![](https://vasagasalai.com/wp-content/uploads/2019/08/Mohan-780x405.jpg)
சிறியன சிந்தியாதான் வாலி!
என்னைப் பற்றிச்
சிறிதும் சிந்தியாதான் இலக்குவன்!
சீதை சில காலம் பிரிந்ததற்கே
சிந்தை கலங்கியவன் இராமன்!
நான்
கம்பனாலும் கவனிக்கப்படாதப் பாத்திரம்!
சீதைக்கு அசோகவனம்
எனக்கு
அயோத்தியே வனம்!
நான்
ஓவச்செய்தியாய் நின்றபோது
என்னைப்
பாவச் செய்தி என
பார்க்காமலேயே சென்றுவிட்டான்!
ஊர்வனகூட ஊர்வலம் நடத்தும் காப்பியத்தில்
ஓர் உயிரெனவும் மதிக்கவில்லை!
உரிப்பொருளில்
கூடி முயங்கப்பெறாத ஊடல் நான்!
இருத்தலும் பிரிதலும்
எனக்கு மட்டுமே!
இருந்தும்
நெருப்பில் இறங்க வைக்காத நேர்மையாளன்
என்னைப்பற்றிச்
சிறிதும் சிந்தியாதான் இலக்குவன்
இப்படிக்கு ஊர்மிளா!