
ஸர்மிளா ஸெய்யித்தின் ‘பணிக்கர் பேத்தி’ படித்து முடித்ததன் பின்னர் துன்பியலுடன் சேர்ந்த வாழ்வியலை, இவ்வளவு சுவாரஸ்யமாக சொல்லிவிட முடியுமா என்றிருந்தது. சகர்வான் அலிமுகம்மது சக்கரியாவிற்கு தான் அலிமுகம்மது என்பவரின் மகள் என்பதை விட, சக்கரியா என்பவரது மனைவி என்பதை விட தான் பணிக்கரின் பேத்தியென்பதில்தான் எத்தனை பெரிய கௌரவம்? துயர்களை சிரித்துக்கொண்டே வலிமையுடன் கடக்கின்ற ஒரு பெண்ணாக சகர்வான் நாவல் முழுவதும் வலம் வருகிறார்.
திருமணத்திற்கும், அதற்குப் பின்னரும் ஒரு ஆண் வெகு இலகுவாக எந்தவித குற்றவுணர்வும் இன்றி அந்த உறவில் இருந்து வெளிவர முடிகின்றது. பொறுப்புகளையும், கடமைகளையும் இலகுவாக துறந்து விட முடிகின்றது. ஆனால் பெண்களால் அதுவும் மிகவும் அடிப்படைவாதம் கொண்ட சமய, கலாசாரங்களைக் கொண்ட சமூகத்தில் இருந்து வருகிற பெண்களால் இலகுவில் மீண்டு வரவே முடிவதில்லை. அவர்களுக்குள் இருந்து வருகிற குழந்தைகள் அவர்கள் ஆயுளையே எடுத்துக்கொள்கின்றனவோ எனத்தோன்றுகிறது. அவர்களைத் தாண்டி ஒரு வாழ்க்கையை நினைத்தால் கூட அமைத்து விட முடியாத இறுக்கம் நிறைந்த வாழ்வை எப்படிக் கையாள்வது என்கிற பதற்றம் நாவல் முழுவதும் விரவி இருக்கிறது. நாவலின் நாயகி சகர்வானால் அவள் மரணம் வரை அதிலிருந்து வெளிவரவே முடியவில்லை. அறுபத்தைந்து வயதில் அவளுக்கு சிறுகுடலில் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஒரு கட்டி இருப்பது தெரிய வருகிறது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறாள். பின்பு நடப்பது என்ன? “உம்மம்மா கதை சொல்லுங்க” என்ற பேத்தி அயானாவின் கேள்விகளுக்கு பதில் சொல்வதாக கதை நகர்கிறது. இறுக்கமும், அழுத்தமும் நிறைந்த வாழ்வின் பின் ஓடிக்கொண்டிருந்தபோது இல்லாத நோய், திடீரென வாழ்வின் ஓட்டத்தில் இருந்து கொஞ்சம் தன்னை நிறுத்திக்கொண்டபோது, இத்தனை வருடம் ஓடிக்கொண்டிருந்த ஓட்டம் தடைப்படுகிறது. எதிர்பாராத விதமாக அவளை அந்த நிறுத்தமே முடக்கிப் போடுகிறது. நோய்மையின் தீவிரத்தை விட அது அவளுக்கு கொடுமையாக இருந்திருக்க வேண்டும். வாழ்வோடு போராடி ஓடிக்கொண்டிருந்தபோது வெளிப்படாத அந்த நோய், வாழ்வில் அவள் சற்று இளைப்பாற முடிவெடுத்தபோது அவளை படுத்தபடுக்கையாக்கி விடுகிறது.
ஏறாவூரின் மக்களுக்கும், ஈழத்து இலக்கியத்திற்கும் வளமான ஒரு நாவல் இதுவென சொல்வேன். ஏறாவூர் மக்களின் வாழ்வியல் ஆங்கிலேய காலத்தில் எப்படி இருந்தது, ஸ்ரீ மாவோ காலத்தில் எப்படி இருந்தது, முதலாம் உலகப்போர் நடந்தபோது எப்படியிருந்தது, ஏறாவூர் எப்படியெல்லாம் மாற்றமடைந்து வந்திருக்கின்றது, என்பதெல்லாம் பேசப்படுகிறது. சமயம், கலாசாரம் என்ற பெயரில் நடக்கிற பெண்களுக்கான அடக்குமுறையை துணிவாக ஸர்மிளா இங்கு பேசியிருக்கிறார். எந்தவித பாசாங்குகளும் அற்று காட்டியிருக்கிற இடங்கள் சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’யை ஞாபகப்படுத்தியது. எத்தகைய இக்கட்டான நிலையிலும் தனித்துவத்தை விடாத பெண் பாத்திரமாக சகர்வான் வலம் வருகிறார். கணவனால் குழந்தைகளுடன் கைவிடப்பட்டு அநாதரவாக சாப்பாட்டுக்குக் கூட வழியின்றி இருந்தபோதும் வாழ்வதற்கான அவரின் துணிவான போராட்டம் பல இடங்களில் மனதிற்கு நெருக்கமாக இருந்தது. தன்னந்தனியாக ஒரு பெண் குடும்பத்தை சுமந்துகொண்டு நடக்கும்போது குடும்ப ரீதியாக சமூக ரீதியாக எப்படியெல்லாம் அவள் நடத்தப்படுகிறாள், எவ்வகைகளிலெல்லாம் ஏமாற்றங்களுக்கும், துரோகத்துக்கும் அவள் உள்ளாகிறாள் என்பதையே பணிக்கர் பேத்தி பேசுகிறது.
இழப்பு, ஏமாற்றம், தனிமை, வறுமை, போட்டி, தோல்வி, சுனாமி, போர் இப்படி எல்லாம் இருந்த போதும் அவளால் எப்படி விருப்பு, வெறுப்பற்று எல்லோரையும் நேசிக்கக் கூடியவளாக இருக்க முடிந்தது, அவள் ஒரு தன்னம்பிக்கை மிக்க பாத்திரம். இந்த நாவலில் வருகின்ற சில இடங்கள், சில வரிகள் மனதோடு அவ்வளவு நெருக்கமாகிவிட்டன. இரண்டு இடங்களை இங்கு காட்ட விரும்புகிறேன். அவளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுப் போன கணவன் சகர்வான் தன் தனி முயற்சியால் உழைத்து, பிள்ளைகளை எல்லாம் கரைசேர்த்த பின்பு வந்து சேர்கிறான். அப்போது இப்படியொரு உரையாடல் அதில் வரும்,
//“உம்மா, வாப்பா வந்திருக்காங்க, என்ன செய்ற…?” ஞாபகமூட்டுகின்றவளைப்போல தாழ்ந்த தொனியில் கூறினாள் சாஜஹான். கிட்டத்தட்ட அழிந்துபோன சக்கரியாவின் ஞாபகங்களை புதுப்பிக்க முயன்றவளைப் போலக் கண்களை இறுக மூடிக் கசக்கித் திறந்தபடி,
“என்ட தலைமுடிகள் நரைத்திட்டு மகள்” என்றாள் சகர்வான்.//
எவ்வளவு ஆழமான வரிகள் இவை. காலம் கடந்து கிடைக்கிற எதுவும் இந்த வாழ்வில் அர்த்தமற்றுப் போய்விடுகின்றன.
சகர்வானின் கணவன் மரணமடைந்த பிறகு இப்படி சகர்வான் கூறுவாள்,
“ஒரு குறைப்பாடும் வராமல் பார்த்துக்குங்க மக்காள்”
எதுவுமே செய்யாத கணவனுக்கு அவள் அவளது இறுதிக் கடமைகளைச் செய்வதை விட ஆகச்சிறந்த பதிலடி எதுவாக இருந்துவிடப் போகிறது? இப்படி ‘பணிக்கர் பேத்தி’ யை இலங்கையின் சிறுபான்மையினமான ஏறாவூர் முஸ்லிம் மக்களின் கலை, கலாசாரம், வாழ்வியல், அரசியல், அவர்கள் எதிர்நோக்கிய சமூகப் பிரச்சனைகள் எனப் பலவற்றைப் பேசிச் செல்லும் சிறந்த படைப்பாக நான் பார்க்கிறேன்.