
அணைப்பார்
யாருமின்றி
ஆரண்யத்தீயாய்
பரவும்
ஆழிசூழ் தீந்துகள்
தீராப்பசி கொண்ட,
ஆக்டோபஸ் கரங்கள்…
மீயொலியாய்ப் பரவும்
பெருநகரத்துச் சங்கொலிகள் தட்டுகிற ஒவ்வொரு வாசற்காதவிலும் ,
இருபது இருகாலிகள்…
உலர்ந்த உதடுகளின்வழி வெடித்துக் கிளம்பும்
ஒப்பாரிகள் ஒவ்வொன்றும் குளிரூட்டப்பட்ட
கண்ணாடிப்
பேழைமேல்
படிந்திடும்,
பூங்கொத்துகள்…
நின்றுகொண்டே
பேசும்
இழவுக் கதைகளின்
இடையிடையே வந்துபோகும் கிருமிநாசினி,
சதுப்புநிலம்
மூடிய பூம்பாறை…
நதியலையில்
அச்சமேறிய
கரங்கள் துழாவும்
கரைநில் நெடுமரவேர்கள்,
தொலைந்திடும்
கானல் நீர்…
சாத்தப்பட்ட
ஆண்டவன் வாழிடங்கள்
கோமாளியின் நகையாக.
ஒன்றுமிலாப்
பக்தர்கள் கையெடுக்க
கடவுளாய் அவதரிக்கிறாள்,
கொரோனா அம்மன்…
எல்லாமே
இப்படித்தானோ
என்றபடி நகைத்துப் போகிறான், வீதியில்
ஓர் பைத்தியக்காரன்.
***
எங்கே அவளென
வினவும் உருவங்காட்டியிடம்
மாலைக்குள் வந்துவிடுவாள் என்கிறது தலைசீவி…
நிலைகொண்ட
மின்விசிறியின் விழி அடிக்கடி மினிச்சிடுகிறது
நேரங்காட்டியிடமும்,
மேவானிலும்.,
எப்போது அந்திசாயும்
என்றபடி…
நீ வரும்போது
உதிர்த்திடும் புன்னகையை
ஒத்திகை பார்த்து வைக்கிறது
நிலைக்கதவு
பஞ்சிருக்கையிடம்…
உன்னோடு் உரையாடாமல்
அங்கவையும்,
ஆதினியும்
இமைமூடிக் கொள்கிறார்கள்
புத்தக அலமாரியில்…
நீ வெளியே இருக்கிறாய்
இருந்தும் வீடெங்கும்
நிறைந்து கிடக்கிறது
உன் வாசம்.
***
காற்புள்ளிகள் மேல் வைக்கப்பட்ட
முற்றுப் புள்ளிகள்
இறந்தகாலத்தின்
உதரம் கிழித்து
உறைந்து கிடக்கும்
நினைவுத் துணுக்குகளை
நிழலாடச் செய்கிறது…
கனவின் அடியாழங்களில்
கால்வைத்து இறுகிக்கிடக்கும்
சந்தோசத்தின்
பூட்டுகளைத் திறவுகிறது…
பிசுபிசுத்துக் கிடக்கும்
பெருங்கதறல்களின்
சாம்பல் குழைத்து
உடலெங்கும் பூசிக் கொண்டு.,
பல்லிடுக்கில் சிக்கிய
உணவுத் துகளாய் ,
நழுவிப்போன
பால்யத்தை முத்தமிட்டு,
நிகழ்காலத்தின் முகவரிக்குள்
அழைத்துவரும்
நிழற்படங்கள் யாவும்
நினைவுகளின்
பிம்பங்கள் மட்டுமல்ல.
ஓய்வின்றி
நகரும் காலத்தின்
காற்புள்ளிகளின்
மேல் வைக்கப்பட்ட
சிலவிநாடி முற்றுப்புள்ளிகள் .
***
நிராகரிப்புகளைப் பட்டியலிடு…
எவ்வளவு முடியுமோ அவ்வளவு
தொலைவாய்
ஞாபகங்களைத் தூரவீசு…
என்னை நினைவூட்டும்
எச்சங்களின் மிச்சங்களை
நெருப்பிட்டுக் கொளுத்து…
வெறுப்பின் சுவரெழுப்பி
நேச சன்னல்களை இறுக மூடு…
எல்லாம் முடிந்த
பின் கதவு திறந்து|
வெளியே பார்…
உனைக் கண்டதும்
வாலாட்டும் குட்டிநாய்க்கு அருகே
அமர்ந்திருக்கும்
எனை என் செய்யலாம் என இப்போது முடிவெடு.
***
Exactly true