தாய்ப்பாலில் மலரும் ரோஜாக்கள் – ‘அம்மாவின் முதல் மிடறு’ சிறுகதைத் தொகுப்பு – பத்மகுமாரி
கட்டுரை | வாசகசாலை

இத்தொகுப்பில் வரும் கதைகளின் தருணங்கள் வாசகரிடம் சுய விசாரணை நிகழ்த்துகின்றன. மனித வாழ்வின் ஊசலாட்டங்கள் பெரும்பாலும் அகத்தை நோக்கியதாகவே அமைகிறது. புறத்தின்மீது ஏற்றப்பட வேண்டிய சாயங்கள் அகத்தைப் பலி கேட்கும் தருணங்கள் ஏராளம். இளஞ்சேரன் ராஜப்பாவின் கதைகள் அப்படியான நொடிகளை வாசகரின்முன் மின்னல் வெட்டாக விரித்து வேடிக்கை பார்க்கிறது.
கதாபாத்திரங்களின் மனதில் துளிர்த்து நிற்கும் அன்பு மொத்தமாய் அறுந்து போவதற்கான காரணங்களும் , இல்லாமலேயே இருப்பதாகப் பொய் வேசம் போட்டுகொள்வதான காரணங்களும் அவரவர் நியாயங்களை உறுதியாகத் தாங்கி நிற்கின்றன.
‘ ஒன்றை மறைத்து மற்றொன்றை வெளிக்காட்டும் அற்ப யுக்தி மொழிகளுக்கு இல்லை’ என்று என்னுரையில் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். மொழிகளிடம் இல்லாத இந்த அற்பம் மனித மனத்திற்குள் எத்தனை உசாராக பதுங்கியிருக்கிறதென்பதைத் தொகுப்பின் சில கதைகள் சொல்கிறன. கூடவே அந்த அற்பத்தைக் கைவிடமுடியாதபடிக்கு ஆட்டிப்படைக்கும் நிர்பந்தங்களையும் அதனைத் தடுமாற்றமின்றி ஏற்றுக்கொள்ளும் மூளையின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
‘ கில்ட்டி கான்வர்சேஷன்ஸ்’ கதையில் வரும் மேகாவும் ‘ உதகை டைரீஸ்’ லீனாவும் வெவ்வேறானவர்கள் என்றபோதும் அவர்களின் அன்பிற்கான தவிப்பு இணையும் புள்ளி ஒன்றுதான்.
மழையிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ரியாக்கள் இங்கு அநேகமுண்டு. அவர்கள் மழையிடம் அல்ல, தன்னிடமே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.
பெரும்பாலான கதைகளில் ஆண் – பெண் உறவு பற்றி பேசப்பட்டிருக்கிறபோதிலும் எந்தவொரு கதையும் ஒற்றைப் பாலினத்தின் நியாயத்தைத் தராசில் உயர்த்தாமல் அதன்போக்கில் நகர்ந்து செல்வது இக்கதைகளுக்குள் அதிகநேரம் வாசகரைச் சஞ்சரிக்க அனுமதிக்கிறது.
தேவாலயத்திற்குச் செல்வதால் நீ தேவதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைச் சொல்லும் கதை சிறைக்குள் வாழும் தேவதைகளையும் கண்முன்னே உலவ விடுகிறது.
‘எல்லா மழைகளும் நம்மை நனைப்பதில்லை’- என்னும் வரி இத்தொகுப்பின் ஒரு கதையில் உள்ளது. அதுபோலவே, பொதுவாக எல்லா சிறுகதைகளும் வாசகரைப் பற்றிக்கொள்ள அனுமதிப்பதில்லை. ஆனால், இத்தொகுப்பின் பன்னிரெண்டு சிறுகதைகளும் வாசகரைப் பற்றிக்கொள்ள அனுமதிக்கிறது. வெறுமனே கடந்துபோகும் செளகரியத்தை இக்கதைகள் வாசகருக்கு வழங்கவில்லை. இத்தொகுப்பின் ஒரு கதையில் தாய்ப்பாலில் மலரும் ரோஜாவைப் போலவே இத்தொகுப்பின் கதைகளும் என்னளவில் ஸ்பெஷலானவை.



