![](https://vasagasalai.com/wp-content/uploads/2021/03/PicsArt_03-17-08.26.14-780x405.jpg)
மழை ஓயாத இரவின்
குரலென்றே உருக்கொள்கிறது
தவளைகளின் கரகரப்பொலி
தூவிய கங்குத் துண்டங்களென
சிதறிக் கிடக்கின்ற நட்சத்திரங்களத்தனையையும்
தன் பெருநாவின் ஒன்றை வழிப்பில்
சுருட்டிச் செறித்திருக்கிறது
கார் நா
கரிய விண்ணுக்கும்
மணத்துக் கொண்டிருக்கும் மண்ணுக்குமிடையே
அந்தரத்தில் உருவாகிறதொரு
ஒளிரும் கயிற்றுப் பாலம்
சடுதியில் – திசைகளெங்கும்
குளிரை அடைத்து வைக்கவியலா
நடுங்கும் சிறையென உடல்
அதற்குள் மீட்டுகிறது மனது
மௌனத்தின் முடிவிலா பாடலொன்றை.
***
பரபரத்துத் திரிகின்றது
இளைப்பாற மறுக்கும் மன விட்டில்
சதா ஒளியைத் தேடுகிற பயணங்களில்
எதிர்கொள்ளும் எல்லாத் திருப்பங்களிலும்
இருளையே எதிர்கொண்டாலும்
அது நிற்பதாயும் இல்லை
துவள்வதாயுமில்லை
வழியில் காணும் சுடர்கள் சிலவும்
நெருப்பாலான வாயில்களாய்
கடக்க முடிவது குறித்தும்
சஞ்சலங்களில்லை
சுணக்க இயல்வதில்லை அதன் யாத்திரையை
எதுவும்
எங்கேனும் ஒரு திரியில்
கடக்கவியலா தீயொன்று உயிர்த்திருக்கும்
அதில் வீழ்ந்து முக்தியடையலாமென
தனக்குத் தானே சொல்லியபடி அது
பறந்து கொண்டே இருக்கின்றது.
***
மணலைத் தேடி
அலையும் கால்களுடன்
மாய்ந்து மாய்ந்து
துடுப்பை வலிக்கிறான்
கரைதனைத் தேடி
வாழ்க்கையே பயணம்
என்றான் பயணி
பயணமே வாழ்க்கை
என்கிறது கடல்.
***
இல்லாத பழத்தை இருப்பதாய்ச் சொல்லி
கரங்களைக் குவித்து விரலிடுக்கில்
சாறு வடிகிறார் போன்ற பாவனையில்
காற்றைக் கடித்துத்
தின்று கொண்டிருக்கும் சிறுவனிடம்
பாவம் அப்போதைக்கு அவன் பசியாறட்டுமென
அவனுடையது வெற்று பாவனை தானென
யாரும் சொல்லவில்லை.
***