வாழ்வின் அத்தனை கதவுகளும் திறந்து ஒரு வெளிச்சம் வந்தால் எத்தனை ஒளி பிராவகமெடுக்குமோ அத்தனை ஒளி அவள் விழியில் இருந்தது. சின்ன மினுக்கட்டான் பூச்சி மினுங்கினாற் போல் அதனுள் ஒரு வெளிச்சமும் நடுவே பரவிய கண்ணீர் கோடுகள் வழி ஒரு நிலா மிதக்கும் நதியின் பிம்பமும் ராஜனுக்குத் தெரிந்தது. அந்த நொடியே தமிழ்செல்வியின் கைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டுமென அவனுக்குத் தோன்றியது.
“ அன்னிக்கு தெனம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு ராஜன்.. அப்ப எனக்கு ஏழு மாசம் இருக்கும்..ஆஹ்..ஆமா… அன்னிக்கு என்ன படுக்க கூப்டான்.. நான் பதுங்குனேன்.. அவன் அடிச்சான்.. எவன் கூடடி படுக்கணும்.. எவன் தொட்டா உனக்கு நல்லாருக்கும்னு…இருக்கும்னு…”
“மதி…
”பக்கத்துல சப்பாத்தி கட்டை இருந்துச்சா… அத ..எடுத்து உள்ள விட்டான்.. கிட்டத்தட்ட செத்துட்டேன்…ஓடி உங்க வீட்டுக்கு தான் வந்தேன்.. அத்த..அத்த எங்கன்னு கேட்டேன்.. நீ நிமிர்ந்து கூட பாக்கல… உள்ள கைக்காட்டிட்டு போயிட்ட….அது சரி… நம்ம சமூகத்துல கல்யாணமான புள்ளய நேசிக்க முடியுமா?”
சத்தமே இல்லை. திடீரென சத்தம் கேட்க அவள் நிச்சலனமாக திரும்ப அவன் தலையில் கையை ஓங்கி ஓங்கி அடித்தான். அவள் எழுந்து வேகமாகப் போய் அவன் கையைப் பிடித்தாள். உள்ளங்கையின் மேல்பகுதி சிவந்திருந்தது. மெல்ல விடைத்த பகுதியை அவள் கன்னத்தில் தேய்க்க எடுத்து பக்கத்தில் வந்ததும் விடுவித்துக் கொண்டாள். ஒருகணம் க்ளுக் என்று உள்ளுக்குள் ஏதோ உடைந்து போனது. அவள் சுவரில் சாய்ந்து அழுதாள்
– இப்படித்தான் நம் கதையை ஆரம்பிக்க வேண்டும். அவனைத் திரும்பவும் வாழ்வின் எந்தச் சூழலிலும் நான் சந்தித்து விடக் கூடாதென்பதில் நான் மிகவும் தீவிரமாக இருந்தேன். ஆனால் காலம் அத்தனை சுலமபாக நம்மை இரவு நேரத் தெருக்களில் நம் வீட்டை நோக்கி நடக்கும் போது குரைத்தபடி வரும் நாய்களை ஒத்துதான் இருக்கிறது. அல்லது அந்தக் குரைப்பொலிதான் நம் மனம். நம் மனம் எதை நோக்கிப் பயணப்படுகிறதோ, எதைப் பிடித்தபடி அது அலைந்தபடி இருக்கிறதோ – அதை ஒரு நிழல் போல மனம் தெரிந்தோ தெரியாமலோ தொடர்ந்தபடிதான் இருக்கிறது. அப்படித் தான் என் வாழ்க்கைக்குள் நீ மீண்டும் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
பள்ளிப்பருவத்துக் காதல் – எப்போது அது தோன்றிற்று என்பதெல்லாம் இதை எழுதும் நொடி சத்தியமாக எனக்குத் தெரியாது. நீ என்னிடமோ நான் உன்னிடமோ சொன்னதுமில்லை. பக்கத்துப் பக்கத்து வீடுகள். காதலிக்கிறார்கள் என்று தெரியும் போதுதான் எல்லா விதமான தடங்கலும் ஆரம்பித்தன. அதில் ஒன்றுதான் நீ என்னுடன் பேசியதைத் தவிர்த்தும் நான் எதற்காக நீ பேசவில்லை என்பதை அறிந்து கொள்ள முயன்று தோற்றுப் போய் நடைப்பிணமானேன். உன் முன்னால் வேண்டுமென்றே நான் குறுக்கே நடந்தாலும் என்னை நீ பார்க்காதது போல போனாய். நிராகரிப்புகளின் நிழலில் காதல் மெளனக் காயங்களாக மாறி விட்டது.
நான் குட்டையாக, கண்ணாடி போட்டு இருப்பதால் உனக்குப் பிடிக்காமல் போயிருக்குமோ என்றெல்லாம் கூட நினைத்திருக்கிறேன். இத்தனை வருடங்கள் கழித்து என்னை இந்த ஊரடங்கு நேரம் பார்த்து என்னுடன் நீ கழிக்கும் இந்த இரவில் சாப்பாடுப் பொட்டலத்தை நீட்டும் போது என் கைப்பிடித்து ” இப்பவும் உன் உள்ளங்கை வேக்குது பாரேன்” என்று சொல்லும்போதுதான் உன் கண்ணைப் பார்த்தேன். அதில் நீ இருந்தாய். நான் அவசரமாக தரையில் ஏதோ விழுந்தாற் போல தேட ஆரம்பித்தேன்.
இன்று நான் கிளம்பி வருவதாகவே இல்லை. இப்படியொரு ஊரடங்கு சட்டம் திடீரென இடப்படுமெனவோ நான் எங்கு தங்க என்று நணபர்களுக்கெல்லாம் ஃபோன் செய்துகேட்பேன் என்றோ அப்போது சினிமா திரைக்கதை போல நீ எதிரில் தேநீர் குடித்த படி நிற்பாய் என்றோ நான் நினைத்திருக்கவில்லை. மனம்….குரைத்தபடி நினைவுகளின் பின்னலையும் நாய். அதுதான் உன்னைக் கொண்டு நிறுத்தி இருக்கிறது.
ஒரு சிறு வெளிச்சம் திரைச்சீலையின் தலையை வருடிக் கொடுத்து அறையினுள் நுழைவது போலிருந்தது. வெடித்து வரும் தளிரை வலி பொறுத்து கீற அனுமதிக்கும் பூமி மாதிரி அந்த வெளிச்சம் ஒரு கோடாக விழுந்தது. அதை நோக்கி நீ கைகளை ஒரு முறை பரப்பினாய். உன் கைக்குள் அடைக்கலமாகாத பறவை போலது திரிந்ததை நான் பார்த்ததை நீ பார்த்ததும் மெல்ல கண்களை மூடிக் கொண்டாய்,.
“நீ சொல்லிருக்கலாமே மதி..”
“உன் பின்னால திரிஞ்சப்ப தெரில உனக்கு ? உன் வீட்டு வாசல்ல தொட வழிய வழிற ரத்தத்தோட வந்து நின்னப்ப தெரில? கொலுசு வேணும்னு..”
அவன் அதிர்ச்சியாய் நிமிர்ந்து பார்த்து –” என்ன ?” என்றான். நீண்ட நேர மவுனத்திற்குப் பிறகு நான் எனக்கே கேட்காத குரலில் “ உன்ன பாக்க தான் கொலுசு கொண்டு வந்து கொடுனேன்… அன்னிக்கு அடி தாங்கல.. சுவர்ல முடியைப் பிடிச்சி…”
“ நான் எப்டி வாழ்றேன்னு வந்து பாருடான்னு சொல்ற மாரி இருந்துச்சு …அதான்”
“ ராத்ரி பூரா தூங்கல.. எப்டி சொல்லணும்..எப்டி உங்கூட கேட் வரைக்கும் வந்து தப்பிச்சிறணும்னு … எனக்குள்ள பேசிப் பேசி செத்துட்டேன்…”
” தெ…ரி..ல”
அவன் சட்டென நகர்ந்தான். தூர நின்று இயலாமையோடு பார்த்தவன் ” காலைல கர்ஃப்யூ எடுத்துட்டு அப்றம் அடுத்த நாள் நைட்லருந்துதான் போடுவாங்கன்னு நினைக்கறேன்…சாப்டு” என்றான்
“நீ?”
அவன் பெரிய விளக்கைப் போட கண் கூசிற்று. சாம்பார் சட்னிப் பொட்டலங்களை எதுவும் சொல்லாமல் பிரித்தவன் கைத்தவறி என் கால் பெருவிரலில் கார சட்னி கொட்ட அதை உள்ளங்கையை மடக்கித் துடைத்தான்.
“ சாப்டு மதி..உனக்கு இட்லி பிடிக்காதுதான?”
“பிடிக்காதுன்னு இப்பல்லாம் என் லிஸ்ட்ல எதுவும் இல்ல ராஜன்.. எது கெடைக்குதோ அதான் வாழ்க்கையா போயிருச்சு..”
அவன் இட்லி மேல் சாம்பாரை ஊற்றி மேல்நோக்கி ஒரு பார்வை பார்த்தான்.
“ நல்லா பேசுற”
“நல்லா வாழுறன்னு சொல்லிருக்குற மாரி இருந்தா சந்தோஷமாருக்கும்… இப்ப…”
அவன் சட்டென திரும்பிப் பார்த்து – “ இங்க பாரு – நம்ம சிவாண்ணன் இருக்கானில்ல…அவனோட பையன் ட்ரெயின் அடிச்சிருச்சுன்னு இங்க சேத்துருக்காங்க…அவனப் பாக்கதான் வந்தேன்”
“ ம். நீ சாப்டலயா ?”
“முதல்ல நல்லா சாப்டு.. ரொம்ப மெலிஞ்சிட்ட மதி.. கண்ணு உள்ள போயி… “ என்றவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு “ எங்கிட்ட சொல்லிருக்கலாம் இல்ல…சொன்னேன்…நீ புரிஞ்சிக்கலன்னு சொல்வ… உண்ம … “
“எல்லாம் முடிஞ்சிப் போச்சு… “
அவன் என் கைத்தழும்பைப் பார்த்து “ இதென்ன தழும்பு “ என்றான். நான் அவனைப் பார்த்து வெறுமனே சிரித்து “ விழுப்புண்கள் “ என்று சிரிக்க புரையேறிற்று. ” அத விடு…சிவாண்ணன் பையன் எப்டிருக்கான்?”
“ம்… ஐ சியூல இருக்கான்…நினைவில்ல… அது சரி… ஏன் கை பூரா தழும்பு… ந்தா.. நடுவிரல் உடஞ்சிருக்கு?”
“ ஆமா…அதான் சொன்னேனே … விழுப்புண்கள்”
நான் மேலே பேசுவதைத் தவிர்க்குமாறு தண்ணீர் பாட்டிலை அள்ளிக் குடிக்க
“ அடிச்சானா மதி? “
நான் பதில் சொல்லாமல் சாப்பிட மெல்லிய குரலில் “ சாரி “ என்றான்…
“ இப்ப ஒரு வார்த்த சொன்னா அது பிரயோஜனமாருக்கும்னா சொல்லு.. நான் நீ சொல்றத காத்துல கைய அலைய வுட்டு புடிச்சிக்கிறேன்”
அவன் அமைதியாய் அவனது இட்லிப் பொட்டலத்தைப் பிரித்து “ பிரயோஜனம்னு நினச்சிட்டு பேசுறதுக்கு பேரு அன்பு இல்ல. மதி..தெரிஞ்சிக்க “ என்றான். நான் சட்னி கவரை அவன் பக்கமாய் திருப்ப “ என்னப் பாக்கலன்னா என்ன பண்ணிருப்ப?” என்று என் கண்களைப் பார்த்து கேட்டான்.
“ தோ..இதே ரூம்ல தனியாருந்திருப்பேன்”
”நான் பாத்த மதி பூஞ்ஞை”
“நீ விட்டுப் போன.. விட்டுட்டுப் போன.. விட்டுக் கொடுத்த மதி”
அவன் சாம்பார் பொட்டலத்தை எடுத்து என் கையின் மேலாய் ஊற்றி “ நல்லா பேசுறடி “ என்றான். அவனின் வலது புருவத்தின் மேல் மணி கோர்த்தாற் போல் வேர்த்திருந்தது. நான் அதையே பார்த்தபடி கையிலிருக்கும் சாம்பாரைத் துடைத்தேன்.
“ ஊரடங்கு நாளைக்கு மட்டும் தானா? இல்ல… “
“ க்கும்.. ஒரு மாசம் வச்சி செய்வாங்கன்னு சொன்னாங்க… ஆனா.. பொம்பளைங்களுக்கு இதொண்ணும் புதுசாருக்காது..ஆயுசு பூரா வீட்ல இருக்குற பொம்பளங்கள சொன்னேன்”
அவன் ஏதோ பேச்சை மாற்ற ஊரடங்கு பற்றி கேட்டிருக்க வேண்டும்.. நான் மறுபடி திறந்து விடப்பட்ட கூண்டுக் கதவிலிருந்து பறந்து மீண்டும் அங்கேயே வந்து தஞ்சம் புக வரும் வீட்டுப் பறவை போல் பேசியது எனக்கே புரிய, பார்சல் இலையை சுருட்டின சாக்கில் எழுந்தேன்.
”நீ வேல பாக்கலயா மதி”
“எந்த மகராசா உக்கார வச்சு சாப்பாடு போடுவார்? எங்கப்பா செத்து ஏழு வருஷமாச்சு… நீ சாவுக்கு வருவன்னு நினச்சேன் “ என்றபடி வாஷ்பேசினில் கைக்கழுவினேன். அந்த ஹோட்டல் அறையின் அத்தனை தூசியும் அந்த வாஷ் பேசினில் இருப்பது போலிருந்தது. அவன் என் கை அதில் பட்டு விடாதமாதிரி முழங்கையை லேசாக அவனது இடது கையால் தூக்கிப் பிடித்து “ அழுக்காருக்கு பாரு.. “ என்றவன் நான் நகர்ந்ததும் அவன் கைக்கழுவினபடி ” எனக்குத் தெரியாது..பேப்பர்ல ரெண்டு நாள் கழிச்சிப் பாத்து தான் தெரிஞ்சிக்கிட்டேன் “
“ அத்தயும் சொல்லல? “
“இல்ல.. வேணாம்னு அம்மா நினச்சிருக்கலாம்” என்றவன் என் அருகில் வந்து “ பழச பேசி புண்ணியமில்ல மதி..வலிக்கும்னு தெரிஞ்சு சிதறுன கண்ணாடி மேல நடக்கணுமா?- “
“பெரீய்ய கவிஞர் மாரி பேசுற… வைரஸ் உன்ன பாக்க வரலயா?”
”நக்கலா? வரும்… என் முன்னாலயே நிக்குதே”
என்னை அவன் காட்டி சொல்ல நான் அவனை அடிக்க சாடினேன். அவன் கட்டிலை சுற்றி ஓடினவன் மூச்சு வாங்க
“இப்ப நீ எழுதுறியா “ என்றான்
“ ஏழு மணிக்குள்ள சமைச்சி அம்மாக்கும் எடுத்து வச்சிட்டு ஆபீஸ் போனா வர ஏழு எட்டு மணி ஆயிரும்.. எப்பமாச்சும் பஸ்ல உக்கார சீட் கெடச்சா பேஸ்புக்ல கவிஞர்கள் எழுதுறத வாசிப்பேன்.. இப்பல்லாம் புக்கு வில எக்கச்சக்கமா ஏறிறுச்சு…”
அவன் பாத்ரூமிற்குள் போய் உடை மாற்றிக் கொண்டு வந்தவன் வெளியே போவது போல் கதவைத் திறந்து “ நீ ட்ரெஸ் மாத்திக்கிறதுன்னா மாத்திக்க மதி “ என்றான். பின் திரும்ப எட்டிப் பார்த்து “ நீ ஏன் வந்த ?” என்றான். “ டைவர்ஸ் கேஸ் போகுது.. வக்கீல் பாக்க வந்தேன் “ என்றேன். அவன் ஒன்றும் பேசாமல் வெளியே போய் விட்டு வர அதற்குள் நான் உடை மாற்றிக் கொண்டேன்.
அன்றிரவு முழுக்க ஒரு நொடி கூட நாங்கள் தூங்காமல் பேசிக் கொண்டிருந்தோம். சிறு வயது சந்தோஷங்களை எந்த லஞ்ஜையுமின்றி நாங்கள் ஒரே கட்டிலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்து பின் மெல்ல மெல்ல அவன் வாழ்க்கையை அவன் சொல்ல ஆரம்பித்தான்.
“ கல்யாணம் ஆயிருச்சு.. ரெண்டு பசங்க”
” பேசாம அழகி படத்துல நந்திதா தாஸ் மாரி உன் வீட்ல வேல பாக்க வந்துறலாம் போலருக்கு “
“வச்சேன்னா.. தர்மதுர தான… சீனு ராமசாமி படம்… கோர்ட் வாசல்ல தமன்னாவ கஷ்டப்படுத்துனவன விஜய் சேதுபதி அடிப்பார்ல… அப்டி அடிக்கலாம்னு நினச்சிருக்கேன்… கோர்ட்டுக்கு அந்தாள் வருவானா”
எனக்கு ஒரு நிமிஷம் எல்லாமே உறைந்தது போலிருந்தது. அப்படி அவன் அடிப்பது போலொரு காட்சியும் மனசுக்குள் ஒரு நொடியில் வந்து போனது. ஆனாலும் உதடு “ ராஜன்.. என்ன சொல்ற.. தப்பு “ என்றது
“தப்பா? மவளே.. என்ன விட்டுட்டுப் போனதுதான் தப்பு”
”இப்ப அதப் பத்தி…”
“ இந்த தழும்பு..இந்த உடஞ்ச விரல்… அதப் பத்தி எந்த மயிராண்டி யோசிச்சான்?” என்றவன் முழங்கைத்தழும்பைப் பார்த்து “ இதென்ன ? “ என்றான்.
“டிவைடர் வச்சி கிழிச்சது”
“ஆஹ்?”
“ஜியாமெட்ரி பாக்ஸ் டிவைடர் “ என்றேன் திக்கிதிக்கி
அவன் என் பக்கம் நகர்ந்து வந்து “ என்ன தேடி வந்தேன்னு சொன்னியே.. அப்றம் என்னாச்சுன்னு சொல்லு..சாப்டேன்… பேசுறேன்..ஆனா..மனசு என்ன கொன்னுட்டு இருக்கு… என்ன ஆச்சு”
“பத்து வருஷமாச்சு…விடு”
“சொல்லு மதி”
அவன் என் விரலை கையில் வைத்துக் கொண்டு சொன்னான்.
”அ..அது வந்து… என்னோட பிறப்புறுப்பு சிதஞ்சி…புள்ள இருக்கதால மாத்ர கொடுத்து …சரி செஞ்சாங்க..இப்ப நான் தாம்பத்ய வாழ்க்கைக்கு தகுதி இல்லாதவள்னுதான்…”
அவன் என் கையை எடுத்து அவன் கன்னத்தில் வைத்தான். நான் மெல்ல அதை விடுவித்துக் கொண்டேன்.
“காலைல ஒரு நாலு மணிக்கு எந்திரிச்சா போறும்லா ராஜன்?”
“நா ஒண்ணு கேக்கட்டுமா?”
“என்ன.. கல்யாணம் பண்ணிக்கிறியானா? நடுரோட்ல வச்சி அடிப்பாங்க.. பரவால்லயா? கம்ப்ளெயிண்ட் கொடுத்தா ஜெயில்..தெரிமா? சட்டம் தெரிமா? “
“சட்டம்..அஞ்சு வயசு செருப்ப அம்பதுல போட்டுட்டு திணிச்ச மாரி நடக்குதே.. அதா? ? இப்ப நான் எங்கூடவே இருந்துருன்னுதான் சொல்ல வாரேன்..அம்மையும் பாத்துக்கறேன்… நீ வேலைக்குப் போ… ஆனா கஷ்டம் இல்லாத வேலைக்கா போ”
“ பிராயச்சித்தம்?”
“ஆமா.. இல்லன்னு சொல்வேன்னு நினச்சியா – “
“பெரீய்ய ஜெமினி கணேசன்.. சாவித்ரி..”
“நம்ம கதய சினிமாவா எடுத்தா வருஷம் பூரா பிச்சிக்கிட்டு ஓடும்..”
“நான் மூணு மணிக்கு எந்திரிச்சு குளிச்சிடுறேன்.. உனக்கு பஸ் எத்ன மணிக்கு? ஊரடங்குன்னா நடந்து போலாம் தான?”
அவன் என்னையே உத்துப் பார்த்துக் கொண்டு இருந்தவன் “ மனசுல வைரஸ் ஊர்ந்து இருக்கு.. இதோட வாழணும் மதி… எனக்கு விடுதல கொடு”
“ இதயே உன்ன கல்யாணம் கட்டிக்கிட்ட பொண்ணு பண்ணா,,,?”
அவன் சிரித்து “புரிஞ்சிப்பேன்…பொம்பளைங்க கல்யாணமானா புடிச்சவன் புர்ஷன தவிர யாரும் இல்லன்னு இன்னும் எத்ன வருஷம் பொய் சொல்லிட்டே இருக்கப் போறீங்க??”
என்ன பாத்துருக்காட்டி”
“ என் மனசுல நெல்லையப்பர் கோவில் தேர்த்திருவிழால கண்ணாடி வளையலா போட்ட பொண்ணு இருந்திருப்பா.. கைல கீறலோட ..உடஞ்ச விரலோட ..இதென்ன?”
அவன் எனது கைத்தழும்பை அப்போதுதான் பார்த்து கேட்க நன சன்னமாக “ வெந்நீர ஊத்திட்டான்…”
“ஏண்டி..ஏண்டி… கஷ்டப்பட்ட..ஏன்?”
“கல்யாணத்துல இஷ்டமில்ல.. ஒருத்தன ரொம்பப்பிடிக்கும்… அவன என்னிக்குனாலும் நான் போய் சேந்துருவேன்னு கல்யாணம் கட்ன ராத்ரி சொன்னேன்..ஆனா…நீ கல்யாணம் கட்டிட்ட…”
நான் சிரிக்க அவன் என்னையே பார்த்து “ தூங்கு” என்று தலைக் கோதினான். மணியைப் பார்த்தேன். இரண்டு இருபது. கடிகாரத்தில் முள் நின்றது கூட அழகாக இருந்தது. எதுவுமே பேசாமல் கிளம்பினோம்… அவன் என்னை நிமிர்ந்தே பார்க்கவில்லை. தெருவில் இறங்கி அந்த அதிகாலையில் ஆளில்லா தெருவில் திறந்திருந்த ஒரே தெருவில் பாதி ஷட்டர் திறந்ததேநீர் கடையில் தேநீர் குடித்தோம். என் மனதிற்குள் அத்தனை சம்பவங்களும் கடந்து போக டீ க்ளாஸ் சுட்டது. என் விரல் அனிச்சையாக தழும்பின் மேல் உராய்ந்தபடி இருந்தது.
நீண்ட நெடிய சாலை காலையின் வாசனையோடு விரிந்திருக்க அவன் எதுவுமே பேசாமல் வந்தது என்னை சங்கடப்படுத்தியது.
“ ராஜன்”
“ம்ம்ம்…என்ன?”
“கோவமா?”
இல்லை என்று தலையசைக்க ஒரு பேருந்து கடந்தது. ராஜன் பேயாய் ஓடி அதை நிறுத்தினான்.
“சீக்ரமா ஏத்தி விடலாம்னு நினச்சிட்ட இல்ல?”
அவன் எதுவும் சொல்லாமல் என் கையிலிருக்கும் பையை வாங்கிக் கொண்டான்.
“ஆம்பளதான… ஆயிரம் பேசுனா கூட தாம்பத்ய வாழ்க்கைக்கு சரியில்லன்னு…”
என்று நான் சிரித்தபடி அவன் கையைக் கிள்ள அவன் அதைத் தட்டி விட்டு “ஏறு” என்றான்.இருள் இன்னும் பேருந்துக்குள்ளும் விரிக்கும் இருட்டுப் போர்வையாய் பரவிக் கிடந்தது.
பஸ்ஸில் ஏறியதும் எனக்குள் மெல்லிய நடுக்கம் வந்தது. அவனைச் சீண்டி விட்டு அவனது இயலாமையை வேடிக்கை பார்த்தேனோ என்று தோன்றிற்று. அவனிடம் சாரி என்று கேட்குமோ கேட்காதோ சொல்லி விடலாம் என்று நினைக்கையில் பேருந்தை எடுக்க சற்று அலம்பி உட்கார்ந்தேன். உட்காரும் போது ராஜன் கண்டெக்டரிடம் காசைக் கொடுத்து “ வொய்ஃப்தான் சார்… சங்கர் நகர்ல பாத்து இறக்கிருங்க..” என்றபடி இறங்கினான்.
நான் திரும்பி எட்டிப் பார்த்தேன். அவன் திரும்பாமலே நடந்து போய்க் கொண்டிருந்தான்.
காதலித்த நல்ல ஆம்பிளை… கல்யாணம் பண்ணிகிட்ட மோசமான ஆம்பிளை… இவங்க நடுவிலே மாட்டிக் கொண்ட நடைமுறைப் பொண்ணு.. எழுத்தாளரின் வலுவான உணர்வைத் தட்டி எழுப்பி வாசகனை ஊசலாட வைக்கும் எழுத்து… இக்கதையில் பல நிறைய possibilities இருக்கின்றன.. படிக்க வேண்டிய சிறுகதை.