புத்த தரிசனம்
இவனொன்றும் பைத்தியக்காரன் அல்ல
பிச்சைக்காரனும் அல்ல.
புத்தர்களெல்லாம் அவசரப்பட்டு
விரைந்து எழுந்து போன
சிக்னல் கம்பத்து மரத்தடியில் அமர்ந்து
இஷ்டப்படிக்கு என்னெவெல்லாமோ
இங்லீஸில் உரையாற்றும் இவன்
காத்திருப்போரையெல்லாம்
கைதட்டிச் சிரிக்க வைக்கிறான்
ஏஜலிஸ்டாக அலைகிற இவன்
தூங்கும் நேரம் தவிர
உரையாற்றியபடியே திரிகிறான்
குழந்தைகளைக் கண்டால்
ஏ முதல் இஜட் வரை
போயம் கதைக்கிறான்
குடிகாரனைக் கண்டால்
லுங்கியில் போட்டுக்கொண்டு
லலபை பாடுகிறான்
அன்னமளிப்போரை மை மதர்
என்று அழுது
கண்ணீரை அன்பளிக்கிறான்
ஓயாமல் தத்துவம் பேசிப் பேசி
சிரிப்பவர்களைப் பார்த்து
ஃபூலிஷ் பிட்சஸ் என்கிறான்
பைத்தியக்காரன் என்று
சிரித்துக்கொண்டே இவனை
கடந்து சென்ற
எவருக்கும் இவன் பேசுகிற
தத்துவம் புரிவதில்லை
எனக்கு மட்டும் சத்தியமாய் புரிகிறது
புத்தனுக்குக் குறைந்தவனில்லை இவன்
காண்போரையெல்லாம்
சிரிக்க வைப்பவனாய் அலைகிற இவன்
சிரித்து யாரும் கண்டதில்லை
எனக்கு மட்டும் சத்தியமாய்
அத்தரிசனம் கிட்டியது
அவன் ஏன் புத்தனானான்
என்று அவனிடமே கேட்ட பொழுது.
***
மலீனா
யாவும் மாறிவிட்டது மலீனா
நொடிக்கொரு அலைக்கொணரும் கடல் கூட
நெஞ்சு உள்வாங்கி வற்றிப்போனது
எனினும் உன் மீது கொண்ட காதல் மட்டும்
மாறாமல் பாய்கிறது நினைவு நாளங்களில்
கடற்கரைச் சாலையில் உன்னோடு சுற்றி வலம் வர
வாங்கிய சைக்கிளை ரயிலடி படத் தொலைத்தேன்
கைக்கிளையை எத்தனையோ பெண்களிடம் கழித்தும்
காதலை இன்னும் கண்டடையவில்லை.
நீ ரயிலேறிப் போன தண்டவாளத்தில்
கேட்டிருக்க வாய்ப்பில்லை
காதல் தந்தி அடித்த
இறுதி சைக்கிள் பெல் ஒலியை
நீ பற்ற வைக்கும் ஒரு சிகரட்டிற்கு
நூறு தீக்குச்சிகள் ஏந்திய கைகள் வரலாம்
பற்றி எரிக்காத ஒரு மின்மினி ஜுவாலையை அல்லவா
உன் அன்பு கேட்டது
யாதொன்றும் தீண்டாத
மடிக்குள் தவழும் முலைப்பாலென
ஒரு சொட்டு நெருப்பை
உனக்கென சேகரித்து வருவதற்குள்
ஊழி மழையில் நனைந்து
நமர்த்தே போனாய்
உனக்கென வைத்திருந்த
கொடுக்காத கடிதங்களைக்
கடலில் போட்டதை
கலகஞ்செய்த கடவுள்
பார்த்து கைதட்டிச் சிரித்தான்
உனைப் பிரித்ததற்காய்
அவன் கைகளை உடைத்துவிட்டுத் தான் வந்தேன்
எப்படியோ வித்தைக்கார படுபாவி
கூத்தாடினான் காதலில் குரூபி
வருடங்கள் புலர்ந்து விட்டது மலீனா
கடற்கரைச் சாலை குழிவிழுந்தும்
புதுப்பித்தும் ஆனது
இரண்டொரு பெண்களைக் காதலிக்கிறேன்
ஈராயிரம் யுவதிகளைக் காண்கிறேன்
யாவும் கண்திறவா சிற்பங்களே
நீ வாழ்ந்த வீட்டினைக் கடந்திடும் பொழுது
ஒரு நிமிடம் நின்று யோசிப்பேன்
நான் திருடி முகர்ந்த
நீ பயன்படுத்தும்
பிரத்தியேக தலைதுடைக்கும் துவாலையில்
கமழ்ந்த மேனியின் மணத்தினை
எந்தப் பழத்தில் பிழிந்து பருக?
******