கல்யாண்ஜியின், ‘மேலும் கீழும் பறந்தபடி’ – கவிதைத் தொகுப்பு அறிமுகம் – ப.தாணப்பன்
கட்டுரை | வாசகசாலை

நாம் பெரும்பாலும் சாமானியம் என்று எண்ணுவதும் அனிச்சையாகவோ, பழக்கமாகவோ, கவனிக்காமலோ, ரசிக்காமலோ, பாராமல் கடக்கும் காட்சிகளை, நிகழ்வுகளை, சின்னச் சின்ன அழகுகளை, மிகச்சிறிய நுட்பங்களை, ஒரு ஓவியனின் கண் கொண்டு பார்ப்பதற்கும் அவதானிப்பதற்குமான விழிப்பையும் தருவது கல்யாண்ஜியின் கவிதைகள் என்று அவரை வாசிக்கும் அனைவருக்குமே தெரியும். அதை அனுபவப்பூர்வமாக மட்டுமல்லாமல் உணர்வுப்பூர்வமாகவும் உணர்ந்திருப்போம்.
‘மேலும் கீழும் பறந்தபடி’ – சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சமீபத்தில் வெளிவந்த கவிதைத் தொகுப்பு. கொஞ்ச நஞ்சமல்ல, நிறையவே, பூரணமாகவே மேலும் கீழும் பறந்தபடி செல்வோம் நாம்.
“வெயில் தணிந்த பின்
போகச் செல்வார்கள்
மழை நின்ற பின்
போகச் செல்வார்கள்
எதுவும் தணியுமுன்
எதுவும் நிற்கும் முன்
போய்க்கொண்டே இருங்கள். உங்கள் நெற்றியும் கன்னமும் மழை விழுந்து தெறிக்கும் படியும் உங்கள் புறங்கைகளின் மேல்
தோல்
வெயில் பிசுபிசுக்கும் படியும் தரப்பட்டிருக்கின்றன
குடை வைத்திருக்கும் பைத்தியக்காரர்களை
இதுவரை யாரும் பார்த்திருக்கிறோமா?”
வெயிலில் அலையாதே, மழையில் நனையாதே என்று அறிவுறுத்துவதைத்தான் நாம் கேட்டிருப்போம். அதன் தொடர்ச்சியாகவே வெயில் தணிந்த பின், மழை நின்ற பின் நம்மை போகச் சொல்வார்கள். இவை இரண்டையும் வாங்கிக் கொண்டு நாம் ஏன் செல்ல வேண்டும்? என்பதை அறிவியல் பூர்வமாக ‘வெயிலில் பிசுபிசுக்கும்’ என்று இயம்பியிருக்கின்றார். இரண்டையும் எதிர் கொள்ள பயந்து குடை வைத்திருப்போரை பைத்தியக்காரர்கள் என்று சொல்வதில் நாம் ஏன் அவற்றை சுவீகரிக்காமல் விட்டு விடுகிறோம் என்ற குறையைச் சொல்வது போன்று அமைந்திருக்கிறது.
“ஓட்டைப்பல் சிறுவன்
அம்மாச்சி சொன்னபடி
விழுந்த பல்லை சாணியில் பொதிந்து
ஓட்டின் மேல் வீசினான்.
கடவுள் மேல் விழுந்தது அது. கடவுள் அவருடைய அம்மாச்சியிடம் கேட்டார்
உன் சொல்படி நான் கீழே வீசினேனே என் பல்லை
அதே தானே இது?”
இப்போதெல்லாம் இப்படிச் செய்வார்களா? அது தெரியுமா? என்று கூட உறுதியாக நம்மால் சொல்ல இயலாது. முழு ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறைக்கு ஆச்சி, தாத்தா வீட்டிற்கு நாம் செல்வோம். பல் விழும் பருவத்தில் இருந்த நம் அனைவருக்கும் இது நடந்திருக்கும். விழுந்த பல்லை சாணியில் பொதிந்து வீட்டு ஓட்டின் மேல் ஆச்சி சொல்படி கேட்டு வீசி இருப்போம். அந்த பால்ய கால நினைவுகளை மீட்டெடுப்பது ஒருபுறம் இருப்பினும், கடவுள் மேலிருந்து கீழ் வீசிய அந்தப் பல்தானே இது என்று வினவியிருப்பது கற்பனையின் உச்சம்.
“தினசரி பூ வாங்குகிற வீடு. ஆளில்லாத இரும்புக் கதவில் தொங்குகிறது சரம்.
இதழ் அவிழ்ந்து அவிழ்ந்து காற்றில் மல்லிகை
அதன் பெயரைச் சொல்கிறது. ஒருத்தருக்கும் தெரியாமல்
சரம் தொங்கும் இடத்தில்
கதவு துளிர்த்துக் கொள்கிறது இரண்டு மூன்று இரும்பு இலைகளை.”
அழகியல் பேசும் கவிதை இது. இங்கே நெல்லை பக்கம் வீட்டில் பெரும்பாலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்குக்குப் போட ஒன்றிரண்டு முழம் சரம் வாங்குவது வழக்கம். அந்தச் சரத்தில் எல்லா வகை பூக்களும் கட்டப்பட்டிருக்கும். ஆளில்லாத பூட்டப்பட்டிருக்கும் இரும்புக் கதவில் அந்த சரத்தை வைத்து விட்டு பூக்காரர் சென்று விடுகிறார். அதில் இருக்கின்ற மல்லிகை மெதுவாக தம் மொக்கை அவிழ்த்து அதன் பெயரைச் சொல்கிறதாம். அதோடு மட்டுமில்லாமல் அந்த சரம் தொங்குகின்ற கதவு மூன்று இரும்பு இலைகளைத் துளிர்த்துக் கொள்கிறதாம். பொதுவாக மூன்று துளிர்கள்தாம் துளிர்க்கும். ‘இரும்பு இலைகள்’ புதிய சொல்லாடல்.
“அந்தப் பூவைக் கனவில் தான் பார்த்தேன்.
காம்பு கூட தெரியக் காணோம். பயிற்சிக் குறைவுடன்
மிக அருகில் பிடிக்கப்பட்ட காணொளி போல் இருந்தது. அடுக்கடுக்காக இதழ்கள் மலர்ந்து கொண்டே இருந்தன.
சிறு சிறு வாசல்களை
அது உடனுக்குடன் திறந்து வைப்பதை
நிறுத்தவே இல்லை.
ஒரு கட்டத்திற்கு மேல்
இதழ்கள், வாசல்கள் என்னைத் திகைப்பில் நிறுத்தின.
திரும்பி வெளியேறிவிடல் தோன்றிவிட்டது
நினைத்த ஒரு புள்ளியில் அகன்று விட
எந்தக் கனவு நம்மை அனுமதித்து இருக்கிறது?”
வாசிக்கும் போது மிக எளிய கவிதை என தோன்றிடும். ஆனால், அதன் உள்அர்த்தங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் அழகியல், நம்மை இனி ஒவ்வொரு பூவையும் பார்க்கும் போது இவர் சொன்ன இதழ்கள் வாசல்கள் விரிவது என்று விரிந்து கொண்டே இருக்கும். அருகில் பிடிக்கப்பட்ட காணொளி என்பதால் சற்று மங்கலாக அந்தப் பூ தெரிந்திருக்கிறது. உற்று நோக்க நோக்க இதழ்கள் விரித்து வாசல்கள் திறந்து நம்மை அதன்பால் இழுத்துக் கொண்டே செல்கிறது. சரி போதும் என்று நிறுத்தி விட முனையும் போது, கனவு எவ்வாறு விடுபட அனுமதிப்பதில்லையோ அதுபோல வெளியேற அனுமதிப்பதில்லை என்று நிறைவு செய்திருக்கிறார். நம்மால் நாம் காணும் கனவிலிருந்து வெளியேறிவிடத்தான் இயலுமா என்ன?
“உணவு விடுதிகளில் குழந்தைகளுக்கு வசதியான உயரத்தில்
கைகழுவு தொட்டி வைத்திருக்கிறார்கள்.
தொட்டி மட்டத்திலிருந்து
நீண்ட ஒரு உச்சித் தண்டில் பூக்கிறது லிலிப் பூ
அதே அவர்களுக்காக”
இப்படி எல்லாம் கற்பனை செய்து பார்த்திட இயலுமா? என்றால் கல்யாண்ஜியால் மட்டுமே அது இயலும் என்பதற்கான சான்று இக்கவிதை. பொதுவாக இப்போதுள்ள உணவு விடுதிகளில் மழலைகளின் வசதிக்காக சற்று உயரம் குறைத்து கை கழுவு தொட்டியை அமைத்திருக்கிறார்கள். அங்கே செல்லும் குழந்தைகளுக்கு இயல்பான தொட்டி மட்டம் வரை நீண்ட உச்சித் தண்டில் பூத்த லிலிப் பூ அவர்களுக்கு கரம் கொடுப்பதாக அல்லது அவர்கள் தலையில் சூடிக்கொள்ள குனிவது போல எழுதியிருப்பது குழந்தைகள் மேல் கொண்ட வாஞ்சையினை படம் பிடித்துக் காட்டுகிறது. இனி உணவு விடுதிகளில் அந்த உயரம் குறைந்த கழுவு தொட்டியினை காணும் போதெல்லாம் இந்த கவிதை நம் மனதில் நிழலாடும்.
“என்னுடைய சினேகிதி
எப்போதும் என்னிடம்
‘சரியா போகும்’என்பார்.
நான் இப்போது எல்லோரிடமும் ‘நல்லா இருங்க’ என்கிறேன். இரண்டும் அனேகமாக ஒன்றுதான்.
ஒரு சின்ன வித்தியாசம்.
அது போவதை பற்றியது.
இது இருப்பதை பற்றியது.”
‘சரியா போகும், நல்லா இருங்க’ என்பதும் இரு மங்கலச் சொற்கள். கையாளும் அல்லது சொல்லப்படக்கூடிய இடம் சிறிது வேறுபடுத்திக் காட்டக் கூடியது. உடல்நிலை நலிவுற்று சோர்வாக இருக்கும் போது ‘எல்லாம் சரியா போகும்’ என்பார்கள். பிறந்தநாள் மணநாள் எனும் போது ‘நல்லா இருக்கணும்’ என்று வாழ்த்துவார்கள். இரண்டுக்கும் ஒரு மயிரிழை வித்தியாசம்தான். மங்கலச்சொல் போவதாகவும் இருப்பதாகவும் இருக்கிறது என்பதை இந்தக் கவிதை எடுத்து இயம்புகிறது. ‘நல்லா இருங்க’ என்ற வார்த்தை வண்ணதாசனுக்கே உரிய வார்த்தையாகும். அவரிடம் ஆசி பெற்ற ஒவ்வொருவருக்கும் ‘நல்லா இருங்க’ என்பது பரிச்சயம்.
“ஆடி வெள்ளிக் கருக்கலில் அரளிப் பூ வாசனை
காட்டமாகக் காற்றில்.
நேற்றுப் பூத்ததில் இருந்து
இன்று பூத்தவைக்கு நகர்ந்து நாளை பூக்க இருப்பவைக்குள் புகுந்து கொண்டிருக்கிறாள் பேராத்துச் செல்வி”
நெல்லை வண்ணார்பேட்டையில் பேராத்துச்செல்வி அம்மன் கோவில் மிகப் பிரபல்யம். தைச் செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளிகளில் அம்மன் அருள் நாடி அங்கே நிறைய பேர் செல்வார்கள். மேலும், புதுமைப்பித்தன் அமர்ந்திருந்த இடமும் அருகில் இருக்கின்ற பேராத்துச் செல்வி படித்துறையாகும். ஆடி வெள்ளி மாலை நேரப் பொழுதில் மலர்ந்த அரளிப் பூ காற்றில் சற்று காட்டமாக அதன் வாசனை தருகிறது. நேற்று பூத்த பூவும், இன்று பூத்திருக்கின்ற பூவும், நாளை பூக்க இருக்கின்ற மொக்கும் செடியில் இருக்கும். நேற்றிலிருந்து இன்றும், இன்றிலிருந்து நாளையும் அரளியில் பேராத்துச் செல்வி அம்பாள் புகுந்து கொண்டிருப்பதாக பறை சாற்றுகின்றார். அம்மைக்குச் சாற்றப்படும் பூக்களிலே அவள் உறைந்து இருப்பதாக கண் முன்னே காட்சிமைப்படுத்தி இருக்கின்றார்.
“தெருவின் பெரும்பகுதியை மஞ்சள் மெத்தையிட்டு மூடும் பெருங்கொன்றை இந்த வருடம் பூக்கவே இல்லை.
பூக்காமல் தீராது.
எல்லாப் பூவையும் உள்ளேயே பூத்திருக்கும்.
உள்ளே பூத்து, வெளியே உதிர்க்காமல் இருப்பது
வாதை அல்லவா.
உள்ளே பூக்கத் தெரிந்த பின் வாதையும் ஒரு மஞ்சள் மலரே”
வழக்கமாக வெயில் காலத்தில் பூத்துக் குலுங்கும் கொன்றை மரம் இந்த வருடம் பூக்காது இருக்கிறது. இதைக் கண்ணுற்றவர் உள்ளேயே பூத்திருக்கின்ற அந்த பூக்களை எண்ணி, அந்த மரம் படும் வாதையை நமக்குள் கடத்தி மஞ்சள் வண்ணங்களால் வருடி விடுகிறார்.
“குமிழிகள் மேல்
வானவில் இருக்கிறது. குமிழிக்குள்
‘ஒன்றுமில்லை’ இருக்கிறது. குமிழிகள் தானே உடைவதெல்லாம்
உனக்கு ‘ஒன்றுமில்லை’யைக் காட்டத்தான்.”
சோப்பு நுரை கொண்டு ஊதி வெளிவரும் குமிழிகள் மேல் வானவில் படலத்தை நாம் காணலாம். ஆனால், அந்த குமிழிக்குள் ஒன்றும் இருப்பதில்லை. அந்தக் குமிழிகள் தானே உடைந்து ஒன்றும் இல்லை என்பதையும் கண் முன்னே நிறுத்தும். ஆக ஒன்றுமில்லை என்பதை உணர்த்த ஒரு குமிழி போதும். இதற்குள் எத்தனை எத்தனை ஆட்ட பாட்டங்கள். நாம் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து கொள்ள இந்த ஒரு கவிதை போதும்.
“மிகவும் தளர்ந்து மனம் தளர்ந்திருந்த என்னைத் தூக்கிக்கொண்டு போய் தட்டோடியில் மல்லாந்த படுக்க வைத்தேன்.
இரண்டு கைகளையும் பின் தலையில் கோர்த்து
வானம் பார்த்தேன்.
எப்போதும் அதிகம் மினுங்கும்
ஒரு நட்சத்திரம் இருக்குமே
அதை ஒதுக்கி வைத்தேன். மிச்சமிருக்கும் அத்தனையையும் பறித்து
என் மேல் அள்ளிப் போட்டுக்கொண்டேன். நட்சத்திரங்களுக்கு மதுரமான கசப்பு வாசனை என்று
நான் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும்”
மனதின் பாரத்தை இறக்கி வைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த கவிதை காண்பித்து நம்மை தட்டோட்டிக்கு அழைத்துச் செல்கிறது. ஆம், அங்கு கவலைகளைத் துறக்க இரண்டு கைகளையும் பின் தலையில் கோர்த்து தலையணை போல் பாவித்து படுத்துக் கொண்டு வானம் பார்ப்போம். அங்கே அழகழகாக மினுங்கிக் கொண்டிருக்கின்ற நட்சத்திரங்களை ஒவ்வொன்றாகப் பறித்து நம் மேல் அள்ளிப் போட்டுக் கொள்வோம். அது தரும் மதுரமான வாசனை நம் மனதை இலகுவாக்கி துன்பத்தைக் கரைத்து விடும். செய்து பார்ப்போம். கவலை துறப்போம்.
“நேற்றுப் போல இருக்கிறது. அதற்குள்ளா ஒரு வருடம் ஆகிவிட்டது?
நேற்று என்று சொன்னாலே
ஒரு வருடம் அல்ல.
பல வருடங்கள்.”
இப்பத்தானே புது வருஷம் பிறந்தது. அதற்குள்ளாகவா மார்ச், ஜூன், இதோ டிசம்பர் வரப்போகிறது என்று நாம் அடிக்கடி சொல்லிக் கொள்வோம் அல்லது பிறர் சொல்ல கேட்டுக் கொண்டே இருப்போம். நேற்று என்று சொன்னாலே பல வருடங்கள் என்ற வார்த்தைக்குள் புதைந்த சொற்றொடர்கள் அவை.
“கடைசியாக எப்போது பேசினார்? கடைசியாக யாரிடம் பேசினார்? கடைசியாக என்ன பேசினார்? கடைசியாக என்ன சொன்னார்? மாற்றி மாற்றிக் கேட்டுக் கொள்கிறார்கள்.
நான் கண்ணாடிப் பெட்டியில் குளிர்ந்திருப்பவரையே பார்க்கிறேன்
அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை.
என்னிடம் எதுவும் சொல்லவில்லை.
கடைசிக்கு முன்பும் சரி.
கடைசிக்குப் பின்பும் சரி.”
அந்த குளிர் பெட்டிக்குள் இருப்பவரை பற்றி மரண வீட்டில் அடிக்கடி மேற்சொன்ன கேள்விகளை கேட்பதுண்டு. அது ஒருவித இரங்கற்பா. கடைசியாக இன்னதை இவரிடம் பேசி இருப்பார். அதை அவர் மூலம் மீட்டெடுக்க அல்லது அவர் வழியே அவரைக் காண உதவும். கடைசி என்பது கடைசி அல்லவே.
“மூன்று நான்கு
முட்டைகள் இடும் மாம்பழக் குருவி இந்த முறை ஒரே ஒரு முட்டை இட்டிருக்கிறது.
மூன்று நான்கு பறவைகளுக்காகத் தன்னை விசாலப்படுத்தியதை ஒரே ஒரு பறவைக்கு மட்டும்
எப்படி குறுக்கிக்கொள்வது என்ற சிறு குழப்பத்தில் வானம்.”
வழக்கமாக மூன்று நான்கு முட்டைகள் இடக்கூடிய மாம்பழக்குருவி இந்த முறை ஒரே ஒரு முட்டையை மட்டுமே இட்டிருக்கிறது. அந்த மூன்று நான்கு பறவைகளுக்காக தன்னை விசாலப்படுத்திக் கொள்ளும் வானம், ஒரே ஒரு பறவைக்காக எப்படி தன்னைச் சுருக்கிக் கொள்ள முடியும் என்று வானம் ஏங்குவதாக வடிவமைத்திருப்பது வானம் போன்று நம் மனமும் இருத்தல் வேண்டும் என்பதனை உணர்த்துகிறது. இந்த நேரத்தில் க. மோகனரங்கன் எழுதிய ‘மீகாமம்’ தொகுப்பில் ‘கொஞ்சம் போல’ எனும் தலைப்பிலான கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது அது…
“கூட்டிலிருந்து
விழுந்தெழுந்து
பயத்தோடு
பறக்கக்
கற்றுக்கொள்ளும்
குஞ்சுப் பறவைக்காக
குனிந்து கொடுக்கிறது
வானம்”.
ஏங்கும் வானம் ஒருபுறம். இரங்கும் வானம் இன்னொரு புறம்.
“சின்ன வயதில் இருந்து
ரயில் பார்ப்பதற்கு என்றே இந்த ஸ்டேஷனுக்கு வருவது
ஒரு பரவசமாக
ஒரு பழக்கமாக
ஒரு தவிப்பாக
ஒரு பைத்தியக்காரத்தனமாக இருந்தது.
அப்போதெல்லாம் தெரியாது
இந்த ரயில் தான் ஊரைவிட்டு என்னை ஏற்றிக்கொண்டு போய் நகரத்தில் தள்ளும் என்பது.
இந்த ரயில் தான் ஒவ்வொரு பண்டிகைக்கும்
என்னை ஊரில் கொண்டு வந்து நிராதரவாக இறக்கி விடும் என்பது”
இதைவிட வெளியூரில் வேலை பார்க்கும் நபர்களுக்காக வேறு எவ்வாறு கரிசனம் காட்டி விட இயலும்? ஒரே ரயில்தான் பார்க்கும் பார்வை வேறல்ல. இந்த ஊரில் இருக்கும் போது நான் ரயில் பார்த்தது எவ்வாறாக இருந்தது. பண்டிகைக்கு ஒருவாறு விடுப்பு கேட்டு இங்கே வந்த என்னை அது நிராதரவாக இறக்கி விடுவது என்பதை உணர்ந்தவர்கள் இதனை உணரலாம்.
“இந்த இடத்தில்
ஒரு பூந்தொட்டி இருந்ததே
என்ன செய்தீர்கள்?
அதில் செடியே கிடையாது.
வெறும் மண் தொட்டிதான்.
அதை என்ன செய்தீர்கள்?
நிரம்பி வழியும் பூக்களால்
தணிந்தசையும்
பூந்தொட்டிகளின் மத்தியில்
ஒரு செம்மண் நிறப் பூவாக மலர்ந்திருந்ததே
அந்த வெற்று மண் தொட்டி
அதை என்ன செய்தீர்கள்?”
பூக்காது வைக்கப்பட்டிருந்த செம்மண் நிறைந்த அந்த பூந்தொட்டியை பூவாகப் பார்க்கும் மனது கல்யாண்ஜிக்கு மட்டுமே இருக்கிறது. இனி வெற்றுத் தொட்டியைக் காணும் போதெல்லாம் நாமும் அந்த மண் நிறப் பூக்கள் பூத்திருப்பதை காண இயலும்.
“கரு நீலச் சிறுமலரின்
பின் காம்பு கசி மது உறிஞ்சி எறிந்து கொண்டே போகிறான். நன்றி, நன்றி சொல்லி
ஒவ்வொரு எறும்பும் நுழைகிறது உறுபசிக் குகைக்குள்”
இது ஒரு காட்சிப்படிமம் ஆகும். ‘உறுபசி’ என்று தொடங்கும் திருக்குறள் வரியை இங்கே கையாண்டு உள்ளார் கல்யாண்ஜி. சிறுமலர்களுடைய காம்பிலுள்ள தேனை உறிஞ்சி விட்டு எறிந்து கொண்டே செல்கிறான் ஒருவன். அந்தக் காம்பிலிருக்கும் எஞ்சிய தேனை உண்ண ஒவ்வொரு எறும்பும் உள் நுழைகிறது. அந்த காம்பு உறுபசி குகை போல் கவிஞருக்கு கட்சி தருகிறது. பசியும் பிணியுமற்ற குகையாக எறும்புகளுக்கு அது இருக்கிறது.
“எங்களுக்கு கொஞ்சம் விவசாயம் இருந்ததால்
எனக்கு நெல் அவியும் வாசனை தெரியும்
எங்கள் வீட்டில் அவித்த நெல் காய போட்டதால்
அதைக் கொத்தித் தின்னும் சிட்டுக்குருவிகளைத் தெரியும். எனக்குச் சிட்டுக்குருவிகள் தெரிந்ததால்
ஜன்னல் கம்பிகளூடே பறந்து போகத் தெரியும்.
எனக்குப் பறந்து போக முடிந்ததால் கொஞ்சம் போல வானம் தெரியும். கொஞ்சம் போலத்தான் வானத்தைத் தெரிய முடிந்ததால் திரும்பி விட்டேன்.
விவசாயம் இல்லாது போன
நெல் அவிக்காத
சிட்டுக்குருவிகள் காணாமல் ஆகிவிட்ட
சன்னல் கம்பிகள் துருப்பிடித்த யாருமற்ற எங்கள் வீட்டுக்கு.”
வேளாண்மையைத் துறந்து நெல் அவிப்பை மறந்து, சிட்டுக்குருவிகளைத் தொலைத்து நிற்கின்ற அவலத்தை அரற்றுகிறது இந்தக் கவிதை. நாம் வாழ்ந்த தலைமுறையில் நெல் அவிக்கும் வாசத்தை நாம் நுகர்ந்து இருப்போம். அதை காயப்போடும் போது கொத்தித் தின்ன வரும் சிட்டுக்குருவிகளையும் கண்டிருப்போம். அவற்றை விரட்டும் போது அவை ஜன்னல் கம்பிகளிடையே பறந்து போவதையும் பார்த்திருப்போம். இவை எல்லாம் இப்போது இல்லை என்றாகிவிட்ட நிலையில் நம் தலைமுறையினரால் எவ்வாறு இவற்றை உணர, முகர இயலும்? என்று வேதனைப்படுகிறார். ‘கம்பிகள் துருப்பிடித்த யாருமற்ற எங்கள் வீடு’ என்பதில் நம் மனமும் துருப்பிடித்திருப்பதையும் உணர்த்துகிறார்.
“வண்ணத்துப் பூச்சியைப் பிடிப்பதற்கு
வண்ணத்துப் பூச்சியின் பின்னாலேயே அலைவது பிடிப்பதற்காக அல்ல
பிடிப்பது போன்று ஒரு விளையாட்டுக்காக”
சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சியை கண்டாலே குதூகலம்தான். அழகாக, போக்கு காட்டி விளையாடி, பறந்து செல்லும் அதன் அழகு நம்மை ஈர்க்கும். எப்படியாவது அதைப் பிடித்து விட வேண்டும் என்று மனம் துள்ளும். அப்படி சொல்லும் மனசு பிடிக்க எத்தனிக்கும் போது பிடிக்க வேண்டுமா என்று சஞ்சலம் கொள்ளும். இதனை அழகான கற்பனையாக பிடிப்பது போன்ற விளையாட்டுக்காக என்று அழகுற சொல்லி இருக்கிறார்.
‘காற்றுக்கு எழுதத் தெரியும்’ , ‘செம்போத்து சத்தமும் இருந்தது” , ‘ஒரு உருண்டையான சந்தோஷத்தை’, ‘மைதானம் ஒன்று உண்டு வானத்தில்’, ‘மாசறு கரையான்கள்’ இப்படி கல்யாண்ஜியின் தனித்துவம் மிளிரும் சொற்கள் ஆங்காங்கே நம்மை வசீகரிக்கத் தவறவில்லை.
கண்ணில் படும் பருண்மைகளை யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். மண்புழுக்களை பற்றி அக்கறை கொள்ள ஈரமான மனதும் ஆழ்ந்த கவனமும், சக உயிர்களின் மீதான அன்பும் வேண்டும். அது வண்ணதாசனிடம் நிறையவே இருக்கிறது.
அதனாலேயே அவரது படைப்புக்களை ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்பது வாசகனுக்கான நிரந்தர பதில் என்றுரைப்பார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
சற்று நேர அழகின் கள்ளத்தால், சற்று நேரக் கள்ளமின்மையால் நான் எழுதுகிறேன் என்று “இக்கணத்தில் இடைக் கணம்”என்று தலைப்பிட்ட தன்னுரையின் மூலம் இக்கணத்தையும் இடைக் கணத்தையும் மேலும் கீழும் பறந்தபடி நாம் உணரலாம். மேலும் கீழும் பறத்தல் என்பது எத்தனை சுகானுபவம். சுற்றும் ராட்டினம் மூலம் அப்படி ஒரு சுகானுபவத்தை நாம் எல்லோரும் பெற்றிருப்போம். இங்கு சுற்றாமலே அந்த சுகந்தம் நமக்கு கிட்டிடும்.
********
அருமை. ஊட்டி மலர் கண்காட்சியில் எந்த மலர்களை வியக்க எந்த மலரை விட எந்த மலர் அழகு எது நம் மனதை அள்ளும் என்று சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சி போன்ற நிறைவை இந்த புத்தகம் அளிக்கும்.