
9.பாத்தியமைப்பு
மின்மோட்டாரின் அளவை கணக்கிலெடுத்துக்கொண்டு அடுத்தடுத்து வேளாண்மை செய்யப்போகும் விளைநிலங்களுக்கு குழாய்களை பதிக்க வேண்டும். நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்கள் பயிரிடப்படும் ஒவ்வொரு முறையும் நிலத்தை உழவு செய்ய வேண்டிய தேவையிருப்பதால் குழாயினை சுமார் இரண்டடி ஆழத்தில் புதைக்க வேண்டும்.
புதைத்து ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே தேவைப்படும்போது அடைக்க, திறக்க ‘வால்வு’ அமைக்க வேண்டும்.
அதன் பின்பு பாத்தியமைக்க வேண்டும். பாத்திகள் மொத்தம் மூன்றுவகைப்படும்:
1, மேட்டுப்பாத்தி.
2, இருமடிப்பாத்தி.
3, பள்ளப்பாத்தி.
1.மேட்டுப்பாத்தி:
இந்த மேட்டுப்பாத்தியானது தற்போது இயற்கை வழி வேளாண்மையில் மிகவும் பிரபலம். இது நம் வேளாண்குடிமக்களிடம் காலங்காலமாக பின்பற்றி வந்திருந்தாலும்கூட ஆதை நவீனப்படுத்தி பெருவாரியான மக்களிடம் கொண்டு வந்து சேர்த்தவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘பில் மொல்லிசன்’ எனும் பெருந்தகை.
இந்த முறையில் காய்கறி, கீரைகள், கிழங்கினங்கள் போன்றவற்றில் உட்சபட்ட விளைச்சலை பெறமுடியும்.
‘நடக்கிற பாதையில் விதைக்காதே!
விதைக்கிற பாதையில் நடக்காதே!’ என்கிற வழக்குமொழிக்கேற்ப அமைப்பதாலும் இதன் சிறப்பு மேலும் கூடுகிறது.
நிலத்தில் ஏக்கருக்கு எட்டு டன் எரு கொட்டி விசிறியடித்து உழவு ஓட்டிய பின்பு நமது தேவைக்கேற்ப உழவு பதிந்திருக்கும் ஆழம் வரை உள்ள மண்ணை மேடாக அமைக்கும் முறையே ‘மேட்டுப்பாத்தி’ எனப்படுகிறது.
2,இருமடிப்பாத்தி:
தரையிலிருந்து இரண்டடி ஆழம் வரை தேவைக்கேற்ற நீள, அகலத்தில் குழி தோண்டி தாவரக்கழிவுகள், விலங்குக்கழிவுகளைக்கொட்டி திரவ உரங்களால் அவற்றைக்குளிரச்செய்து பின் மண்ணிட்டு நிரப்பி அமைக்கும் முறைக்கு ‘இருமடிப்பாத்தி’ என்று பெயர்.
இவற்றையமைக்க நிறைய மெனக்கெடனும். ஆனால் ஒருமுறை அமைத்துவிட்டால் பிறகு காலாகாலத்துக்கும் உங்களிடம் பெருவாரியான உழைப்பைக்கோராமல் பயன்பாட்டில் இருந்துகொண்டேயிருக்கும்.
‘மேட்டுப்பாத்தி, இருமடிப்பாத்தி’ இரண்டுமே நீண்ட நெடிய காலத்திற்கு உதவப்போவதால் ‘permenant culture’ என்பதே பின்னாட்களில் ‘Perma culture’ என்று உருமாற்றம் பெற்றது. தமிழில் இதை ‘நிரந்தர வேளாண்மை’ என்று அழைக்கிறார்கள்.
இந்த முறை தற்போது நீர்மேலாண்மையில் முக்கிய கூறுகளாக இருக்கிற சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனத்திற்கு மிகவும் உகந்தது.
3, பள்ளப்பாத்தி:
காய்கறி, கீரை, சிறுதானியம், பயறு மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற குறைந்தகால சாகுபடி செய்யும்போது தரை வழியாக பாத்திகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் முறையே ‘பள்ளப்பாத்தி’ எனப்படுகிறது.
இந்த முறையில் செய்யும்போது தண்ணீரை நாம் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது.
சொட்டுநீர் பாசன அமைப்புக்கேற்றார்போல அமைக்கப்படும் மேட்டுப்பாத்தியைப் போல நேர்த்தியைக்கையாளாமல் நம் விருப்பத்திற்கு மண்வெட்டியை சுழற்றும் உரிமையை இது நமக்கு வழங்கும். ஒரு பாத்திக்கும், இன்னொரு பாத்திக்குமான இடைவெளியை ‘வஞ்சி’ என்று அழைப்பார்கள். இந்த வஞ்சியை கூட்டவோ குறைத்தோ செய்வதின் மூலம் பூச்சியியல் மேலாண்மைத் தாவரங்களான மஞ்சள்ப்பூ தாவரங்களையும், இருவிதைத் தாவரங்களையும் மற்றும் தரைக்கொடி வகையினங்களையும் வஞ்சிப்பயிராகப் போட்டு பயன்பெறலாம்.
நிலத்தின் அமைப்பு, மண்காண்டம், மற்றும் பயிர்செய்யும் முறைக்கு தகுந்தார்போல ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரியான பாத்தியமைப்புமுறை இருக்கும். அந்தந்த கிராமத்தில் தோட்டவேலையில் நன்கு தேர்ச்சி பெற்ற வேலைக்காரர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை இனம் கண்டு அவர்களிடம் பாத்தியமைக்கும் பொறுப்பை ஒப்படைக்கும் பட்சத்தில் உங்களது வேலைப்பளு பாதியாக குறைய வாய்ப்பிருக்கிறது.
பாத்தியமைத்த பின்பு மேல்நிலைத்தொட்டியமைத்து அதில் தண்ணீரை தேக்கி மின்சாரமில்லாதபோது அந்த நீரை உயர் அழுத்தத்தின் மூலம் பயன்படுத்த நேரிடலாம். அப்போது தொட்டியில் படிந்திருக்கும் பாசியோ அல்லது ‘போர் வெல்’லிருந்து வெளியேறி வரும் சிறுசிறு மண்துகள்கள் சொட்டுநீர், மற்றும் தெளிப்புநீர் புள்ளியில் அடைபட்டு சிரமமேற்படுத்த வாய்ப்பிருக்கிறது. ‘பைப் லைன்’ வேலை நடைபெறுகிறபோது கொஞ்சங்கூட இரக்கமேயில்லாமல் Filter அமைக்க பணம் கறப்பதில் குறியாக இருக்கும் கார்ப்பரேட் கரங்கள்.
வெறும் ஐயாயிரம் ரூபாய் பெருமானமுள்ள Filter அமைப்பு நடைமுறையில் இருக்கும்போது சுமார் 1.1/2 இலட்சம் வரை செலவு வைக்கும்முறையை உங்கள் தலையில் கட்ட வாய்ப்பிருக்கிறது. எனவே கவனம்.
பாதை விரியும்..
முந்தைய பகுதிகள்