங்க. வா போகலாம்” என்று என் கையைப் பிடித்து இழுத்தபடி சௌந்தர்யமாகச் சிரித்தாள். குழந்தையின் புன்னகை என்னைத் தொற்றிக் கொண்டது.
“ஓ.. போகலாமே. பட்டுக்குட்டி” என்று அவளைக் கொஞ்சியபடி இடதுகையால் மொபைலை switch off செய்து தொலைத்தேன். குறுஞ்செய்தியைத் தொடர்ந்து தியாகுவிடமிருந்து அழைப்பு எதுவும் வருவதை நான் விரும்பவில்லை. என் மனம் வெகுவாக அலைக்கழிந்து கொண்டிருந்தது.
நாங்கள் கீழிறங்கி வந்தவுடன் அம்மாவின் டிகிரி காப்பி தயாராக இருந்தது.
“நந்தினி, இன்னிக்கு மீனுவுக்கு தடுப்பூசி போட வேண்டிய நாள். போயிட்டு வந்துரும்மா” என்று அம்மா நினைவூட்டினாள்.
“ப்ச். மறந்தே போயிட்டேம்மா”
பரபரப்புடன் தயாராகி மீனுவை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டியைக் கிளப்பினேன்.
அந்தக் குழந்தைநல மருத்துவர் எங்கள் பகுதியில் பிரபலமானவர். குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டே வலி தெரியாமல் ஊசியேற்றுபவராய் இருப்பதால் குழந்தைகள் அவரைக் கண்டு அஞ்சுவதில்லை. மீனுவுக்கும் அந்த மருத்துவர் ரொம்பவும் பிடித்தமானவராய் இருந்தார்.
நாங்கள் அந்த நர்ஸிங்ஹோமுக்கு சென்ற சமயம் வரவேற்பறையில் அனேகமாக அனைத்து நாற்காலிகளும் நிறைந்திருந்தன. எங்களுக்கான டோக்கனை வாங்கிக் கொண்டு கடைசி வரிசையில் சென்று அமர்ந்து கொண்டோம். மீனுவுக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. கடைசி வரிசை நாற்காலிகளை ஒட்டி வைக்கப்பட்டிருந்த அழகான மீன்தொட்டிதான் அதற்குக் காரணம். குழந்தைகளை மகிழ்விப்பதற்காக அந்த மருத்துவமனையில் வெண்மை, மஞ்சள், நீலம் என்று பலவண்ண மீன்கள் நீந்தும் அழகான மீன் தொட்டி ஒன்று நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு முறை சிகிச்சைக்காக வரும்போதும் காத்திருக்கும் நேரத்தில் மீனு அதன் அருகில் சென்று நின்று கொள்வது வழக்கம். இன்றும் தொட்டியின் அருகே நெருங்கிச் சென்றவள் உற்சாகம் மேலிடக் கூவினாள்.
“சித்தீ, அங்க பாரு, புதுசா ஒரு gold fish இருக்கு”
முழுவதுமாக தங்க நிறத்தில் இல்லாமல் நல்ல ஆரஞ்சு வண்ணத்தில் தகதகத்துக் கொண்டிருந்த அந்த மீனை நானும் ரசித்துப் பார்க்கத் தொடங்கினேன். பத்து நிமிடங்களுக்கும் மேலாகப் பார்த்துக் கொண்டிருந்த பின் மீனுக்குட்டி கொஞ்சம் சலிப்புடன் கேட்டாள்.
“அது என்ன சித்தீ. ஒரே இடத்துல நின்னுட்டு இருக்கு. அதுக்கு நீந்தத் தெரியாதா.?”
அப்போதுதான் நானும் கவனித்தேன். பொன்னிறத் தகடு போன்ற உடலுடைய அந்த மீன் தன் முகத்தைக் கண்ணாடித் தொட்டியின் சுவரில் பதித்தபடி வால்பகுதியை மட்டும் மிக மெதுவாக அசைத்துக் கொண்டு நின்றிருந்தது. சுற்றிலும் வட்டமிடும் மற்ற வண்ண மீன்களைப் போல் அல்லாது நீந்தும் உத்தேசமே அற்றுவிட்டது போல் கண்ணாடியை முட்டிக் கொண்டிருந்தது.
மீன்களைப் பார்த்துக் கொண்டே இருந்ததில் என் மனம் அமைதியடைந்து ஒரு தியான நிலையை எட்டிவிட்டதைப் போல் உணர்ந்தேன்.
“நந்தினி, அந்தத் தம்பிக்கு உம்மேல பிடித்தம் இருக்கும் போலத் தெரியுது எனக்கு”
இரண்டு வாரங்களுக்கு முன்னால் அம்மா திடுதிடுப்பென்று இப்படி ஆரம்பிப்பாள் என்று நான் நினைத்திருக்கவில்லை.
“அம்மா. என்ன திடீர்னு.” என்று தயங்கியபடி கேட்டேன்.
“இல்ல நந்தினி. மீனு உன் கூட ரொம்பவும் ஒட்டிக்கிட்டதால உன் கல்யாணப் பேச்சை எடுக்க எனக்கு சரியான நேரம் எதுன்னு தெரியாம இருந்தது. அதுக்காக அப்படியே இருக்க முடியாதுல்ல. என்னிக்கிருந்தாலும் பேச வேண்டிய விஷயம்தானே. நம்ம குடும்பத்தைப் பத்தித் தெரிஞ்ச பையனா இருந்தா நல்லதுன்னு நெனைச்சேன். இந்த வாரத்துல தியாகு கிட்டப் பேசிடுமா. தியாவுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமிருந்தா அவங்க வீட்ல நா பேசறேன். இல்லைன்னா வேற இடம் பாக்கணும்” அம்மா தீர்மானமாய் சொல்லிவிட்டு நகர்ந்து விட்டாள்.
எனக்கும் தியாகுவுக்கும் இடையில் ஓர் ஈர்ப்பு இருந்தது நிஜம்தான். என்றாலும் திருமணத்தைப் பற்றி நான் தீவிரமாக யோசிக்காமலிருந்ததற்குக் காரணமிருந்தது. என் அக்காவின் மகள்; மீனா ஒரு பூக்குவியலைப் போல் என் மேல் கவிழ்ந்து கிடந்தாள். தன் தாயையும் தந்தையையும் ஒரு சேர விபத்தொன்றில் பறிகொடுத்தபோது அவளுக்கு ஒருவயது. பெற்றோரின் இழப்பைப் புரிந்து கொள்ள முடியாத அந்த வயதிலிருந்து அவள் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு உறங்கப் பழகிக் கொண்டு விட்டாள். என்னை அம்மா என்று அழைத்துக் கொண்டிருந்தவளைத் திருத்தி சித்தி என்று அழைக்கச் செய்வதற்கே நான் பெரும்பாடு பட வேண்டியதாயிற்று.
எங்கள் குடும்பத்தில் அந்த மரணச்சம்பவம் பேரிடியாக இறங்கியபோது செய்வதறியாது திகைத்து நின்ற எங்களைத் தேற்றி மெல்ல சகஜ நிலைக்குக் கொண்டு வந்ததற்காக தியாகுவிடம் நாங்கள் கடன் பட்டிருப்பதாகவே எப்போதும் உணர்ந்தோம்.
தியாகுவுக்கு விவாகரத்தாகி மூன்று வருடங்களாகிறது. அம்மாவுக்கும் அது தெரியும். தியாகு என் அக்கா கணவரின் அலுவலத்தில் உடன் வேலை பார்ப்பவனாக அவரது இறப்புக்கு வந்திருந்தான். பிறகு எங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே மாறி விட்டிருந்தான். சிறுவயதிலேயே கணவனை இழந்துவிட்ட என் தாயார் என்னையும் என் அக்காவையும், பெரும் போராட்டத்திற்கிடையில் வளர்த்துக் களைத்து விட்டபடியால் தியாகுவின் உதவியைக் கைநீட்டி எற்றுக் கொண்டாள். மீனுக்குட்டியும் தியாகுவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டாள்.
அம்மா என்னிடம் பேசியதற்கு மறுநாள் நான் தியாகுவை சந்திக்கச் சென்றேன். எப்போதும் போல் இல்லாமல் மிகவும் பதற்றமாக உணர்ந்தேன்.
“என்ன நந்தினி என்ன முக்கியமான விஷயம் பேசணும்னு வரச் சொல்லி இருக்க, சொல்லு” அவனது சிரித்த முகத்தைக் பார்த்ததும் மனம் கொஞ்சம் லேசானது போல இருந்தது.
“அம்மா உங்களை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறாங்க. உங்க மனசில இருக்கறதைத் தெரிஞ்சுக்கதான் வரச்சொன்னேன் தியாகு” மிகவும் தயங்கி ஒரு வழியாகச் சொல்லி முடித்தேன்.
“அம்மா மட்டும்தான் அப்படி நினைக்கிறாங்களா நந்தினி” என்றான். நான் எனது வெட்கத்தைப் பதிலாகத் தந்தபோதுதான் என் மனதில் தியாகு முழுவதுமாக நிறைந்திருப்பதை முதன் முதலாய் உணர்ந்தேன். ஆனால், அவனது பதில் நான் கொஞ்சமும் எதிர்பாராததாக இருந்தது. என்னை வெகுநேரம் காத்திருக்க வைக்காமல் ஒரு அதிர்ச்சித் தகவலைத் தந்தான்.
“என் மனைவி ஸ்வேதா திரும்பவும் என்னோட சேர்ந்து இருக்கணும்னு ஆசைப்படறாங்க. என் பொண்ணு மாயாவும் அதைத்தான் விரும்பறா நந்தினி.”
நான் விக்கித்துப் பேச்சிழந்து அமர்ந்திருந்தேன். என் முன்னாள் மனைவி என்று அவன் குறிப்பிடவில்லை என்பதை நான் கவனித்திருந்தேன்.
“இது எப்போ நடந்தது தியாகு” என் குரல் தீனமாக ஒலித்தது. நீர் கோர்க்கத் தொடங்கிய என் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.
“ரெண்டு நாள் முன்னாடி எங்க பக்கத்து வீட்டு கொலுவுக்கு வந்திருந்தாங்க. அப்போ என் வீட்டுக்கும் வந்தாங்க. இது எதேச்சையா நடந்தது. இதுல என்னோட பங்கு எதுவுமில்லை நந்தினி”, சலனமில்லாத குரலில் பேசிக் கொண்டிருந்தான்.
“என் பொண்ணு மாயா நல்லா வளந்துட்டா. ‘லவ் யூ அப்பா’ அப்படின்னு இறுகக் கட்டிக்கிட்டா. என் மனைவி ஸ்வேதாவும் இப்போ ரொம்ப மாறி இருக்காங்க.” என்று அவன் நெகிழ்ந்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கும் போது நான் என் கைப்பையைத் தோளில் மாட்டியபடி எழுந்து கொண்டேன்.
“மீனுவுக்கு school விடற நேரமாச்சு. Pickup பண்ணனும். நான் கிளம்பறேன்”
“நந்தினி, please wait.”
“இல்ல தியாகு. பாக்கலாம்”
வேகமாக சாலையைக் கடந்தேன். தியாகு என்னைப் பின் தொடரவில்லை.
அடுத்து வந்த நாட்களில், கனவைப் பறிகொடுத்த என் கண்களையும் முகத்தையும் பார்த்து அம்மா புரிந்து கொண்டாள். என்னை எதுவுமே கேட்கவில்லை. தியாகுவின் நினைவுகளை என் மனதிலிருந்து நகர்த்திவிட முடியாமல் வெகுவாய்த் துயருற்றேன். மீனுக்குட்டி கூடப் புரிந்துக் கொள்ளும் அளவுக்கு என் சுபாவம் மாறிப் போயிருந்தது. என்னை அதிகம் தொந்தரவு செய்யாமல் கொஞ்சம் விலகி இருக்கத் தெரிந்திருந்தது அந்த ஆறு வயதுக் குழந்தைக்கு. அதைத் தொடர்ந்து இன்றுதான் என்னை கோபத்தின் எல்லைக்குக் கொண்டு சென்ற அந்தக் குறுஞ்செய்தி தியாகுவிடமிருந்து வந்திருந்தது.
“இவ்வளவு பெரிய தொட்டி இருக்குல்ல. நீ அங்கேயே முட்டிட்டு இருக்கியே. போய் நீந்து போ.” டொக்கென்று தன் பிஞ்சு விரலால் அந்தத் தங்க மீனின் முகத்திற்கெதிரே கண்ணாடிச் சுவரைத் தட்டினாள் மீனு.
விலுக்கென்று அதிர்ந்து திரும்பிய அந்தப் பொன்னிறத் தகடையொத்த மீன் இடவலமாய்ச் சுழன்று நீந்தத் தொடங்கியது. மீனு கைதட்டிக் குதூகலித்தாள்.
“டோக்கன் நம்பர் பத்து. மீனா. Vaccination chart காமிங்க மேடம்” Chart -ஐ Receptionist இடம் கொடுத்த பிறகும் சிந்தனை வயப்பட்டிருந்த என்னை மீனா உலுக்கி மருத்துவரிடம் அழைத்துப் போனாள்.
***
என் வயிற்றின் மேல் மெத்தென்று காலைத் தூக்கிப் போட்டபடி மீனா வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தாள். இரவின் அமைதியைக் கலைத்தபடி அவள் குரல் கொஞ்சியது.
“குளிருது சித்தி. ஏ.ஸி.ய கொஞ்சம் குறைச்சு வையேன்.” என்றவள், “அந்த gold fish எப்படி டக்குனு திரும்பி நீந்துச்சு பாத்தியா சித்தீ” என்று வியந்தாள்.
“அதுக்கு mobile ல எதாவது message வந்திருக்கும்” என்றேன்.
‘ஆங்..’ என்றபடி விழிகளை அகல விரித்தாள்.
மருத்துவ மனையிலிருந்து திரும்பியதும் mobile-ஐ switch on செய்து வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளில் தேடி,
“Will you be my companionக்குக் கீழே reply symbol போட்டு NEVER என்று பதிலனுப்பியதை நினைத்தபடி படுத்திருந்தேன்.
“அந்த Gold fishக்கு ஒரு பேரு வைக்கலாமா சித்தி”
நான் சற்றும் தயங்காமல் “நந்தினி” என்றேன்.
“ஹை நல்லாருக்கு . அது கூட உன்னை மாதிரியே அழகுதான்” என்றவள் சட்டென்று தீவிரமாக யோசிப்பவள் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.
“பாட்டி அன்னிக்கு ஒருநாள் நீ கல்யாணம் பண்ணிப்போயிடுவேன்னு சொன்னாங்க. அப்புறம் நானும் பாட்டியும் மட்டும்தான் இந்த வீட்ல இருப்போமா. ஆமா, உன் கல்யாணம் எப்போ சித்தீ.”
“மீனுக்குட்டிக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் சித்திக்குக் கல்யாணம்” என்று சொல்லி அவள் பட்டுக் கன்னத்தைத் தடவியபடி சிரித்தேன்.
ஹெ ஹெ ஹெ ஹெ என்று பல் தெரியச் சிரித்தாள். பிறகு வேகமாக என் முகத்தில் மோதி முத்தமிட்டாள்.
******