மாயத்திரை
பொருள் சொல்ல முடியாத
இருட்டுக்குள் அகப்பட்டுக்கொண்டவனை
மார்பெனும்
மாயத்திரையில் வீழ்த்தி
தன் முத்தத்தால்
உயிர்ப்பிக்கிறாள் பெண்
அத்தனையும் உதறிவிட்டு
அவளுக்குள் அடங்குகிறான் ஆண்
உடல் தொட்டு உயிரைப்பெறும்
முயற்சியில் இறங்குகிறது
காதல்.
நிறைதல்
குடிசைக்குள்ளே அழகாகப் பெய்யும்
மழையை மண்பானையில்
நிறைக்கிறாள் தலைவி
இடிக்கு முன்னர் மின்னல் வந்து
போகும் நேர இடைவேளையில்
தலைவியின் வெறுமையை முத்தத்தால் நிறைக்கிறான்
தலைவன்
அக்குடிசைக்குள் ஆணவமின்றி
நிறைகின்றன செல்வங்கள்
இதயங்களுக்குள்
நீ என்னிடம் பேசவில்லை என்று ஒருபோதும்
நான் வருத்தம் கொள்ளவில்லை
நம் இதயங்கள் பேசத் துவங்கி
நெடுநாள் ஆகிவிட்டது
உன் ஓரப்பார்வையின் நீட்சி
என் புன்னகையைக் கவர்ந்து
நெடுநாள் ஆகிவிட்டது
பேருந்து நிறுத்தத்தில் நீ எனக்காக
காத்திருக்கும் பொழுதுகள் அதிகமாகி விட்டன
கல்லூரி வகுப்பறையில் நான்
இல்லாத வெறுமையை நீ உணரத் துவங்கி
ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது
இத்தனைக்கும் மேல் நான் யாரிடம்
தூது அனுப்ப வேண்டும் உன்னை
என்னிடம் பேசச்சொல்லி
நம் காதலை
நம் இதயங்களுக்கு மட்டும் மெய்ப்பித்தால்
போதாதா?
இதயப்பெருவெளி
என் மொத்த இதயப்பெருவெளியையும்
உனக்களித்துவிட்டேன்
அதில் நீ நிலாவாகு
அதில் நீ நீளப்பெருங்கடலாகு
எனக்கு ஒளி தரும் நட்சத்திரமாகு
உன் அன்பால் என்
மொத்த இதயத்தையும் நிறைத்துவிடு