The Kid (1921)
Dir: Charlie Chaplin | Silent | 53 min
ஒரு படைப்பை, அது இலக்கியப் படைப்போ அல்லது கலைப்படைப்போ, நாம் கிளாசிக் என்று எப்போழுது, எதன் அடிப்படையில் அங்கீகரிக்கிறோம்? இக்கேள்விக்கு உண்மையில் பல பதில்கள் இருக்கலாம். அது நாம் கிளாசிக் எனும் பதத்தினை உள்வாங்குகிற விதம் சார்ந்தது. எல்லாப் படைப்புகளும் ஏதோ ஒரு விதத்தில் தனது வாசகரிடம் / பார்வையாளரிடம் உரையாடுகிறது. அவ்வுரையாடலின் அடர்த்தி பல சந்தர்ப்பங்களில் அது வெளியான காலகட்டத்தைச் சார்ந்த அம்சமாகவே இருக்கும். காலஞ் செல்லச் செல்ல அதற்கான தேவையும் மங்கி விடலாம். வெகுசில படைப்புகளே காலத்தின் கரையுடைத்து நுரைத்தபடியே எல்லா காலத்து பார்வையாளர்களுடனும் அதே அடர்த்தியோடு உரையாடலை முன்னெடுக்க முடியும். என்னளவில் கிளாசிக் எனச் சொல்லத்தக்க படங்களுக்கு மேற்சொன்ன அம்சம் முக்கியமானது என்பேன்.
சரியாக நூற்றியிரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்த ஒரு படைப்பை முன்வைத்து ஏன் நான் எழுதி, நீங்களதனை வாசிக்க வேண்டும்? சார்லி சாப்ளினைத் தெரியாமல் நம்மில் பலருக்கும் பால்யம் கடந்திருக்காது. சிறுவனாயிருக்கையில் முன்மாலைப்பொழுதுகளில் தொலைக்காட்சியில் வாரம் ஒரு நாள் சார்லி சாப்ளினின் படங்களை ஒளிபரப்புவார்கள். அதற்கெனவே அடித்துப் பிடித்து வீட்டிற்கு வந்து பார்த்து மகிழ்ந்தது பசுமையாய் நினைவில் நிற்கிறது. சினிமாவை படிக்கத் துவங்கிய பிறகே, அன்று தொலைக்காட்சியில் பார்த்தவை எல்லாம் சாப்ளினின் முழுநீளத் திரைப்படங்கள் அல்லாமல் இரண்டு ரீல் படங்களே என விளங்கியது. இன்றைய நிலையில் அவற்றை நகைச்சுவை குறும்படங்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். பொதுவாக அக்காலகட்டத்தில் வெளியான இவ்வகைப் படங்களை ‘Two Reelers’ என்றே சுட்டுகின்றனர்.
சாப்ளின் தன்னுடைய அசாத்தியமான நகைச்சுவைத் திறனால்தான் உலகெங்கிலும் ரசிகர்களைச் சென்றடைந்தார் என்பதில் ஐயமேயில்லை. ஆனால், அவர் தான் நகைச்சுவை பாணிக்கு முன்னோடியா என்றால்..இல்லை! அவருக்கு முன்னரே மேக்ஸ் லிண்டர், லாரல் ஹார்டி இரட்டையர்கள், பஸ்டர் கீட்டன் என ஒரு வரிசையே இருந்ததே? அவர்கள் எல்லோருமே தம்மளவில் மேதைகள்தான். இருப்பினும் சாப்ளினுக்கு நாம் மனதிற்குள் கொடுத்த (சொல்லப் போனால் அந்த இடம் அந்தக் கலைஞனே எடுத்துக் கொண்டது!) இடம் தனித்துவமானது. மேற்சொன்ன அனைவரும் நகைச்சுவையில் வித்தகர்கள் எனும் போதிலும், சாப்ளின் தனது பாணியில் நகைச்சுவையோடு கலந்திட்ட மனிதத்தால் தனித்து நிற்கிறார். அதுவே அவருக்கு ஒப்பற்ற இடத்தை வழங்கி இருக்கிறது. நகைச்சுவையையும் மெலோ டிராமாவையும் இவரளவுக்கு நேர்த்தியாய் இணைத்துக் கையாண்ட மேதை இன்றுவரையிலும் எவரும் இல்லை. தவழ்ந்து கொண்டிருந்த திரைப்படக் கலை மெல்ல 1920களில் நடைபழக ஆரம்பித்த போது, சாப்ளின் போன்ற மேதைகளே அதற்கு தடம் வகுத்துக் கொடுத்தனர்.
வெறும் இரண்டு ரீல் படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்த சாப்ளின் இயக்கி நடித்த முதல் முழு நீளத் திரைப்படம் இதுவே. கதை சொல்லும் ஊடகமாக சினிமா பரிணமிக்கத் துவங்கியது ஏறத்தாழ 1910களுக்குப் பிறகுதான். அதிலும் அடுத்தடுத்ததாக உலகின் பல்வேறு பகுதிகளில் வெளிவந்த திரைப்படங்களின் வழியாக ஒரு தொழில்நுட்பமாக சினிமா வளம்பெறத் துவங்கியிருந்தது. படத்தொகுப்பை வைத்தே எப்படி பார்வை அனுபவத்தை இன்னும் செறிவாக்க முடியும், கதை சொல்லலில் தாவல்களை எப்படி இதன் வழியே சாத்தியப்படுத்தலாம், நாடகீயக் கூறுகளை எப்படி ஆக்கப்பூர்வமாக திரைப்படக்கலையோடு பிணைக்க முடியும் என்பன போன்ற பல விடயங்களை மெல்ல பரிசோதனைகளின் வழியாக கண்டடைந்து கொண்டிருந்த காலமது. அதில் தனது பங்கிற்கு ஒரு மூலைக் கல்லாக தன் திரைமேதைமையால் பங்களித்தவர் சாப்ளின்.
ஆதியிலிருந்தே கதைகள் சொற்பமே. ஆனால், அதனைச் சொல்லுகிற விதத்திலும் – திரைப்பட ஊடகமெனில் காட்டுகிற விதத்திலும்தான் பரிணமித்தபடியே புதுபுது கதவுகளை திறந்துகொண்டே இருக்கிறோம். இப்படத்தின் கதையும் அளவில் சிறியதே. ஆனால், முன்னுவமை இல்லாத அந்த ஆரம்ப காலகட்டத்தில் அது திரைமொழியில் சொல்லப்பட்ட விதமும், நூறாண்டுகள் கழித்தும் இன்றும் நம்மோடு அதே வீரியத்தோடு உரையாடுகிற திறனோடிருப்பதுமே இதன் தனிச்சிறப்பு. வெறுமையான வாழ்க்கை வாழ்கின்ற ஓர் இளம் தாய் தனது கைக்குழந்தையை வளார்த்தெடுக்கும் திராணியற்றவளாய், தன் பிள்ளைக்காவது நல்ல வாழ்வு அமையட்டும் என்ற நப்பாசையில், வீதியோரம் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு காருக்குள் குழந்தையை வைத்துவிட்டு மறைகிறாள். ஆனால், உரிமையாளர்கள் கண்களில் படுவதற்கு முன்னமே அது இரு திருடர்களால் திருடப்படுகிறது. போகும் வழியில் குழந்தை இருப்பதைக் கண்டுகொள்ளும் அவர்கள், வீதியோரம் குழந்தையை கைகழுவி விட்டு நழுவுகிறார்கள். கார் திருட்டை அறிந்து கொள்கிற தாய் மயங்கிச் சரிகிறாள். மிகத் தற்செயலாக அப்பக்கம் வருகிற டிராம்ப் (சாப்ளின்) வசம் குழந்தை வருகின்றது. துவக்கத்தில் நமக்கேன் வீண் சுமையென குழந்தையை கைகழுவ முனைந்தாலும் ஒரு கட்டதில் அப்பொறுப்பு அவன் மீதே திணிக்கப்படுகிறது. இருவரின் பாதைகளும் அதுமுதல் ஒன்றாகின்றன. ஐந்து வருடங்கள் உருண்டோடுகிறது.
கதை மொத்தமும் காலத்தால் பிணைக்கப்பட்ட இந்த இரு திக்கற்ற தனியர்களின் உலகைச் சுற்றியே சுழல்கிறது. சன்னல் சட்டங்களுக்கு கண்ணாடி வைக்கிற வேலை செய்கிற (glazier) டிராம்பின் தொழில் சுமூகமாய் நடப்பதில் சிக்கல். விடுமுறையே எடுத்துக் கொள்ளாத பசி மூன்று வேளையும் தவறாமல் வருவதால், நேர்மையான தொழிலை நேர்மையற்ற முறையில் செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். சிறுவன் ஜான் நன்றாக இருக்கிற கண்ணாடிகளைக் கல்லெறிந்து உடைப்பதும், தற்செயலாக அவ்வழி வருகிற (!) டிராம்ப் அதைச் சரி செய்வதுமாய் பிழைப்பு ஓடுகிறது. ரோந்து வரும் காவலரிடம் வசமாய் சிக்கி ஓடி ஒளிகிற பரிதாபப் பிழைப்பு. சாப்ளினின் படங்களில் நீக்கமற இருக்கிற நகைச்சுவை இதிலும் நிறையவே உண்டு.
துவக்கத்தில் நிராதரவாக கதியற்று இருந்த அத்தாய் கால ஓட்டத்தில் ஒரு நடிகையாகி உச்சத்திற்குச் செல்கிறாள். பெரும்பணத்தை குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கவெனச் செலவழிக்கிறாள், தனது கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட ஈடுசெய்யவியலா இழப்பின் வலிக்கு இது ஒரு ஒத்தடம் என்பது போல. ஒரு தருணத்தில் தாய் சேயின் சந்திப்பு நிகழும் போதிலும் அறியாமையால் அப்படியே இருவரும் கடந்து போய்விடுகிறார்கள்.
இப்படத்தில் ஜானாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த சிறுவன் ஜாக்கி கூகன். வெறுமனே மேடை நாடக நகைச்சுவைக் கலைஞனாக மட்டுமிருந்தவனைக் கண்டடைந்த சாப்ளின், இப்படத்தின் வழியாக அவனது ஒப்பற்ற நடிப்பாற்றலை உலகம் காணச் செய்தார். திரைப்படத்தில் இருவருக்குமிடையே இருந்த அன்னியோன்யம் (on screen chemistry) அற்புதமானது. சினிமா வரலாற்றில் என்றென்றும் நினைவுகூறத்தக்க, தவறவிடவே முடியாத குழந்தை நட்சத்திர நடிப்பென்கிற அந்தஸ்த்தை இப்படத்தில் ஜாக்கியின் பங்களிப்பு உறுதி செய்தது. சிறுவனின் குறும்பை, டிராம்ப் மீதான பேரன்பை, அவனது வயதிற்கேயுரிய இயலாமையை என ஒவ்வொரு குணாம்சமாக கதையோட்டத்தில் வெவ்வேறு தருணங்களில் சாப்ளின் படமாக்கியிருந்த விதம் அலாதியானது. இன்று சர்வசாதாரணமாகிப் போன படமாக்கும் உத்திகளை அன்றே தன் கற்பனைத் திறனாலும் திரைமேதைமையாலும் கலைநுட்பத்துடன் சாப்ளின் கையாண்டிருக்கும் விதம், குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கி, படத்தின் பார்வையனுபவத்தை பன்மடங்கு செறிவூட்டுகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் சாப்ளின் வெறுமனே திரைநுட்பங்களை காட்சிப் பொருள் போல பயன்படுத்தி தனது படைப்புகளின் வழி கடைவிரிக்காமல், தான் சொல்ல நினைத்த கதையுலகை விசாலமாக பார்வையாளருக்குத் திறந்து காட்டி, கடத்த நினைக்கும் உணர்வுகளுக்குள் அவர்களையும் உள்ளிழுக்கும் மாயத்தை நிகழ்த்தப் பயன்படுத்திக் கொண்டதுதான். அவர் காலத்தில் திரை மொழியை, இவரளவிற்கு ஹாலிவுட்டில் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லையென எண்ணவைக்கிற விதமாக அவரதனைக் கையாண்ட திறனை வியக்காமல் இருக்க முடியாது.
இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்களான டிராம்ப் மற்றும் சிறுவனுக்குமிடையே திரையில் சாத்தியமான அந்த பிணைப்பிற்கு காரணமாக திரை ஆய்வாளர்கள் வேறு ஒரு காரணத்தையும் சொல்வதுண்டு. வலிகளைக் கலையாக்கும் நுட்பமறிந்த கலைஞன் சாப்ளின். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தனது சொந்தக் குழந்தையை பறிகொடுத்து பேரிழைப்பைச் சந்தித்திருந்தார். அதுவே கதாபாத்திரங்களாக இவர்கள் இருவருக்குமிடையே அணுக்கத்தை அதிகரித்தற்கு காரணமாக இருக்கலாம் என திரை ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர்.
காட்சிகளின் வழியே கதை சொல்வதே திரைப்பட ஊடகத்தின் அடிப்படை அம்சம். கதை துவங்கிய முதல் சில நிமிடங்களுக்குள் தனது கதையுலகு மொத்தத்தையும் தெள்ளத்தெளிவாக சில காட்சிகளுக்குள்ளாகவே நிர்மாணித்து விடுகிறார் சாப்ளின். தேவையற்ற ஒரு காட்சித் துணுக்கு கூட இல்லாத அளவுக்கு பிசிறற்ற காட்சிமொழி இவருடையது. குழந்தையைக் கையிலேந்தி வீதியில் திக்கற்று நடக்கும் தாய் இருக்கிற சட்டகம் சட்டென இடைவெட்டப்பட்டு, சிலுவை சுமந்து மலையேறும் கிறிஸ்து நொடிப்பொழுது திரையில் மின்னி மறைவதைக் காண்கையில் அத்தனை பிரமிப்பாக இருந்தது.
சிறுவனும் இவரும் உணவு உண்ணும் காட்சிகள் படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் வருகிறது. அதில் இருவருக்குமாக இருக்கிற உணவை வயது வித்தியாசத்தையும் மீறி சம பங்கீடாகவே டிராம்ப் பரிமாறுகிறார். இதனை தனிப்பட்ட விதத்தில் சாப்ளின் எனும் படைப்பாளிக்கு பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் இருந்த சாய்வை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாம். பின்னாட்களில் வெளிப்படையாகவே தனது சாய்வை ஸ்டாலின் ஆதரவில் வெளிப்படுத்திய இவரை, கம்யூனிஸ்ட் என முத்திரை குத்தி நாட்டிற்குள்ளேயே நுழைய இயலாதபடி அமெரிக்கா முட்டுக்கட்டையிட்டதெல்லாம் தனிக்கதை.
ஒரு அசலான படைப்பாளி மேலோட்டமாகப் பார்க்கும் போது சாதாரணமாகத் தோற்றங்காட்டுகிற ஒரு கதையாடலுக்குள் தனது பார்வையை, சமூக விமர்சனக் குரலை நுட்பமாய் பதிவு செய்துவிடுவார். உலகெங்கிலும் டிராம்ப் கதாபாத்திரத்தை பெருவாரியான விளிம்பு நிலை மக்கள் தங்களது பிரதிநிதியாகவே உள்வாங்கினர். இது சாப்ளின் கொண்டாடப்பட்டதற்கான காரணங்களுள் மிக முக்கியமானது. சமூகத்தின் பார்வையில் கவனமே பெறாத, மதிப்பற்ற, புறந்தள்ளப்பட்ட ஒரு மனிதராகவே டிராம்ப் கதாபாத்திரம் இருக்கிறது. அவன் தனது அத்தனை அவலங்களையும் நகைச்சுவையாய் மாற்றுகிறான். அவ்விதத்தில் அவனொரு ரசவாதி. இதிலும் கூட டிராம்ப் பல தருணங்களில் காவலர்களை எதிர்கொள்கிறான். அத்தனை முறையும் அவன் துரத்தப்படுகிறான். அதற்கு அடிப்படையான காரணம் அவனது உடையும் தோற்றமும்தான். எளியவர் மீதான வலியவர்களின் ஆதிக்கமாகவும் இதனை நாம் புரிந்துகொள்ள முடியும். இதனைக் குறிப்பிட்டுச் சொல்வதற்கான காரணம் சாப்ளினின் பல படங்களில் தெருங்களின் ரோந்து சுற்றிவருகிற காவலர் பாத்திரங்களை நாம் காண முடியும்.
படத்தில் நகைச்சுவை ததும்புகிற ஒரு தெருச்சண்டைக்குப் பிறகான கட்டத்தில் சிறுவன் ஜானுக்கு உடல்நலமின்றிப் போக, சிகிச்சையளிக்க வருகிற மருத்துவர் விசாரிக்கையில் தான் பத்திரப்படுத்தியிருந்த, சிறுவனது தாய் முன்பு எழுதி வைத்திருந்த சிறுகுறிப்பிருக்கிற ஒரு காகிதத்தைக் காட்டுகிறார். அதனைத் தொடர்ந்து டிராம்ப் சிறுவனுடைய உண்மையான பெற்றோர் இல்லையென அறிந்ததும், மருத்துவர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகிறார். விளைவாக ஜானை காப்பகத்திற்குக் கூட்டிச் செல்ல அதிகாரிகள் வருகிறார்கள். மனதால் இணைந்திருந்த இரண்டு ஜீவன்களை அதிகாரம், விதிகள்..சட்டங்கள் எனும் பெயரில் பிரித்திட முயலும்போது உணர்ச்சிகள் கொப்பளிக்கின்றன. அதுவரையிலும் ஆங்காங்கே மென்சோகமும், ஏழ்மையின் வலியும் எட்டிப் பார்க்கிற காட்சிகளை நாம் எதிர்கொண்டாலும் சிறுவன் ஜான் வலுக்கட்டாயமாக டிராம்பிடமிருந்து பிரிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும் காட்சி உச்சம். பிரவாகிக்கும் மனித உணர்வை, பிரிவின் வலியை காட்சிகளாக சாப்ளின் சொல்லியிருக்கிற விதமும், அதற்கென அவர் தேர்ந்து கொண்ட காமிரா கோணங்களும், சடுதியில் வெட்டப்பட்டு அடுக்கடுக்காய் மாறுகிற சட்டகங்களுமான படத்தொகுப்பும் அருமையாக ஒத்திசைந்து அக்காதாபாத்திரங்களின் கையறுநிலையை, அவர்களின் துயரை பார்வையாளருக்குக் நேர்த்தியாகக் கடத்துகின்றன.
ஒரு வழியாக சண்டையிட்டு அவர்களிடமிருந்து சிறுவனை மீட்கிறான் டிராம்ப். இருவரும் ஒரு மிகச்சாதாரண பயணியர் விடுதியில் உறங்குகிற இரவில், இச்சிறுவனை ஒப்படைப்பவருக்கு பரிசுத்தொகை அறிவித்திருக்கும் காவல்த்துறையின் அறிவிப்பை தினசரியில் காணும் விடுதியின் உரிமையாளர், டிராம்ப் உறங்கும் பொழுதில் ஜானை தூக்கிச் சென்று ஒப்படைக்கிறார். அவனைக் காணாத டிராம்போ தேடித்தேடி களைத்து தன் வீட்டு முகப்பில் வீழ்கிறான். மயங்கிச் சாயுமவன் காண்கிற கனவு, காட்சியாக்கப்பட்ட விதமே கவித்துவமானது. (பொதுவாக நான் அவ்வப்போது பகிருகிற இது போன்ற சிலாகிப்புகளை நீங்களும் பகிர்ந்து கொள்ள அந்தந்த திரைப்படைப்பை அது எடுக்கப்பட்ட காலத்தின் பின்னணியில் பொருத்திப் பார்ப்பது அவசியமானது.)
கனா ஒரு காவலரால் கலைக்கப்பட்டு, டிராம்ப் எழுப்பப்படுகிறான். ஜான் தன் தாயுடன் சேர்ந்து இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட, அங்கே வரவேற்று ஏற்கப்படுவதோடு படம் முடிகிறது. ஏறத்தாழ சாப்ளின் திரைப்படங்களின் மையக் கதாபாத்திரம் நேர்மறையான முடிவிற்குள் தன்னையும் பிணைத்துக் கொள்ளும் மிகச் சில படங்களுள் இதுவும் ஒன்று. ஒரு வேளை தனது நிச வாழ்வில் வாழ்நாளெல்லாம் தனிமையுணர்வில், அது தந்த அக நெருக்கடியிலேயே இருந்துவிட்ட சாப்ளினின் கலைமனம், அதே புறக்கணிக்கப்பட்ட நிலையையே தனது படைப்பில் தன் பாத்திரத்திற்கான முடிவாகவும் தொடர்ந்து வரிந்து கொண்டதற்கான காரணமாய் இது இருக்கலாம். டிராம்ப் பல படங்களில் தான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையை மாற்றிவிட்டு, தனித்து விடப்பட எஞ்சிய வாழ்க்கையை மீண்டும் தனியராகவே எதிர்கொள்வதாகவே முடிவுகள் அமைந்திருப்பதைக் கவனிக்கையில் இந்த அவதானம் சரியானதென்றே தோன்றுகிறது.
உலகத் திரைவரலாற்றின் முதல் நட்சத்திர ஆளுமையாய் ஜொலித்த சாப்ளின் அவ்விடத்தை பிடித்ததற்கான காரணம் வேண்டுமானால் அவர் செய்த சேஷ்டைகள் நிறைந்த நகைச்சுவைகளாக இருக்கலாம். ஆனால், தான் எழுதி இயக்கிய முழுநீள நகைச்சுவை திரைப்படங்களுக்குள் அவ்வளவு டிராமாவை, பொதியும் நுட்பங்களை கற்றுத் தந்து, சினிமா கலையின் சாத்தியங்களை இன்னும் விசாலாமாக்கியதே அவரை என்றென்றைக்கும் தவிர்க்கவே இயலாத தனிப்பெரும் கலைஞனாகவும் மிளிரச் செய்திருக்கிறது.
(தொடரும்…)