இணைய இதழ்இணைய இதழ் 69சிறுகதைகள்

பசி – தருணாதித்தன்

சிறுகதை | வாசகசாலை

டேய் ராம், இன்னிக்கு சாயங்காலம் என்ன செய்யப் போற ? ஏதாவது வேலை இருக்குதா ?” என்றான் சிவா.

இல்லடா, இப்ப போய் ரூம்ல படுத்து ஒரு தூக்கம், ராத்ரி பதினொரு மணிக்கு ஸ்லீப்பர் பஸ் புக் செஞ்சிருக்கேன். வேற வேலை ஒன்றும் இல்லைஎன்றேன்.

சிவாவை பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறேன். படங்களில் பார்ப்பதை விட மிக வயதானவனாக இருந்தான். முகத்தில் சுருக்கங்கள், தலையில் நிறையவே வழுக்கை, இன்னும் கருப்பாக, குண்டாக இருந்தான்

ராம், அப்ப நாம மலைக்கோட்டைக்குப் போகலாமா ? உச்சிப் பிள்ளையார் கோவில் வரைக்கும் ஏறிட்டு, கீழ வந்து சிங்காரத் தோப்பு மெஸ்ஸில சாப்பிடலாம், திருச்சி வந்தே இருபது வருடத்துக்கு மேல ஆகி இருக்கும்என்றான். என்னுடைய பெயர் ஸ்ரீராம், ஆனால் சிவா எப்பவுமே என்னை ராம் என்றுதான் கூப்பிடுவான்.

சிவா என்னுடைய கல்லூரித் தோழன். இப்போது வயதாகி விட்ட பிரபல நடிகன். சுமார் பத்து வருடம் முன்பு கூட ஹீரோவாக நடித்த படங்கள் வணிகரீதியிலும் பெரிய வெற்றி . மேலும் சிவாவுக்கு விருதுகள் வந்து ஒரு தனி இடம் இருந்தது. இப்போதும் வயதுக்குத் தகுந்த பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறான். திருச்சியில் கல்லூரி படிக்கும்போதே நாடகக் குழு நடத்தி, ஆண்டு விழாவில் அமர்க்களப்படுத்துவான். நாங்கள் போஸ்டரைப் பார்த்து விட்டு மலையாளப் படம் அல்லது ஃப்ரெஞ்ச் படம் பார்க்கச் சென்றால், சிவா பெர்க்மான் படம் என்று திரைப்பட விழாவுக்கு பெங்களூரோ சென்னையோ போய் வருவான்

படித்து முடித்த பிறகு எங்கள் வகுப்பில் பெரும்பாலோர் பொதுத்துறை பிறகு .டி கம்பெனி என்று வேலை, திருமணம், குழந்தைகள் என்று வாழ்க்கை அமைத்துக் கொண்டிருந்தபோது, சிவா சென்னைக்குச் சென்று தீவிரமாக திரைத் துறையில் புகுந்தான். இப்போது நாங்கள் பையன் பெண் படிப்பு, திருமணம் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க, சிவா குடும்பம் எதுவும் இல்லாமல் நிம்மதியாக இருந்து கொண்டிருக்கிறான். இப்போது கூடவே ஏற்றுமதி இறக்குமதி வணிகம். அதிலும் நிறைய சாதித்து, நிறைய பணம் பார்த்து வருடத்தில் பாதி நாள் துபாயில் இருக்கிறான். அவ்வப்போது தொலைக்காட்சி சானல்களில் வருவான். “சிவா சார், ராஜா சாரோட உங்க அனுபவம் பத்தி சொல்றீங்களா ?” என்று சூப்பர் சிங்கருக்கு நடுவில் கேள்வி கேட்பார்கள்

கல்லூரி நாட்களில் நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். வாராவாரம் துவாகுடியிலிருந்து பஸ் பிடித்து திருச்சி டவுனுக்கு வந்து படம் ஏதாவது பார்த்து விட்டு இல்லை கோவிலுக்குப் போய் விட்டு சாப்பிட்டுத் திரும்புவோம்

கல்லூரிக்குப் பிறகு சில வருடங்கள் தொடர்பு இருந்தது. கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்போம். அப்போது அவன் நடிகனாக முயற்சி செய்து கொண்டிருந்தான். பிறகு அவன் துணைப் பாத்திரமாக நடித்து கவனம் பெற்றான். அவ்வப்போது நான் அவனுக்கு கடிதம் எழுதுவதுண்டு அவனும் பதில் போடுவான். பிறகு தொலைபேசியில் பேசிக் கொள்வதுண்டு. ஒரு முறை சென்னைக்குப் போனபோது அவனைப் பார்க்க முயன்றேன். ஆனால், அன்று வெளியூரில் படப்பிடிப்பு ,பார்க்க முடியவில்லை. அப்படியே தொடர்பு குறைந்து வந்தது. நான் அவனுடைய புதிய படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் அலுவலக நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அவன் என்னுடன் கூடப் படித்தவன் என்றும், அதி புத்திசாலி, நெருங்கிய தோழன் என்றும் சொல்லிக் கொள்ளுவேன்

மற்றபடி அவனை நேரில் பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை. படங்களைப் பார்த்து விட்டு வாட்சப்பில் வாழ்த்து அனுப்பினால் நன்றி தெரிவித்து பதில் போடுவான். அவ்வப்போது, உன்னைப் பார்க்கவேண்டும், நிறையப் பேச வேண்டும், திருச்சிக்குப் போக வேண்டும் என்று பதிலுடன் சேர்த்து எழுதுவான். இவ்வளவு வருடங்களில் அவன் எந்த வகுப்புத் தோழர்களின் குடும்ப விழாவுக்கும் வந்ததில்லை. இந்த முறை அதிசயமாக வந்திருக்கிறான். அது எங்களுடைய கல்லூரி வகுப்புத் தோழனுடைய மகள் திருமணம். எங்கள் இருவருக்குமே அவன் நண்பன்

கல்யாண விருந்து சாப்பிட்டு விட்டு கை கழுவிக் கொண்டிருந்தோம். கட்லெட்டும் , வெஜிடபிள் பிரியாணியும், நான், பன்னீர் பட்டர் மசாலாவும், ரசகுல்லாவும் அருமை. நான் அதிகமாகவே சாப்பிட்டு விட்டேன். சிவாதான் சரியாகச் சாப்பிடவில்லை

என்னடா ராம், திருச்சியிலயும் இப்படி ஆயிடுச்சா ? ஒரு நல்ல சாம்பார் ரசம் அவியல் பாயசமும் இருக்கும்னு எதிர்பார்த்தேன்என்றான்.

ஏன் , சாப்பாடு நன்றாக இருந்ததேஎன்றேன் நான்.

நீ எல்லாருடைய வீட்டு விசேஷங்களையும் விடறதில்ல இல்ல ?” நான் எங்கள் நண்பர் வீட்டு திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் படம் வழக்கமாக சிவாவுக்கு அனுப்புவேன்.

ஆமாம் சிவா, ஏதோ என்னுடைய வேலையில வேணும்கிற போது லீவு எடுத்துக்க முடியுதுஎன்றேன்.

லீவு மட்டும் கிடச்சா போதுமா ? எல்லாரும் போகிறதில்லயே, நீ எப்பவுமே உறவுக்காரங்க நண்பர்கள் எல்லார்கிட்டயும் தொடர்புல இருக்குறஎன்றான்.

உனக்கு மட்டும் என்ன , ஊர் முழுவதும் உறவுதான், உன்னுடைய வீட்டிலும் அலுவலகத்திலும் எப்பவுமே கூட்டம்தான், பத்திரிகைகள்ல படம் போடுவாங்களே

சிவா அதற்கு பதில் சொல்லாமல்சரி, நாம மலைக் கோட்டைக்குப் போகலாமா , நாம முப்பது வருடங்களுக்கு முன்னால் போன மாதிரி நாம மட்டும் தனியா மறுபடியும் போகணும்என்றான்

போகலாமே, நானும் மலைக்கோட்டை ஏறி பல வருடங்கள் ஆச்சு. முட்டி வலிக்கும், பரவாயில்லை. உன்னை இத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன், போகலாம். சாப்பாடு சற்று அதிகமாகச் சாப்பிட்டு விட்டேன், ஒரு சின்ன தூக்கம் போட்டு விட்டுக் கிளம்பலாம்என்றேன்

ராம், எனக்கும் சற்று ஓய்வு எடுத்தால் நல்லது. நானும் உன்னுடைய ஹோட்டலுக்கே வரட்டுமா, இங்கேயே பக்கத்தில்தானேஎன்றான் சிவா. என்னுடைய குடும்பமும் யாரும் வரவில்லை. அதனால் தொந்தரவு எதுவும் இல்லை. ஆனால், நான் தங்கி இருந்தது சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகே ஒரு சின்ன ஹோட்டல். நட்சத்திர ஹோட்டல் இல்லை

நான் படித்து முடித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருந்தாலும், பெரிய கம்பெனி எதிலும் சரியாக வேலை கிடைக்கவில்லை. ஏதோ ஒரு சிறிய கம்பெனியில் கிடைத்த வேலையில் சில மாதங்களிலேயே பாஸுடன் தகராறு. வேலையை விட்டு விட்டு சில மாதங்களுக்குப் பிறகு இன்னொரு கம்பெனியில் சேர்ந்து, அங்கேயும் அதே மாதிரி ஆயிற்று. சரி நமக்கு இந்த மாதிரி வேலை சரிப்பட்டு வராது என்று, புதிதாக ஆரம்பித்திருந்த ஒரு பொறியியல் கல்லூரியில் ஆசிரியனாகச் சேர்ந்தேன். பகுதி நேர மேல் படிப்பை முடித்துக் கொண்டு அங்கேயே இருக்கிறேன்

சிவா காவிரிக் கரையில் ஒரு புதிய ரிஸார்டில் தங்கி இருக்கிறான் என்று தெரியும். அங்கே போக அதிகம் நேரம் ஆகாது. காரில்தான் வந்திருக்கிறான். பென்ஸ் கார், சீருடை அணிந்த ட்ரைவருடன். நான் இருந்த ஹோட்டல் அறையில் பெரிதாக வசதி எதுவும் கிடையாது. அறைக் கதவைத் திறந்தால் காலில் இடிப்பது மாதிரி இரண்டு சின்ன கட்டில்கள், ஒரு பக்கம் வண்ணப் பூக்கள் போட்ட பழைய திரையுடன் ஒரு ஜன்னல், வெளியே பார்த்தால் பஸ் ஸ்டாண்ட், கூட்டம், ஆட்டோ, சத்தம்தான். அவன் இருக்கும் இடத்தில் அமைதியான மாந்தோப்புக்கு நடுவே காவிரி ஆறு தெரியும். அவன் அங்கேயே போய்விட்டு மாலையில் வந்திருக்கலாம்.

கேட்கும்போது எப்படி வேண்டாம் என்று சொல்வது என்று யோசித்தேன்

சிவா, அந்த ஹோட்டல் வசதிக் குறைவு, உனக்கு சரிப்பட்டு வராது

அவனே அதற்குள் முடிவு செய்து விட்டான். “ நீ தங்கி இருக்க இல்ல, அப்புறம் என்ன ?”

அவனுடைய காரிலேயே நான் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். பாதி இருட்டாக இருந்த ரிசப்ஷனில் ஒரு நடுத்தர வயசில் ஆள் அரைத் தூக்கத்தில் மொபலில் ஏதோ வீடியோ பார்த்துக் கொண்டு இருந்தான். லிஃப்ட் திறந்தால் கிறீச்சிடும் கம்பிக் கிராதியுடன் பார்க்கும்போதே சந்தேகமாக இருந்தது. ‘படிகளில் நடந்தே ஏறலாம்என்றான் சிவா. மலிவான ப்ளாஸ்டிக்கில் பெரிதாக ஹோட்டல் பெயர் எழுதி இருந்த செவ்வக வில்லையாக இருந்த சாவியை எடுத்து அறைக்கதவைத் திறந்து பேனைப் போட்டேன். அது சீரான ஒலியுடன் சுழன்றது. கூடவே வெளியிலிருந்து பஸ்களின் கொடூரமான ஹாரன்.

சிவா, சாரி, இந்த மாதிரி இடம் எல்லாம் உனக்குப் பழக்கம் இருக்காது, இந்த சத்தத்தில் தூங்கவே முடியாதுஎன்றேன்

சிவா, “ ராம், அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நாம இந்த மாதிரி சூழ்நிலையில வளர்ந்தவங்கதானேஎன்று சட்டையக் கழற்றி சுவற்றில் மாட்டி விட்டு ஒரு கட்டிலில் படுத்தான்.

ஆகா, அருமையாகத் தூக்கம் வருதுஎன்று சில நிமிடங்களிலேயே மெல்லிய குறட்டையுடன் தூங்கி விட்டான். நன்றாகப் பழகிய வீட்டில் நிச்சிந்தையாகத் தூங்கும் பூனை போல.

நான் சற்று நேரம் வாட்சப், வீடியோ எல்லாம் பார்த்து விட்டு படுத்தேன். தொடர்ந்து ஒலித்த பயங்கரமான ஹாரனுக்கு எழுந்த போது மணி ஐந்து ஆகி இருந்தது. சிவா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். நான் ஓசை செய்யாமல் எழுந்து பாத்ரூம் சென்று முகம் கழுவிக் கொண்டேன். சிவாவும் எழுந்து விட்டான்

கட்டிலில் இருந்த படியேடேய் ராம், இந்த மாதிரி நான் தூங்கி பல வருஷம் ஆச்சுஎன்றான்.

நேரம் பார்த்து விட்டு அவனும் எழுந்து தயார் ஆனான்

மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்து விட்டுஏழு கால்என்றான். அவனுடைய உதவியாளன், மற்றும் ஒரு பிரபல டைரக்டரின் பெயரைச் சொன்னான்.

சிவா, ஏதாவது அவசரமா இருக்கும், திரும்ப அழைத்துப் பேசி விட்டு கிளம்பலாமாஎன்றேன். தேவை இல்லை என்பது மாதிரி இடது கை சைகையிலேயே தெரிவித்தான்.

நேரா மலைக் கோட்டைக்குப் போகலாமா ? ஆனால், உன்னுடைய கார் அங்கே போவது முடியாதுஎன்றேன். குறுகலான சாலை, அதுவும் நிறைய பைக், ஆட்டோ தவிர எக்கச்சக்கமாக ஆட்கள் நடந்து கொண்டிருப்பார்கள்.

காரா? நாம நடந்தே போகலாம்” என்றான்

இல்ல சிவா, இங்க ரோடெல்லாம் அழுக்கா இருக்கும், ஒரு ஆட்டோ புடிச்சு நேரா மலை வாசல்ல போய் இறங்கிடலாம்என்றேன்.

ஆட்டோ எல்லாம் வேண்டாம் ராம், நடக்கலாம் வா

உன்னை யாராவது அடையாளம் கண்டு கொண்டால், கூட்டம் சேர்ந்து விடும், வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவுல போட்டுருவாங்க

ராம், அப்படி எதுவும் ஆகாது, மேக்கப் இல்லாம மேகலாவுக்கே என்ன அடையாளம் தெரியாதுஎன்று சாதாரணமாகச் சொன்னான்.

மேகலா ஒரு பிரபல நடிகைமுன் காலத்தில். இப்போது ஏதாவது அம்மா பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாள். அவள் சிவாவோடுதான் இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது. இருவருக்கும் திருமணம் எதுவும் ஆகவில்லை. அவளைப் பற்றி நான் எதுவும் கேட்கவில்லை.

படிகளில் இறங்கி வெளியே வந்தோம். மாலை வெய்யில் சூடு இன்னும் உக்கிரமாக இருந்தது. புழுதியும், சத்தமும், சூடும், கூட்டமும் எனக்கே நடப்பதற்கு கடினமாக இருந்தது. சிவா உற்சாகமாக இருந்தான்.

மெயின்கார்டு கேட்டுக்கு நடந்தோம். சாலையில் இரண்டு பக்கமும் நிறைய வாகனங்கள்.

அப்ப எல்லாம் இவ்வளவு வாகனங்கள் கிடையாது இல்ல, புதிய எவர்சில்வர் பாத்திரம் போல பளபளக்கும் சீரங்கம் பஸ் அஞ்சு நிமிஷத்துக்கு ஒண்ணு வரும்

ஆமாம் , இப்ப நடக்கக் கூட இடம் இல்லை

ராம், ஓரு டீ குடிக்கலாமா ?” என்று சிறிய டீக்கடையில் நின்றான்

சிவா, இங்க எல்லாம் டீ வேணுமா, மெயின் கார்டு கேட்டு உள்ள போய் வசந்தபவன் மாதிரி எங்கயாவது உட்கார்ந்து டீ குடிக்கலாம்என்றேன்

இல்ல, எனக்கு இங்கதான் டீ வேணும்என்றான்

டீ குடித்து விட்டு நடந்தோம், சிவா மிக உற்சாகமாக இருந்தான். யாரும் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

இங்கதானே ஒரு பழைய புத்தகக் கடை இருக்கும், நாம கூட சுஜாதா, பாலகுமாரன் புக்கெல்லாம் வாங்குவோம் ? “ – அங்கே இப்போது அடுக்கு மாடி நகைக் கடை இருந்தது.

மெயின் கார்டு கேட் வந்தோம். அங்கே இருந்த தொல்லியல் இலாக்காவின் போர்டை நின்று படித்தான்

ராம், இது பாரு நாயக்கர்கள் கட்டியது, ப்ரிட்டிஷ், ஃப்ரெஞ்சு, ஆர்க்காடு நவாப் எல்லோரும் சண்டை போட்டிருக்கிறார்கள். இப்போது தெரு முழுவதும் ப்ளாஸ்டிக் குப்பைகளை விற்றுக் கொண்டிருக்கிறோம்என்றான்.

ஆமாம் இங்க எல்லாப் பொருட்களும் கிடைக்கும், நான் ஒரு மொபைல் ஃபோன் கவர் வாங்க வேண்டும்என்றேன்.

பரவாயில்லை , முன்பு மாதிரி திறந்த வெளி கழிவறையாக இல்லைஎன்றான்

கோட்டை வாயிலின் வழியாக உள்ளே நடந்தோம்

இங்க பேரிச்சம்பழ வண்டி இருக்குமேஎன்றான்.

முன்பு கரிப் புகையுடன் மண்ணெண்ணெய் விளக்கு வெச்சுட்டிருப்பாங்க, இப்ப எல் டி லைட் ஆயிடுச்சு. அப்ப இந்த இடத்துல பலாப்பழ வாசனையும் மண்ணெண்ணெய் வாசனையும் மல்லிகைபூ வாசனையும் சேர்ந்து ஒரு தனி அனுபவம்என்றான்

இப்போது அங்கே குடையை தலைகீழாக விரித்து வைத்து அதில் கைக்குட்டையும் சாக்சும் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

கூட்டம் நெரிந்தது. மேலே இடித்துக் கொண்டுதான் நகர முடிந்தது. ஒருவன் சிவாவை முரட்டுத்தனமாக தள்ளி விட்டு ஓடினான்.

சிவா, பர்ஸ் பத்திரம்என்றேன்

ராம், பர்ஸ் எல்லாம் என்னிடம் கிடையாது, நீ தான் இன்றைக்கு எனக்கு எல்லாம் வாங்கித் தர வேண்டும்நம்ம காலேஜ் டேஸ் மாதிரிஎன்று புன்னகைத்தான்.

மேலே நடந்தோம். தெப்பக்குளமே தெரியாதபடி கடைகள்

தண்ணீர் இருக்கிறதாஒரு இடைவெளியில் கம்பி கேட்டைப் பிடித்துக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தான்

நான் கண்ணில் நீர் வராமல் வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்க முடியும் என்று விற்றுக் கொண்டிருந்த உபகரணத்தைகிர் கிர்என்று இழுத்துப் பார்த்தேன். நல்ல வலுவாகத்தான் இருந்தது. வரும்போது வீட்டுக்கு ஒன்று வாங்கிக் கொள்ள வேண்டும்.

ராம், இங்க மினி பாகல் விப்பாங்க, பிரம்புக் கூடை நிறைய இருக்கும், அளக்கும் படியில் குவித்து விற்பார்கள். சின்ன சின்னதாக கோலி சைஸில் பாகல்காய். ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும்போது வாங்கிட்டுப் போவேன்என்றான்.

குண்டு மல்லி நல்லாவே இருக்குதுஎன்று இரண்டு முழம் வாங்கினான். பூ வளமாக பெரிதாக இருந்தது.

நல்லா இருக்குது, இப்ப பூ உனக்கு எதற்கு ?” என்றேன்

மாணிக்க வினாயகருக்கும், மேலே உச்சிப் பிள்ளையாருக்கும்என்றான்

சாரதாஸில் உள்ளே நுழைய வரிசையாக கூட்டம் நின்றிருந்தது. கதவுக்கு அருகில் போய்ப் பார்க்கலாம் 

என்றான். யாராவது உள்ளே நுழைய திறக்கும்போது ஏஸி குளிர் இதமாக அடித்தது. உள்ளே பார்த்து விட்டு 

இது மட்டும் மாறவே இல்லைஎன்றான் நிறைய பெரிய பெரிய கடைகள், எல்லாவற்றிலும் கூட்டம்

ராம், மக்கள் கிட்ட பணம் இல்ல, எல்லாரும் கஷ்டப் படறாங்க அப்படின்னு அரசியல் கட்சிகள் சொல்லறாங்களே, இங்க வந்து பார்க்கணும், யாராவது ஏழை நாடுன்னு சொல்ல முடியுமா ?” என்றான்

சிந்தாமணி சூப்பர் மார்கெட் கடைகளுக்கு நடுவே இருந்தது

பரவாயில்லையே இது இன்னும் தப்பித்திருக்குது. தொல் பொருள் இலாகா கவனிக்க வேண்டிய இடம், இத்தனை மால் வந்த பிறகும் திருச்சியிலதான் இருக்க முடியும்என்றான்

மலை வாசலுக்கு வந்து விட்டோம்.

இங்க ஒரு சர்பத் கடை இருக்குமே, மலை ஏறுவதற்கு முன்னால் நன்னாரி சர்பத் குடிக்கலாம்னு பார்த்தேன்என்றான். நானும் நன்னாரி சர்பத் குடித்து பல வருடங்கள் ஆயிற்று. அந்தக் கடை இப்போது இல்லை.

சற்று அருகில் மதுரை ஒரிஜினல் ஜிகிர் தண்டாதான் இருந்தது

சிவா, “அது வேண்டாம் என்றான். அது மதுரையில போய் குடிக்கலாம், திருச்சியில நன்னாரிதான் வேணும்என்றான்.

மலை வாசலுக்கு வெளியே பெரிய துணிக்கடைகள் இருந்தன. “இங்க பித்தளைப் பாத்திரக் கடை இருக்கும், பெரிய அண்டா முழுக்க சின்ன சின்ன வட்டமா புள்ளிகள் பளபளக்கும், வாசலில் மெஷின் வெச்சுட்டு பெயர் பொறிச்சிட்டிருப்பாங்க. தமிழ் நாட்டுல பாத்திரத்துல பெயர் எழுதற பழக்கம் சங்க காலத்திலிருந்தே உண்டு. கீழடியில கிடைச்ச மண்பாண்டத்திலிருந்து ஆதாரம், ம், இப்ப அதுவும் இல்லஎன்றான்.

மலைவாசல் உள்ளே இரண்டு பக்கமும் கடைகள் இருந்தன. பூ, பூஜைக்கு வேண்டிய பித்தளைப் பொருட்கள், சாமி படங்கள் எல்லாம் முன்பு போலவே இருந்தன

ராம், இங்க பூக்கடையில சந்தனம் அரைச்சு பெரிய பந்து மாதிரி உருட்டி பன்னீர் தெளிச்சு , சந்தனக் கல் மேல வெச்சிருப்பாங்க, உள்ள வரும்போதே மணம் கமழும், இப்ப இல்லயேஎன்றான்

செருப்பு விடும் இடத்துக்கு அருகில் நிறைய வாழைத்தார்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன 

வாழைத்தார் கட்டணுமா , இங்க வாங்கஎன்று தம்பதியாக வந்தவர்களை கடைக் காரர்கள் கூவி அழைத்துக் கொண்டிருந்தார்கள்

ராம், நீயும் வாழத்தார் கட்டினயா ? எத்தன பசங்க உனக்கு ?” என்று விசாரித்தான். சுகப் பிரசவத்துக்கு தாயுமானவர் சன்னிதியில் வாழைத்தார் கட்டி வழி படுவது வழக்கம்

இப்ப என் மகளுக்கு கட்டணும்என்றேன்.

மாணிக்க வினாயகர் சன்னிதியில் கூட்டம் அதிகமாக இருந்தது.

எல்லோரும் மேலே ஏறிச் சிரமப்படாமல் வினாயகரை இங்கயே பார்த்துடறாங்க , நாம மேலே ஏறலாம், சீக்கிரம் போக வேண்டும், முன்பு எல்லாம் ஆறரை மணிக்கு மூடி விடுவார்கள், இப்ப எப்படியோஎன்றான்

ஒரு முழம் மல்லிப்பூவை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு, தீபாராதனை பார்த்து, விபூதி வாங்கிக் கொண்டு எத்தனை மணிக்கு மேலே கோவிலை மூடி விடுவார்கள் என்று விசாரித்தான்.

எட்டு மணி வரை திறந்திருக்குமாம், இருட்டினால் நல்லதுதான்என்றான்.

சிவா, முன்ன எல்லாம் மேலே பாறையில் குதிச்சு தற்கொலை செஞ்சுக்குவாங்க. அதனாலயே சீக்கிரமே மூடிருவாங்க. இப்ப எல்லாம் பாதுகாப்பா வேலி போட்டாச்சு. சரி, போகலாமாஎன்றேன்

வேண்டாம், டேய் ராம், எனக்குப் பசிக்குதுடா, இப்படியே நடந்து சிங்காரத் தோப்பு மெஸ்ஸில சாப்பிடலாமா? பிறகு வந்து தெம்பா மலை ஏறலாம்என்றான்.

சிவா, மேலே ஏறி இறங்கிய பிறகு பசிச்சு சாப்பிடலாமேஎன்றேன்.

அவன் என் பதிலுக்குக் காத்திருக்கவில்லை. மலை வாசலிலிருந்து வெளியே வந்தோம். பெரிய கடைத் தெருவில் முதலிலேயே இன்னும் நாட்டு மருந்து கடைகள் இருந்தன. துருப்பிடித்த மூடிகளுடன் அழுக்கு கண்ணாடி ஜாடிகளில் வேர், பொடி, புட்டிகளில் தைலங்கள், கட்டித் தொங்க விட்டிருந்த இலை, சின்ன தராசு, நடுவே வயதான அம்மாள்

சிவா, “ அமுக்கரா கிழங்கு இருக்குதாம்மா ?” என்று கேட்டான்.

உடம்புக்கும் மனதுக்கும் மிக நல்லது, புத்துணர்ச்சியிம் அமைதியும் கொடுக்கும், உனக்கும் வேணுமா? ஆயுர்வேதத்துல அஸ்வகந்தான்னு சொல்லுவாங்கஎன்றான்.

இல்ல, வேணாம் சிவாஎன்றேன்.

உனக்குத் தேவை இல்லைதான்என்றான்.

நடந்து சிங்கார தோப்புக்கு வந்தோம். சந்து சந்தாக விரிந்தது. துணிக்கடைகளில் இறுக்கமாக சுடிதார் அணிந்த பெண் பொம்மைகள் வரிசையாக இருந்தன. வண்ண வண்ண உள்பாவாடைகள் சகாய விலையில் நாடாவுடன் இருந்தன. லுங்கிக் கடைக்கு அருகில் பெரிய திறந்த சாக்கடைக்கு அடுத்த ஹோட்டலில் கரும் பலகையில் மெனு எழுதி சாப்பாடு, டிபன் ரெடியாக இருந்தது

சிவா, “ராம், இங்க வேண்டாம், நாம போவோமே அதே மெஸ் இன்னும் இருக்குதான்னு பார்க்கலாம், தேங்காய்ப் பாலுடன் நண்டுக் குழம்புஎன்றான்.

பக்கவாட்டுச் சந்துகள் இன்னும் குறுகலாயின. நாங்கள் காலேஜ் படிக்கும் நாட்களில் இருந்த மெஸ் இப்போது இருக்கவில்லை. சிவா ஏமாற்றமாக இருந்தான்.

ச்ச, வேணுங்கிற மாதிரி ஒரு சாப்பாட்டுக்கு கூட வழி இல்லஎன்றான்.

ஏன் சிவா அப்படிச் சொல்லற, என் எஸ் ஆர் ரோடுல இப்ப நார்த் இண்டியன், பிட்ஸா எல்லாம் வந்திடுச்சு, உனக்கு என்ன வேணும்னு சொல்லு, ஏஸி ரூமில போய் உட்கார்ந்து சாப்பிடலாம்என்றேன்.

வேணாம், மலை ஏறலாம்என்று வேகமாகத் திரும்பினான். நான் அவன் கூட ஒட வேண்டி இருந்தது.

மறுபடி மலை வாசலுக்குள் நுழைந்து ஏற ஆரம்பித்தோம். என்னால் சிவாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. முதல் படிகள் தாண்டி குறுக்கே தெருவைத் தாண்டி நடந்தோம்.

யானை எங்கே காணவில்லை ? “ என்று தேடினான். முன்பு ஒவ்வொரு முறையும் யானைக்கு பழம் வாங்கிக் கொடுத்து விட்டு, காசையும் கொடுத்து, பாகனிடம் சொல்லி தலையில் துதிக்கை வைத்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுவான்.

இங்க இன்னொரு பல்லவர் குகை இருக்குதுல்ல ? அருமையான சிற்பங்கள் உண்டு

வேண்டாம் சிவா, நேரமாயிடுச்சு,இன்னும் மேல ஏறணும்அந்தக் குகைக்குப் போனால் சிற்பங்களைப் பார்த்து மணிக்கணக்காக நின்று விடுவான். நூற்றுக்கால் மண்டபம் பூட்டி இருந்தது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். “அழகான மண்டபம், இப்படிப் பூட்டி வெச்சுட்டாங்களேஎன்றான்

பக்கவாட்டில் படிகளுக்கு அருகே இருந்த புத்தகக் கடையில் பட்டினத்தார் பாடல்களுடன் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை கயிற்றில் தொங்கியது. அதை சிவா வாங்கிக் கொண்டான்

ஆகா, ராம், எத்தனை கற்பனைகள் இதிலே, இதிலிருந்து நூறு படம் எடுக்கலாம்என்றான் புரட்டிப் பார்த்துக் கொண்டே.

எனக்குத்தான் படி ஏறுவது கடினமாக இருந்தது. சிவா சிரமப் படாமல் ஏறினான். பங்குனித் திருவிழா என்று பெரிதாகத் தட்டியில் போஸ்டர் கட்டி இருந்தார்கள். அதை விலக்கி பின்னால் இருந்த தூணில் குதிரை வீரனைக் காண்பித்தான்

என்ன ஒரு வேலைப் பாடு, இதை மறைச்சு போஸ்டர்என்று வருத்தப் பட்டான்.

சிவா, உச்சிப் பிள்ளையார் பார்க்கணுமா, வேணாமா ? நேரமானால் மூடிடுவாங்க, தாயுமானவரை வரும் போது பார்க்கலாம்என்றேன்.

மேலதான் போகணும்என்றான்.

வலப் பக்கம் திரும்பி மேலே ஏற ஆரம்பித்தோம். மகேந்திர வர்மனின் குடைவரை கம்பி போட்டு மூடி இருந்தது

இதயும் மூடிட்டாங்களா ? இங்கே பல்லவ கிரந்த கல்வெட்டுகள் உண்டு. ராம், உனக்கு ஞாபகம் இருக்குதா ? இங்கே உள் அறையில் ஒரு சுரங்கப் பாதை இருக்கும். இங்கிருந்து தஞ்சாவூர் வரை போகும் அப்படின்னு சொல்லுவாங்க

ஆமாம், நாம கூட ஒருமுறை யாரும் பக்கத்துல இல்லாத போது அதுல இறங்கிப் பார்த்தோமே”. 

அப்போது வௌவால் முகத்தில் அடிக்க எப்படி பயந்து போனோம்என்றான்.

மேலே மின்சார விளக்குகள் எரிய ஆரம்பித்தன

ராம், இங்க பிரசாத ஸ்டால் இன்னும் இருக்குதா ? “

நாங்கள் ஒவ்வொரு முறையும் மிளகு வடையும் கடலை மிட்டாயும் வாங்கிச் சாப்பிடுவோம். இப்போதும் கடை இருந்தது.. ஆனால், சிப்சும் குளிர்பானங்களும் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

எல்லாம் போச்சுஎன்றான் சிவா.

சிவா, உனக்கு பசின்னு சொன்ன, எதுவும் சாப்பிடல, ஒரு சிப்ஸ் பாக்கட் வாங்கட்டுமா ? “ 

கடிகாரத்தை பார்த்து,”டேய் சீக்கிரம் மேலே ஏறலாம், ரயில் வரும். சீரங்கம் ப்ரிட்ஜுல ரயில் வரும் அழகைப் பார்க்கவே நாம இங்க வருவோமேஎன்றான்.

சற்று மூச்சு வாங்க, மேலே விரைவாக நடந்தோம். பக்கவாட்டில் கம்பிகள் போட்டு பாதுகாப்புச் செய்து இருந்தது

அப்ப வெறும் துருப்பிடிச்ச தண்டவாளக் கம்பி தான் இருக்கும், பிடிச்சுக்கிட்டு நடந்தால் கையில் இரும்பு வாசனை வரும்என்றான் சிவா.

ஆமாம், “ என்றேன்.

சிவா அப்படியே நின்று விட்டான். ஆற்றில் நிறைய தண்ணீர். பாலத்தில் ரயில் வண்டி வந்தது. சிறு குழந்தை மாதிரி உற்சாகமாக எனக்குக் காண்பித்தான்.

சிவா கையைக் காட்டிராம், உள்ளே நுழைந்து பாறைகளில் போக முடியுமா?” என்றான்

சிவா, வேண்டாம், ஆபத்தான இடம் அது, சறுக்கி விடும். வேண்டாம்என்றேன்.

கேட்காமல் சிவா கம்பிகளுக்கு ஊடே ஏறிக் குதித்து, அடியில் புகுந்து வேகமாக பாறையில் இறங்கினான்.

முள்வேலி போட்டுத் தடுத்திருந்தார்கள்.

டேய் சிவா, அங்கே போகாதே , வந்து விடுஎன்று உரத்துக் கத்தினேன்.

சுவற்றின் மேல் எப்படியோ ஏறி ஓரு விளிம்பில் நின்று கொண்டு காட்சியில் உறைந்து போனான். பிறகு சற்றுத் தள்ளாடுவது போல இருந்தது. அப்படியே குதித்து விடுவான் போல இருந்தான்.

நான், “சிவாஎன்று கூவினேன். யாராவது உதவிக்கு இருக்கிறார்களா இல்லை நானே இறங்கி அவனைப் பிடிக்கலாமா என்று பார்த்தேன்.

கீழ் வானம் முழுவதும் சிவந்த மேகங்கள். சிவப்பும் மஞ்சளும் ஆரஞ்சும் வண்ணக் கலவை ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டிருந்தன. சற்று கீழே ஒரு கிளிக் கூட்டம் ஒலி எழுப்பி பறந்து சென்றது

அந்தக் காட்சியைக் கண்ட சிவாவின் உடல் ஒரு கணம் சிலிர்த்தது. தலையை விருட்டென்று அசைத்து கீழே இறங்கினான். மெதுவாகத் திரும்ப மேலே வந்து விட்டான்.

அதற்குள் அங்கே ஒரு சிறு கூட்டம் சேர்ந்து விட்டது. நான் பெயர் சொல்லிக் கூவியதிலும், அவனைப் பார்த்தும் அடையாளம் கண்டு கொண்டு விட்டார்கள். நிறைய பேர் செல்போன்களில் படமும் வீடியோவும் எடுத்தார்கள். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அவனுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முயன்றாள். இன்னொருவன் பேச்சுக் கொடுக்க முயன்றான். “ஸார், இங்க படப்பிடிப்பா ?, மணிரத்னம் படமா ?” என்று ஆரம்பித்தான்.

சிவாவுக்கு எதுவும் பிடிக்கவில்லை.

ராம், வா, போகலாம்என்று கீழே போக திரும்பினான்எங்க போனாலும் விட மாட்டாங்க

நான் அவனை சந்தேகமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இவ்வளவு தூரம் ஏறி வந்துட்டோம், சாமியப் பார்த்துட்டு வந்திடலாமேஎன்றேன். அவன் கேட்கவில்லைஇல்ல, கீழ போகலாம்என்றான்.

இறங்க ஆரம்பித்தோம். விரைவில் கீழே வந்து விட்டோம்.

மலை வாசலில் கூட்டம் நெரிந்தது. அதில் ஒரு ஆட்டோ எதிர்த் திசையில் புகுந்து சக்கர வியூகத்திலிருந்து வெளி வந்து கொண்டிருந்தான்.

சிவா நடுச் சாலையில் நின்று கொண்டு அங்கே ஒரு கடையில் இருந்த சுழலும் மின்சார விளக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆட்டோக்காரன் ஹாரனை பலமாக அடித்தான், நான்சிவா இப்படி ஓரமாக வாஎன்று கையைப் பிடித்து இழுத்தேன்.

ஆட்டோக்காரன் அபாயகரமாக மிக அருகில் வந்து பிரேக் அழுத்தினான். சிவாவைப் பார்த்துயோவ், அறிவு இருக்குதா உனக்கு? இப்படி நடு ரோடுல எரும மாதிரி நிக்கறஎன்றான்.

நான் ஆட்டோக்காரனைப் பார்த்துஇவரு யாருன்னுஅதற்குள் சிவா என்னை நிறுத்தி ஓரமாக நகர்ந்தான்.

அவன் முகத்தில் கோபம் இல்லை, மாறாக மலர்ந்த புன்னகை.

டேய் இன்னும் பசிக்குதுடாஎன்றான்

நாங்கள் இருவரும் மிக மகிழ்ச்சியாக கூட்டத்துக்கு நடுவில் மேலும் நடந்தோம்.

***********

tharunadithan@yahoo.com – 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

5 Comments

  1. யதார்த்தமான நட்பை அருமையா சொன்ன விதம் அபாரம்.
    ஒரு பைசா செலவு இல்லாம மலைக்கோட்டையை சுற்றி பார்த்த அனுபவம்.

    உடம்புக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி & அமைதியும் கிடைத்தது.
    நன்றி நண்பா.

    Keep writing. May the Almighty bless you in abundance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button