பருவம்
பழைய பருவக்காரனின்
எழவு சேதி
காதுக்கு எட்டும் முன்
புதுப் பருவகாரனிடம்
அடுத்த போகத்திற்கான
பருவத்துக் கூலியை
“குழிக்கு இத்தனை சலகைதான்”
என்று
கறாராகப் பேசிவிடுகிறார்
பண்ணாடி
பொழுது சாய
எழவு விசாரிக்க வருபவரின்
காலில் விழுந்து அழும் பருவக்காரிச்சியின்
இரு தோள்களை இறுகத் தொட்டு
எழுப்பும் பண்ணாடி
நூறு ரூபாய்த் தாளை அவளிடம் நீட்டுகிறார்
நிறை போதையில்
வேட்டி அவிழ்வது கூடத் தெரியாமல்
‘பங்காளி கோடி’ போட
வந்து நிற்கிறான்
புதுப் பருவக்காரன்.
***
பெறந்தவ
ஒரு கொடியில் வந்து
ஒரே முலையைப்
பகிர்ந்தவர்கள்தான்
தாலி கட்டி வந்த நாளிலிருந்து
சட்டி பானையிலும் கூட
தனித்ததொரு பண்ணாட்டு
இருந்ததில்லை
பங்கும் பங்காளியென்றாலும்
வாயும் வயிறும் தனித்தனியன்றோ
யார் சதையை அறுத்து
யாருக்கு அப்புக் கட்ட
யேவாரி வந்து
எடை போட்டுப் போனாலும் போனான்
பாதகத்தி முண்ட
பத்தூருக்கும் தெக்க
மூஞ்சியத் தூக்கீட்டுத் திரியுறாளே.
***
உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு
பேருந்தின் முன் சீட்டில்
அமர்ந்திருந்தவரை
வழியக் கூப்பிட்டு
“நான் டிக்கெட் எடுத்துக்குறேன்”
என்று சொன்ன அப்பாவை முறைத்தேன்
“பேசாம இருடா…
களத்துல கடை வச்சுருக்கேல
சோறு டீயல்லாம்
கணக்கு வழக்கில்லாமக் குடுத்த மனுஷன்”
என்று என்னை ஆற்றுப்படுத்திய
அப்பாவின் வேசகாலத்துப் பசியும் தாகமும் உக்கிரமாய் எனக்குள் ஊடுருவுகையில்
நாங்கள் இறங்க வேண்டிய
நிறுத்தம் வந்திருந்தது.
***
கவசம்
கீரனூரிலிருந்து
பழனி டவுனுக்கு
இளநீர் விற்க வருபவர்களுக்கு
இடைப்பட்ட ஊர்களில்
சந்திக்க நேரும் மனிதர்களின்
அரிவாளைக் காட்டிலும்
கூரிய பார்வையைச் சமாளிக்க
‘பண்ணாடியென்றும்’,
‘சாமியென்றும்’
இரண்டு எளிய சொற்கள்
எப்பொழுதும்
இருக்கவே செய்கிறது.
***
தெரு
கோடைகாலத்தில்
எங்கள் ஊருக்கு
புதுக்கோட்டையிலிருந்து
ஜூஸ் கடை போட்டுப்
பிழைக்க வந்த
ஒரு அக்கா
நல்லபடியாகத்தான்
சிரித்துப் பேசி வந்தாள்
ஒருநாள்
என் வீடு இருக்கும் தெருவிலிருந்து
நான் வருவதைப் பார்த்தவள்
ஏனோ அன்றிலிருந்து
என்னிடம் சிரிப்பையும் பேச்சையும் நிறுத்திக் கொண்டாள்
பிறகு அவள் மறந்தும் கூட
நான் வரும் திசையில்
நிமிர்ந்து பார்த்தவள் இல்லை.
********