கரண்டிமூக்கு உள்ளான் (Spoon-billed Sandpiper)
அறிமுகம்
இதன் அலகு (வாய்) கரண்டி வடிவத்தில் உள்ளதால் ஆங்கிலத்தில் Spoon-billed Sandpiper என்றும் தமிழில் கரண்டிமூக்கு உள்ளான் என்றும் அழைக்கிறோம். இதன் அறிவியல் பெயர்: Calidris pygmaea.
இது போன்ற அலகு வேறு எந்த பறவைக்கும் இல்லை என்பதனால் இது ஒரு வித பரிணாம வளர்ச்சியாகவே கருதப்பட்டு இப்பறவையை Eurynorhynchus (கிரேக்க மொழியில் அகலமான அலகு என்று பொருள்) என்ற தனி பேரினத்தில் வைத்துள்ளனர்.
இத்தனிச் சிறப்பு மிக்க கரண்டிமூக்கு உள்ளான் எண்ணிக்கையில் குறைந்து ஆபத்தான நிலையிலும் உள்ளதால் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (The International Union for Conservation of Nature – IUCN) 2008ல் மிக வேகமாக அழிந்துகொண்டிருக்கும் (Critically Endangered) பட்டியலிலும் சேர்த்துள்ளனர்.
லண்டனில் உள்ள விலங்கியியல் அமைப்பும் (Zoological Society of London) பரிணாம ரீதியாக வேறுபட்ட மற்றும் உலகளவில் அழிந்து வரும் இனங்கள் (Evolutionarily Distinct and Globally Endangered -EDGE species) என்ற பட்டியலிலும் வைத்துள்ளனர். அதாவது பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து தனித்துவமான உருவ அமைப்புகளைக் கொண்ட எந்த உயிரினம் அழியும் நிலையில் உள்ளதோ அந்த குறிப்பிட்ட உயிரினங்களை EDGE species என்று அழைக்கிறோம். பரிணாம வளர்ச்சியில் பல கோடி வருடங்களாக, பற்பல மாற்றங்களை கடந்து, இந்த நிலையை இவை அடைந்திருக்கிறது. இவை அழிந்தால் பரிணாமத்தில் இதற்கு அருகில் வேறு இனம் இல்லை, அடுத்த பரிணாம வளர்ச்சியடைய இன்னும் பல கோடி வருடங்கள் கூட ஆகலாம். ஆகவே, இப்பறவையை அழிவிலிருந்து காப்பாற்றவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த அமைப்பு முயல்கிறது.
இறுதிப் பதிவுகள்
கரண்டிமூக்கு உள்ளான் பறவையை 1981ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஒடிசாவில் உள்ள சிலிக்கா ஏரியிலும், 2004 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள கோடியக்கரையிலும் பார்த்தாக பறவை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு பகுதிகளுக்கும் வந்த பறவைகளின் வலசைப் பாதையை கண்டறிய 11 பறவைகளுக்கு காலில் வளையமும் மாட்டபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதான் கடைசி பதிவும். அதன் பிறகு தென் இந்தியாவில் இதனைப் பார்த்தாக பதிவுகள் ஏதும் இல்லை.
இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் உள்ள ஃப்ரேசர்குங்கே பகுதியில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் இறுதியாகப் பார்த்தாகவும், இதற்கு முன் சுந்தர்பனில் உள்ள சாகர் தீவில் 2001ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் 14 பறவைகளை கூட்டமாகப் பார்த்தாகவும் ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளார்.
உலக அளவில் 1970ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 6000 பறவைகள் இருந்தநிலையில், 2004ஆம் ஆண்டு 1000 பறவைகளாகவும், 2009 ஆம் ஆண்டு 450 பறவைகளாகவும், 2014 ஆம் ஆண்டு வெறும் 220 பறவைகளாகவும் இவை குறைந்துவிட்டன. தற்போது வெறும் 490 பறவைகள் மட்டுமே உள்ள நிலையில் அடுத்த 10 வருடங்களில் இந்த இனம் முற்றிலுமாக அழிந்துவிடுமென ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
காரணங்களை கண்டறிய ஆய்வு
இந்த தரவுகள் பறவை ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கை ஆர்வளர்களுக்கும் அதிர்ச்சியளித்தன. அதனால் 2004ஆம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது. மிச்சமிருக்கும் கரண்டி வாயன்களைக் காப்பாற்ற உலகம் முழுவதுமுள்ள வலசைப் பறவைகள் சார்ந்து இயங்கும் அமைப்புகள் ஒன்றிணைந்து கலந்தாலோசித்தன. அதன்படி ஒவ்வொரு பறவையையும் தனித்தனியாக கண்டறிந்து பின்தொடர ஆய்வாளர்கள் முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக 2011ல் தான் முதன் முதலாக ரஷ்யாவின் மெய்னிபில்ஜினோ என்ற பகுதியில் கரண்டிமூக்கு உள்ளானுக்கு காலில் எண்களுடன் கூடிய குறியீடுகள் கொண்ட வளையம் காலில் மாட்டப்பட்டது. எண்களையும் குறியீடுகளையும் பாதுகாப்புக் குழுவில் உள்ள அனைத்து நபர்களுக்கும் தெரியப்படுத்தி இந்த குறிப்பிட்ட பறவையை எங்கு பார்த்தாலும் குழு உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
அதையடுத்து அப்பறவையானது 1285 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரஷ்யாவின் மகடன், பின்பு வடக்கு சகலின், 1981 கிலோ மீட்டர் கடந்து, வட கொரியாவின் யோனன் கடற்கரையை வந்தடைகிறது, இங்கு 67 நாட்கள் தங்கி தனது இறக்கைகளை புதுப்பித்துக் கொண்டு மீண்டும் தனது பயணத்தை தொடர்கிறது. எங்கும் நிற்காமல் தொடச்சியாக 2400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீனாவின் குவாங்டாங் மாகாண தெற்கு கடற்கரையை வந்தடைகிறது, பின்பு லீசோ தீபகற்பத்தின் மேற்கு கடற்கரை, தாய்லாந்தில் உள்ள கோக் காம், சமுத் சகோன் ஆகிய கடற்கரைகள் வழியாக இறுதியில் பங்களாதேஷில் உள்ள சோனாடியா தீவுக்கு வருவதாகக் கண்டறிந்தனர். ஆனால், பங்களாதேஷிற்கும் 2015 மற்றும் 2018க்கு பிறகு ஒரு பறவை கூட வரவில்லை என்பது வருத்தமான செய்தி. திரும்பிச் செல்லும் பொழுது இந்தோனேஷியா, ஜப்பான் வழியாக மீண்டும் தாய்நாடான ரஷ்யாவை அப்பறவை சென்றடைகிறது.
வாழ்விடங்களில் எற்படும் சிக்கல்கள்
இந்த வலசைப் பாதைகளில் கரண்டிமூக்கு உள்ளானைக் கண்ட பகுதிகளைச் சுற்றி 2007 முதல் ஆய்வு செய்ததில் மார்தபன் விரிகுடாவில் மட்டுமே கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட பறவைகள் வேட்டையாடப்பட்டதாக தகவல்கள் கிடைத்தன. பர்மா கடற்கரைகளிலும், இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவிலும் துப்பாக்கியினைப் பயன்படுத்தி பறவைகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும், மற்ற இடங்களில் வலை பயன்படுத்தி பிடித்தாகவும் தெரியவந்துள்ளது. இன்னும் சில பகுதிகளில் விஷம் வைத்துக் கொன்றதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
நாம் தொலைதூர பயணங்களின் போது உணவு, தங்குமிடம், பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள் என அனைத்து வசதிகளும் உள்ள இடங்களைத் தேர்வு செய்து வசதியாகவும், பாதுகாப்பாகவும் பயணிக்கிறோம், அதே போல்தான் பறவைகளும் யோசிக்கன்றன. ஆனால், நடப்பது என்னவோ இயற்கைக்கு எதிராகத்தான் உள்ளது.
கடற்கரையில் உள்ள புழுக்கள், சிறிய வகை நண்டுகள் மற்றும் சிறிய கணுக்காளிகளைப் பிடித்து உண்டும், ரஷ்யாவின் சைபீரியா பகுதிகளில் உள்ள சதுப்புநிலங்களில் ஜூன்-ஜூலை மாதங்களில் இனப்பெருக்கம் செய்தும், பனிக்காலங்களில் அதற்கு தகுந்த காலநிலை உள்ள நாடுகளில் தகுந்த வாழ்விடங்களைத் தேடி நுணுக்கமான திட்டமிடல்களுடன் பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பறந்து வலசை செல்லும் கரண்டிமூக்கு உள்ளானுக்கு நிகழும் கொடுமைகள் ஏராளம்.
கரண்டிமூக்கு உள்ளானை நேரடியாக கொல்வதொடில்லாமல், முக்கிய வலசைப் பாதையான சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாண தெற்கு கடற்கரைகளில், கடந்த 20 வருடங்களில் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வேதித் தொழிற்சாலைகளும், அவற்றிற்கான சாலைகளும் அமைத்துள்ளனர். இதே போல் பல வலசைப் பாதைகளில் நீர் நிலைகள் ஆக்ரமிப்பு, கடற்கரைகளை மாசுபடுத்துதல், மிக முக்கியமாக நம்முடைய வளர்ச்சிக்காக.. குறிப்பாக நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் துறைமுகங்கள் கட்டுதல், கடற்கரையோர ஈரநிலங்களை மாற்றியமைத்தல் போன்ற தொடரும் பல்வேறு சிக்கல்களால், அதன் வாழ்விடங்கள் பறிபோவதோடு, உணவு, இனப்பெருக்கம், வலசை போதல் என மொத்த வாழ்க்கையுமே கேள்விக்குள்ளாகின்றது. மேலே குறிபிட்டுள்ள இயற்கைக்கு மாறான மனித செயல்பாடுகளின் தொடர்ச்சியாக ஏற்படும் காலநிலை மாற்றங்களால், இப்பறவைக்கான சிக்கல்கள் தொடர்கின்றன. அதனால் அதன் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது.
தீர்வுகள்
இத்தனை பிரச்சனைகளையும் பல ஆய்வுகளின் மூலம் கண்டறிந்த ஆய்வுக் குழுவினர், இப்பறவைகளை வேட்டையாடுபவர்களுக்கு இதை விட நல்ல புரதச்சத்துள்ள உணவான மீன் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். அத்தோடு விஷம் வைத்தலில் உள்ள பின்விளைவுகளையும் விரிவாக விளக்கியுள்ளனர். இதற்கு பினபு ஒரளவு பிரச்சனைகள் குறைந்திருப்பதாகக் கருதினாலும், அடுத்த 10 வருடங்களில் இந்த இனமானது முற்றிலும் அழிந்துவிடும் இன்னும் அபாயம் நீடிக்கவே செய்கிறது.
(தொடரும்…)