சோற்றுக்கடவுள்..!
அந்தக் கடவுளை
காலையில்தான்
கண்ணாரக் கண்டேன்
கரடு முரடாகிப் போன
என் காணிநிலத்தை
உழுது கொண்டிருந்தான்
அரைஞாண் கயிற்று
கோவணத்தோடு
தூரத்து ஏரி
கண்மாயின் மீது
வீற்றிருந்த
கடவுளின் கோவணம்
காற்றில் மெல்லப் பறந்து கொண்டிருந்தது
குருவிகளை விரட்டும்
பச்சை வண்ணக்கொடி அன்னக்கொடியாக.
****
தூக்கம்
என்னை நெருங்கி
வர மறுக்கிறது தூக்கம்
திறந்து கிடந்த
என் வீட்டு ஜன்னலையே நோட்டமிடுகிறேன்
என் வானத்திற்கு கீழே
மழை இல்லை
வெயிலும் இல்லை
பனியும் இல்லை
தரிசாய்க் கிடக்கும் என் உடல்
உழுது விதைத்துவிட்டு
ஓடி ஒளியும்
காற்றுக்கு நான்
கனவு என்றே பெயரிட்டேன்
இன்னும் அப்படியேதான்
பெயரிட்டு அழைத்துக்கொண்டிருக்கிறார்கள்
தினங்கள் தோறும்
எழும் என் கனவுத் தூக்கத்தை.
****
கனவு
ஓர் இரவு முடிந்து
மறுபகல் தொடங்கியாயிற்று
எனக்குள் பகலும் இல்லை
இரவும் இல்லை
யாரோ ஒருவர் எனக்கென்று
கொண்டு வந்து நீட்டிய சிறு புன்னகையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது
என் வாழ்வும்
என் சாவும்
வழிநெடுக நல்ல
வரவேற்பைக் கொடுத்தவாறு
வழியனுப்பி வைக்கிறது
அதிகாலையில்
தோன்றிய கனவு ஒன்று.
****
பூ
சூரியன்
உதயமாகும்
அதிகாலை நேரம்
நீ பூவாய் பூக்கத் தொடங்குகிறாய்
நான் பார்க்கத் தொடங்குகிறேன்
இருவருக்குள்ளும்
ஆழ வேர் ஊன்றி
முளைக்க ஆரம்பிக்கிறது
ஒரு காதல் செடி
அச்செடியெங்கும் பல பூக்கள்.
********