
ஈழப் போராட்டத்தில் தந்தை செல்வா தொடங்கி வே.பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், இசைப்பிரியா என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கிருக்கிறது. இவர்களில் இருந்து திலீபன் எப்படி தனித்துவமான ஒரு பாத்திரத்தை ஈழப்போராட்டதில் வகித்திருக்கிறார் என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அடிப்படையில் அவர் ஒரு ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்ட உறுப்பினர். ஈழத்தின் யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்தவர். அப்படியான ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்பொன்றைச் சார்ந்த அவர் தன்னுடைய இயக்கத் தலைவர் மற்றும் பலருடன் விவாதித்து உண்ணாவிரதப் போராட்டம் என்கிற முடிவுக்கு வருகிறார். இதற்கு முன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் ஒரு முறை தமிழகத்தில் இருக்கும் போது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையில் எடுத்திருந்தார். விடுதலைப்புலிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட தொடர்பாடல் கருவிகளை மீளப் பெறுவதற்கு அந்த உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதில் வே.பிரபாகரன் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. திலீபனின் முயற்சியை மிக ஆபத்தானதாக அவரே கணித்திருப்பார் என்றே கருதுகிறேன். எந்த ஒரு சூழ்நிலையிலும், தன்னை மறந்த நிலையில் கூட தனக்கு தண்ணீர் தரக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டே அவர் உண்ணாவிரத மேடையில் ஏறினார் என்பதில் இருந்து இதை நான் உணர்கிறேன்.
மேலும் அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் என்பது முழுமையாக மக்களின் மத்தியில் வெளிப்படையாக நடைபெற்றதால் அது பாரிய உணர்வெழுச்சியை ஈழத்தில் உருவாக்கியது என்பதை கவனிக்க வேண்டும். அவருடைய கோரிக்கைகள் என்பன ஏற்கனவே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தவைதான். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் இந்தியப் படைகள் இலங்கையில் முகாமிட்டிருந்தன. ஆனால் அவை எவையும் பின்பற்றப்படவில்லை. முழுக்க முழுக்க ஈழ விடுதலை இயக்கங்களையும் தமிழர்களையும் நசுக்குவதாகவே இந்திய – இலங்கை அரசுகளின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. அந்த நெருக்கடியான சூழலில் ஆயுததாரிகளாக இருப்பினும் அவர்கள் அஹிம்சை என்கின்ற புனிதமான வழியில் நியாயம் தேட முற்பட்டமை அவர்களின் முதிர்ச்சியான எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக அன்றைய இந்திய அரசின் பிரதிநிதிகளாக இருந்த தீட்சித் போன்றவர்கள் இலங்கை அரசைத் திருப்திப்படுத்துவதில்தான் கவனமாக இருந்தார்களே தவிர ஈழ மக்கள் குறித்தோ அவர்களின் இன்னல்கள் குறித்தோ சிறிதும் கவலை கொள்ளவில்லை. தாங்கள் ஏற்ற பொறுப்பை உதாசீனம் செய்தார்கள் என்று கூறுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
இன்றைய சூழலில் பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கும் அப்பால் திலீபன் ஒரு மாபெரும் ஈழ விடுதலைக் குறியீடாக இருக்கிறான். இந்த இடத்தில் வே.பிரபாகரனையும் விட திலீபன் ஒரு பெரும் அடையாளமாகிறான். இத்தனை இராணுவ நெருக்குதலுக்கு உள்ளேயும் ஈழ மக்களால் திலீபனுக்கு ஏற்றப்படும் தீபங்கள் குறையவில்லை. வே.பிரபாகரன் கடைசியாக திலீபனிடம் கூறிய வார்தைகள் “நீ முன்னால் போ. நான் பின்னால் வருகிறேன்…”. போராளிகளிடம் இருந்து வே.பிரபாகரன் விடைபெறும்போது எப்போதும் சொல்லும் வார்த்தைகள் இவைதான். “நீங்கள் முன்னால் போங்கள். நான் பின்னால் வருவேன்”. வே.பிரபாகரன் ஒரு சிறந்த தலைவன் என்றால், திலீபன் ஒரு சிறந்த தளபதி. அவர்களின் வாழ்வே அதற்கு சாட்சியாக நம் முன்னே இருக்கிறது.
கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் அன்று தியாகி. லெப். கேணல் திலீபனின் நினைவாக எழுதிய கவிதையின் வரிகளோடு இக்கட்டுரையை முடிக்கலாம் என நினைக்கிறேன்.
கூற்றுவனைத் தூக்கிலிடு
……………………………..
புதுவை இரத்தினதுரை
………………………………
எங்கே என் தம்பி?
எங்கே என் தம்பி?
இங்கே இருந்தானே, இருந்தவனைக் காணவில்லை
எங்கே என் தம்பி?
மெல்ல…மெல்ல
அந்த விளக்கணையும் வேளையிலே
எல்லோரும் சேர்ந்து ‘எண்ணையிடு’ என்றோமே
கல்லான நெஞ்சே….!
நீ கண்திறந்து பார்க்கவில்லை
நாவரண்டு நாவரண்டு,
நாதமணிப் பேச்சிழந்து
பூ சுருண்டமாதிரியாய் போய்முடிந்து விட்டானா?
காற்றே நீ மூசு,
கடலலையே பொங்கி எழு.
கூற்றுவனா?
அவனைக் கொண்டுவந்து தூக்கிலிடு
எங்கே என் தம்பி?
எங்கே என் தம்பி?
இங்கே இருந்தானே இருந்தவனைக் காணவில்லை
என் இனிய திலீபனே!
ஒரு வார்த்தை…
ஒரே ஒரு வார்த்தை மட்டும்…..
பேசிவிடு
“தமிழீழம்” என்ற தாரக மந்திரத்தைச்
சொல்லிவிட்டு;
மீண்டும் தூங்கி விடு
மக்கள் சமுத்திரத்தில்
மரணித்து விட்ட வீரனே!
ஒரு வார்த்தை;
ஒரே ஒரு வார்த்தை மட்டும்
பேசிவிட்டுத் தூங்கு……
என்னினிய தோழனே!
உனது மரணப்படுக்கை கூட
இங்கே மகத்துவம் மிக்கதாகி விட்டது
நீ கண்மூடியபடி தூங்குகின்றாய்
அந்தப் படுக்கை இங்கோர் பூகம்பத்தையே வரவழைக்கிறது
உன் சாவே இங்கோர் சரித்திரமாகிவிட்டது
செத்த பின்னர்!
ஊர்கூடித்
தேம்புவதுதான் இங்கு வழக்கம்.
ஆனால்….
ஊரே தேம்பிக் கொண்டிருந்தபோது
மரணித்த வரலாறு
உன்னுடன்தான் ஆரம்பமாகிறது
சாவு பலதடவை உன்னைச் சந்திக்கவந்து
தோல்வி கண்டது
இப்போது
சாவை நீயாகச் சந்திக்கச்சென்று
வெற்றிகண்டு விட்டாய்
என் இனிய திலீபனே!
நீ கையில் ஆயுதம் ஏந்தியபோதும்
உன்னை அருகிருந்து பார்த்துள்ளேன்.
நீ….நெஞ்சில் அகிம்சை ஏந்திய போதும்
அருகில் பார்த்துள்ளேன்
எந்த வித்தியாசமும் தெரியவில்லை
போராளிகளுக்குரிய போர்க்குணமே உன்னில் தெரிந்தது
இந்திய அரசே!
இது உனக்குப் புரிகிறதா?
தம்பி திலீபன்…..உன்னிடம் என்னதான் கேட்டான்
எங்களை
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவிடு என்றான்.
எங்கள் மண்ணின்
இறைமையைத் தா என்றான்
இது குற்றமா?
இதற்காகத்தானே போராடினான்
இதற்காகத்தானே போராடினான்
இதற்கு என்ன பதில் தரப்போகின்றாய்……
உன் பதிலை
நேற்று வந்த விமானத்திலும் எதிர்பார்த்தோம்
தாமதித்துவிட்டாய்
நீ கடத்திய ஒவ்வொரு நொடிப் பொழுதும்
இங்கோர் புயலையே உருவாக்கிவிட்டாய்
திலீபன் என்ற புயல்
உன்னைச் சும்மா விடாது
உசுப்பியே தீரும்
எங்கே என் தம்பி?
எங்கே என் தம்பி?
இங்கே இருந்தானே!
இருந்தவனைக் காணவில்லை.
என்இனிய திலீபனே!
நிம்மதியாய்த் தூங்கு
நிலம் வெடிக்கப் போகிறது
நிம்மதியாய்த் தூங்கு
காற்றே நீ மூசு
கடலலையே பொங்கி எழு
கூற்றுவனா?
அவனைக் கொண்டுவந்து தூக்கிவிடு!
அருமை ??