இணைய இதழ்இணைய இதழ் 89சிறுகதைகள்

ஒதுங்கிடம் – நித்வி

சிறுகதை | வாசகசாலை

ரவு முன்னமே படுத்திருந்தாலும் காலையில் வெள்ளன எந்திரிக்க நவீனுக்கு என்னவோ போலத்தான் இருக்கும்.அவன் தூங்கி இரண்டு மணி நேரம் ஆனது போலத்தான் அவனுக்குத் தோன்றியது. அவன் தோள்பட்டையை யாரோ தட்டிக் கொண்டிருந்தார்கள். அது அம்மாவா, அப்பாவா, என்று தெரியவில்லை. தூக்கம் இமைகளை கயிறு போட்டு இழுத்துக் கட்டி இருந்தது திறக்க விடுவேனா என்பது போல. அவன் எழுந்திருக்காவிட்டால் தோள்பட்டையைத் தட்டும் அவர்களது கை அவன் செவுனிக்குத் திருப்பப்படும். தூக்கத்திடம் கெஞ்சிக் கதறி இமைகளை திறந்து விடச் செய்தான்.

அவன் சரியாக கண் விழிக்கையில், “செவுனியோட ஒன்னு போடப் போறே” என்ற சத்தம் அவன் காதுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. திடுக்கிட்டு எழுந்து கொண்டான் உடம்பை முறுக்கி விட்டுக் கொண்டான். முகத்தில் “பொளிர்” என தண்ணீர் அடித்தது கொஞ்ச நஞ்சம் இருந்த தூக்கமும் அத்துப் போய்விட்டது. அவனது அம்மா ராணி ஏற்கனவே வெளியேறி இருந்தார். எப்போதும் அப்படித்தான், அதுபோலவே இன்றும்.

அவனது அப்பா பரமசிவம், அவருடைய செருப்பை மாட்டிக் கொண்டார். அவன் மேல் சட்டை ஒன்றும் போடாமல் வெறும் டவுசர் மட்டுமே போட்டிருந்தான்.

”செருப்ப மாட்ரா”

கண்ணை மூடிக்கொண்டே காற்றில் காலை அசைத்தான்

“பொடனியோட ஒன்னு வாங்கப்போற பாரு இப்ப”

இரு கண்களையும் நன்கு கசக்கி துடைத்து விட்டு அவன் செருப்பை போட்டான். நவீனும் பரமசிவமும் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தனர். அந்த தெருவின் முதல் வீடு அவர்களுடையது. அவர்கள் போகப் போக ஒவ்வொருவராய் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். அவரவர் அவர்களது பையன்களை கூடே கூப்பிட்டுக் கொண்டு வர, ஒரு வழியாய் ஓடையை வந்தடைந்தனர். அந்த ஓடை அவர்களது தெரு முக்கில் இருக்கிறது. நீண்ட நெடிய ஓடை தூரத்தில் இருக்கும் “கியா மியா” கோயிலில் இருந்து இந்த ஓடை ஆரம்பிக்கிறது. பல தெருக்களைக் கடந்து கடைசியாக இரட்டை வாய்க்காலில் போய் முடியும்.

“ஹ்ம்.போங்கடா, போயி இருந்துட்டு சீக்கிரமா வீட்டுக்கு போங்க”

“அப்பா, நாங்களும் உங்க கூட வாரோமே. அங்க வந்து இருக்குறோம்.”

அதெல்லாம் பெரியவங்க போற இடம். நீங்கள்லாம் அங்க வரக்கூடாது. ஒழுங்காக ஓடைல இருந்துட்டு வீட்டுக்கு ஒடுங்க. ஹ்ம் ஹ்ம்.” – என்று அவர் அறிக்கையை வெளியிட்டு விட்டு வேகமாக ஓடைக்குள் ஒரு பக்கமாக இறங்கி மறுபக்கமாக மேலேறிச் சென்றார்.அவர்கள் போகும் இடம் ஓடையைத் தாண்டி வரும் ரயில்வே ஸ்டேஷனுக்கு பின்னாலே இருக்கும்.

நவீனும் மற்றவர்களும் ஓடைக்குள் இறங்கி டவுசரைக் கழட்டி வரிசையாக அமர்ந்து கொண்டனர். தனித்தனியே சென்று அமர்ந்தால் கதை பேச முடியாது, சத்தமாகப் பேச வேண்டி இருக்கும். சத்தம் கேட்டால் எதிரே உள்ள கார வீட்டுக்காரர் வெளியே வந்து கத்த ஆரம்பித்து விடுவார். “லேய், அந்தாளு வந்துரப் போறாருடா. கொஞ்சோ அமைதியா சிரிங்கடா.”

“யோவ் பரமசிவம், அவிய்ங்களையும் நம்ம கூடயே கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வந்துரலாம்ல. என்னத்துக்கு இந்த ஓடைலயே விட்டுட்டு வந்து அக்கம் பக்கம் இருக்கவிய்ங்க கிட்ட வசவு வாங்க விடணும்?”

“அட, அதுக்காண்டிலா இல்லப்பா. எனக்கென்ன தலையெழுத்தா அவன ஊர்ப் பய கிட்டலாம் பேச்சு வாங்க விடணும்னு. இவிய்ங்க சாதாரணப் பட்ட ஆளு கெடையாது. நாம பேசுறதெல்லாம் அவிய்ங்க ஆத்தா கிட்ட போட்டுக் குடுத்துர்ராய்ங்க. அவளும் சன்னப் பேச்சா பேசுரா, வீட்ல இருக்கப்ப ஒரு பீடி கூட குடிக்க விட மாட்டேங்கிறாயா. அய்யோ, மனுசே எப்பிடித்தே அப்புடி இருக்கறது? அந்த வாடையே ஆகாதுங்குறா. பீடி குடிச்சா என் பக்கமே வராத, அந்த பீடி நாத்தம் எனக்கு கொமட்டிக்கிட்டு வருது, ஒழுங்கா அங்குட்டு போயிருன்னு விரட்டுராயா. பின்ன பீடி குடிச்சா நாறாம மணக்கவா செய்யும்? சரின்னு நானும் வீட்டுல புடிக்கிறதில்ல. அதான் இப்புடி வர்றப்ப ரெண்ட எடுத்து பத்த வக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே ஒரு பீடியை எடுத்து பத்த வைத்தார். 

“யோவ், எம் பொண்டாட்டி எல்லாம் அப்புடியே நேரெதுரா இருக்கா. வெளிய போயி தண்ணி போட்டுட்டு வர்ற சோலியே இருக்கக்கூடாதுங்குரா. உனக்கு குடிக்கனுமா அளவா வாங்கி ஞாயித்துக் கெழம வீட்டுலயே வச்சு குடி, குடிச்சுப் போட்டு சுருண்டு படுத்துக்க, அத விட்டுபுட்டு வெளிய எவென் கூடயாவது சேர்ந்து குடிச்சிட்டு ஓரண்ட இழுத்துட்டு வர மாறி இருந்துச்சு, நா என் ஆத்தா வீட்டுக்கு போயிருவேன் பாத்துக்கண்ணு மெரட்டுரா.”

“இதுக்காகத்தே அவிய்ங்கள இங்கன கூட்டியாரது இல்ல, அப்பறம் சண்ட சத்தம் ஒயாது. ஊர்ப் பயே என்ன சொல்ல போறயான், ஏன்டா கேனப் பய மகனே, கிறுக்குப் பய மகனேன்னு என்னையும் உன்னையும்தான சொல்லுவாய்ங்க.. அவனயா சொல்லப் போறாய்ங்க, விடு. ஆனா, இன்னி எத்தன காலத்துக்குத்தே இப்புடி ஊர்ப் பயே பேச்சுல விழுகுறதோ தெரில. ஒழச்சு, எழச்சு ,இத்து, புத்தாப் போயிதா தங்குறதயும் திங்கிறதயும் சமாளிக்கிறோம். இப்ப ஒதுங்குறதுக்கு இடம் ஒன்னு வேணுங்கிறது அத்தியாவசியமாகுதே, காடு கரையா கெடந்த எடமெல்லாம் வீடாப் போச்சு, வாடகைக்கு வந்த நம்ம ஒதுங்க எடந் தேடி ஆளுக்கொரு தெசயா அலயுறோம்.”

“எலக்சன் நேரோம் இது. ரெண்டு பக்கமும் பெரிய பெரிய ஆளுகளா கூப்ட்டு பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதும் இல்லாம இந்த வருஷம் எல்லா கட்சியிலயுமே கக்கூஸ் கட்டித் தரோம்னு சொல்லி இருக்காங்களப்பா. யாரு ஜெயிச்சாலும் நமக்கு கக்கூஸ் உறுதி.”

“அட ஏன்யா நீ வேற. வேதனைய கூட்டிக்கிட்டு. வா வா.” 

என்று அவர்களது இயலாமையைப் பேசிக் கொண்டே வந்த வேலையை முடித்துவிட்டு வேட்டியை தூக்கியபடி இரட்டை வாய்க்காலுக்கு வந்து சேர்ந்தனர்.

சின்னதுகளும் வந்த வேலையை முடித்துவிட்டு டவுசரை போட்டுக்கொண்டு ஓடையை விட்டு மேலேறினர். சிலர் டவுசரை போடாமலேயே.

டவுசர் போடாதவன் போட்டவனை பார்த்து, ““டவுசர்ல ஒட்டுச்சுன்னு வச்சுக்கடி, உங்கம்மா தோச கரண்டிய பழுக்க காய வெச்சு குண்டிலேயே சூடு போடப் போறாங்க பாரு”.

“போடா, நான்லா டவுசர்ல ஒட்டாமயே வீட்டுக்கு போயிருவேன்” என சொல்லிக்கொண்டே அவரவர் வீட்டுப் பக்கமாக ஓடினர்.

அன்றைய மதிய வேலை ஆட்டோவில் மைக் செட் ஒன்றைக் கட்டிக்கொண்டு எதையோ அறிவித்துக் கொண்டே சென்றார்கள். அந்த சத்தம் கேட்டதுமே நவீன் உட்பட தெருவின் மொத்த சின்னப்பயல்கள் கூட்டமுமே ஆட்டோவின் பின்னாலேயே ஓட்டம் பிடித்தனர்.

‘மழைக்காலம் வரப்போகின்ற காரணத்தால் நமது ஊரில் வெள்ள அபாயம் உள்ளதால் ஊருக்கு நடுவில் ஓடும் இந்த ஓடையை தூர்வார முனிசிபாலிட்டி கமிஷனர் ஆணை பிறப்பித்துள்ளார், இதனால் பொதுமக்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இங்கனம் முனிசிபாலிட்டி’ என்று ஆட்டோவில் அறிவித்துக் கொண்டே அந்தத் தெருவை கடந்து அடுத்த தெருவுக்கு நகர்ந்தனர்.

மறுநாள் காலையில் ஓடைக்குச் செல்ல ஓடையைச் சுற்றிலும் கம்புகள் கொண்டு வேலி அமைத்திருந்தார்கள். பரமசிவமும் மற்றவர்களும் பிள்ளைகளை அவர்கள் போகும் இடத்திற்கே கூட்டிச் சென்றனர். கொஞ்ச தூரம் சுற்றி.

அன்று நவீன் ஓட்டமாக ஓடி வீடு வந்து சேர்ந்த சிறிது நேரத்திலேயே பரமசிவமும் வந்து சேர்ந்தார். ராணியைக் காணவில்லை. எப்போதுமே அவர்கள் இருவரும் வீட்டிற்கு வருவதற்குள்ளாகவே ராணி வந்து விடுவார், இன்று இன்னும் வரவில்லை. ராணி போகும் இடமோ அந்த ஏரியாவுக்கு நடுவே இருக்கும் ஒரு பெரிய முள்ளுக்காடு. வீட்டுக் கழிப்பறை இல்லாத பொம்பளை ஆட்கள் எல்லாம் அங்கே தான் ஒதுங்குவார்கள்.

“எங்கடா உங்கம்மா?”

“நா வரும்போதே அம்மா இல்லப்பா”.

“இல்லையா?”

வெளியே சென்று சுற்றும் முற்றும் பார்த்தார். அவரைப் போலவே சிலர் வெளியே தலையை நீட்டிக் கொண்டிருந்தனர்.

சட்டென திரும்புகையில் பரமசிவத்தைக் கடந்து சென்ற ஒரு ஆட்டோ சரியாக நாலாவது வீட்டில் போய் நின்றது. ஆட்டோவின் உள்ளே இருந்து பரமசிவத்தின் மனைவி ராணி வெளியே வந்தார், இரண்டாவதாக புஷ்பம் ஒரு காலைத் தரையில் ஊன்றி, ஒன்றை தரைப்படாமல் வெளியே இறங்கினார் காலில் ஒரு பெரிய கட்டுடன். இந்தப் பக்கம் ராணியும் அந்தப் பக்கம் சுமதியும் கைத்தாங்கலாக புஷ்பத்தை நகர்த்தி வீடு சேர்த்தனர். பரமசிவமும் தெருக்காரர்களும் நாலாவது வீட்டிற்கு நகர்ந்தனர். வலது காலில் கட்டுப் போட்டபடி புஷ்பம் சுவற்றோரம் சாய்த்து அமர வைக்கப்பட்டிருந்தார்.

பரமசிவம் ராணியிடம் கட்டைப் பார்த்துக் கொண்டே கேட்டார்,”என்னடி ஆச்சு புஷ்பத்துக்கு?”

“பீங்கான் குத்தி காலு பாதம் பொளந்துகிருச்சுங்க”. 

“பாக்க கட்டு பெருசாவுல இருக்கு?”

“நல்ல ஆழமா எறங்கிருச்சு. கொள்ள இரத்தம் போய்டுச்சு.”

“என்னம்மா, பாத்து போகக் கூடாத” – என கூட்டத்துக்குள் பேச ஆரம்பித்தனர்.

“அதையே நெனச்சு பொலம்பாத. சோறு கொண்டாந்து தரேன். சாப்புட்டு ஆஸ்பத்திரியில குடுத்த மாத்துரயப் போட்டு சத்த நேரோம் படு” என புஷ்பத்திடம் சொல்லிவிட்டு, ராணி பரமசிவத்தை கை பிடித்து வீடு கூட்டி வந்தார்.

“இந்த ஆம்பளைங்களுக்கு வெவஸ்தயே கெடையாது. எப்ப என்ன பேசணும்னு, என்னம்மா பார்த்து போக கூடாதா வாம்ல? என்னத்த பாத்து போகச் சொல்றீங்க அந்த எடத்துல? கூட்டத்துல எதையாவது பேசணும்னு பேசிகிட்டு..” 

“எதோ நாஞ் சொன்ன மாறி என்ன ஏண்டி பேசுற?”

“உங்கள ஒன்னுஞ் சொல்லல, பொதுவாத்தே சொன்னே.”

“என்னத்த கெட்டியான செருப்ப போட்டுகிட்டு போனாலும் அந்த வெள்ளன இருட்டுல ஒன்னுந் தெரியாது. கால் எடறுச்சுன்னா புஷ்பா நெலமதே எல்லாருக்கும். மாடு வெச்சிருக்க ஆளுக எல்லாம் சாணிய கொண்டு வந்து அங்கதே கொட்றாங்க, அதையெல்லாம் தாண்டி உள்ள போனா ஒரே பாட்டிலும் கீட்டலுமா கெடக்கு. பொம்பளைங்க ஒதுங்கற எடத்துல கூடயுமா ஒக்காந்து குடிக்கணும். பகல்லயே இவ்வளவு சூதானம்னா, ராவுல இருக்க நெலயச் சொன்னோம்னா சொல்லி மாளாது எங்க தொயரம். எல்லாம் நாங்க வாங்கிட்டு வந்த வரம் அப்புடி. யாரச் சொல்லி என்ன பண்ண? ஒரு கக்கூச கட்டி தர மாட்றாங்கலே. நாலு தெருவுக்கு சேந்தாப்புல ஒரு கக்கூச கட்டுனாக் கூட போதாதா பொம்பளைங்க நாங்க ஒதுங்கிக்குவோம். இப்புடி சீப்புடத் தேவையில்லையே.”

“புஷ்பம் படுத்துட்டாலே ஒரு மாச பொழப்பே போச்சு. புருசன் சம்பாத்தியம் மட்டும் போதுங்கிற பொழப்பா நம்மளுது, அத வச்சு குடும்பத்த ஓட்டிறத்தே முடியுமா? இன்னி ஒரு மாசங் கூட ஆகுங்குறாங்க புண்ணு ஆற, என்ன பண்ணப் போறாளோ, வீட்ட எப்புடித்தேன் சமாளிக்கப் போறாங்களோ தெரியலையே?”

“இன்னும் எத்தன நாளு அந்த முள்ளுக் காட்டுக்குப் போயி அழுகனும்னு இருக்கோ தெரியலையேங்க”.

“விடும்மா, அதுவாச்சும் இப்ப இருக்கேன்னு மனச தேத்திக்க வேண்டியதுதான். என்ன பண்ண.. நம்ம பொழப்பு அப்புடி கெடக்கு.”

“எல்லாம் கடவுளோட சேலுங்க”.

சில நாட்களுக்குப் பிறகு புல்டோசர் ஒன்று ஓடைக்குள் இறங்கி இருந்தது தெரு மொத்தமுமே ஓடையை தூர்வாருவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

புல்டோசர் முன்னே நகர்ந்து சென்று தன் முன் தும்பிக்கையால் ஓடையின் ஓரங்களில் வளர்ந்து மேலோங்கி கிடந்த நாணல்கள், ஆமணக்குகள், கோரைப் புற்கள், என அனைத்தையும் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தது. அந்தப் புதருக்குள்ளே இருந்து எத்தனை எத்தனை பூச்சிகள் ஓட்டம் எடுத்தன, பாம்புகளும் கூட! ஒரு கோரைப் புல் புதரை மொத்தமாகத் தூக்க உள்ளே இருந்து நான்கு பாம்புகள் ஊர்ந்து ஓடியது. இங்குதான் இவ்வளவு நாள் போனோமா என்று நினைக்கையிலேயே சின்னதுகளுக்கு உள்ளுக்குள்ளே ஒரு பீதி கிளம்பியது, சிலர் பயந்து வீட்டிற்கு ஓடி வந்து அம்மாவிடம் அவர்கள் பார்த்ததை எல்லாம் சொன்னனர்.

ஒரு வழியாய் பெரு மழையெல்லாம் ஓய்ந்தது. அப்பப்போ சிறு தூறல்கள் மட்டுமே. ஓடை மறுபடி திறந்த வெளியானது. இருந்த போதிலும் அப்பா செல்லும் இடத்திற்கே அடம் பிடித்து அவர்களும் சென்றனர்.

அவர்கள் செல்லும் வழியில் அடுத்த வாரம் எலக்சன் பிரச்சாரத்திற்காக கட்சியின் மேலிடத்தில் இருந்து ஒருவர் வரப்போவதாக ஆட்டோவில் அறிவித்துக் கொண்டு சென்றார்கள்.

ராணியும் மற்றவர்களும் அன்று தேங்காய் சுமக்கச் சென்று விட்டு மதியம் மூன்று மணி வாக்கிலாகவே வேலையை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தனர்.

“சுமதி அக்கா, தேங்காய எல்லாரும் ஒரு சேர ஒரே வெலையா குடுப்போம். கூட்டிக் கொறச்சு தர வேணா. இங்கேயே ஒரு வெலய சொல்லு. எல்லாரும் அதுக்கே குடுப்போம். என்னன்ற?”

“அதுஞ் சரித்தேண்டி.. அப்படியே பண்ணிருவோம்.”

“இவ ஒருத்தி, மாசமா இருக்க சேதிய புருசன் கிட்ட எப்புடி சொல்றதுன்னு யோசிக்காம தேங்கா வெலயப் பத்தி பேசிட்டு வாரா பாரு” – என்று ராணியைக் கேலி பேசிக்கொண்டே முள்ளுக்காட்டு பக்கமாக வந்தனர்.

முள்ளு காட்டை ஒட்டி பத்துப் பதினைந்து பேர் வெட்டரிவாள், கோடாரி, கடப்பாரை, மண்வெட்டி என வைத்திருந்தனர், அருகே ஒரு டிராக்டர்.

“என்னண்ணே, என்னா வெவரம்?” என ராணி கேட்டாள்.

“அது”.

“அட என்னன்னுதே சொல்லுங்க”.

“இந்த முள்ளுக்காட்ட வெட்ட வந்துருக்கோம் மா. யாரோ பெரியாளு இந்த பக்கமாக வரப் போறாராம்.”

அவர் சொன்ன அந்த கடைசி வார்த்தையைக் கேட்டதும், சிலர் திக்கு முக்காடிப் போயினர், சிலர் சத்தம் போட ஆரம்பித்தனர்.

ராணி தன் வயிற்றைத் தடவிக் கொண்டே பலவாறான யோசனைக்குள் இறங்கினாள்.

********

nithvisnotebook@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button