சிதையும் சிவலிங்கம்
அவன் மொழி தட்டையாக இருக்கிறது.
சத்தியங்களை எழுதும்போதே அதை
மீறுவதற்கான உறுதிமொழியும்
எடுத்துக்கொள்கிறான்.
அவன் அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால்
அவனைச் சுற்றி எப்போதும்
வாழ்த்துப்பாக்கள் வலம் வருகின்றன.
அவனுக்கு எல்லோரும்
பொம்மைகள் பரிசளிப்பதாக
பெருமைப்பட்டுக்கொள்கிறான்.
சில பொம்மைகள் தானே கால்முளைத்து
அவன் காலடியில் விழுகின்றன
அதிலும் அவன் பொம்மைகளின் முலைகளில்
ஞானப்பாலருந்தியவன் என்பதால்
கர்ப்பகிரஹத்தின் வாய் பிளந்து
அவனுக்கு பூஜை செய்கிறது.
சூனியக்காரி மை போட்டுப்
பார்த்துவிட்டாள்.
எப்போதோ அவன் தூர எறிந்த
மரப்பொம்மையில்
அவன் அந்தரங்கத்தின் மயிர்
ஒட்டிக்கொண்டிருப்பதை.
அர்த்த ராத்திரியில்
மண்டையோடுகள் உச்சரிக்கும்
மந்திரத்திலிருந்து
அவனைக் காப்பாற்றிவிட
நம்பூதிரிகள்
வாக்குறுதி கொடுத்துவிட்டார்கள்.
சுட்ட மண்ணில்
இன்னும் சூடு ஆறாமலிருக்கும்
பொம்மையின் சிதைந்த மார்பில்
எழுதப்பட்டிருக்கிறது அவன் விதி.
கொட்டும் மழையில் எரியும் தீயை
இனி எவர் அணைக்க முடியும்?
ஹே சென்னிமல்லிகார்ஜூனா
காலக்குகை விரியும்போது
சிதையும் சிவலிங்கம்.
****
பொய்களின் தேசம்
பொய்களுக்குப் பல பெயர்கள் உண்டு.
அவன் பெயரும் அதிலுண்டு.
கரைபுரண்டோடிய வைகை வெள்ளத்தில்
நீச்சல் கற்றுக் கொடுப்பதாக
பாசாங்கு காட்டியவன்
மூச்சுத் திணறி அவள் மிதக்கும் வரை
கரையிலேறிக் கொண்டாடியவன்
பட்டத்து ஆனையில் பவனி வருகிறான்.
வெள்ளம் வடிந்துவிட்டது.
சாட்சியாக இருந்த மணல்மேடுகளை
அவன் அடியாட்கள் கொள்ளையடித்துவிட்டார்கள்.
புதர்மண்டிக் கிடக்கிறது
அவள் கனவு தேசம்.
மதுரை கோபுரங்கள் அதிர
வாழ்க வாழ்கவென கோஷங்கள்.
ரதவீதிகள் குலுங்குகின்றன.
மீனாட்சி தோளிலிருந்த பச்சைக்கிளியைக்
காணவில்லை.
வீறுசால் அவையோர் வாழ்ந்த கள்ளூர்
அவள் பிணத்தை எரிக்கவோ
புதைக்கவோ முடியாமல்
நாற்றமெடுக்கிறது.
ஹே சென்னிமல்லிகார்ஜூனா
சுடுகாட்டில் ஆடும் உன் ஆட்டத்தில்
நீண்டு தொங்கும் சடைமுடிகள்
மறைத்திருக்கின்றன
உன் முதுகிலிருக்கும்
பொய்யின் தழும்புகளை.
ஆடியது போதும், வா.
பொய்கள்தான் பொய்களை அறியும்.
கரும்புத் தோட்டத்தில்
அவன் விட்டுச்சென்ற அதே
பொய்களின் கங்குகளை
தோண்டி எடுத்து வா.
காதல் பிணங்களை எரிக்க
பொய்களால் மட்டுமே முடியும்.
அவள் பிணம் எரியும் வாசனை
உன் தேசமெங்கும்
பொய்களை விதைக்கட்டும்.
அதில்
உன் நெற்றிக்கண்ணும் சிதையட்டும்.
கொற்றவை களி நடனம்.
அடியே மீனாட்சி
அழுகையை நிறுத்து.
****
முத்தங்களின் விஷத்துளி
பாம்பின் களி நடனம்
முத்தங்களின் கோப்பையில்
விஷத்துளிகளிகள் கசிகின்றன.
போதையில் தள்ளாடுகிறது கனவு.
இன்னொரு இரவுக்கான
ஒத்திகை நடக்கும் பகல்
ஆடைகளுக்கான அணிவகுப்பு.
மெல்ல மெல்ல விஷமேறி
கருநீல கர்ப்பம் தரிக்கும் காலம்.
குஞ்சுகள் நெளிகின்றன.
முலைப்பாலில் கசியும்
விஷத்துளிகள்
ஆதிசேஷனின் ஐந்து தலைகளுக்கும்
அமுதூட்டி
பாற்கடலை நிரப்புகின்றன.
அவன் அசையாது படுத்திருக்கிறான்.
உப்பு தின்று செத்துப்போன
மீன்கள்
அவனைத் தொந்தரவு செய்யவில்லை.
*****