கட்டுரைகள்

“இயக்குநர் இரஞ்சித், இரஞ்சித் அண்ணா மற்றும் தோழர் இரஞ்சித் ….”

- மித்ரா

 

இயக்குநர் இரஞ்சித்

“ஒன்று, புரட்சி செய். இல்லை, காதலி…” என்பார்கள். ஆனால் உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. புரட்சி செய்பவன் கண்டிப்பாக தேர்ந்த காதலனாகவே இருப்பான். ஒரு சிறந்த காதலனால் மட்டுமே புரட்சியை சாத்தியமாக்க முடியும். உலகின் தலைசிறந்த புரட்சியாளர்களின் காதல் கதைகள் எல்லாம் கேட்கக் கேட்க சலிக்காதவை. 

அப்படித்தான் இயக்குநர் பா.இரஞ்சித்தும். இயக்குநர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல மனிதனுக்கான அடையாளம் அவன் தன் காதலை எப்படி கையாள்கிறான் என்பதாகவே இருக்கும். இரஞ்சித் புரட்சியாளர். தன் திரைப்படங்களில் அவர் காட்சிப்படுத்தும் காதல்களே அதற்கு சாட்சி.

நான்கு திரைப்படங்கள். அத்திரைப்படங்களின் கதை, அவை பேசிய அரசியல், அவற்றின் தேவை மற்றும் கனம் ஆகியவற்றைத் தாண்டி அவர் பேசிய காதல்கள் அத்தனை அழகானவை. எளிதில் கடந்து விட முடியாதவை.

 

அந்தக் காதல்கள் ஏன் அவ்வளவு நேர்த்தியாக அழகாக இருக்கின்றன என்று யோசித்திருக்கிறீர்களா? ஏனென்றால் அங்கு பெண் தனக்கான அத்தனை இயல்புகளோடும் இருக்கிறாள். தன் சுயத்தை இழக்காமல் காதலிக்கிறாள். அங்கு அவள் காதலுக்காக எந்த தியாகத்தையும் செய்யவில்லை. பெண் என்பதற்காக எதையும் விட்டுக் கொடுக்கவில்லை. ஆணுக்கு அதாவது நாயகனுக்கு சரிக்கு சமமாக நிற்கிறாள். இரஞ்சித்தின் நாயகிகள் ஒருபோதும் அரைகுறை உடையணிந்து ஆடிவிட்டுச் செல்பவர்கள் அல்லர். ட்ரெண்டிற்காக வறட்டுப் பெண்ணியம் பேசித் திரிபவர்கள் அல்லர். அவர்கள் எந்த வித மேற்பூச்சுகளும் அரிதாரங்களும் இன்றி சுயம் பற்றி வாழத் தெரிந்தவர்கள்.

கலையரசியும், குமுதவள்ளியும், செல்வியும், சரினாவும் அத்தனை அழகாக திரையிலும் மனதிலும் நிறையக் காரணம் அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பே. கதாபாத்திர வடிவமைப்பு மட்டுமின்றி காட்சிகள், வசனங்கள், இசை, பாடல் வரிகள் என அனைத்திலும் இயக்குநர் இரஞ்சித்தின் பொறுப்புணர்வு மிளிரும்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பாள், முன்னால் பெண் இருப்பாள்…. என்பதெல்லாம் கதைகளுக்கு வேண்டுமானால் ஆகும். உண்மையில் சமூகப் பொறுப்புணர்வு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் இருக்க வேண்டியது. புரட்சியும் போராட்டமும் இருவரும் இணைந்து நடத்த வேண்டியவை. உரிமைகளும் கடமைகளும் அனைவருக்கும் சமமானவை. இரஞ்சித்தின் பெண்கள் சமூகப் பொறுப்புணர்வு மிக்கவர்கள். முதல் குரலை உயர்த்துபவர்கள். அவர்கள் எப்போதும் ஆணின் வெற்றிக்கு பின்னின்று உதவுபவர்கள் அல்ல. ஆண்களோடு கைகோர்த்து போராடுபவர்கள். 

தோழர் இரஞ்சித் 

இதையெல்லாம் தாண்டி இரஞ்சித் சாரைப் பாராட்ட, அவரை நினைத்து பெருமைப்பட, அவரைக் கொண்டாட இருக்கும் நூற்றுக்கணக்கான காரணங்களில் ஒன்று, அப்போதைய உணர்ச்சிகளின் வேகத்தில் எதையும் செய்துவிட்டு அப்படியே விட்டுவிடுபவர் அல்ல அவர். எந்த ஒரு செயலும் தாக்கத்தை ஏற்படுத்த அது எத்தனை தீவிரமாக உள்ளது என்பது முக்கியம். அதை மிகச்சரியாகப் புரிந்து கொண்டவர் இரஞ்சித் சார். 

தொடர்ச்சியாக இடைவெளியின்றி அவர் செய்து வரும் பணிகள் வியக்கத்தக்கவை. அவர் தயாரிக்கும் திரைப்படங்கள், ஒருங்கிணைக்கும் நிகழ்வுகள், கொடுக்கும் பேட்டிகள் அனைத்தும் எதிராளிகளைத் தொந்தரவு செய்யக் கூடியவை. “ஓடு. முடியாவிட்டால் நட. அதுவும் முடியாவிட்டால் தவழ்ந்தாவது செல். ஆனால் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இரு…” என்றொரு கூற்று இருக்கிறது. அதை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் இரஞ்சித் சார். நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் அவர் செய்து கொண்டிருக்கும் சமூகப்பணிகளும், எந்தப் பிரச்சனைக்கும் முதலில் குரலெழுப்புவதும், களத்திற்குச் செல்வதுமே அதற்கான சாட்சிகள்.

 

இரஞ்சித் அண்ணா

நடிகர்களை பரவலாக ரசிகர்கள் ‘அண்ணா’ என்றழைப்பதைப் பார்த்திருக்கிறோம். முதன்முதலில் ஒரு இயக்குநரை ரசிகர்கள் அண்ணா என்றழைப்பது எனக்குத் தெரிந்து இரஞ்சித்தைதான். அதற்குக் காரணம் அவர் வெறும் திரைப்பட இயக்குநராக மட்டும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை என்பதுதான். 

எந்தக் கட்டத்தில் ஒருவர் நமக்கு அண்ணனாகிறார் என்றால், என்னைப் பொருத்தவரை அவர் நமக்கு வழிகாட்டியாக முன்னோடியாக ஆகும் போதுதான். சமூகவலைதளங்களில் இரஞ்சித் அவர்கள் பிரபலமாகாததற்கு முன்பு தன் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் தற்போதைய புகைப்படம் ஒன்றையும் இணைத்துப் பகிர்ந்து வாழ்த்தி வருகிறார்கள். அது எந்தளவிற்கு உண்மையென்பது தெரியவில்லை. ஆனால், எத்தனை வலிகளைக் கடந்து வந்தோம் என்பதை விட வந்த பிறகு என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் முக்கியம். கிட்டத்தட்ட அனைவரும் தவறவிட்ட ஒன்றை செய்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் இரஞ்சித்.

இயக்குநர் இரஞ்சித்திற்கு, இரஞ்சித் அண்ணனுக்கு, தோழர் இரஞ்சித்திற்கு  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button