தற்செயலாதல்
நாம் தற்செயலாகத்தானே சந்தித்துக் கொண்டோம்
ஓரலை புரண்டெழுந்து வீழ்ந்து கடக்கிறது
தற்செயலாகவே பேசிக் கொண்டிருந்தோம்
ஒரு பறவை தாழப் பறந்து மேலெழுகிறது
தற்செயலாகவே நெருங்கினோம்
வட்டமிடுகையில்
இருமுறை சந்தித்துக் கொள்கின்றன
கடிகார முட்கள்
தற்செயலாகவே நட்பானோம்
செம்புலப்பெயல் நீர் மண் கலந்து தேநீராகிறது
தற்செயலாகவே நீ பேசாமலொரு முறை
கடந்து சென்றாய்
மண்ணில் வீழ்ந்தன மலர்கள்
தற்செயலாய் நானுன் அழைப்பைத் தவறவிட்டேன்
சற்றே புரண்டு சரிந்தது மண்
தற்செயலாய் நாமிருவரும் பேசுவதை நிறுத்திக்கொண்டோம்
புதிய தாவரங்கள் வேர் விட்டன
தற்செயலாய் கவனித்தேன்
பிறிதொரு அன்பில் ஆழ்ந்ததை
தன்னைத் தானே ஒருமுறை சுற்றி முடித்தது பூமி.
****
புலரி
அமைதியாயிரு அன்பின் துயரமே
கயிற்றின் விசையடித்து ஓய்ந்திருக்கும் கணமிது
வலி கடந்துவிட்டது
மீண்டுமொரு முறை இழுக்க
இனி அனுமதியில்லை
அமைதியாயிரு அன்பின் துயரமே
மணிக்கட்டின் காயம் ஆறிவிட்டது
இனியெப்போதும்
வாழ்வின் முடிவு பற்றிய கேள்வியில்லை
அமைதியாயிரு அன்பின் துயரமே
விளையாடும் குழந்தைகளின்
ஆனந்தக் கூச்சல் கேட்கிறதா?
விடியலின் குளுமை
பறவையின் கீசல்
மென்மையாய்ப் படரும் பனி
ஓங்காரமாய் ஒலிக்கும் மணி
கொஞ்சம் கொஞ்சமாய்
வெளுக்கும் கிழக்கை கட்டியணைக்கிறது பார் புலரி
***
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு
செம்புலப் பெயல்நீரெனக்
கலந்திருந்த நாமின்று
வேறுவேறு திசைகளில்
அன்றாடங்களின் அவசம்
அன்பைப் பரிகசிக்கிறது
நாட்களின் மெல்லோட்டத்தில்
நம் சந்திப்பு ஒவ்வொரு நாளும் ஒத்திவைக்கப்படுகிறது
அன்பே நாம் அடுத்த வாரம் சந்திப்போமா
வாய்ப்பில்லை அவசர வேலை
பரவாயில்லை
அடுத்த வாரம் பார்க்கலாமென
காதலை ஒத்திவைத்துக் காத்திருக்கிறோம்
அன்பு எந்நாளும் அறாதெனும்
நூற்றாண்டுச் சொற்பசை காத்து நிற்கிறது
நிலவு தேய்ந்தும் வளர்ந்தும்
உன்னிடம் வந்து
என்னிடம் திரும்பி
காலத்தைத் தேய்க்கிறது
தேய்ந்துபோன திரைச்சுருளின் இழுவை ஒலியென
நம் அலைபேசிக் குரல்கள்
ஒவ்வொரு நாளும் ஒரே பாடலைப் பாடுகின்றன
இருக்கிறதோ இல்லையோவென
அங்குமிங்கும் இழுத்துப் பார்க்கிறது தேய்புரிப் பழங்கயிறு.
*******