சிறுகதைகள்

புழுக்கம் – ஹரிஷ் குணசேகரன்

சிறுகதைகள் | வாசகசாலை

1

சென்னை செல்லும் அதிவிரைவு ரயிலின் வருகை அறிவிக்கப்பட்ட ஜன நெருக்கடியான தருணத்தில், வாழ்க்கையின் பாசாங்குதனம் பற்றி யோசிக்கலானான். அவனுக்கான எல்லாமும் அதனிடத்தில் இருப்பது போல நம்பிக்கை தந்துவிட்டு, எதுவொன்றையும் நீடிக்கச் செய்யாமல் அந்தரத்தில் கைவிடும் இருண்மை கசந்தது. முட்டி மோதி பயணிகள் எல்லாரும் ஏறிய பின்பு, தொடர்வண்டி அதன் பழக்கப்பட்ட ஊர்தலைத் தொடங்கிய நேரத்தே, முழிப்பு தட்டியவனாய் படியில் வெடுக்கென கால் வைத்து ஏறினான்.

கைப்பிடி கம்பி வழுக்கி நடைமேடையில் ஷு உராய்ந்து விழுந்திருப்பான். அவன் அதிர்ஷ்டம், கைலி கட்டி ரப்பர் செருப்பு போட்ட நாற்பதைத் தொட்ட மனிதர் கை கொடுத்தார். “அடுத்த ட்ரெய்ன்ல பொறுமையா வாயேன். செத்துருப்படா இந்நேரம்..” – அவனையே முறைத்தார். கனத்த மழையையும் அறுத்து கிழித்துக்கொண்டு ரயில் வேகமெடுத்தது.

அதிர்ச்சியில் உறைந்தவனாய் எதுவும் சொல்லாமல் படபடப்போடு பக்கத்துப் பெட்டிக்கு நடைபோட்டான். சில்லென்ற காற்று உடல் முழுக்க விரவி, படர்ந்து நடுங்க செய்தது. ஏஜெண்டிடம் சொல்லி தட்கலில் போட்ட பயணச்சீட்டை கைபேசியில் பார்த்து, பெர்த் எண் எதுவென அடையாளங் கண்டான். அவனுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. தானே தட்கல் டிக்கெட் போட உட்கார்ந்திருந்தால் சீட்டு கிடைத்திருக்காது. உயிர் பயம் ஒரு நொடியில் பளிச்சிட்டு மறைந்திருக்காது.

ஜன்னல் அண்டை தனக்கு ஒதுக்கப்பட்ட சீட்டையும் அடைத்துக்கொண்டு உட்கார்ந்த பருத்த பெண்ணிடம் நகரும்படி சொன்னான். குடும்பத்தோடு வந்திருப்பதால் கீழ் பெர்த்தை விட்டுக்கொடுத்து நடு பெர்த்தை எடுத்துக்கொள்ள சொன்னார். சங்கிலியை விடுவித்து இருக்கையை மாட்டப்போனவனிடம், “கொஞ்சம் பொறுங்க, நாங்க சாப்டுட்றோம்” என்றார், கட்டை மீசை வைத்து வழுக்கைத் தலையாய் இருந்தவர்.

“ஆல்ரைட்!” சலித்துக்கொண்டே பக்கவாட்டு கீழ் பெர்த்தில் உட்கார முனைந்தபோது, “ஹலோ, இது என் சீட்” – வராத குரலை நீட்டி மறுப்பு தெரிவித்தாள் அவள். இருட்டுக்குள் போர்வைக்குள் ஒளிந்த முகம் அவனை எட்டிப் பார்த்தது. இருபத்தெட்டு, இருபத்தொன்பது இருக்கலாம் அவளுடைய வயது.

“நான் என்ன என்னோட சீட்னா சொன்னேன்?” – முகத்தை சுளித்து கம்பளியை ஒதுக்கி அமர்ந்தான்.

பெங்களூர், சென்னையில் எங்கு வேலை தேடியும் கிடைக்காது அலுத்துப்போன சூழலில், ஒப்பீட்டளவில் சம்பளம் குறைவாகவே தரும் கோவையின் அந்த நிறுவனத்துக்கு நேர்முகத் தேர்வுக்காக வந்தவனுக்கு பெருத்த ஏமாற்றம்! ஐந்து வருடங்களுக்கு முன்பு வாங்கிய சம்பளத்தைகூட இவர்கள் தரத் தயாராக இல்லையே? யோசனையில் இருந்தவனை தொட்டு, கறுப்பு கோட்டு போட்ட டிக்கெட் பரிசோதகர் ஐடி கார்ட் கேட்டார்.

ஆங்கிலத்தில் “சார்.. என் பெர்மிஷன் இல்லாம என் சீட்ல வந்து…”-   அவள் முடிப்பதற்குள், இவர் ஹிந்தியில் பதில் தந்தார். அட்ஜெஸ்ட் கரோ மட்டும்தான் அவனுக்கு விளங்கியது. அவளைப் பார்த்து கேலி செய்யும்விதமாக வாய்பொத்தி வேண்டுமென்றே சிரித்தான்.

“இது ட்ரெய்னா வீடான்னே தெரில…” – தரையில் இறைந்து கிடந்ததை காலால் தள்ளிவிட்டு ஷு, காலுறை கழட்டி நடு சீட்டில் ஏறிப் படுத்தான்.

கால் முடமானவர் தரையைத் துணியால் துடைத்து குப்பையை பிளாஸ்டிக் முறத்தில் அள்ளி, தீனம் பொங்க கையேந்தினார். எனக்கென்னவென்று அந்தப் பெண் தன் பையனின் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தாள். அவள் கணவன் கீழ் பெர்த்தில் படுக்க ஆயத்தமானான். `வெளங்காத நாய்ங்க’ என்று திட்டியபடி, பத்து ரூபாய் நோட்டை இரவலரிடம் தந்தான்.

தூங்கி இரண்டு மூன்று நாட்களானதால் திடுமென கண்ணயர்ந்தான். சேலம் வந்ததும் யாரோ தட்டியெழுப்ப கோபம் கொண்டு, “ன்ன… இப்ப?” – கத்தினான். கசங்கிய வேஷ்டி சட்டை அணிந்த பெரியவர், “ஸைட் அப்பர் பெர்த் சின்னதா இருக்கு, நீங்க எடுத்துக்கறீங்களா?” என்றார்.

தூக்கம் காத தூரத்திலிருந்தபோது, ஐ-ஃபோன் எடுத்து வாட்ஸாப் பார்த்தான். நிலைத்தகவல் கேட்டு சுஜா அனுப்பின குறுஞ்செய்தியையே வெறித்தான். புறந்தள்ளவும் முடியாது, பதிலளிக்கவும் முடியாது எழுந்த அந்தத் தவிப்பும் கோபமும் குரல்வளையை நெறிப்பதாய் இருந்தது.

“கால் நீட்டகூட எடம் இல்லை. ஒரு கிறுக்கன்தான் இப்படி டிசைன் பண்ணிருப்பான்” – நொந்தான். திருமணமாகி எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த சூழலில், பரஸ்பரம் புரிந்துகொண்டு வாழ்க்கை நகர்ந்த சூழலில், அவள் குடித்துவிட்டு முன்னாள் காதலனுடன் நடனமாடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இவன் பார்வைக்கு வந்தன. சுஜாவுடன் படித்தவர்களில் ஒருத்தியென்று அறிமுகப்படுத்திக்கொண்டு யாரோ புகைப்படங்களை அனுப்பினர். இவன் திரும்ப திரும்ப அழைத்தும், ஒரு பதிலும் காணோம். ட்ரூ காலரில் அந்த எண்ணை அடித்துப் பார்த்தும் பயனில்லை.

பொருளாதார மந்தநிலை குறித்த ஆரூடங்கள் வரத்தொடங்கிய சூழலில், இவன் சம்பளம் அதிகமென்றும், நிறுவனம் ஆட்குறைப்பு செய்வதாகவும், விளக்கி வேலையைவிட்டு போன வாரம்தான் கிளப்பினார்கள். காட்பாடி வந்ததும் ஏதோ ஞானத்தைக் கண்டடைந்தவன் போல கண்களைத் திறந்து அழுத்தமாகத் தனக்குள் சொல்லிக்கொண்டான், “ஒண்ணும் நடக்கலை… இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. எனக்கு வலிக்காது. வலிக்கிற மாதிரி இருந்தா நான் வெலகிப் போய்டுவேன்!”

பேஸின் பிரிட்ஜில் இருந்து உருண்டு திரண்டு வண்டி எரிச்சலேற்றி,  ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்’ கணக்காக வந்து நின்றது.

2

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை டாக்ஸி காட்டிய ஐந்நூத்தி சொச்சத்தைக் கொடுத்துவிட்டு, வீட்டு காலிங் பெல்லை அடித்தான். சுஜா வந்ததும் பையைக் கீழே போட்டுவிட்டு, என்றைக்கும் இல்லாமல் அப்போது வாசலிலேயே கட்டிக்கொண்டான்.

“என்னங்க… என்னாச்சு?”

“ஒண்ணுமில்ல சுஜா, மிஸ் யு” – அவள் காது மடலில் முத்தமிட்டான்.

குளித்துவிட்டு லுங்கி பனியனுக்கு மாறி, தலைக்கு ஜெல் தேய்த்து கண்ணாடியில் தன்னை உள்ளும் புறமும் நோக்கி, “உன்கிட்ட இல்லாதது ஏதோ அவன்கிட்ட இருக்கு. அதான் போய்ருக்கா” என்று நினைத்தான். அந்த நினைப்பு அசட்டுத்தனமாகப்பட, உதட்டை விரக்தியால் விரித்தான்.

கட்டிலில் திரும்பி மொபைலை நோண்டிக்கொண்டு படுத்தவளிடம், “யாரும்மா… இந்த நேரத்துல” என்று கோபப்பட்டான். எந்த எதிர்வினையும் வராததால் எரிச்சலும் நக்கலுமான தொனியில், “கவிதாவா? உன் காலெஜ் ஃப்ரெண்ட்?” என்றான். எழுந்து உட்கார்ந்த விதத்தைப் பார்த்து அவள் எதையோ மறைக்கிறாள் என்று நினைத்தான்.

“அவ இல்லை, இது என் ஃபேஸ்புக் ஃபிரெண்ட். நீங்க ஏன் கேக்றீங்க?” – அவள் பார்வை கூர்மையாக இருந்தது.

“கடுப்பா இருக்கு. நைட் தூங்கும்போதகூடபோனா? நான்தான் பக்கத்துல இருக்கேன்ல. ஏதாச்சும் பேசேன்!”

“அச்சோ… நான் ஒரு போஸ்ட் எழுதுனேன் ஃபேஸ்புக்ல. அதைப் படிச்சுட்டு ஒருத்தங்க புகழ்ந்தாங்க. அதான்…”

சி.எஃப்.எல் விளக்கை அணைத்துவிட்டு, ஒருக்களித்து படுத்து யோசிக்கலானான். `புகைப்படங்களை அனுப்பியது ஏன் பழைய காதலனாக இருக்கக் கூடாது? இதுபற்றி அவளிடம் கேட்டால் மனதை அரிக்கும் வெறுப்பு, பொறாமை குழப்பங்கள் தீர்ந்திடுமே?’

 முதுகுக் காட்டி படுத்தவளின் செழித்த தேக வளைவுகளை கண்டதும், தன்னை மறந்து ஏதேதோ சிந்தித்தான். `இவள் என் மனைவி என்பதால், இந்த உடலும் எனக்கான சொத்தாகி விட்டதா? என் அதிகாரம் எல்லா நேரத்திலும் செல்லுபடி ஆகுமா?’

அவளுக்கும் அவனுக்கும் நடுவே இருந்த போர்வை, பெரிய தூரமாகப்பட, பின்னாலிருந்து அணைத்து காதைக் கடித்தான். பொழுது புலர்ந்த தருணத்தில் அவள் சம்மதத்தை எதிர்பார்க்காமல், ஆடைகளை அவசர மிகுதியில் கிழித்தலுக்கும் அகற்றலுக்கும் இடையில் செயல்பட்டு எறிந்தான். இப்போது, இந்தச் சரசத்தில் அவளுக்கு விருப்பம் இல்லாது இருக்கலாம்.  இசைந்து, நெகிழ்ந்து, காதலில் மயங்கி தன்னுடலை ஒப்படைப்பதே கலவியின் இன்பம். தலை கிறுகிறுக்க, தவறு செய்வதாய் வெம்பி, வெள்ளை போர்வைகொண்டு அவளைப் போர்த்தினான். அவளது கவிழ்ந்த போன் கண்டு, `அதெல்லாம் சரிதான். ஆனால், திருமணம் என்பது இரு மனங்களுக்குமான ஒப்பந்தம் இல்லையா?’ – கேட்டுக் கொண்டான். 

“சாரி மா…” – அவள் நெற்றியில் தடவித் தந்து கண்களைப் பார்த்தான்.

“எனக்கு இப்ப இஷ்டம் இல்லை” என்றாள்.

“…”

“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? ஆர் யு ஆல்ரைட்?”

“நீ என்னை, வா போன்னே கூப்டலாம்.”

“அத்தை முன்னாடி கூப்பிட்டா பெரிய பிரச்னை ஆகும்.”

“…”

`எப்படியும் அவ, அவனை வாடா போடான்னுதான் கூப்டுவா. அவங்களுக்குள்ள வாங்க, போங்க, வயசுக்கேத்த மரியாதை வெங்காயம் எல்லாம் இருக்காது. அதான் கல்யாணத்துக்கு அப்றமும் நெருக்கம் தப்பா தோணலை.’ – என்னென்னவோ யோசித்து அவனுக்கு மண்டை வலியெடுத்தது.

“ஏங்க, உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்.”

பயண அலுப்பில் குறட்டை எழுப்பி அவன் உறங்கிவிட்டிருந்தான்.

அடுத்த நாள் என்றைக்கும் இல்லாமல் வெள்ளென எழுந்து காய்கறி நறுக்கித் தந்தான். வேலைக்குப் போகும் பெண்கள் மீது சமையலறையிலும் நிகழ்த்தப்படும் உழைப்புச் சுரண்டலை எதிர்த்துப் பேசுபவனாக அக்காதலன் இருந்தால்? நடைபயிற்சி முடித்து வாசலில் நுழைந்த லட்சுமியம்மா, தன் புள்ளையா இதுவென்று அதிர்ச்சி அடைந்தார். அறைக்கு அவர் திரும்பியதும், சமைத்துக் கொண்டிருந்தவளிடம் காஃபி கோப்பையை நீட்டி தோளைப் பிடித்துவிட்டான். வெளியே வந்து ஜில் படிக்கட்டில் அவளைக் கால்களால் சுற்றி காஃபி நெடியை மூக்கில் ஏற்றியதும், இவள் இல்லாமல் என்ன செய்வேனென்று முதல்முறையாக யோசித்தான். தனக்கு வேலையில்லாததை சொல்லி வருத்தப்பட்டவனிடம், “ஏங்க, எனக்கு வேலை போச்சுன்னா நீங்க என்ன சொல்லுவீங்க?” என்றாள்.

“வேற வேலை தேடு, அது கெடைக்ற வரைக்கும் வீட்ல இருன்னு சொல்வேன். ஒரு வேலையும் கெடைக்லைன்னாலும் பரவால்ல, நான் பாத்துக்றேன் வீட்டை மட்டும் பாத்துக்கோ.”

“அதையே நான் சொன்னா நீங்க கேப்பீங்களா? இல்லை, அத்தைதான் கேக்க விடுவாங்களா?” – தீர்ந்த காஃபி மக்கை பறித்துக்கொண்டு பாத்திரம் கழுவும் சிங்க் நோக்கிப் போனாள்.

கிளம்பி முடித்து செருப்பு மாட்டியவளிடம், மதிய உணவை டப்பர் வேரில் கட்டி நீட்டினான். இரவு அவள் பணியிடத்துக்கே வந்து கூட்டி வருவதாக சொல்லி வழியனுப்பினான். உடம்பு சரியில்லாததால் விடுப்பு எடுத்ததாய் அம்மாவிடம் சொல்லிவிட்டு, அறைக்குப் போய் கதவை அடைத்தான். ஹெச்.ஆரை அழைத்து பி.எஃப் பணம் கிடைப்பதற்கான சம்பிரதாயங்களை செய்தான்.

சாயங்காலம் ஆனதும் மகிழ்வுந்து எடுத்துக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டியபடி, அடுத்து என்ன செய்வது, சுஜாவிடம் எப்படி நடந்துகொள்வது, உறவு முறிவை எப்படி தடுப்பதென்று யோசித்தான். உண்மையில் அவள் குடிப்பாளென்று சமீபமாகத்தான் அவனுக்கே தெரியும். முகத்தை முழுவதும் துப்பட்டாவால் மூடி கூலிங் கிளாஸ் அணிந்து, ஒருவனை இறுகக் கட்டித்தழுவி தொடை தெரிய சென்றவளை, காருக்குள் சத்தமாக வேசை வேசையென்று திட்டினான். ஐந்து நிமிடம் சென்றதும் தானொரு வேலையில்லாத அறிவுகெட்ட கலாச்சார காவலன் போல தொனிப்பதை நினைத்து வருந்தினான்.

இந்தப் பிரச்னையை, சந்தேகப் புத்தியை இத்தோடு விட்டுவிடலாம். நிச்சயமாக இது பழைய புகைப்படமாகவே இருக்கும். அவளிடம் சொல்லி நாளை முதல் வேலையாக சைபர் கிரைம் குற்றமாக இதனைப் பதியவேண்டும். தீர யோசித்து முடிவெடுத்து, சோழிங்கநல்லூர் எல்காட் வந்து அவளுக்காக காத்து நின்றான்.

 

3

அவள் தோசை சுட, இவன் சட்டினி அரைக்க, புன்னகைப் பரிமாறி காதலும் சிநேகமும் வளர்த்து, ஒன்றாகச் சாப்பிட்டு முடிக்க மணி பத்தை தொட்டது. ஆஃபிஸ் மடிக்கணினியை எடுத்து வேலை செய்ய உட்கார்ந்தவள், போனையே நோண்டுவது கண்டு எரிச்சலுற்றான். அலுவலை முடித்துவிட்டு எழுந்தவள், வியர்வையால் முற்றும் நனைந்திருந்தாள். கதவை சாத்தி நைட்டி கழட்டி, டர்க்கி டவல் சுற்றி அவள் குளிக்க சென்றதும், அவள் போனை எடுத்து பாஸ்வேர்ட் போட்டான். இரண்டு முறை முயன்றும் தப்பென்று காட்டவே, வைத்துவிட்டு கண்ணாடி முன் சென்று புஜத்தை உற்று நோக்கினான்.

பெருத்த தொப்பையைத் தடவி, அவன் ஜிம்முக்கு போவான் போல என்று பெருமூச்சுவிட்டான். பெண் வாசம் நாசி தொட்டால் எத்தனை பெரிய துன்பமென்றாலும் காணாமல் போய்விடுமோ. டிரெஸ்ஸிங் டேபிள் முன்னால் அவளுக்கு வழிவிட்டு ஒதுங்கினான்.

அவள் தலைத் துவட்டும்போது சாரலென ஈரம் அவன் மேல் பட்டதும், பரிசுத்த ஆவியானதாய் உணர்ந்தான். கழுத்தில் உதட்டை அழுத்தி மெல்ல பல்லால் அவன் கடிப்பதை கண்ணாடி வழியாகப் பார்த்து முனகினாள். ரத்தக் காட்டேறி சினிமா ஒன்றில் நடப்பது போலவே கற்பனை செய்து, ஸ்டூலில் இருந்து எழுந்து கட்டிலில் படுத்தாள். நிர்வாண உடல் மீதேறி கழுத்தில் கடித்து, அதரத்தை ஒருவழி பண்ணி அடி வயிற்றின்கீழ் முகம் புதைத்த அவன் புதிதாகவும், அந்நாயகன் போலவும் அவளுக்குப் பட்டான். “இவளொரு வேசி… ஆம் வேசி! வேசிதானே இவள்?” – நினைத்தபடி அவன் மூர்க்கமாக இயங்க, அவள் வலியுணர்ந்து தள்ளிவிட்டு எழ எத்தனித்தாள். அவளைத் திருப்பி, அழுத்தி சிகையை உலுக்கி, பின்னாலிருந்து புணர்ந்து பொத்தென்று விழுந்தான்.

மின்விசிறியையே நிலைக்குத்தி பார்த்து மரம்போல கிடந்தவள் மெல்ல வாய்திறந்து, “இப்ப நீ பண்ணதுக்குப் பேர் என்ன தெரியுமா?” என்றாள்.

அவளை அணைத்து, “சாரிடி… என்னை மன்னிச்சிடு. ஐயோ… தப்பு பண்ணிட்டனே! இப்ப நான் என்ன பண்ணுவேன்.” – விசும்பினான்.

எழுந்து சுவரில் சாய்ந்து, கால் நீட்டி அமர்ந்தவளின் மடியில் முகம் புதைத்து அழ தவழ்ந்தவனை, காதை சேர்த்து பொளீரென்று அறைந்தாள்.

 

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button