1.
அலை நனைக்கும் தன் பாதங்களையே பார்த்துக்கொண்டு வெகு நேரம் நின்றிருந்தாள் வெண்மதி.
பரந்து கிடக்கும் கடல் தன் அலைக்கரங்களால் இவளது பாதங்களை முத்தமிட்டுச் செல்வது போலிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் இதே கடற்கரையில் அழுதுகொண்டே தான் நின்றிருந்ததும், அந்தக் கண்ணீர் நாளுக்குப் பின் தன் வாழ்வு மாறிப்போனதிற்கு இந்தக் கடலின் ஆசிதான் காரணம் என்பதையும் தீவிரமாக நம்பினாள். எவ்வளவு மாற்றங்கள். எல்லாம் மிகப்பெரியதொரு கனவு போலிருந்தது. தன் கைப்பையிற்குள் சிணுங்கிய ஐபோனை எடுத்துப் பார்த்தாள். ஆயிரம் டாலர்கள் இவளது அமெரிக்க வங்கிக் கணக்கில் வந்து விழுந்திருந்தது. லேசானதொரு புன்னகை மலர்ந்தடங்கியது. மீண்டும் போனை கைப்பைக்குள் வைத்துவிட்டு ஈரம் படர்ந்த கடற்கரையில் பாதம் பதித்து நடக்க ஆரம்பித்தாள். அவளது பாதச்சுவட்டில் நிரம்பிய கடல்நீர் நுரைத்துத் தளும்பிற்று.
சென்னைக்கு இரண்டு வருடங்களுக்கு முன் வெண்மதி நெல்லைச்சந்திப்பில் ரயிலேறியபோது அவளது அம்மா ரயிலின் ஜன்னல் கம்பிகள் இடையே கைநுழைத்து நெற்றியில் திருநீறு பூசிவிட்டார். “பத்திரமா போயிட்டு வாம்மா எம்புள்ளா…” என்று அவர் சொன்னபோது அவரது கண்கள் கலங்கியிருந்தன. முதல் முறையாக சென்னை வந்திறங்கியபோது எல்லாமும் புதியதாயிருந்தன. தாம்பரத்தில் இவள் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே வேலைக்குச் சேர்ந்த நிறுவனமும் இருந்தது. விடுதியின் அறையில் இருவர் தங்கிக்கொள்ளலாம். இவளது அறைக்கான மற்றொரு இடம் காலியாக இருந்ததால் இரண்டு கட்டிலையும் அருகருகே போட்டுக்கொண்டு உறங்குவாள். புதிய இடமும் புதிய வேலையும் பழகிக்கொள்ள ஒரு மாத காலம் ஆனது. சென்னையின் வேகம் முதலில் கலக்கத்தைக் கொடுத்தபோதும் நாளடைவில் அதுவே பழகியிருந்தது. ஒரு ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு இடம்பெயர்கையில் நம்முடைய ஊரையும் நம்மில் சுமந்துகொண்டுதான் செல்கிறோம். நாம் பேசும் சொற்களிலும் நம் செயல்களிலும் நம் ஊரின் வாசம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. வெண்மதிக்கு சென்னையின் மொழியும் வாழ்வுமுறையும் பழகுவதற்குச் சிரமமாக இருந்தாலும் புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகமிருந்ததால் சென்னை விரைவாக அவளுக்குள் ஓர் அருவியின் இசைதலைப்போல உள்ளிறங்கியது.
முதல் மாதத்தின் இறுதியில் அறையை பகிர்ந்துகொள்ள ப்ரியம்வதா வந்ததிலிருந்து மரம் நீங்கிய இலையொன்று மண்ணில் வீழாமல் மரத்தடி குப்பைத்தொட்டிக்குள் விழுந்ததைப் போன்று உணரத்துவங்கினாள் வெண்மதி. அவளது முதல் கேள்வியே நெஞ்சை அறுத்துப் பார்த்தது.
“உங்களுக்கு மாறுகண்ணா?” அவள் அப்படிக் கேட்டதில் ஏதேனும் கிண்டல் தொனி இருக்கிறதா அல்லது வெகு இயல்பாய்த்தான் கேட்டாளா என்பது புரியவில்லை. சின்னதாய் ஒரு புன்னகையைத் தந்துவிட்டு எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியேறியவளின் கண்களோரம் பூத்துநின்றது ஒற்றைத் துளி. அந்தக் கேள்விக்குப் பின் ப்ரியம்வதாவின் எந்தவொரு வார்த்தைகளும் இவளது செவியை வந்தடையவேயில்லை. அந்த ஒரு மாதமாய் தன் மனதின் அடியாழத்தில் உறைந்துகிடந்த தன்னிரக்கம் என்னும் குறளி சிறகு விரித்து மனதிலிருந்து வெளியேறி அவளுக்கு முன் பேருருவமாய் வந்து நின்று பரிகசித்தாள். தலை வலித்தது. குனிந்து தரையைப் பார்த்துக்கொண்டே தலையில் கைவைத்து வரவேற்பறையிலிருக்கும் சோபாவில் உட்கார்ந்தபோது விழியோரம் பூத்துநின்ற கண்ணீர்மொட்டு சடசடவென்று அவளது பாதத்தில் பட்டுத் தெறித்தது. ஊரிலிருக்கும்போது எவ்வளவோ கிண்டல்களையும் கேலிகளையும் கேட்டுக் கேட்டு மரத்துப்போன இதயத்துடன் கல்லூரி முடித்து வேலைக்கென சென்னை வந்தபோது இங்கே யாருமே தன்னுடைய குறையை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்பது பெரும் ஆசுவாசமாகயிருந்தது. அந்த மிகச்சிறிய மகிழ்வை, நிம்மதியை ப்ரியம்வதாவின் நேரடிக்கேள்வி உடைத்துப்போட்டதாகத் தோன்றியது. எல்லா ஊரிலும் மனிதர்கள் ஒரே மாதிரிதான், எல்லோர் மனதிலும் தானொரு கேலிப்பொருள்தான் என்கிற கழிவிரக்கம் உடன் மனதெங்கும் படர்ந்தது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கொஞ்ச தூரம் நடக்கலாம் என ரோட்டிற்கு வந்தவள் ஏதோவொரு குறுஞ்செய்தி வந்த சத்தம் கேட்டதால் மொபைலை எடுத்துப் பார்த்தாள். அதுவொரு விளம்பர எஸ்.எம்.எஸ் என்பதால் பெரிதும் ஆர்வம் காட்டாமல் ஹெட்போனை எடுத்து மாட்டிக்கொண்டு ஸ்பாட்டிபை செயலியைத் திறந்து தனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்டுக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள். அந்த விளம்பர எஸ்.எம்.எஸ் தன் வாழ்வையே மாற்றிவிடும் என அப்போது அவள் நினைத்திருக்கவில்லை.
2.
ஏதோவொன்று நம் வாழ்வுக்குள் புதியதாக நுழையும்பொழுது அது தரும் பரவசத்தின் அளவைப் பொறுத்தே அதை நாம் அசலாக விரும்புகிறோமா என்பது தெரியவரும். அந்த ஏதோவொன்று எதுவாகவும் இருக்கலாம். வெண்மதியின் விடுதியிலிருக்கும் மொட்டைமாடிதான் அவளது அதிகமான நேரத்துளிகளை எடுத்துக்கொள்வதாக இருந்தது. அந்த மாடியில் தன் கிளைகளைப் பரப்பி ஓய்வெடுத்தபடி நிற்கும் மாமரத்தில் எண்ணற்ற பட்சிகள் வந்து செல்வதும் அவை எழுப்பும் ஒலிகளில் தன்னை மறந்து லயித்திருப்பதும் அவளது அன்றாடங்களின் ஒன்றாகிப் போனது. எந்தவொரு பறவையையும் பார்த்தவுடன் அவளது பார்வை அதன் சிறகிலோ அலகிலோ முட்டி நின்றுவிடாமல் அதன் கண்களில் மட்டுமே நிலைத்திருப்பதை அவள் உணரத்துவங்கியிருந்தாள். சிறு வயது முதலே தன் உடலின் குறையென அவள் நினைக்கும் பாகமாக அவளது கண்கள் மாறிப்போனதற்கு அவளைச் சுற்றிய பரிகாச உலகம் முக்கியமானதொரு காரணியாகியிருந்தது. அவளது அம்மா மட்டுமே உனக்கென்ன குறை நீ என் ராசாத்தி என்றபடி ஆறுதலாய் கட்டிக்கொள்வாள். ஏன் இவ்வுலகு இவ்வளவு மனப்பிறழ்வுடன் பிறரை அணுகுகிறது எனத் தோன்றும். அம்மாவுக்குத் தெரியாமல் ஒருமுறை கண் மருத்துவரை சந்தித்து இதைச் சரி செய்யும் வழிகளை கேட்டபோது அதற்கான பணத்தொகை பெரியதாக இருந்ததால் அந்த எண்ணத்தை அப்படியே கைவிட்டாள்.
பச்சைக்கிளியொன்று உச்சிக்கிளையில் வந்தமர்ந்ததும் மரம் தலையசைத்து புன்முறுவல் பூப்பது போலிருந்தது. அந்தக் கிளியின் கண்களையே உற்றுப் பார்த்தவள் பறவையினத்தில் மாறுகண் பறவை என்பதே இல்லை போலும் என்று நினைத்தவுடன், தான் ஏனொரு பறவையாக இல்லாமல் போனோம் என்கிற ஏக்கம் வளர்ந்து பெரியதொரு பட்சியாகி தன்னை விழுங்குவது போலிருந்தது. தன் கண்களை இதுவரை யாருமே ரசித்துப் பார்த்ததில்லை என்ற எண்ணம் தோன்றியபோது அவளது இதழ்கள் துடிதுடித்தன. பற்களால் கீழுதடைக் கடித்துக்கொண்டே மாடிப்படியில் இறங்கி அறைக்குள் நுழைந்தபோது மொபைலில் புதியதொரு எஸ்.எம்.எஸ் வந்திருந்தது. இம்முறையும் அது ஏதோவொரு ஸ்பேம் மெசேஜாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அதை அழித்துவிட முயன்றபோது, அதிலிருந்த ஓர் வாசகம் அவளைத் தடுத்தது. “அழகின்மையிலிருந்து அழகிற்கு” என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கொஞ்சம் ஆர்வம் தொற்றிக்கொள்ள அதிலிருந்த சுட்டியை சொடுக்கியபோது க்ரோம் ப்ரவுசரில் வலைத்தளம் ஒன்று விரிந்தது. அதன் முகப்புப் பக்கத்திலிருந்த புகைப்படங்கள் அவளது ஆர்வத்தை தீவிரப்படுத்தியவுடன் அடுத்த ஒரு மணிநேரமும் அந்த வலைத்தளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் அவளது பார்வை பதிந்து நகர்ந்தது. கண்ணீரால் கொதித்தடங்கியிருந்த மனம் இப்போது வெயிலில் இறுகிக்கொண்டிருக்கும் பாறையை ஒத்திருந்தது. அந்த இறுக்கத்துடனே போனை கையில் எடுத்தவள் விரக்தியால் நிரம்பியதொரு புன்னகையுடன் க்ளிக் சப்தத்தால் அந்த அறையின் நிசப்தத்தில் உமிழ்ந்தாள்.
3.
மழைக்காலம் துவங்கியபோது சென்னையில் மூன்று மாதங்களை கடந்து விட்டிருந்தாள். அந்த நாட்களில் சென்னையும் அதன் மனிதர்களும் முழுவதுமாய் அவளது வாழ்வை நிரப்பியிருந்தார்கள். விடுதியும் அலுவலகமுமே வாழ்வாகிப்போனதில் தன்னிரக்கம் குறைந்து ஒருவித துள்ளல் மனநிலையில் வசிக்கப் பழகிய கணத்தில்தான் தன் அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் ரெஸ்டாரண்டில் மேலாளராக இருக்கும் கதிரைச் சந்தித்தாள். அலுவல் முடிந்து விடுதி திரும்பும் முன் வாரத்தில் இருநாட்கள் அந்த ரெஸ்டாரண்டில் இரவு உணவுக்காகச் செல்கையில் அவனைப் பார்த்ததும், எப்போதும் இதழோரம் கசியும் மெல்லிய புன்னகையுடன் அவன் பேசுவதும் அதீத வேலைப்பளுவிலிருந்து சிறியதொரு இளைப்பாறுதலைத் அவளுக்குத் தந்தது. அவள் வருவதைப் பார்த்ததும் வெயிட்டராக கதிரே அவள் அமர்ந்திருக்கும் மேசைக்கு வந்துவிடுவான். மெல்லத் துவங்கிய நட்பு மொபைல் எண் பரிமாற்றத்திற்குப் பின் வேகமாக வளர்ந்து இதோ இந்தக் கடலின் முன் இருவரையும் அமரச்செய்திருக்கிறது. கடலைப் பார்த்தபடி, தொலைவில் மஞ்சள் ஒளியுடன் மறையத்துவங்கிய சூரியனைப் பார்த்தபடி வெகுநேரம் தொடர்ந்தது அன்பின் உரையாடல். அவளது புறங்கையில் முத்தமிட்டு அவன் விரும்புகிறேன் என்றதும் உடல் சில்லிட்டு உயிர் சிலிர்த்து சிலையாக மாறியிருந்தாள்.
பின்னொரு நாளின் பவித்திரமான பொழுதொன்றில் எது தன்னிடம் அதிகம் பிடித்தது எனும் கேள்விக்கு அவளது கண்களை முத்தமிட்டுச் சிரித்தவனைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டே சிரித்தாள். அவனுடனான பைக் பயணங்களும் கடற்கரையோர நடைகளும் அதிகமானபோதுதான் அவன் மெல்ல தன் விருப்பத்தை அவளது செவிகளில் உதிர்த்தான். அவளுக்கு அது அதிர்வைத் தரவில்லையெனினும் காமத்திற்கு ஏனிந்த அவசரம் எனத் தோன்றியது. அவனது கரம் பற்றி தன் பதிலைச் சொன்னவள் அவனது கண்கள் பெரும் ஏமாற்றத்தில் பரிதவிப்பதையும் கண்டுகொண்டாள்.
4.
வெட்டப்படும் மீன் துண்டுகளிலிருந்து தெறிக்கும் குருதித்துளிகள் கன்னத்தில் பட்டபோது ஏற்பட்ட கணநேரத்து சில்லிடலும் நாசி துளைக்கும் வீச்சமும் தன் அப்பாவின் மீன் கடைக்குச் சிறு வயதில் செல்லும் போதெல்லாம் நிகழ்பவைதான் எனினும் அந்த நெடி இன்று ஏன் தன் நாசி துளைக்கிறதென்பது அவளுக்குப் புரியவேயில்லை. இந்தப் பின்னிரவில் ஜீரோ வால்ட்ஸ் மஞ்சள் நிற பல்பிலிருந்து அறைக்குள் குவியும் வெளிச்சம் போல அப்பாவின் கூரிய பெரும்கத்தி மீனை இரண்டாக பிளக்கும் காட்சி மனதெங்கும் குவிந்துகொண்டே இருந்தது. உறக்கமும் இல்லாமல் விழிப்புமில்லாமல் புரண்டவள் ஏதோ தோன்ற தன் படுக்கையினோரம் வைத்திருந்த மொபைலை எடுத்துப் பார்த்தபோது வாட்சப்பில் வாய்ஸ் நோட் ஒன்று வந்திருந்தது. நள்ளிரவில் புதிய எண்ணிலிருந்து இப்படி வாய்ஸ் நோட் வந்திருப்பதற்கும், தன் நிலைகொள்ளா மனதிற்கும் இடையேயான முடிச்சு என்னவாகயிருக்கும் என யோசித்தபடியே ஹெட்போனை காதுகளில் பொருத்தி அந்த வாய்ஸ் நோட்டை கேட்க ஆரம்பித்தாள். கதிர் தன் நண்பனாக நினைத்த யாரோ ஒருவனுக்கு அனுப்பியது. கேட்டு முடித்தவுடன் மொபைலைத் தூர வைத்துவிட்டு போர்வைக்குள் சுருண்டு கொண்டவளின் கன்னத்தில் பிசுபிசுத்தது வெட்டப்பட்ட மீனின் சதைத்துணுக்கும் அவளது கண்ணீரின் உப்பும்.
அதிகாலை எழுந்தவள் டாக்ஸி ஒன்றைப் பிடித்து நேராக கடற்கரைக்குச் சென்றாள். கடல் ஒரு சர்ப்பத்தைப் போல் சுருண்டு படுத்துக்கொண்டிருப்பது போலத் தோன்றியது. அதன் அருகே சென்று காலால் மிதித்தபோது அலைச்சீற்றத்துடன் அது தன் இருப்பைக் காண்பித்தது.
தன் வாழ்வில் ஏன் எல்லாமும் புரியாத விசித்திரங்களாகவே இருக்கின்றன? ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக மனிதர்கள் இருக்கிறார்கள்? உருவு கண்டு எள்ளுதல் எவ்வகை நியாயம்? இந்த விஷப்பூச்சிகளுக்கு மனதென்பதே இல்லையா? கதிரை நிற்கவைத்து செருப்பால் அடிக்கத் தோன்றியது. காமத்தேவைக்கான அவனது கேள்விக்கு எவ்வளவு நிதானமாக தான் பதிலிட்டபோதும், எப்படி அவனால் இவ்வளவு வக்கிரத்துடன் பேச முடிந்தது என்பது அவளுக்கு புதிராகவே இருந்தது.
அவனுக்குள் ஒளித்துவைத்திருந்த இழி புத்தியை தோலுரித்துக் காண்பித்த அந்த அறிமுகமில்லாத எண்ணுக்கு மனதால் நன்றி சொன்னவள் மீண்டுமொருமுறை அந்த வாய்ஸ் நோட்டை ஓடவிட்டாள். “மச்சி, அந்த ஒன்னரைக்கன்னிய முடிச்சுடலாம்னு மெதுவா விஷயத்த சொன்னேன், பெரிய புடுங்கிமாதிரி கல்யாணத்துக்கு அப்புறம் வச்சிக்கலாமேன்னு சொல்றாடா. இந்த மாறுகண்ணு முண்டைய கல்யாணம் பண்ண நானென்ன கிறுக்கனா..” மேலும் சில வக்கிரமான வார்த்தைகளை உதிர்த்திருந்தான் கதிர். அவ்வளவு மென்மையானவன் என தான் நினைத்திருந்த கதிரிடமிருந்து இவ்வளவு வக்கிரமும் குரூரமும் நிறைந்த சொற்களை அவள் எதிர்பார்க்கவில்லை.
அவனது எண்ணை ப்ளாக் செய்துவிட்டு நிமிர்ந்தபோது கடல் தன் சர்ப்ப உருவிலிருந்து வண்ணங்கள் குழைந்த ஓவியமொன்றைப் போல் காட்சியளித்தது. அப்போது ஒரு மின்னஞ்சல் வந்திருப்பதாக ஜிமெயில் நோட்டிபிகேஷன் அனுப்பியதைத் திறந்து பார்த்தவளுக்கு இது நிஜமா அல்லது நானொரு கனவுலகில் வசிக்கிறேனா என்கிற குழப்பம் வந்தவுடன் அவசரமாக தனது ஹெச்.டி.எப்.சி வங்கி செயலியைத் திறந்து பார்த்தாள். அங்கே இருநூறு அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் வந்திருந்தது. நம்பமுடியாமல் நின்றவளின் பாதங்களைத் தொட்டு விளையாடியது கடல்.
5.
ஒருவரை வாழ்விலிருந்து விலக்குவது என முடிவு செய்தபின் அவர் வழியில் செல்வது முட்டாள்தனம் என நினைத்தவளின் மனதிலிருந்து கதிர் கொஞ்சம் கொஞ்சமாய் உதிரத்துவங்கியிருந்தான். தன் இயல்புக்குத் திரும்பியவள் தன் புதிய வருமானத்தை நம்ப முடியாத மகிழ்வுடனும் ஆச்சர்யத்துடனும் ஏற்றுக்கொண்டிருந்தாள். தனக்குள்ளிருந்த தன்னிரக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் தன்னிலிருந்து நீங்கியதை கண்டு வியந்தபடியும் இருந்தாள். தன் குறையை கண்டு எள்ளிய கண்கள் எல்லாம் தன் பாதத்தில் வீழ்ந்து கிடப்பதாக நினைத்துச் சிரித்துக்கொள்வாள்.
அப்படித்தான் அது நிகழ்ந்தது. ஒரு எஸ்.எம்.எஸ் தன் வாழ்வை மாற்றிவிடும் தனக்குள்ளிருந்த தன்னிரக்கத்தை விரட்டிவிடும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அந்த எஸ்.எம்.எஸ்ஸில் வந்தது ‘பன்வித்பீட்’ (www./funwithfeet.com/) எனும் வலைத்தளத்தின் விளம்பரம். தன் பாதங்களை புகைப்படமெடுத்து அந்த வலைத்தளத்தில் ஏற்றிய பின் உலகெங்கிலுமிருந்து அதை வாங்கும் பயனர்கள் அமெரிக்க டாலர்களை வாரி இறைக்க ஆரம்பித்தனர். தன் சுயவிபரங்கள் எதுவும் இல்லாமல் தன் பாதங்களை மட்டும் புகைப்படம் எடுத்து அந்த வலைத்தளத்தில் இவள் பதிவேற்றிய சில நொடிகளிலேயே அவை விற்றுத் தீர்ந்துவிடும். அதிலும் அமெரிக்காவின் டெக்ஸாஸில் வசிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு பயனர் இவளது பாதங்களின் பெரும் ரசிகனான தானிருப்பதாகச் சொல்வதுடன் வலையேற்றம் செய்த உடனே வாங்கிவிடுவதுமாக இருந்தான்.
தான் செய்வது தவறா அல்லது சரியா என்பதைப் பற்றி யோசிக்கும் மனநிலை அவளுக்கு தேவையற்றதாகி இருந்தது. இவ்வுலகம் எப்பொழுதும் தன் பாதங்களுக்கு கீழ்தான் இனி கிடந்தாக வேண்டும் எனத் தோன்றியபோது தன் கைப்பையினுள்ளிருந்து ஐபோனை எடுத்தவள் ஒரு கண்ணை மூடிக்கொண்டே தன் பாதங்களை விதவிதமாக புகைப்படம் எடுத்துவிட்டு பன்வித்பீட்.காமிற்குள் நுழைந்து ‘பக்யூ_கதிர்’ எனும் தன் ப்ரோபைலுக்குள் சென்று படங்களை வலையேற்றம் செய்தாள்.
பின்,
அலை நனைக்கும் தன் பாதங்களையே பார்த்துக்கொண்டு வெகு நேரம் நின்றிருந்தாள் வெண்மதி.
******
வாழ்த்துகள் நிலா. நெடுங்கதையாக வந்திருக்க வேண்டிய குறுங்கதை. உடல் ஊனம் குறித்த தாழ்வுமனபான்மை களைந்து சந்தோஷமாய் வாழ்க்கையை எதிர்கொள்வது அழகு.