அன்னத்தாயி ஆச்சி சொன்ன விடுகதைக்கு விடை தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள் லட்சுமியும் அவளது சகோதரிகள் இருவரும். தெருவில் அவர்களைக் கடந்து எதோ அவசரமாக போவதுபோல சென்று கொண்டிருந்த விட்டி முருகனை பார்த்துவிட்டு, “எலே விட்டி, கொஞ்சம் நில்லுல.” என்றாள் லட்சுமி.
“ஏய், அவன ஏன் கூப்பிடுற? எதோ அவரசர சோலியா போயிட்டு இருக்கறான், அவன கூப்பிட்டு வச்சி வம்பளக்க போறேங்கற?” என்றுஆச்சி கூறும் போதே சட்டென திரும்பி, “என்ன லட்சுமி?.” என்று கேட்டு நின்றுகொண்டிருந்தான் விட்டி முருகன்.
அவனைப் பார்த்துவிட்டு, “ஒண்ணும் இல்லல. நீ போ.” என்றாள் அன்னத்தாயி ஆச்சி.
“எங்க ஆச்சி அப்படிதாம்ல சொல்லவா. நீ வா…” என்றதும் அருகில் வந்தவனிடம், “நான் ஒரு விடுகதை போடுறேன், அழிக்கிறயால?” என்றாள் லட்சுமி.
“விடுகதையா…?”
“ஆமால.”
“ம்… சரி, சொல்லு.” என்றவன் லட்சுமி சொல்வதைக் கேட்பதற்கு ஆர்வமாக நின்று கொண்டிருந்தான்.
நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த அன்னத்தாயி ஆச்சி பேத்திகள் என்ற முறையில் அவள் கிண்டலுக்காக சொன்ன விடுகதையை லட்சுமி, விட்டி முருகனிடம் சொல்லி விட்டாளென்றால், அது ஒவ்வொரு காதுகளாய், மாறி மாறிச் சென்று ஊருக்கே தெரிந்து ஏதாவது விபரீதமாகி விடப்போகின்றது என்ற அச்சத்தில், “எலே விட்டி பயல, நீ எதோ அவசர சோலியாதானல போயிட்டு இருந்த? நான் சொல்ல சொல்ல கேட்காம, இவகிட்ட நின்னு வம்பளக்க போற? உன் அம்மாகாரிக்கு தெரிஞ்சது வந்து நச்சிப்புடுவா. போல, போயி அவ சொன்ன சோலிய பாருல முதல்ல.” என்று விடுகதையை கேட்க விடாது துரத்தினாள்.
“ஆங், எங்க அம்மா எதுவும் எங்கிட்ட சொல்லல. மந்தையில பெயலுவோ விளையாடிட்டு இருக்கானுவ, நான் அங்கதான் போயிட்டிருந்தேன்.” என்றான் அவன் வெகுளியாக.
“அப்ப, சொனங்காம வெரசலா போல. இங்கயே சொனங்கிட்டேன்னா, விளையாட்டுல சேத்துக்காம உட்டுற போறானுவோ.” என்று துரத்த நினைத்தாள்.
“அதெல்லாம், என்னைய சேத்துக்காம உட மாட்டானுவ.”
“அதுக்காக, பொம்பள புள்ளயகிட்ட வந்து வம்பளந்துட்டு இருப்பியால? உன்னப்போல ஆம்பள பயலுவட்ட போயி வம்பள, போல.” என்று சற்று குரலை உயர்த்தி அதிகார தொனியில் சொன்னாள்.
லட்சுமி அவளை குறுக்கிட்டு, “ஆச்சி. நீ ஏன் அவன தொரத்துற? எங்க மூனு பேத்துகுமே விடயம் தெரியல. அவனுக்காவது தெரியுதான்னு பார்க்கலாமேன்னுதான் கூப்பிட்டுருக்கறேன். நீ என்னன்னா, அவன தொரத்தி விடுறதுலயே கண்ணா இருக்கற? இப்ப என்ன… நீ போட்ட விடுகதைக்கி நாங்க விடயத்ததான சொல்லனும்? அது எப்படி சொன்னா உனக்கென்ன?”
“அதெப்படி ஒத்துக்க முடியும். நான் உங்களுக்குதான விடுகத போட்டேன். ஊருக்கா போட்டேன்?”
“நாங்களும்தான் எவ்வளவோ யோசிச்சி பார்த்துட்டோம், விடயமே பிடிபட மாட்டேங்குது. அப்பறம் எங்கோடியிருந்து சொல்றதாம்?” என்று லெட்சுமி கோபித்துக் கொண்டதும்தான் பேசாமல் மௌனித்து இருந்தாள் அன்னத்தாயி ஆச்சி.
“இருந்தால் சிரிக்கும் எழுந்தால் கும்பிடும் அது என்ன?” என்று சொல்லிவிட்டு விட்டி முருகனின் பதிலுக்காக லட்சுமி காத்திருந்தாள்.
அவள் சொன்னதை விட்டி முருகனும் ஒரு முறை சொல்லிப் பார்த்துவிட்டு அதற்கு ஐந்தாறு விடயங்களைச் சொன்னான். அவன் சொன்ன விடயங்கள் எல்லாவற்றையும் தவறென்று அன்னத்தாயி ஆச்சி சொல்லிவிட அதன் பிறகும் சிறிது நேரம் யோசித்தவாறு நின்றுவிட்டு, “எனக்கு தெரியல.” என்றான். அவன் அவ்வாறு சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தாள் அன்னத்தாயி ஆச்சி. சிரித்த சிரிப்பில் அவளுக்கு விக்கலே வந்து விட்டது. ஆச்சி சிரிப்பதை பார்த்த விட்டி முருகன் சட்டென எதோ கூச்சப்பட்டவனை போல சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து ஓடிச் சென்றான். பேத்திகள் மூவரும் பாட்டியின் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் விழித்து கொண்டிருந்தனர்.
ஊர் மந்தைக்கு வந்த விட்டி முருகன் அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை நோக்கி, “நான் ஒரு விடுகத போடுறேன், யாருல அழிக்கிறா?” என்றான் பொத்தாம் பொதுவாக.
விடுகதை என்றதும் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அனைவரும் விளையாட்டை பாதியிலேயே அம்போவென்று விட்டுட்டு விட்டி முருகனின் அருகில் வந்து, ‘நான் சொல்றேன்ல… நான் சொல்றேன்ல ‘ என்று அவன் சொல்லப் போகும் விடுகதையைக் கேட்க போட்டா போட்டி போட்டுக் கொண்டு வந்து நின்றனர் .
லட்சுமி சொன்னதை அவன் அப்படியே சொன்னான்.
அவன் சொன்னதும் எல்லோரும் திரும்ப திரும்பச் சொல்லிப் பார்த்துவிட்டு ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோன்றிய விடயத்தைச் சொன்னார்கள். எல்லாமே விட்டி முருகன் லட்சுமியிடம் சொன்ன விடயமாகவே இருந்தது. அதனால், சுலபமாக அவர்கள் சொன்ன விடயம் தவறு என்று சொல்லிவிட்டான். அவர்களும் ஏதேதோ யோசித்து சொல்லிப் பார்த்துவிட்டு இறுதியில் தெரியவில்லை என்கிற முடிவுக்கு வந்தபோது, “எலெய் விட்டி. உனக்கு யாருல இந்த விடுகதைய போட்டது?” என்றான் ஒருவன்.
“மச்சி வீட்டு லட்சுமி போட்டா. அவளுக்கு, அவங்க ஆச்சி போட்டுதாம்.” என்றான் முருகன்.
“அதுதான பார்த்தேன். இது அந்த காலத்து விடுகதல. அதுதான், யாருக்குமே விடயம் புடி பட மாட்டேங்குது.”
“அப்ப, யாருக்குல தெரியும்?” என்றபோது சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த மந்தையை மூன்று காலால் கடந்து சென்று கொண்டிருந்தாள் பொன்னம்மாள் ஆச்சி. அவளைப் பார்த்த ஒரு சிறுவன், “அதோ போறா பாரு பொன்னம்ம ஆச்சி. அவளுக்கு நிச்சயமா தெரிஞ்சிருக்கும்ல.” என்றான்.
“அப்ப, வாங்கல. அவளயே கேட்போம்.” என்றதும் ஒருவன், “ஏ… பொன்னம்ம ஆச்சி. கொஞ்சம் நில்லு?” என்றான்.
“அது எந்த பயல்லே எம்பேர சொல்லி கூப்பிடுறது. உங்க அப்பன் ஆத்தா தல மாட்டுல வெச்சி பேரு வெச்சாவளா?.” என்று மூன்று கால் பாய்ச்சலை நிறுத்திவிட்டு சத்தம் வந்த பக்கமாக திரும்பிப் பார்த்தாள்.
சிறுவர்கள் எல்லோரும் பொன்னம்மாள் ஆச்சியின் அருகில் சென்றனர். ஆச்சிக்கு முன்னால் வந்து அழைத்த சிறுவன் நின்றான். அவனுக்குப் பின்னால விட்டி முருகன் உட்பட மற்றவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
“நான்தான் ஆச்சி” என்றான் அவன்.
“நான்தான்னா?”
“ஏ… ஆச்சி, உன் முன்னாலதான நிற்கறேன்.”
“கண்ணு தெரியாத கிழவிக்கு முன்ன நின்னாதான் தெரிய போவுதா? பின்ன நின்னாதான் தெரிய போவுதால? நானே ஒரு உத்தேசமாக போயிட்டு இருக்கறேன். பேர சொல்லுல வெளங்காத பெயல.”
“அட, குருட்டு கிழவி. நான்தான் பிரகாஷ்.”
“என்ன, பொர வாசலா?”
“பிரகாஷ்…..” என்று அவளது காதருகில் வந்து கத்தி சொன்னான்.
“தூம வுள்ள, மெல்ல சொல்லுல.” என்றதும் நிறுத்தி நிதானமாக, “பிரகாஷ்” என்று சொன்னான்.
“பெர… பெர… பெரஸ்ஸா” என்று ஒருமுறை சொல்லிப் பார்த்துவிட்டு சொல்ல வராததினால், “என்ன எளவு பேரோ வாயில நொழையல. நீ யாரு மவன்ல?” என்றாள் பொன்னம்மாள் ஆச்சி.
“சண்முகம் மவன்.”
“எந்த சம்மம்ல?.” என்று அவள் யோசிக்க…
“சம்மம் இல்ல சண்முகம்.” என்றான் பிரகாஷ்.
“அட, அரத பெய வுள்ளா. நானும் அததானல சொன்னேன்.” என்ற பொன்னம்மாள் ஆச்சி, “தொரப்பாண்டி பேரனால?” என்றாள்.
“ஆமா?”
“அப்படி ஒரு வார்த்தையில சொல்ல வேண்டியதான? படுகாலி பெயல. என்ன புள்ள வளத்திருக்கான் உங்க அப்பன் கூறு கெட்டதனமா. சரி, எதுக்கு கூப்பிட்டேன்னு விஷயத்த சொல்லுல? எனக்கு ஆயிரத்தி எட்டு சோலி கெடக்குது.”
“நான் ஒரு விடுகத சொல்றேன். அதுக்கு விடயத்த சொல்லு”
“யாரு, நீ எனக்கு சொல்றயா? அந்த காலத்துல நான் ஊருக்கே சொல்லுவேன். எல்லாம் காலத்துக்கு வந்த கேடு. சரி, சொல்லு.”
“இருந்தால் சிரிக்கும் எழுந்தால் கும்பிடும். அது என்ன?”
“அடி எடுபட்ட பெயல. யாருகிட்ட வந்து என்ன கதய போடுற.” என்றவள் அவள் வைத்திருந்த கம்பால் அடிக்கச் சென்றாள். அவன் ஓடிவிட, விடாது அடிக்க துரத்திக்கொண்டு சென்றாள். அவனை கெட்ட வார்த்தைகளால் ஏசிக் கொண்டு சென்று பிரகாஷின் வீட்டிற்கே சென்று, “ மாரிகனி, ஏ… மாரிகனி.” என்று அழைக்க, சத்தம் கேட்டு வெளியே வந்த பெண் பொன்னம்மாள் ஆச்சியை பார்த்துவிட்டு, “என்ன பெரியம்ம?” என்றாள்.
“உன் புருஷன எங்க?”
“அவிய சந்தைக்கு வியாபாரத்துக்குலா போயிருக்காவோ.”
“எப்ப வருவான்?”
மேல் நோக்கிப் பார்த்துவிட்டு, “வரகூடிய நேரம்தான். என்ன விஷயம் பெரியம்ம? எங்கிட்ட சொல்ல கூடாதா?”
என்றாள்.
“ உன் மவன் பேரு என்ன இவள? பொரவாசலா, முன் வாசலா? அந்த பெய என்கிட்ட வந்து என்ன கத போட்டான் தெரியுமா?” என்றதும் சிரித்து கொண்டே, “அப்படி என்ன கதய போட்டுட்டான்.” என்றாள் மாரிக்கனி.
“சொல்லுறதுக்கே நாக்கு கூசுது.” என்றவள் மாரிக்கனியின் காதருகில் சென்று பிரகாஷ் சொன்னதை சொல்லிவிட்டு, “இப்படி விடுகத போடுறான்.” என்றாள் .
“ஏ தூமவுள்ள, குடிய கெடுத்துப்புட்ட. பெய வுள்ள எங்க போயிதான் இதயெல்லாம் படிச்சிட்டு வருதுன்னு தெரியலைய? என்னை ஊருக்குள்ள கேவலப்படுத்துறதுக்குன்னே என் வயித்துல வந்து மொளச்சிருக்கு. வீட்டுக்கு வரட்டும் மொளவத்தய பிச்சி கண்ணுல வச்சாதான் அடங்கும் பெயவுள்ள.” என்றவள் பொன்னம்மாள் பாட்டியை பார்த்து, “ஏ… பெரியம்ம, நீ ஒன்னும் வித்திரிப்பா நெனைச்சுக்காத. யாரோ சொல்லியிருப்பா. விடயம் தெரியாமதான் உங்கிட்ட வந்து கேட்டுருப்பான். தெரிஞ்சா கேட்டுருக்க மாட்டான்.” என்று சமாதானம் சொன்னாள்.
இருந்தாலும் பொன்னம்மாள் பாட்டி அவளால் முடிந்த வரைக்கும் பிரகாஷின் பேரை ஊர் முழுக்க நாறடித்தாள். ஊரில் எல்லோரும் அவனை அழைத்து, ‘ஒரு பெரிய மனுஷிகிட்ட போயி இப்படியால விடுகத போடுவ?’ என்று துக்க செய்தியை விசாரிப்பதைப் போல விசாரித்தார்களே தவிர, யாரும் அதற்கான விடயத்தை சொல்லவில்லை. ‘இது ஏதோ தப்பான விடுகதையாக இருக்கும்போல’ என்று மட்டும் அவனால் உணர முடிந்ததே தவிர விடயம் மட்டும் புடிபடவில்லை. இப்படி ஒரு புறம் விடுகதை ஊர் முழுக்க பரவிக்கொண்டிருந்தது.
லட்சுமியின் பக்கத்து வீட்டு ஆச்சி, வீட்டிலிருந்து வெளியே வந்து அவளது வீட்டு வாசப்படியில் அமரப் போனாள். அவளிடம், “ஆச்சி, நான் ஒரு விடுகத சொல்றேன். அத நீ அழிச்சிடு பார்க்கலாம்.” என்று சவால் விடுவது போல சொன்னாள் லட்சுமி.
“சொல்லு.” என்றவள் அமர்ந்து கொண்டு லட்சுமி சொல்ல போவதைக் கேட்கத் தயாரானாள்.
டக்கென்று “இருந்தால் சிரிக்கும் எழுந்தால் கும்பிடும். அது என்ன?” என்றாள் லட்சுமி.
பக்கத்து வீட்டு ஆச்சி, அன்னத்தாயி ஆச்சியை ஜாடையாக ஒரு முறைப்பான பார்வை பார்த்துவிட்டு மனதிற்குள், ‘இதெல்லாம் உன் வேலை தானா?’ என்பதுபோல பதில் பேசாமல் எழுந்து வீட்டுக்குள் போக எத்தனித்தவளை, “ஆச்சி, சொல்லிட்டு போ ஆச்சி.” என்று தடுத்தாள் லட்சுமி.
லேசான கோபத்தில், “ம்… உன் சாமாம். போடி எடுபட்ட சிறுக்கி, கத போடுறாளாம் கத.” என்று போகிற போக்கிலேயே சொல்லிவிட்டு வீட்டிற்குள்ளே சென்றுவிட்டாள்.”இது ஒரு லூசு கிழவி. தெரியலேன்னா, தெரியலேன்னு ஒத்துக்காது. விவஸ்த கெட்டது. அசிங்கமா பேசிட்டு போறத பாரு. இந்த வயசுலயும் நல்லா திம்முன்னு இருக்காள்ல. அந்த திமிரு.”
லட்சுமியின் இந்த பேச்சு வயசுக்கு மீறியதாக இருந்தாலும் அன்னத்தாயி ஆச்சி அதை ஆட்சேபிக்கவில்லை. காரணம் பக்கத்து வீட்டு ஆச்சியும் அன்னத்தாயி ஆச்சியும் சக்களத்திகள்தான். இருவரும் ஒருவரையே திருமணம் செய்திருந்தார்கள். திருமணம் செய்து கொண்டவன் இறந்து போய் கால் நூற்றாண்டு ஆகிறது. முத்த ஆச்சியின் அக்கா மகள்தான் இளைய ஆச்சி. இருவருக்கும் அம்மா, மகள் உறவு முறைதான். இருவரும் ஒருத்தரையே திருமணம் செய்து கொண்டதன் மூலம் அக்கா, தங்கை ஆகிவிட்டார்கள். முத்த ஆச்சிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் மட்டும்தான். இளைய ஆச்சிக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் நான்கு பெண்களும் இருந்தார்கள். மூத்த ஆச்சியின் வாழ்க்கையை இளைய ஆச்சி பகிர்ந்து கொண்ட கோபத்தில் மூத்த ஆச்சிக்கு இளைய ஆச்சியின் மீது கோபம் இருந்தது, திருமணமான நாள் முதல் இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். அதுவே சின்ன ஆச்சி அந்த இடத்தில் நின்று சிரிக்காததற்கும் காரணம்.
அடுத்து தெருவில் யாராவது வருகிறார்களா என்று எதிர்பார்த்து கொண்டிருந்தாள் லெட்சுமி. அந்த நேரம் தெருவில் ஒரு அறுபது வயதுள்ள தாத்தாவும் ஆச்சியும் நடந்து வந்தார்கள், இருவரும் புருஷன் பொண்டாட்டிதான். அவர்களைப் பார்த்து, “அமுதா ஆச்சி கொஞ்சம் நில்லு.” என்று தெருவில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி வைத்து கொண்டு, “நான் ஒரு விடுகத சொல்றேன் அதுக்கு விடயம் சொல்றயா?” என்றால் லட்சுமி.
“ஆமா, உனக்கு வேற வேலை இல்ல. வேலைக்கு போயிட்டு வந்திருக்க கிழவனுக்கு சாப்பாடு குடுக்கனும். இல்லேன்னா, என்னை மானம் கெட்ட கேள்வி கேட்பான். உன் விளையாட்டுக்கு நான் வரல.”
“ஏய் கிழவி, ஒரே ஒரு விடுகததான தெரிஞ்சா சொல்லு. தெரியலேன்னா, போயிட்டே இரு. முத்தையா தாத்தா, நீகூட உனக்கு தெரிஞ்சா சொல்லு.”
“சரிம்மா, சொல்றேன். நீ கதய சொல்லு.” என்றார் தாத்தா. அமுதா ஆச்சியும் முத்தையா தாத்தாவும் லெட்சுமி சொல்லப் போகும் விடுகதையை கேட்கத் தயாராக நின்றுகொண்டிருந்தார்கள்.
“இருந்தால் சிரிக்கும் எழுந்தால் கும்பிடும். அது என்ன?” டக்கென்று சொன்னாள் லெட்சுமி.
லட்சுமி சொன்னதை கேட்டு அதிர்ச்சியான அமுதா ஆச்சி அருகில் நின்று கொண்டிருந்த புருஷனைப் பார்த்துவிட்டு, “என்னய்யா, பல்ல இளிச்சிட்டு நிக்கிற..போய்யா.” என்று சொல்லிவிட்டு பதில் பேசாமல் சென்றாள்.
“ஏய், அமுதா ஆச்சி. என்ன பேசாம போற? விடயத்த சொல்லிட்டு போ. உனக்கும் தெரியாதா? தெரியாதுன்னா, தெரியாதுன்னு சொல்லிட்டு போ.” என்றாள்.
திரும்பிப் பார்க்காமல், “ஆமாடியம்மா, எனக்கு தெரியாது. உனக்கு தெரிஞ்சா சொல்லி அனுப்பு. வந்து தெரிஞ்கிட்டு போறேன்.” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் .
நடப்பதைப் பார்த்து அன்னத்தாயி ஆச்சி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தாள். ‘ஆச்சி இதற்கு முன் இப்படி சிரித்தது இல்லையே! ஏன் இப்படி சிரிக்கிறாள்.’ என்று நினைத்து மூவரும் குழம்பிப் போயி இருந்தனர். லட்சுமியைவிட மற்ற இரு சகோதரிக்கும் இரண்டு இரண்டு வயது அதிகம். மூவரும் ‘நம்ம ஆச்சி ஏதோ விவகாரமான விடுகதையதான் சொல்லிட்டாள்’ என்று நடந்ததை யோசிக்க ஆரம்பித்தனர்.
மாலைப் பொழுது மயங்கி வரும் நேரத்திற்கு சற்று முன்னதாகவே பகல் முழுவதும் அடித்த வெயில் ஏற்படுத்திய அனலைக் குறைக்க வாசல் படியோடு சேர்த்து முற்றத்தையும் தண்ணீர் தெளித்து குளிர வைத்துவிட்டு தனது மூன்று பேத்திகளோடு வாசல் படியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள் அன்னத்தாய்.
கடைக்குட்டி பேத்தி லட்சுமிக்கு வயது ஒரு பதிமூன்று இருக்கும். அன்னத்தாயினை கதை சொல்லச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவரும் நரி கதை, சிங்கராஜா கதை என்று ஏதேதோ சொன்னார். அவர் கதையைச் சொல்ல ஆரம்பித்த உடனேயே முழு கதையையும் பேத்திகள் சொல்லிவிட்டு, “எவ்வளவு காலம்தான் இதே கதைய சொல்லுவ ஆச்சி? நாங்க கேள்விப்படாத கதைய சொல்லு.” என்றனர்.
“நான்தான் எல்லா கதையவும் உங்ககிட்ட சொல்லிட்டேனே. வேற கத எனக்கு தெரியாது. வேணும்னா, விடுகத போடுறேன்.” என்றாள்.
“விடுகதயா? சரி போடு.” என்றனர்.
“ஓடுவான் சாடுவான் ஒத்த காலுல நிப்பான்.”
“கதவு.” என்றவள், “ஐயோ ஆச்சி! நீ விடுகதயகூட எங்களுக்கு தெரிஞ்சதையே சொல்ற.”
‘என்ன இவளுக எத சொன்னாலும் பழசு பழசுன்னு சொல்றாளுக. எதையாவது சொல்லி விடுவோம். அப்பதான் மண்டைய பிச்சிகிட்டு அலையுவாளுக.’ என்று யோசித்துவிட்டு, “இருந்தால் சிரிக்கும் எழுந்தால் கும்பிடும். அது என்ன?.” என்றாள்.
லட்சுமியிலிருந்து மூத்தவளான விஜி, “பணம்.” என்றாள்.
“எப்படி?”
“பணம் இருந்தால் சிரிப்பு வரும். அதை இல்லாதவனுக்கு கொடுத்தால் எழுந்து நின்னு கும்பிடுவான்.” என்றாள்.
“இல்ல.” என்ற அன்னத்தாயிடம் அவளது பேத்திகளும் ஏதேதோ சொன்னார்கள், எதுவும் சரியில்லை. பலரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சித்தார்கள். பதில் கிடைக்கவில்லை.
அன்று இரவு விட்டி முருகன் அவனது அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், என்று எல்லோருடன் படுத்திருக்கும் போது, “நான் ஒரு விடுகத போடுறேன். யார் அழிக்கிறா?” என்றான்.
“சொல்லு நாங்க அழிக்கிறோம்.” என்றனர் விட்டி முருகனின் அண்ணனும் அக்காவும்.
“இருந்தால் சிரிக்கும். எழுந்தால் கும்பிடும். அது என்ன?” என்று தேங்காய் உடைப்பதுபோல சொன்னான். அதைக் கேட்டதும், “துடப்பை கட்ட பிஞ்சி போகும் நாய. யாருல உங்கிட்ட இந்த விடுகதய போட்டது.” என்று அம்மா கோபித்துக் கொண்டதும் மாலையில் நடந்ததை சொன்னான்.
“இனிமேல அத பத்தி பேச கூடாது.”
“ஏம்மா?”
“அது கெட்ட வார்த்தை.” என்றாள்.
“அப்படியாம்மா. சரிம்மா, நான் இனிமேல சொல்ல மாட்டேன்.” என்று தூங்க ஆரம்பித்தான்.
அதற்கான விடயம் தெரிய வந்தபோது வாரக் கணக்கில் வீட்டில் இருந்து வெளிய வராமல் வெட்கப்பட்டு முடங்கிக் கிடந்தனர் லட்சுமியும் சகோதரிகளும்.
சில நாட்களுக்கு பின்னர் சற்று மறந்து போன நிலையில் பாட்டியோடு அதே இடத்தில் அமர்ந்திருந்தார்கள் லட்சுமியும் அவளது சகோதரிகளும். அப்போது அந்த பக்கம் வந்த விட்டி முருகன், “லட்சுமி, நீ சொன்ன விடுகதை கெட்ட வார்த்தையாம். நீ அத போயி எங்கிட்ட போட்டுருக்க?” என்றான்.
மூன்று பேரும் அதிர்ச்சியாகிப் போயிருக்க, “எலேய். இப்ப, நாங்க உன்கிட்ட கேட்டமாலே போல.” என்று விரட்டினாள் ஆச்சி.
ஊர் மந்தையில் ஒன்று கூடிய சிறுவர்களில் ஒருவன் “அந்த விடுகதக்கு விடயம் கெட்ட வார்த்தையாம்லே.” என்றான்.
“ஆமால.” என்றான் மற்றொருவன்.
“அது என்ன கெட்ட வார்த்தையால இருக்கும்?” என்றான் முன்றாமவன்.
“அது யாருக்கு தெரியும். அத பத்தி பேசுனாலே விரட்டி விரட்டி அடிக்கிறாங்களே.” என்றான் பிரகாஷ்.
“எலே, இதுக்கு விடையத்த தெரிஞ்சிக்கனும்னா, நம்ம அர்ச்சுனன் தாத்தா இருக்காருல்ல அவருகிட்ட கேட்டாதான் தெரியும். அவர்தான் அடிக்காம பதில் சொல்லுவாரு. அவரு வாலிப பசங்களையெல்லாம் கூட்டி வச்சிகிட்டு பலான பலான கதைகள்லாம் சொல்லுவாருல. அந்த காலத்துல பொண்ணுங்கள அவர் எப்படி உஷார் பண்ணாரு.. கூட்டத்துல நிற்குற அவரோட காதலிய தலப்பா கட்டுறது போல சாட காட்டி அவருக்கு வேண்டிய இடத்துக்கு எப்படி வர வைப்பாரு.. இப்படியெல்லாம் சொல்லுவாராம்ல.”
“அவரு இப்ப எங்கலே இருப்பாரு.”
“நம்ம ஊரு அம்மன் கோவில் ஆலமரத்துல படுத்திருப்பாருல.”
“சரி, வாங்க போலாம்.”
அம்மன் கோவில் ஆலமரத்தடியில் கட்டாந்தரையில் துண்டை விரித்துப் போட்டு, கைகள் இரண்டையும் பின்னித் தலைக்கு அணையாக வைத்தபடி, கால் நீட்டி மல்லாந்து நனைந்த பனைபோல ஆறடி உயரத்தில் ஒரு காலத்தில் உழைத்த உழைப்புக்கு ஓய்வு எடுப்பதைபோல தூங்கிக் கொண்டிருந்தது ஒரு உருவம். “தாத்தா…. தாத்தா…” என்று அவரை எழுப்பினார்கள். எழுந்தவர் சுற்றி நிற்கும் சிறுவர்களை பார்த்து, “ஏய், என்னடே ஊருல இருக்கிற எல்லா பொடியன்களும் ஒன்னா சேர்ந்து வந்திருக்கிங்க. என்ன சங்கதி?.” என்றார்.
“தாத்தா ஒரு விடுகதக்கு விடயம் தெரியணும். நாங்களும் யார் யார் கிட்டலாமோ கேட்டோம். அவங்க எங்கள அடிக்க வர்றாங்க. அதுதான் உங்கள கேட்க வந்திருக்கோம்.”
“சரி, அது எந்த மாதிரி விடுகதயா இருந்தாலும் நான் சொல்றேன். நான் பைசா தர்றேன். ஒருத்தன் கடையில போயி மூக்கு பொடி வாங்கிட்டு வாங்க. அத போட்டாதான் தாத்தாவுக்கு மூளையே வேலை செய்யும்.”
“நாங்களே வாங்கிட்டு வந்துட்டோம்.” என்று மூக்குப் பொடியை கொடுத்தார்கள். அதை வாங்கி மடிப்பை திறந்து பெருவிரல், ஆள்காட்டி விரல் ரெண்டையும் குவித்து மூக்குப்பொடியை எடுத்து மூக்கின் இரண்டு துவாரங்களிலும் வைத்து உறிந்து விட்டு, “ம்… இப்ப சொல்லுங்க உங்க விடுகதய.” என்றார்.
“இருந்தால் சிரிக்கும். எழுந்தால் கும்பிடும் அது என்ன?” என்றான் ஒருவன். அதைக் கேட்டதும் கெக்க புக்கவென்று சிரித்துவிட்டு, “இதுக்கு யாராரு கிட்டெல்லாம் போயி விடயத்த கேட்டிங்க?” என்றார்.
ஒருத்தன், “பொன்னம்மாள் ஆச்சி.” என்றான்.
“நான் ராத்திரி எங்க வீட்டுல எங்க அண்ணன்கிட்டயும் அக்காகிட்டயும் சொன்னேன். அத கேட்டுட்டு எங்க அம்மா என்னை ஏசிப்புட்டா.” என்றான் விட்டி முருகன்.
“அட முட்டா பயலுவளா. இது ஆம்பளைங்க சமாச்சாரம்டே. இத போயி பொம்பளகிட்ட கேட்டா, கோவபடாம என்ன பண்ணுவாளுவல. சொல்றேன் கவனமா கேட்டுகாங்கடே.” என்றதும். ஜொல் கீழே ஊத்துற அளவுக்கு வாயைத் திறந்து வைத்துக்கொண்டு நின்றனர். “குண்டிக்கு நேர தையல் பிரிந்த டவுசர்டே.” என்றதும் சிறுவர்கள் புரியாமல் விழிக்க தொடர்ந்து அவர், “அதுதானடே எழுந்து நின்னா மூடிக்கும். கீழே இருந்தா திறந்துக்கும். அததான் இருந்தால் சிரிக்கும் எழுந்தால் கும்பிடும்னு சொல்லியிருக்காவடே.” என்றார் அர்ச்சுனன் தாத்தா.
எதையோ எதிர்பார்தது வந்தவர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும் விடயத்தை தெரிந்த சந்தோஷத்தில் சென்றனர்.
அப்போது அங்கே வந்த முத்தையா நடப்பதை பார்த்துவிட்டு சிறுவர்கள் சென்றதும், “என்ன அர்ச்சுனா, பொடியனுக வந்து உங்கிட்ட என்ன கேட்டானுவ?” என்றார்.
“அது பெரிய கத. எந்த சிறுக்கி முண்டயோ சின்ன புள்ளயகிட்ட போயி ‘இருந்தால் சிரிக்கும் எழுந்தால் கும்பிடும்னு’ விடுகதய போட்டுருக்கா. அதுக்கு விடயம் கேட்டு பயலுவ எங்கிட்ட வந்தானுவ. அவனுங்க கேட்டதுமே விடயத்த சொல்லிரலாம். அப்பறம் எப்படி, என்னன்னு விளக்கம் கேட்பானுவ. என்னத்த சின்ன பயலுவகிட்ட போயி வயசுக்கு மீறி பேசன்னு.,எதையோ சொல்லி அனுப்பிட்டேன்.” என்றார். அதன்பிறகு நடந்த கதையைச் சொன்னார் முத்தையா.
“இதெல்லாம் அந்த மச்சு வீட்டுக்காரி வேலைதானா? கழுத முண்ட எவ்வளவு அடமேறி போயி கெடந்தா, இந்த வயசுல, இப்படியொரு கதய போயி சின்ன புள்ளயகிட்ட போடுவாள்.” என்றார் அர்ச்சுனன்.
“அட, ஏம்பா அவமேல கோப படுற? இதெல்லாம் தமிழுல சொன்னாதான் அது கெட்ட வார்த்த. வெள்ளைக்காரன் பாஷையில சொன்னா அதுதான் நாகரிக வார்த்தையே.”
“ஆமாப்பா, அதுவும் மனுஷ உடம்புல இருக்கிற கைய போல, கால போல ஒரு உருப்புதான? அத மட்டும் ஏன் கெட்ட வார்த்தைன்னு சொல்றோம்.”
“அத ஆடைக்குள்ள மறைச்சி வைக்கிறதால மறைவாதான் பேசணும்.” என்றவர் எதோ உலக மகா பகடி சொல்லிவிட்டதைப் போல அவரே கெக்க, புக்கேவென்று சிரிக்க அவரோடு சேர்ந்துகொண்டு அர்ச்சுனனும் சிரித்தார்.
பொக்கை வாய்களின் சிரிப்பு சத்தம் கேட்டு பயமுற்றதைப் போல ஆலம் விழுதுகள் அசைந்தாடின.
********