ஒரு கதாநாயகனின் கதை
பத்திரிகை உலகையே நான்கைந்து அத்தியாயங்களாகச் சுற்றிவருவது சற்றே போரடிக்கிறதல்லவா.? ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் அதைத் தொடரலாம். இப்போது என் பிள்ளைப் பிராயத்துக்கு உங்களையும் அழைத்துச் சென்று, எனக்குப் பிடித்த கதாநாயகரையும் அனுபவங்களையும் உணரவைக்கப் போகிறேன். வாருங்கள்…
பால் அருந்தும் பிள்ளைப் பிராயத்திலிருந்து பள்ளி செல்லும் பையனாகிற பருவம் வரை ஒவ்வொருவருக்கும் அவரவர் அப்பாதான் முதல் கதாநாயகனாக இருப்பார்கள். அப்பாவின் நடை, உடை, பாவனைகள் ஆகியவற்றை ரசிப்பது முதல் ரசனைகள் வரை அப்பாவைச் சார்ந்தே இருக்கும் பள்ளி செல்லும் பருவத்தில். என் விஷயத்திலும் அப்படித்தான். அதிலும் சில விசித்திரங்கள் உண்டு. என்னுடைய தந்தையிடமிருந்த கன்னாபின்னாவென்ற வாசிக்கும் வழக்கம் கல்லூரிப் பருவத்தில்தான் என்னை ஆட்கொண்டது. ஆனால், அப்பாவுக்குப் பிடித்த கதாநாயகன் எம்.ஜி.ஆர். பள்ளிப் பருவத்திலேயே எனக்கும் பிடித்தவராகிப் போனார்.
எனக்கு ஆறு வயதாக இருந்த சமயம் நாங்கள் இருந்தது மதுரையில் கிருஷ்ணாராவ் தெப்பக்குளத் தெருவில். தெருமுனை திரும்பினால் தேவி தியேட்டர் இருந்தது. அந்தத் தியேட்டரில் வாத்யார் படம் எதுவும் ரிலீஸாகக் கூடாதே என்பதுதான் எனது பெருவிருப்பமாக இருந்தது. காரணம்… அப்பா சொந்த பிசினஸ் செய்து வந்தவராக இருந்ததால், கடையை அடைத்துவிட்டு வந்து சாப்பிட்டுவிட்டு படம் பார்க்க அழைத்துச் செல்வது பெரும்பாலும் இரவுக் காட்சிகளாகத்தான் இருக்கும். வீட்டிலிருந்து தியேட்டர் செல்வதற்கு குதிரை வண்டி வைப்பார் அப்பா. குதிரை வண்டி சவாரி என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். ‘லொடக் லொடக்’கென்று இதமான ஆட்டத்துடன் செல்லும் அந்த வண்டியில் முந்தி ஏறி, வண்டிக்காரரின் அருகில் உட்கார்ந்து கொண்டு குதிரையைக் கவனிப்பதும், (முடிந்தால்) அதன் வாலைப் பிடிப்பதும் எனக்கு சுவாரஸ்யமான, ரசனையான விஷயங்கள். அதற்காகவே அப்பாவுடன் சினிமாவுக்குச் செல்லும் தருணங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன் நான்.
அம்மாவுக்கு சிவாஜி என்றால் பிடிக்கும். அண்ணன் நடுநிலை – எவரென்றாலும் ஓ.கே. படம் போனால் சரி என்கிற ரகம். அப்பாவுடன் சேர்ந்து எனக்கும் எம்.ஜி.ஆர். என்றால் மிகமிகப் பிடிக்கும். வீட்டில் எந்தப் படம் போவது என்பது பற்றிய உரையாடல் நடைபெற்றால்… பெரும்பாலும் மதியம் அப்பா சாப்பிட வீட்டுக்கு வரும் சமயங்களில் நடைபெறும்… அப்போது நான்தான் முந்திக் கொண்டு வாத்யார் படத்தை முன்மொழிவேன். அதுவும் எப்படி…? ‘ல்தகாசைஆ’ என்று விஜய் சொல்வது போல… “அப்பா! கைளிமாதந்சவ வேண்டாம்ப்பா… நாம ணைவீயதஇ போலாம்ப்பா…” என்பேன். (நாங்கள்லாம் அப்பவே அப்புடி!) இந்த வகையிலான பேச்சைக் கிரகித்துக் கொள்ள முதலில் ரொம்பவே சிரமப்பட்ட அப்பா, விரைவில் அதற்குப் பழகி விட்டார். ஹால் அதிரும் வண்ணம் உரக்கச் சிரித்து, “சரிடா… போலாம்” என்பார். ஆஹா… நம்ம வீட்லருந்து சிந்தாமணி தியேட்டர் ரொம்பத் தூரமாச்சே… இன்னிக்கு குதிரை வண்டி சவாரி நிச்சயம் என்று இரவை எதிர்நோக்கியிருப்பேன் நான்.
இன்றையத் தேதியில் வளரும் பிள்ளைகளுக்கும்… ஏன்… சில வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்கும் கூட குதிரை வண்டிச் சவாரி அனுபவம் வாய்த்திராது என நினைக்கிறேன். இயந்திரக் குதிரைகள் பரவலாகி, போக்குவரத்து விழிபிதுங்கத் துவங்கியிருக்கும் இன்றைய நகர நாகரீகத்தில் குதிரை வண்டிகள் வழக்கொழிந்து போய் விட்டன.
இதேபோல வழக்கொழிந்துபோன மற்றொரு விஷயமும் உண்டு. மதுரையில் அப்போதெல்லாம் இடைவேளைக்கு முன்னும், இடைவேளைக்குப் பின்னும் ஒரு ட்ரேயில் பிஸ்கட், சாக்லெட், கடலை மிட்டாய் போன்ற ஐட்டங்களை ஏந்திக் கொண்டு உள்ளே வந்து விற்பதற்கு சிறு மற்றும் வாலிபப் பையன்களை நியமித்திருப்பார்கள். அவர்கள் சத்தமில்லாமல் ஊடாடி, விற்பனையையும் கவனிப்பார்கள். ஆக… எப்போது வேண்டுமானாலும் (கையில் சில்லறை இருந்தால்) ஸ்நாக்ஸ் கொறித்துக் கொண்டு ஆனந்தமாகப் படம் பார்க்கலாம்.
ஒருமுறை சிந்தாமணி தியேட்டரில் பால்கனியில் அம்மா, அப்பாவுக்கு அடுத்த சீட்டில் நான் அமர்ந்திருக்க, எனக்கு அடுத்த சீட்டில் இருந்த கனவான் ஒருவர் ட்ரே சுமந்து வந்தவனிடம சாக்லெட்டோ, பிஸ்கட்டோ வாங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து திரையில் சண்டைக் காட்சி வந்திருக்க, வாத்யார் சிலம்பத்தைச் சுழற்றி 20 பேரை சமாளிக்க, சண்டை தந்த உற்சாகத்தில் நானும் “அப்புடி அடி’’ என்று கத்தி, வாத்யார் மாதிரி கையை வீசி துள்ளிக் குதிக்க… என் கை ட்ரேயில் சாடி அதிலிருந்த மிட்டாய், பிஸ்கட் வகைகள் அனைத்தும் அருகாமை ஸீட்டுகளில் இருந்தவர்களுக்கும் பூமித்தாய்க்கும் அர்ப்பணமாயின. அப்புறமென்ன… தியேட்டர் ஸ்பீக்கரை விடப் பெரியதான ட்ரே வாலாவின் வாயை அடைக்க, என்னுடைய அப்பா சில பண நோட்டுகளை இழக்க வேண்டியிருந்தது.
இப்படியெல்லாம் இளமையில் மனதில் பதிந்து மனதைக் கவர்ந்த வாத்யாரை ஒருமுறையேனும் நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய பெருவிருப்பமாக இருந்தது.
7வது வயதில் அப்பா இறந்து, வேறு வேறு ஊர்கள் மாறி பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து 9ம் வகுப்பு படிக்கும் சமயம் மதுரைக்கு மீண்டும் வந்து மதுரை ‘சேதுபதி பள்ளி’யில் படித்துக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராதவிதமாக எனது ஆசை நிறைவேறியது. நடிகர் எம்.ஜி.ஆரைப் பார்க்க விரும்பிய நான் முதல்வர் எம்.ஜி.ஆரை இரண்டு முறை அருகில் பார்த்தேன்.
அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர். மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார். நான்கு மாசி வீதிகளிலும் தமிழின் பெருமை பேசிய வண்டிகளின் ஊர்வலமும், கலைஞர்களின் ஆட்டபாட்டமுமாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்ததை ரசித்ததும், தமுக்கம் மைதானத்தில் போடப்பட்டிருந்த தமிழ் அரங்குகளில் நுழைந்து வேடிக்கை (மட்டுமே… இன்றுள்ள தமிழறிவு அன்றில்லை) பார்த்ததும் இன்றும் என்னுடைய நினைவில் பசுமையாய். சரிசரி…. அதிகம் ஜல்லியடிக்காமல் நான் வாத்யாரைப் பார்த்த அந்த இரண்டு சந்தர்ப்பங்களுக்கு வந்துவிடலாம்.
தமுக்கம் மைதானத்தில் ஒரு விழா மேடை அமைக்கப்பட்டு அன்று முதல்வர் பேசுவதாக இருந்தது. சித்தியுடன் போயிருந்த நான் அரங்கின் வலதுபக்க ஓரமாக முன் வரிசையில் அமர்ந்திருந்தேன். எனக்கு அருகாமையில்தான் அரங்கின் வாசல் இருந்தது. அதன் வழியே வந்து நான்கைந்து வரிசைகளைக் கடந்துதான் அனைவரும் மேடையேற வேண்டும். எனது கண்கள் வாசலையே பார்த்தபடி இருக்க… அதோ பெருங்கூட்டம் புடைசூழ வாத்யார்!
நான் இருந்த வரிசைக்கு அருகில் ஒரு சிறு மரக்கட்டை போட்டு, மேடை செல்லும் வழி உயர்த்தப்பட்டிருக்க அது ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமைந்திருந்தது. வாத்யாருக்கு முன்னே நடந்து வந்த நாவலர் அதைக் கவனிக்காமல் நடந்ததில் கால் இடறி, சற்றே தடுமாறி விழப் போக, பின்னால் வந்த வாத்யார் இரண்டடிகள் தாவிக் குதித்து அவரைப் பிடித்து நிற்க வைத்தார். வாத்யாரின் வெள்ளைத் தொப்பியும் கண்ணாடியும் தந்த பிரமிப்பைவிட, அந்த சுறுசுறுப்பையும் வேகத்தையும் பிரமித்துப் போய் ‘ஆ’வெனப் பிளந்த வாயுடன் பார்த்தேன் நான். அன்றைய தினம் வாத்யார் மேடையில் பேசியது இப்போது எனக்கு நினைவில் இல்லையென்றாலும் வரிக்கு வரி கைதட்டல் வாங்கியது மட்டும் நினைவில் பசுமையாய் இருக்கிறது.
அவரைப் பார்க்கக் கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பம் சற்றும் எதிர்பாராமல் அவரை மிகமிக அருகில் பார்க்கக் கிடைத்த பொன்னான வாய்ப்பு.
உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு பிரபலமான நாடகக் குழுக்களின் நாடகங்களை டிக்கெட் எதுவுமின்றி மதுரையில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார் வாத்யார். ஆர்.எஸ்.மனோகரின் ‘ஒட்டக் கூத்தன்’ நாடகத்தைப் பார்த்து அவரின் அரங்க அமைப்புகளில் அதிசயித்துப் போனேன் நான். (நாடகம் என்ற வடிவத்தை கண்டதும் வாழ்வில் அதுவே முதல் முறை). அதற்கடுத்த தினம் மதுரைக் கல்லூரியில் மேடை அமைத்து மேஜர் சுந்தரராஜனின் ‘கல்தூண்’ நாடகம் நடந்தது. நானும் என் சித்தப்பாவும் (சித்தி அங்கே வேலை பார்த்ததால்) வி.ஐ.பி. அந்தஸ்து பெற்று மேடையிலிருந்து இரண்டாவது வரிசையில் மணல் தரையில் உட்கார்ந்திருந்தோம். ஆமாம்… சேர் எல்லாம் போட்டுப் படுத்தாமல் மணலும் புல்லும் கலந்த தரையில் அமர்ந்துதான் அனைவரும் இலவச நாடகங்கள் பார்த்ததே.
நாடகம் துவங்கி அரைமணி நேரம் இருக்கும். திடீரென்று அரங்கில் சளசளவென்று பேச்சொலிகள். நடித்துக் கொண்டிருந்த மேஜர், நடிப்பதை நிறுத்தி கை உயர்த்திக் கும்பிடுகிறார். யாரையென்று தலையைத் திருப்பிப் பார்த்தால்… வாத்யார் பரிவாரங்கள் சூழ வந்து கொண்டிருக்கிறார். திடீரென்று அன்று அவர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சி ஏதோ ஒன்று ரத்தாக, சர்ப்ரைஸ் விஸிட்டாக நாடகம் பார்க்க வந்திருக்கிறார் என்பது பின்னர் தெரிந்தது.
முதல் வரிசையில் எனக்கு அடுத்திருந்த நபருக்கு அருகே, தனக்காக போடப்பட்ட சேர்களை மறுத்துவிட்டு, புல் தரையிலேயே வாத்யார் அமர… அத்தனை நெருக்கத்தில் அவரைக் கவனித்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன் நான். மின்னல் போலக் கடந்து மேடைக்கு சென்றபோது பார்த்ததை விட இப்போது அருகில் பார்த்ததில் முதலில் என்னைக் கவர்ந்தது அவரின் நிறம். “என்னா செவப்புய்யா! இந்த ஆளு என்ன எளவுக்கு மேக்கப்லாம் போட்டு நடிச்சாரு? அப்படியே வந்து நின்னிருந்தாலே போதுமே” என்கிற எண்ணத்தை என்னுள் தோன்றச் செய்தது அவரின் செக்கச் சிவந்த தங்க நிறம்.
அதன்பிறகு நாடகத்தை எவன் பார்த்தான்…? வாத்யாரின் முகத்தையல்லவா பார்த்துக் கொண்டிருந்தேன். நகைச்சுவைக் காட்சிகளில் அவர் வாய்விட்டுச் சிரிப்பதையும், உணர்ச்சிகரமான காட்சிகளில் கூர்ந்து கவனிப்பதையும், பிடிக்காத வசனங்கள் வருகையில் லேசாய் முகம் சுளிப்பதும் ஆக அன்று நான் பார்த்த நாடகம் வாத்யாரின் முகத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது.
நாடகம் முடிந்ததும் மேஜர் வந்து வாத்யாரின் காலில் விழுந்து ஆசி பெற்று, மரியாதையுடன் அழைத்துச் சென்று மேடையேற்ற, நாடகத்தில் நடித்த எவரையும் விட்டுவிடாமல் வசனங்கள் உட்பட வாத்யார் குறிப்பிட்டுப் பாராட்டியதைக் கண்டு அசந்துதான் போனேன் நான். குட்ட வேண்டியதை மிக நாசூக்காகக் குட்டியதும், பெரும்பாலும் நல்ல அம்சங்களை மட்டுமே எடுத்துச் சொல்லிப் பாராட்டிய பாங்கும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
திரையில் நான் பார்த்து ரசித்த கதாநாயகனை நிஜத்திலும் நேரில் ரசிக்க முடிந்ததில் கொள்ளை கொள்ளையாய் சந்தோஷம் பிடிபடவில்லை எனக்கு. நல்ல சுவையான சாக்லெட்டை மென்று முடித்த பின்னும் நாவில் அதன் இனிப்பு நிறைய நேரம் தங்கியிருப்பது போல வாத்யாரைப் பார்த்த மகிழ்வு என்னிடம் பலநாட்கள் தங்கியிருந்தது. சக மாணவர்களிடம் (இதை நிறுத்தறியா, இல்ல… உதை வேணுமான்னு பசங்க சீறும் அளவுக்கு) பல மாதங்கள் அதைச் சொல்லியே பெருமையடித்துக் கொண்டிருந்தேன்.
இத்தனைக்கும் பிறகு இன்று மீண்டும் இவற்றை நினைத்துப் பார்க்கையில் என் மனதில் தோன்றுகிற எண்ணம் இதுதான். “அடடா! அவ்வளவு கிட்டத்துல வாத்யாரைப் பாத்தியேடா மடையா… ஒரு ஆட்டோகிராப் வாங்கியிருக்கலாம். அட்லீஸட் அவரோடு கை குலுக்கியாவது சந்தோஷப்பட்டிருக்கலாம். சான்ஸைக் கோட்டை விட்டுட்டியேடா!”
ஹும்…! என்ன இருந்தாலும் மனித மனம் பாருங்கள்…! லேசில் திருப்தியடையாது.
(தொடரும்…)