இணைய இதழ் 127சிறுகதைகள்

விடாது வையகம் – இரக்‌ஷன் கிருத்திக்

சிறுகதைகள் | வாசகசாலை

“என்னை புடிச்சிருந்த பீடையெல்லாம் இன்னையோட என்னையவிட்டு ஓயப்போகுது” அப்புடின்னு நெனச்சுக்கிட்டு எக்கச்சக்க களிப்புல, நான் கோர்ட்டுக்கு கெளம்பிப் போனேன். என் வழக்கோட விசாரிப்பு பதினோரு மணிக்குத்தான் வருதுன்னு வக்கீல் சொன்னாரு. இருந்தாலும், ஆர்வக்கோளாறுல காலம்பரை ஒன்பது மணிக்கெல்லாம் கோர்ட்டு வாசல்ல போயி நின்னுகிட்டு இருந்தேன்.

பத்து மணிக்கு வேற ஒரு வழக்கோட விசாரிப்பு இருந்திச்சு. மத்தவங்க படுத கஷ்டத்த பாத்து பச்சாதாபப்படுத மாதி வாயடிச்சு உள்ளம் குளிருவதுல கொள்ளை  பிரியப்பட்டதுதானே மனுசனோட புத்தி. இதுல,  நான் மட்டும் விதிவிலக்கா?

என்னோட கேஸு விசாரிப்பு வார வரைக்கும், பொழுத கழிக்க, கோர்ட்டுள்ள போயி பாக்குறவுக பெஞ்சுல சும்மா உக்காந்திருந்தேன். தப்பு பண்ணுனவிய நிக்குத கூண்டுல கிட்டத்தட்ட ஒரு  இருபத்தெட்டு, இருபத்தொன்பது வயசு இருக்குத, ஒரு பொம்பள அம்புட்டு அழகாவும் பொம்மையாட்டம்  நின்னுகிட்டு இருந்தா. அடுத்த தப்புக்காரன் கூண்டுல ஆறடி ஒசரத்துக்கு ஒத்த குச்சுபோல, சுருட்ட முடியுடன் நனைஞ்ச பனைமரம் கலருல பொண்ணோட வயதொத்த ஒருத்தன் நின்னுகிட்டு இருந்தான். ரெண்டு பேரும் புருஷன், பொஞ்சாதின்னும், நடக்கது ஒரு விலகல் கேஸாத்தான் இருக்கலாம்னும், இவன் அந்தப் பொண்ணு மேல சந்தேகப்பட்டு தெனம் தெனம் பாடா படுத்திருப்பான். அவனோட மூஞ்சுலயே பொறுக்கித்தனம் தெரியுது. அவளுக்குப் பொறுமை அத்துப்போனதோட விளைவு ரெண்டு பேரும் இங்க வந்து நிக்குதாவ அப்புடிங்கது என்னோட கணக்காக இருந்துச்சு.

சப்பையான ஒருத்தனுக்கு அசத்தலான பொஞ்சாதி அமைஞ்சா, அவன் இவள சந்தேகப்படாம வேற என்ன செய்யுவான்? கடவுளு ரொம்ப ரொம்ப மோசமானவன், எப்புடி ஜோடிப் பொருத்தத்த ஒட்ட வச்சிருக்கான் பாரு. நாயி வாயில மாட்டின தேங்கா மூடிய மாதின்னு நான் யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப, ஜட்ஜ் வழக்கோட சுருக்கத்த  வாசிக்க ஆரம்பிச்சாரு. அந்த அழகியோட பேர வினிதான்னு சொன்னாரு.  

வினிதா எந்தச் சோலிக்கும் போறதில்ல. புருஷன் புள்ளயளுக்கு வடிச்சுக் கொட்டி, துவைச்சு போட்டுகிட்டு மட்டும் இருந்தா. புருஷன் சிவராமன் பள்ளிக்கூட வாத்தியாரு. வினிதா பொழுதக் கழிக்க நிகழ்நிலைக் காணொளிப் பகிர்வும் சமூக வலைத் தளத்துல சுருள்கள (Reels) போடுவதயும் பழக்கமா வச்சுருந்தா. அவ சுருளு போடது சிவராமுக்குப் புடிக்கல. இதனால, எக்கச்சக்கமான வம்பு தும்பு வரும்னு பலதடவ கறாரா கண்டிச்சுருக்கான். அதுக்கு “வீட்ல ஒத்தையா இருக்க சலிப்பா இருக்கு. செல நேரத்துல கிறுக்கு புடிக்கித மாதி இருக்கு. இந்த டிவியில சீரியல பாத்து பொழுதக் கழிக்கலாம்னு டிவி பெட்டிக்கு முன்னாடி போயி உக்காந்தா, நம்ம டைரக்டருமாரு புள்ளய கலைக்கது எப்புடி? மாமியார போட்டு தள்ளுதது எப்புடி? மருமகள ஒளிச்சு கட்டுதது எப்புடி? புது மணத்தம்பதியரோட மொத ராத்திரிக்கு முட்டுக்கட்டை போடுதது எப்புடி? அடுத்தவியளோட சொத்து மேல ஆசைப்பட்டு அவையளயெல்லாம் சுருட்டுதது எப்புடி? இது மாதி காழ்ப்புணர்ச்சியவே காட்சியளா வைக்காவ. எம்புட்டு நேரந்தான், இல்ல, இல்ல. எம்புட்டு நாளைக்கித்தா இந்த காழ்ப்புணர்ச்சியவே பாத்து தொலைக்க. நல்லத நெனச்சேன், நல்லதச் செஞ்சேன், நல்லதே நடந்துச்சுன்னு சொல்லுததுக்கு இந்த உலகத்துல நல்லதே இல்லாம போயிடுச்சா?” அப்புடின்னு சொன்னவ தொடந்து, “இந்த சுருளுவள போடது மனசுக்கு செத்த நிம்மதியாவும் தேத்தலாவும் இருக்குது. ஆனா, அது ஒங்களுக்குப் புடிக்கமாட்டக்கு. நான் என்னத்த செய்ய?” அப்புடின்னு புருஷன்மீதும் தொலைக்காட்சித் தொடருவளுமீதும் அதிருப்திக்கொள்ளதுபோலவும் தனக்கும் உலகைப் பத்திய புரிதலு இருக்கதாகக் காட்டிக்கிட்டு சிவராமனோட மனச மாத்தித் தொடந்து சுருளு பதிவிடுததைச் செஞ்சுப்புட்டு வந்தா.

இதோ இங்க எதிர்ப்பக்கம் இருக்கத குற்றவாளிக் கூண்டுல நிக்குத அனந்து, வினிதா போடுத சுருள்வளயெல்லாம் பாத்துப்புட்டு, “ஒங்க சுருளு ரொம்ப நல்லா இருக்குது. தொடந்து சுருளுவளப் போடுங்க, ஒங்களுக்கு இந்தத் துறையில நல்ல வருங்காலம் இருக்குது. பெரிய ஆளா வருவிய”ன்னு சொல்லி ஏத்தி விட்டுள்ளாரு” அப்புடின்னு வாசிச்சப்ப, முளுசா நம்ம கணக்கே தப்பு. இது வேற ரகமான கேசுனு புரிஞ்சுட்டு.

தொடந்து

“அழகே வந்து ஒரு விஷயத்த பத்தி சொல்லுதப்பதான் சொன்ன சேதி நெஞ்சுல நிக்குது.” அப்புடின்னு நாவன்மை செஞ்சு மண்டையைக் கழுவிப்புட்டான். இப்புடி, தொடங்குன இந்த ரெண்டு பேத்தோட கூட்டும் போவ போவ, இன்னும் சுருள அப்புடிப் போடு, இப்புடிப் போடு. அப்பதான் நெறய பேரு பாப்பாவ. நான் நெறய சந்தாதாரருவளப் பிடிச்சு தாரேன் அப்புடின்னு எண்ணற்ற வாக்குறுதிகளையும் யோசனையளயும் தற்கால அரசியல் வாதியள போல வாய்ப்பந்தல் போட்டுள்ளான்.” சொன்னாரு நீதிபதி.

அல்பப் புகழ்ச்சியளுக்குக் கரைஞ்சு போவதுதான மனுச மனசு. புகழ்ச்சி என்னும் போதைக்கு சொக்கிப் போகாதவிய எங்கத் தேடினாலும் கிடைக்க மாட்டாவ. புகழ்ச்சிய அடுத்தவுக விரும்புவத கண்டதும் இன்னும் எப்புடியெல்லாம் பேசலாம் அப்புடின்னு மனசு கணக்குப் போடத் தொடங்கும். ‘கரைப்பாரு கரைச்சா கல்லும் கரைஞ்சுடும்.’ அப்புடின்ன சொலவடையப் போல அனந்துவோட  புகழ்ச்சில வினிதாவும் சொக்கிப் போனதுல வியப்பு ஒன்னும் இல்லதான்.

வினிதாவும் கள்ளம், கபடம், சூது, வாது இல்லாதவ அப்புடின்னு பிறர நம்ப வக்குத மாதி வாயிச் சமர்த்துக்காரிதான்.

சிவராமன் காலையில ஸ்கூலுக்கு போனாருன்னா, சாயங்காலந்தான் வீட்டுக்கு வருவாரு. இந்தச் சோடிக்கு ஏழு வயசுல ஒரு மவன் இருந்தான். சிவராமனே மவன பள்ளிக்கொடத்துல விட்டுப்புட்டு, அப்புடியே அவரும் பள்ளிக்கொடத்துக்குப் போவத வழக்கமா வெச்சுருந்தாரு. ரெண்டு பேரும் சாயங்காலம்தான் திரும்புவாக. இந்த இடைப்பட்ட நேரத்தத் தனக்கு சாதகமாக்கிக்கிட்டு அனந்தோட சுத்தித் திரிஞ்சா வினிதா.

இத வெகு நாளுகளா கவனிச்சுப்புட்டு “சார், தினமும் நீங்க வேலைக்குப் போனதுக்கப்பறம், எவனோ ஒருத்தன் ஒங்க வீட்டுக்கு வருதான். அவன் வந்ததுமே உங்க பொஞ்சாதியும் அவனும் வெளிய கிளம்பிப் போயிடுதாவ, அப்புடிப் போறவுக, நீங்க வருததுக்குச் செத்த நேரத்துக்கு முந்திதான் வருவாக. அழைச்சுட்டு போனவனே திரும்பக் கொண்டு வந்தும் விட்டுப்புட்டு போயிடுவான்.” சொன்னாரு பக்கத்து வீட்டுக்காரரு. அதுக்கு “அப்புடியா, நான் விசாரிக்கேன்.” அப்புடின்னு சொன்னதோட நிறுத்திக்கிட்டாரு  சிவராமன்.

அவரோட பேச்சுவ பெருசா எடுத்துக்கிடாதோட நிமித்தம், வினிதா பதிவிடுத சுருள்வளப் பாத்துப்புட்டு பதிவுக்குக் கீழே கருத்துரை எழுதுவத விட்டுப்புட்டு சிவராமன்கிட்ட வந்து அவன சீண்டுததுமாதி கருத்துரை வாசிக்கிதவருதான் இந்தப் பக்கத்து வீட்டுக்காரர். அப்பெல்லாம், திருமண வயசுல இருக்கும் தனது சகோதரியுடனோ, மகளுடனோ யாராவது முகம் தெரியாத ஆண் இருந்து பேசிக்கொண்டிருந்தாலே “மாப்பிள்ள பிடிச்சுட்டு வந்துட்டா.” அப்புடின்னு சந்தேகப்படுதவன், இவருக்கு தன்னோட பொஞ்சாதிய பத்தி என்ன தெரியும்னுதான் கடந்து போயிடுவான்.

சிவராமனோட பள்ளியில இருந்து ஒரு நாள் உல்லாசப் பயணமாகக் கன்னியாகுமரி மாவட்டத்துல உள்ள திற்பரப்பு அருவிக்கு மாணவர்களை அழைச்சுட்டு போயிருந்தாக. இந்த உல்லாசப் பயண முந்தைய திட்டத்துல திற்பரப்பு அருவி இல்லதான். நேரக் குறைவு காரணமாக திடீர்ன்னு திட்டம் பத்மநாதபுரம் கோட்டைக்குப் பதிலாக திற்பரப்பு அருவிக்கு போலாம்னு மாத்திபுட்டாவ. அங்க வந்த சிவராமனுக்கு அதிர்ச்சி காத்திருந்துச்சு. அதே திற்பரப்பு அருவியில வச்சு சுருளு எடுத்துக்கிட்டுருந்தாவ அனந்தும் வினிதாவும். நாகரிகம் கருதி, அப்போதைக்கி ஒன்னும் பேசிக்கிடாத சிவராமன் மாணவர்களோட எவ்வித மகிழ்ச்சியும் கொறயாம சுற்றுலாவ முடிச்சுப்புட்டு வீட்டுக்குத் திரும்பி இருந்தாரு.

சிவராமன்கிட்ட “அந்த அண்ணன் இன்ஸ்டாகிராம்ல என்னை பின்தொடருதவரு. ஏதாச்சும் அருவிக்கு போயி சுருளு எடுத்துப் பதிவு போடுங்க, நெறய பேரு பாப்பாகன்னு, இந்த துறையில அனுபவம் உள்ளவுக சொன்னாக. ஒரு பிரயத்தனம் செஞ்சு  பாக்கலாம்னுதான் படப்பிடிப்புக்கு ஒளிப்பதிவாளரு தேவைபட்டுச்சுன்னு குழுவுல கேட்டிருந்தேன். அதன் பேருலதான் உதவி பண்ண வந்தாரு.” அப்புடின்னு சரணடைஞ்சா வினிதா. சமயோசிதமா “நானும் அதுக்காவத்தான், இருக்கும்னு நெனச்சேன். நீயும் அதேதான் சொல்லுத. பரவாயில்லம்மா விடு. நீ ஒன்னும், மனசப் போட்டுக் குழப்பிக்கிடாத.” அப்புடின்ன சிவராமன் தொடந்து…

“ம்ம்… நீ என்ன பண்ணுத, இனிமே நீ இந்த சுருளெல்லாம் பதிவிட வேணாம்.” சொன்னான்.

“ஏன்? என்னைச் சந்தேகப்படுதீயளா? நான் இம்புட்டு சொன்னதுக்கு பொறவும் உங்களுக்கு எம்மேல உள்ள சந்தேகம் போகலல்ல.” கேட்டா கோவமா.

“அப்புடியில்லம்மா, இந்தச் சுருளுக்காவ, உன்ன ரொம்ப வருத்திக்கிடுதயோன்னு எனக்குத் தோனுது. உன்னோட சவுக்கியம் எங்களுக்கு ரொம்ப முக்கியமாப் படுது. அதான், வேண்டாம்னு சொல்லுதேன்.”

“அதெல்லாம் இல்லங்க, எனக்குப் புடிச்சுதான செய்யுதேன்.”

“புடிச்சு செய்தயோ, புடிக்காம செய்தயோ, வேணாம்னு சொன்னா கேளும்மா.”

“நீங்க வேணும்னா, நான் பதிவு போடணும். வேண்டாம்னா விட்டுரணும்மா?”

“நான், முதல்ல இருந்தே வேணாம்னுதான சொல்லுதேன்.”

“உங்களக் கேட்டுப்புட்டுதான, நான் பதிவு போட்டேன்.”

“நான் சம்மதிச்சதாலதான பதிவு போட்டேன்னு சொல்லுத? இப்ப, நானேதான் வேணான்னு சொல்லுதேன், விட்டுரு.”

“அது எப்புடி விடமுடியும்? இம்புட்டு நாளும் கஷ்டப்பட்டு சுருளு போட்டுட்டு வந்ததுக்கு, இப்பதான் காசு ஆரம்பிச்சிருக்கு.”

“நாம மூனு பேருதான? நான் ஒருத்தன் சம்பாதிக்கது போதும்மா.”

 “இந்த ஆம்பளயளே இப்புடித்தான், பொண்ணுக ஒவ்வொன்னுக்கும் அவுக கைய எதுருப்பாத்து நிக்கணும்னு நெனப்பாக. ஆணாதிக்கப் புத்தி.”

“நான்தான் மொத்தச் சம்பளத்தையும் உன்கிட்ட கொடுத்துடதேன?”

 “நான் ஒன்னும் தரலேன்னு சொல்லலையே. என்னோட தன்னம்பிக்கைய ஏன் முடக்கணும்னு நெனக்கயன்னுதான் கேக்கன்?”

“சும்மா, விதண்டா வாதம் பண்ணிப்புட்டு இருக்காத. இனிமே, இந்த அசிங்கத்த செய்யதுக்கு ஒருபோதும் நான் அனுமதிக்கமாட்டேன்.” சொன்னான் சிவராமன்.

“எது அசிங்கம்? ஒரு பொண்ணு அவளோட சொந்தக் காலுல நிக்கணும்னு நெனக்கது உங்களுக்கு அசிங்கமா இருக்குதா?”

இப்படி ரெண்டு பேத்துக்குள்ள விவாதம் நீண்டுகிட்டே போச்சு. சுருளுவளப் பதிவிட வேண்டாம்ங்கதுல சிவராமன் எம்புட்டு ஆணித்தரமாக இருந்தானோ அம்புட்டு ஆணித்தரமாக சுருளுவளப் பதிவிடதிலும் இருந்தா வினிதா. அவளுக்குள்ள, நாம நெறய விளம்பர படங்க நடிக்கணும், சினிமா நடிக்கணும், நெறய பணம் சம்பாதிக்கணும், பெரிய வீடு வாங்கணும், ஆடம்பரமான வாகனம் வாங்கணும் அப்புடின்னு பெரிய கனவுக, அல்ல ஆசைக இருந்துச்சு. அந்தக் கனவுக அம்புட்டையும் தகர்க்கது மாதி சிவராமன் பேசுனது அவன் மேல வெறப்பதான் உண்டு பண்ணுச்சு.

சிவராமன், அனந்து ரெண்டு பேருல யாரு ஒசத்தி அப்புடின்னு ஒப்பிட்டு பாக்கையில தன்னோட வலைத்தள காணொளி வளர்ச்சிக்கு ஒத்தாசையா இருக்க அனந்தே வானளாவி நின்னான். எல்லாருக்கும் எல்லா விடயமும் தெரியும். நாளுக்கு நாள் அதித வளர்ச்சிக் காணும், இந்த அறிவியலு உலகத்துல தப்பு செஞ்சா தொண்ணுற்றி ஒன்பது சதவீதம் தப்பிக்க ஏலாதுன்னு தெரிஞ்சிருந்தாலும், மீதமுள்ள ஒரு சதவீதத்தைதான் அதிகம் நம்பி செயல்படுதாங்க அறிவிலிக.

கல்யாணத்த தாண்டுன உறவுன்னு சொல்லுதது ஏதோ ஒருத்தரோட சாவுல போயிதான் முடியுது. அது தன்னைத்தானே மாய்ச்சுகிட்டு இருக்கலாம் அல்லது கொலையாகவும் இருக்கக்கூடும். உன்ன சாந்தவுகள நீ கொலை செய்யலாம் அல்லது சாந்தவுக உன்ன கொலை செய்யலாம்.

ஒரு நாளு சிவராமனோட சாப்பாட்டுல தூக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டது. சந்தேக நெருப்ப ஏத்திப் பழக்கமில்லாத, சிவராமன் சாப்புட்டு முடிச்சு ஆழ்ந்த உறக்கத்துல இருக்கச்சுல வீட்டுக்குள்ள நுழைஞ்ச அனந்து கையோட கொண்டு வந்த விஷ ஊசிய சிவராமனோட உடம்புல செலுத்திப்புட்டான். சிவராமனோட உசுரு தூக்கத்துலயே பிரிஞ்சு போனது. தூக்கத்துல இருக்கச்சுல இதய அடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக எல்லோரிடமும் சொன்னா வினிதா. பக்கத்து வீட்டுக்காரரு தனக்கு வாத்தியாரு சாவுல சந்தேகம் இருக்குன்னு போலீஸ்ல சொல்லிப்புட்டான். போலீஸ்காரங்களோட கிடுக்கிப்பிடி விசாரணையில ரெண்டு பேரும் மாட்டிக்கிட்டாவ அப்புடின்னு சொன்னப்ப மனசு சுக்குநூறா ஒடஞ்சு போச்சு.

மொதல்ல நான் யாரு? எதுக்குக் கோர்ட்டுக்கு வந்திருக்கேன், சம்பந்தம் இல்லாம இந்தக் கதைய எதுக்குல சொல்லிக்கிட்டு இருக்கேன்?

என் பேரு குமரேசன். என்னை எல்லாரும் அரசாங்கம் அப்புடின்னுதான் கூப்பிடுவாங்க. என் அம்ம அரசு மருத்துவமனையில போயி கருத்தடை ஆபரேசன் பண்ணிட்டு வந்ததுக்கப்புறமாக்கும் நான் பொறந்தேன். அரசு மருத்துவரு போட்ட தடைய மீறி நான் கருவாகி பொறந்ததன் நிமித்தமாக எனக்கு இந்த பேரு வந்துட்டு. நான் எப்பவும் மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் இருக்கக்கூடியவன்தான். நான் இருந்தா அந்த எடமே கலகலன்னு இருக்கும். நான் செத்தம் அலும்புக்காரன். எப்பப் பாத்தாலும் எதாச்சும் கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பேன். இதனால, என் சேக்காளிய வட்டாரத்துல எனக்கு நாகேஷ்னு ஒரு மாத்துப் பேரும் கெடக்கு. என்னைச் சுத்தி எப்பவும் ஒரு திரளே கெடக்கும்.

ஆனா, மௌனிகா  பேருக்கேத்த மாதி ஒரு வார்த்த பேசுறதுக்கு நூறு தரம் யோசிப்பா, நல்ல அடக்கவொடுக்கமான பொண்ணு. தன் பாட்டுக்கு இருக்குதவ. வீட்ல அவளுக்குக் கூடமாட இருந்து கொஞ்சம் ஒத்தாச பண்ண எதிராளியளப்போல நாலு பேரு இருந்தாலும், அவவொ சும்மாயிருக்காளுவ, நமக்கென்ன வந்துச்சுன்ன மாச்சரமும் இல்லாம, அவளால ஏண்ட சொலிய ஓயாம செய்துகொண்டே செஞ்சிக்கிட்டே இருக்கவ. அவளது மௌனத்தைக்கூட அலும்பு பிடிச்சவன்னு புறம் பேசினவங்களயும் மௌனித்தே மாப்பு கேக்க வச்சுப்புடுவா. அவ சும்மா உக்காந்து நான் பாத்ததே கெடையாது. துணிமணி அலங்கார உணர்வுன்னு சொல்லுதது சுத்தமாக கிடையாது. என்னோட  அலங்காரத்த பாரத்துபுட்டு மெச்சாத ஆளுவளேயில்ல. இப்புடியான, நேர்மாறான குணம் கொண்ட எங்க ரெண்டு பேத்துக்கும்தான் கல்யாணம் நடந்துச்சு.  

கல்யாணத்துக்கு பொறவுதான் மௌனிகாவோட குணம் என்னனு எனக்குத் தெரிஞ்சுச்சு. என் பொஞ்சாதியும் என்னைக் கணக்கா இருக்கணும்னு நெனச்சேன். ஆனா, அவ போக்குல என்னால ஒரு மாத்தமும் கொண்டுவர முடியல. அமைதியா ஒரு பொம்பிளப் புள்ள இருந்தாளாக்கும் ஊமக் கொட்டான் அப்புடின்னும் கலகலவென பேசிச் சிரிச்சுப்புட்டு இருந்தாளாக்கும் வாயாடி அப்புடின்னும் முத்திரைக் குத்துவதுதானே உலகம். இதுல மௌனிகா முதல் இரகமாக இருக்கது. எனக்குக் கொஞ்சம் ஏமாத்தமாக இருந்துச்சு. எனக்கு எது தேவைன்னாலும் நானாகக் கேட்டாதான் செய்யுவா, தாம்பத்யம் உட்பட. அவளுக்குத் தாம்பத்யப் பசி உண்டானதாக எனக்கு நினைவு இல்ல. இவளோட தாம்பத்ய உறவு வச்சுக்கிடதவிட  சுய இன்பம் செஞ்சுக்கிடலாம் அப்புடின்னு தோணும். அவளாக, புருஷன்னு உரிமை எடுத்துக்கிட்டு வந்து நிக்க மாட்டா.  இடைவெளி அதிகம் தருவா. இதனால, அவ மேல எனக்கு வெறுப்புதான் வந்தது.  வார்த்தைகளால் காயப்படுத்திக்கிட்டே இருந்தேன்.

நான் போதான்னு என்னோட உறவுக்காரவுகளும் சேக்காளியளும் என்னோட குணத்துக்கும் மௌனிகாவோட குணத்துக்கும் செத்தம்கூட பொருத்தமில்லன்னு சொன்னாக. இன்னும் ஒருபடி மேலாக போயி “குமரேஷனுக்குப் பெண்ணா கிடைக்கல. இந்த உம்மனா மூஞ்சிய போயிக் கல்யாணம் பண்ணிட்டு வந்துருக்கான், ஆளு வேற கருப்பாக, குள்ளமா இருக்கா, செத்தம்கூட மொக லட்சணம் இல்ல.” சொன்னாக.

இந்த நிலையிலும் எங்களுக்கு அடுத்தடுத்து ரெண்டு பிள்ளைக பொறந்துச்சு. குழந்தைய வளர்ப்பு, கவனிப்பு அப்புடின்னு இருந்த நிலையில அஞ்சாறு வருஷங்க கடந்தோடிவிட்டது. பிள்ளக வளந்து பள்ளிச் செல்ல ஆரம்பிச்சாக. பிள்ளையளுக்கும் எங்களுக்குமான இடைவெளி விழுந்தப்ப பொஞ்சாதி மேல மோகம் வந்துச்சு. அவ இப்பயும் அதே இடைவெளியிலதான் நின்னா. மீண்டும், எனக்க பொருத்தமா ஒரு தொணை அமையலையேன்னே நெனப்பு ஆரம்பிச்சிருச்சு.

குருவி ஒக்காரப் பனம்பழம் விழுந்த கதையா, ஒரு நாளு சாயங்காலம் மொட்டமாடி சுவருல உக்காந்துகிட்டு தலை முடிக்குச் சிக்கு எடுத்துக்கிட்டிருந்த மௌனிகாவோட கையில இருந்த சிக்குவாரி தவறி கீழே விழப்போக அதைப் பிடிக்க முயன்றப்ப தடுமாறி கீழ விழுந்து, பலமா அடிபட்டுருச்சு.

அவ மாடியில இருந்து விழுந்ததால முதுகுத்தண்டு, இடுப்பெலும்புல பலமா அடிப்பட்டு, நடக்க முடியாத நெலம ஆயிப் போச்சு. மருத்துவ சிகிச்சைக்கு அதிகமான செலவு ஆனதுல எனக்கு அவ மேலே மொதல்லயே இருந்த கடுப்பு இன்னும் கூடிப்போச்சு. அதனால, அவள அப்புடியே கண்டுக்காம விடத் தொடங்குனேன். ஆசுபத்திரியில அவளுக்குத் தொணைக்கு ஒருத்தர வச்சுக்கிடச் சொல்லியும் கேக்காம, தனியா வுட்டுட்டேன். அவளால மலம் ஜலம் கழிக்கக்கூடப் போக முடியாம கஷ்டப்பட்டா. இதனால “கொஞ்ச நாளு எங்க அம்ம  வீட்டுல போயி கெடந்துட்டு, உடம்பு தேறுனதும் வாரேன்.” சொன்னா மௌனிகா.

 நானும் இதற்காகவே இதுக்குகாவ காத்துக்கெடந்தவன மாதி அனுப்பிப்புட்டேன். ஒடம்பு தேறிப்போயி ஒரு மாசம் கழிச்சு வந்தா, அந்த நேரத்துல நான் வெளியூருக்கு வேலை நிமித்தமாக போயிருந்தேன். எங்கம்ம மட்டும்தான் வூட்ல இருந்தா, அவரு அவள வீட்டுக்குள்ள போக வுடாம மறிச்சு… “உன் புருஷன் ஊர்ல இல்ல, நீ போயிட்டு அவன் வந்ததுக்கப்பறம் வா.” அப்புடின்னு என் நெனப்பு மாதியே அவரும் அனுப்பி வுட்டாரு.

மௌனிகாவுக்கு அப்பதான், நெலைமை அவளுக்கு வாகா இல்ல, ஏதோ தப்பு நடக்குறாப்புல தோணுச்சு. என்னைப் பத்தி அக்கம் பக்கத்துல கேட்டுப் பாத்திருக்கா, நான் நெசமாலுமே ஊர்ல இல்லனு உறுதிப்படுத்திக்கிட்டவ அப்பையிக்குப் பிரச்சினை ஒன்னும் பண்ணல, அவ அம்ம அப்பன் வீட்டுக்கே போயிட்டா. அதுக்கப்புறம் மூனு மாசம் கழிச்சுத்தான் வந்தா.

அவகிட்ட, “நீ அன்னிக்கி, தற்கொலை முயற்சிதான் செஞ்சிருக்க. தெய்வாதீனமாக அன்னிக்கி ஒனக்கு ஒன்னும் ஆகல. நீ எப்போ என்ன செய்வேன்னு எனக்குத் தெரியலெ. எல்லா நேரமும் சாமி வந்து காப்பாத்திட்டே இருக்காது. நாங்களும் ஒனக்குக் காவலு இருக்க முடியாது, இதுக்கு அப்புறம் ஒங்கூட குடும்பம் பண்ண எனக்கு மனசு ஒப்பல. நீ உன்னோட அம்ம வீட்டுக்கே போயிருதே நல்லது” அப்புடின்னு மூஞ்சியில அடிச்சமாதி பேசி, வந்தவள திருப்பி அனுப்பிட்டேன்.

மௌனிகா போனபெறவு குடும்ப நீதிமன்றத்துல, அவ என்னைய படுத்தி எடுக்குறா. அவ பேச்சுக்கு நான் மசியலன்னா, செத்துப்போயிருவேன்னு சொல்லி என்ன மிரட்டிப் பணிய வைக்கா. இதனால எனக்கொரு நிம்மதி இல்லாமப் போச்சு. அவகூட வாழப் பிடிக்கல, அவகிட்ட இருந்து எனக்கு வுடுதலை வேணும்னு வழக்குப் போட்டேன்.

அவளும் ஒரு வக்கீலை வச்சு வழக்கை நடத்தினா. ஆனா, அவளால வக்கீலுக்கு துட்டு குடுக்க முடியல. அவ நீதிமன்றத்துக்கு வருதப்பெல்லாம், நான், ஏகத்துக்கும் பேசி மனச புண்படுத்தினேன். பிள்ளையளகூட பாக்க வுடல. அவ வக்கீலுக்கும் துட்டுக் குடுத்து எம்பக்கம் சாச்சுப்புட்டேன். அவள கண்ணைக் கட்டிக் காட்டுல விட்டாப்புல ஆக்கிப்புட்டேன்.

இன்னைக்கி எங்களோட விவாகரத்து வழக்குல தீர்ப்பு. அதுக்குத்தான் நான் இங்க வந்துருக்கேன். தீர்ப்பு என்னவோ எனக்குத் தோதுவாத்தான் வரப்போவுது. இருந்தாலும், என்னமோ நடக்குற வழக்கைப் பாத்ததுக்கப்புறம், என் மனசு முழுக்க மௌனிக்காவோட நெனப்பாவே இருக்குது. ஒருவாட்டி பாத்துறணும் போல தோணுது. நான் என் எடத்துல இருந்து சுத்துமுத்தும் தேடுனேன்.

நான் உக்காந்திருந்த வரிசைக்குப் பின்னாடி ரெண்டு வரிசைத் தள்ளி நாலு கையோட தாமரைப்பூ மேல ஒரு பொம்பள உக்காந்திருந்தா. அவ பின்னங்கை  ரெண்டிலும் பூவப் பத்தியிருந்தா. வலது முங்கையிலேருந்து காசு  மழை கொட்டிக்கிட்டே இருந்துச்சு. இடப்புற கை தியானத்துல இருக்கதுபோல வச்சு சாந்த சொரூபமாக காட்சி தந்தாள். கண்கள் ஒளி மிகுந்த நிலையிலயே குத்தமத்து இருந்துச்சு. அவளோட ரெண்டு பக்கமும் ரெண்டு யானைகள் தும்பிக்கையில தாமரைப் பூவ வச்சுக்கிட்டு ஆசீர்வாதம் பண்ணுத மாதி நின்னுக்கிட்டிருந்துச்சு. இந்த உருவத்தை எங்கயோ பாத்த கணக்கா இருக்கேன்னு யோசிச்சப்போ, எல்லாருக்கும் நாள்காட்டி அட்டை வழியாவும், சாமி அறையில இருக்குத படங்க மூலமாவும் காட்சி தந்தவள் என்னோட வந்து இம்புட்டு காலமும் வாழ்ந்துருக்காளேன்னு நெனப்புத்தான் நெறஞ்சுக் கெடந்துச்சு.

மொதவாட்டியா என் கேசு தோத்துப்போகணும்னு எம் மனசு ஆசப்பட்டுச்சு. கோர்ட்டு கேசு முடிஞ்சு  திரும்பியிருந்த நான், என்னோட வூட்டுக்கு முன்ன காரை நிறுத்திவிட்டு அதுலருந்து எறங்கி வீட்டுக்குள்ள போகப் பார்த்தப்போ, பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் தொப தொபன்னு ஓடியாந்து பாத்துட்டு “ஒருத்தரையும் தள்ளிப்போன்னு சொல்ல மாட்டா, அந்தப் புள்ளயப்போயி வேண்டாம்னு சொல்லிப்புட்டு வந்து நிக்கானே. இவனுக்கெல்லாம் நல்ல சாவு வரும்மா?” ன்னு சொன்னாங்க.

 இவுகதான் சில வருசமா, என் காதுபடவே “குமரேசனுக்கு பெண்ணா கிடைக்கல. இந்த உம்மனாம் மூஞ்சிய போயி கல்யாணம் பண்ணிட்டு வந்துருக்கான?”ன்னு சொன்னவுக.

  அவுகப் பேச்சை எல்லாம் ‘கண்டுக்காணாம’ போயிட்டே, வீட்டுக்கு முன்ன நின்னுகிட்டு “அம்மா …” அப்புடின்னு கூப்புட்டேன். ஆலாத்தி எடுக்கத் தட்டோட வந்து நின்னா அம்ம. “லெச்சுமிய தல மொளுகிட்டு வந்து நிக்குது மூதேவி அது தெரியாம, ஆலாத்திய கரச்சு எடுத்துப்புட்டு வருது பாரு கிழட்டு மூதேவி. இந்த அநியாயத்த செய்ய சொன்னவளே இவதான. வேறென்ன செய்வா?” சொன்னப்போ காருல இருந்து மௌனிக்கா எறங்கி வந்தா.

அவளைக் கண்டதும் திடுக்குன்னு சனங்களோட முகமெல்லாம் வெளுத்துப் போச்சு

 “காலுல ஓட்டுன பீ கழுவுனாலும் போகாதுங்கது மாதி, அம்புட்டு லேசா விரட்டிட முடியுமா? இல்ல, அவதான் லேசுல விட்டுட்டு போயிருவாளா?” சொன்னாக.

Mail- rakshankiruthik@gmail.com

Mobile -8122404791

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button