யாமம்…
கைவிடப்பட்ட வீட்டினுள்ளே செல்லரித்து போகும்படி விடப்படுகின்ற சித்திரத்தில்
சிரித்துகொண்டே தண்டனையை ஏற்கும் குற்றவாளி கடவுள்…
விடாய் நின்ற பெண்ணின் மோகம்
பறவைகளின் கெச்சட்டம் அடங்கிய பிறகு
கிளைகளில் ஊர்ந்து வரும் சர்ப்பம்…
செங்கல் பிரமீடுகளின் கனத்தை தான் தாங்கியதாய்
அலுத்துக்கொள்ளுகின்றது சும்மாடு…
சிறுவாடு பறித்து லாகிரி மணக்கும் கணவன் என்கிற வஸ்து!
அலுவலக நேரம் முன்பே
துகிலில் பொட்டலமாய் வீடு திரும்புகின்றாள் அன்னை…
அழுத பிள்ளைகள் உறங்கிய பிறகு
உறையூற்றி வைத்த பால் உயிர்க்கூச்சலுடன்
நீர் பிரியும் ஓர் யாமம்.
***
காவு
விக்கிரகத்தின் தலை மீது நிற்கின்ற பல்லியின்
பெருமிதத்துடன் இப்போது
இந்த ஆராதனைகளை
நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்!
ஆடு மேய்க்கும் சிறுமியின்
கையில் கனிந்த பனம்பழத்தைத் தந்து, கருவேலம் புதருக்குள்
அவளை இழுத்துச்சென்ற ஓநாய்க்கும்
உங்களைப் போன்றே
பல்லில் பசி எடுத்திருக்கலாம்…
காக்கை வலிப்புக்காரனின் கைப்பிடியில் நெரிபடும் சாவிக்கொத்தாய்,
சமூகத்தின் சுகவீனத்தை சொஸ்தமாக்க சில
அனாமதேய அந்தராத்மாக்களை
காவு கொடுங்கள்!
*****